
Post No. 13.340
Date uploaded in London – —14 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (26)
ராமாயணத்தில் சாபங்கள் (26) அந்தணருக்கு பதில் சொல்லாவிடில் சபிப்பாரோ என்ற சீதாதேவியின் எண்ணம்!
ச.நாகராஜன்
மாயமானாக வந்த மாரீசனை ராமன் தன் அஸ்திரத்தால் அடிக்க அவன் அடிபட்டுத் தரையில் விழுகிறான்.
ராமனது குரலைப் போன்று, “ஹா சீதே! ஹா, லக்ஷ்மணா” என்று கத்தியவாறே அவன் உயிரை விடுகிறான்.
இந்தக் குரலைக் கேட்ட சீதை லக்ஷ்மணனை வற்புறுத்தி ராமனைத் தேடுமாறு அனுப்ப, சீதை இருந்த குடிலுக்கு ராவணன் அந்தணர் வேடத்தில் அதிதியாக வருகிறான்.
ஆரண்ய காண்டம் 46வது ஸர்க்கம் ஆச்ரமத்திற்கு ராவணன் வருவதைப் பற்றிச் சொல்கிறது.
சந்நியாசி வேஷம் தரித்து அழகான காவித்துணி உடுத்தியவனாய் குடை உடையவனாய் பாதுகைகளை அணிந்து தோளில் அழகிய தண்டத்தையும் கமண்டலத்தையும் வைத்துக் கொண்டு சீதா தேவியை அணுகிய ராவணன், “சுந்தரீ, ஸ்த்ரீ ரத்தினமே! நீ யார்?” என்றான்.
“நீ யாரைச் சேர்ந்தவள்? எங்கிருந்து வந்திருக்கிறாய்? என்ன காரணமாக தனியாக அரக்கர்கள் வசிக்கும் பயங்கரமான தண்டகாரண்ய பிரதேசத்தில் வசிக்கின்றாய்?” என்று இப்படி அடுக்கடுக்காய் கேள்விகளை ராவணன் தொடுக்கிறான்.
அவனை ஒரு புண்ணீயவானாகக் கருதிய சீதை அவனை வரவேற்று உபசரிக்கிறாள்.
“உட்காருங்கள்! இதோ பாத்யம்! தங்களுக்குப் பழவகை சித்தமாக இருக்கிறது” என்று வந்த சந்நியாசியைப் பார்த்து சீதை உபசரிக்கிறாள்.
ஆரண்ய காண்டம் 47-வது ஸர்க்கம் ராவணனை திரஸ்கரிப்பது என்ற ஸர்க்கமாகும்.
தனக்குள்ளேயே ஆலோசிக்கிறாள் சீதை.
ப்ராஹ்மணச்சாதிதிஸாயமனுக்தகோ ஹி சபேத் மாம் |
இதி த்யாத்வா முகூர்த்தம் து சீதா வசனமப்ரவீத் ||
– ஆரண்ய காண்டம் 47-ம் ஸர்க்கம், இரண்டாம் ஸ்லோகம்
சீதா – சீதா தேவி
அயம் – “இவர்
அதிதி – அதிதி
ச – மேலும்
ப்ராஹ்மண ச – அந்தணர்
அநுக்த: ஹி – பதில் சொல்லப்படாவிட்டால்
மாம் சபேத என்னை சபிப்பார்”
இதி – என்று
முகூர்த்தம் – கொஞ்ச நேரம்
த்யாத்வா து – ஆலோசனை செய்து விட்டு
வசனம் – பின்வரும் சொல்லை
அப்ரவீத் – அருளிச் செய்தனள்.
வந்த அதிதிக்கு பதில் சொல்லாவிடில் அவர் சபிப்பார் என்று சீதா தேவி தனக்குள் ஆலோசிப்பது வரும் சாபத்தைத் தவிர்க்கும் எண்ணமாக அமைகிறது. சாபம் இங்கு தரப்படாவிட்டாலும் சாபம் வரலாம் என்ற பயம் இங்கு தொனிக்கிறது.
ஆகவே அவர் பின்னர் தன்னை ராமரின் மனைவி சீதை என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறாள்.
***