
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.336
Date uploaded in London – —14 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (25)
ராமாயணத்தில் சாபங்கள் (25) ரிஷிகள் ராக்ஷஸர்களுக்கு சாபம் கொடுக்காமல் இருப்பதற்கான காரணம்!
ச.நாகராஜன்
அயோத்யா காண்டத்தை அடுத்து வரும் ஆரண்ய காண்டத்தில் 6 சாபங்களை நாம் காண்கிறோம்.
ஆரண்ய காண்டத்தில் நாம் 10-ம் ஸர்க்கத்தில் ரிஷிகள் ஏன் ராக்ஷஸர்களுக்கு தாமே சாபம் கொடுத்து அவர்களை அழிப்பதில்லை என்பதற்கான காரணத்தை ரிஷிகள் கூறுவதைப் பார்க்கிறோம்.
ஆரண்ய காண்டத்தில் 10வது ஸர்க்கமாக அமைவது ‘ஆயுதம் தரிப்பதன் அவசியத்தை ஶ்ரீ ராமர் சொல்வது’’.
ஶ்ரீ ராமரை தரிசித்த ஏராளமான தபஸ்விகளும் முனிவர்களும் வந்து, தாங்கள் ராக்ஷஸர்களால் கொடுமைப் படுத்தப்படுவதாகவும் தவத்தைச் சரியாகப் புரியமுடியவில்லை என்றும் முறையிட்டனர்.
சீதை ஶ்ரீ ராமரிடம் ஆயுதத்தைத் தரிக்க வேண்டாம், தண்டகாரண்யம் செல்ல வேண்டாம் என்று தன் அபிப்ராயத்தைக் கூற ஶ்ரீ ராமர் ஒரு க்ஷத்திரியனின் தர்மம் மற்றவர்களைக் காப்பதே என்பதை எடுத்துக் கூறுகிறார்.
“சீதே! கடுமையான விரதம் பூண்ட அந்த முனிவர்கள் கஷ்டமடைந்து ரக்ஷகனைத் தேடி என்னையே தண்டகாரண்யத்தில் சரணமடைந்தார்கள்” என்று கூறிய ராமர் அவர்களைக் காக்க தான் வாக்களித்து விட்டதாகவும் கூறுகிறார்.
ரிஷிகள் ராமரிடம் கூறிய வார்த்தைகளை இங்கு பார்ப்போம்:
காமம் தப:ப்ரபாவேன சக்தா ஹந்தும் நிஷாசரான் |
சிரார்ஜித் து நேச்சாமஸ்தப:கண்டயிதும் வயம் ||
தப: ப்ரபாவேன – தவ மஹிமையால்
நிஷாசரான் – அரக்கர்களை
ஹந்தும் – நாசம் செய்ய
சக்தா: – வல்லவர்களாக
காமம் – இருக்கின்றோம்
து – என்றாலும்
வயம் – நாங்கள்
சிரார்ஜிதம் – வெகுநாள் சிரமப்பட்டு சம்பாதித்த
தப: – தவத்தை
கண்டயிதும் – குலைக்க
இச்சாம: ந – துணிவுறாதிருக்கிறோம்
பஹுவிக்னம் தபோ நித்யம் துச்சரம் சைவ ராகவ |
தேன சாபம் ந முஞ்சாமோ பக்ஷ்யமாணாஸ்ச ராக்ஷசை: |\
ராகவ – ஓ! ஶ்ரீ ராம
தப: ச – தவம் என்பதே
நித்யம் – எக்காலமும்
பஹுவிக்னம் – அநேக இடையூறுகளைக் கொண்டதாகும்.
துச்சரம் ஏவ – முடிக்க முடியாததுமாகும்
தேன – அந்தக் காரணத்தால்
ராக்ஷசை: – ராக்ஷஸர்களால்
பக்ஷ்யமாணா: ச – தீங்குறுத்தப்படுபவர்களாக இருந்தும் கூட
சாபம் – சாபத்தை
முஞ்சாம: ச – இடாதிருக்கிறோம்
ஆரண்ய காண்டம், 10-ம் ஸர்க்கம் ஸ்லோகங்கள் 14 & 15,
இங்கு முனிவர்கள் ஏன் சாபம் இடுவதில்லை என்பதற்கான காரணத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.
ரிஷிகள் தவசக்தி உடையவர்கள் என்றாலும் சாபம் கொடுப்பதால் அந்த சக்தி வீணாகப் போகும் என்பதோடு கூட ஒரு தவத்தை முடிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று என்பதையும் அறிய முடிகிறது.
சாபம் பற்றிய இதிஹாஸ புராணங்களில் நமக்கு ஏற்படும் ஒரு முக்கியமான சந்தேகத்திற்கு விளக்கமாக இந்த இடம் அமைகிறது.
**