
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.346
Date uploaded in London – —17 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (28)
ராமாயணத்தில் சாபங்கள் (28) ஸ்தூலசிரஸ் முனிவர் கபந்தனுக்குத் தந்த சாபம்!
ச.நாகராஜன்
சீதையைத் தேடிச் சென்ற ராமரும் லக்ஷ்மணரும் தண்டகாரண்யத்தைக் கடந்து தெற்கு நோக்கிச் சென்று க்ரௌஞ்சாரண்யம் என்ற இடத்தை அடைந்தனர்.
அப்போது அங்கு ஒரு குகையில் அயோமுகி என்ற கொடிய தோற்றமுடைய ஒரு அரக்கியைக் கண்டனர். அவள் லக்ஷ்மணரைக் கட்டி அணைக்க, கோபம் கொண்ட லக்ஷ்மணர் அவளது மார்பகங்கள், காது மூக்கு இவற்றை வெட்டுகிறார். அவள் வந்த வழியே அலறியவாறு ஓடி விட்டாள்.
பின்னர் அவர்கள் மிகப் பெரிய உடலைக் கொண்டவனும், அகன்ற மார்பை உடையவனுமான ஒரு அரக்கனைக் கண்டனர். அவனுக்குத் தலையும் கழுத்தும் இல்லை. அவன் வயிற்றில் வாய் இருந்தது. மார்பில் அமைக்கப்பட்ட நெற்றியிலிருந்து ஒரு கண்ணால் ராம லக்ஷ்மணரைப் பார்த்த அவன், அவர்களின் வழியை மறைத்துக் கொண்டு நின்றான்.
கபந்தன் என்ற அந்த அரக்கன் ராம லக்ஷ்மணர் இருவரையும் கட்டிப் பிடித்து உங்களை விழுங்குவேன் என்றான்.. ராமர் அவனது வலது கரத்தை வெட்ட லக்ஷ்மணர் அவனது இடது கையை அறுத்துத் தள்ளுகிறார். அவன் ஓவென்று அலறி பூமியில் விழுந்தான். அவன் நீங்கள் யார்? என்று வினவ லக்ஷ்மணர் இவரே ஶ்ரீ ராமர் என்றும் தான் அவரது தம்பி லக்ஷ்மணர் என்றும் கூறுகிறார்.
நீ யார் என்று கபந்தனை லக்ஷ்மணர் கேட்க அவன் தனது பழைய உருவம் வரப்போகிறது என்பதை அறிந்து மிகுந்த சந்தோஷத்துடன் தனது சாபம் பற்றிய வரலாறைக் கூறுகிறான்.
“பூர்வ காலத்தில் சந்திரனுக்கு ஒப்பான ரூபத்துடன் நான் இருந்தேன். ஒரு பெரிய உருவத்தை எடுத்துக் கொண்டு காட்டில் வசித்த முனிவர்களைப் பாதித்து வந்தேன். அப்போது ஸ்தூலசிரஸ் என்ற முனிவர் என்னால் அவமானப்படுத்தப்பட்டார். கோபம் கொண்ட அவர் எனக்கு சாபத்தை இட்டார்.”
கபந்தன் கூறுவது இது:
தேனாஹமுக்த: ப்ரேக்ஷ்யைவம் கோரஷாபாபிதாயினா |
ஏததேவ ந்ருஷம்சம் தே ரூபமஸ்து விகர்ஹிதம் ||
ஏவம் – மேற்கண்டதை (கபந்தனால் அவமானப்படுத்தப்பட்டதை)
ப்ரேக்ஷ்ய – அவர் சிந்தையில் கொண்டு
கோர ஷாபாபிதாயினா – கொடிய சாபத்தை இடும் வகையில்
தேன – அவரால் (ஸ்தூலசிரஸ் முனிவரால்_
அஹம் – நான்
உக்த: – பின்வருமாறு சபிக்கப்பட்டேன்
தே – “உனக்கு
ஏதத் – இந்த
விகர்ஹிதம் – எல்லோராலும் வெறுக்கப்பட்ட
ந்ருஷம்சம் – கோரமான
ரூபம் ஏவ – உருவமே
அஸ்து – சாஸ்வதமாக் இருக்கக் கடவது
ஸ மயா யாசித: க்ருத்தச்சாபஸ்யாந்தோ பவேதிதி |
அபிசாபக்ருதஸ்யேதி தேனேதம் பாஷிதம் வச: ||
அபிசாபக்ருதஸ்ய – அபசாரத்தால் விளைந்த
ஷாபஸ்ய – சாபத்திற்கு
அந்த: – விமோசனம்
பவேத் – ஏற்பட வேண்டும்
இதி – என்று
மயா – என்னால்
க்ருத்த: – சினம் கொண்டிருந்த
ஸ: அவர்
யாசித: – யாசிக்கப்பட்டார்.
இதி – இக்காரணத்தால்
தேன – அவரால்
இதம் – பின்வரும்
வச: – மொழியானது
பாஷிதம் – சொல்லப்பட்டது
யதா சித்வா புஜௌ ராமஸ்த்வாம் தஹேத்விஜனே வனே |
சதா த்வம் ப்ராப்ஸ்ய ஸே ரூபம் ஸ்வமேவ விபுலம் சுபம் ||
ராம: – ஶ்ரீ ராமர்
புஜை – இரு கரங்களை
சித்வா – துண்டாக்கி
த்வாம் – உன்னை
விஜனே – நிர்ஜனமான
வனே – காட்டில்
யதா – எப்போது
தஹேத் – தகனம் செய்கிறாரோ
ததா – அப்போது
த்வம் ஏவ – நீயும்
விபுலம் – அசிந்த்யமானதும்
சுபம் – அழகானதுமான
ஸ்வே ரூபம் – உனது பிறவி ரூபத்தை\
ப்ராப்ஸ்யஸே – அடைவாய்
ஆரண்ய காண்டம், ஸர்க்கம் 71, ஸ்லோகங்கள் 4, 5 & 6)
இவ்வாறு கூறுகிறான் கபந்தன். தொடர்ந்து தான் யார் என்பதை அவன் விளக்குகிறான்.
“தனு என்னும் தானவனது அழகுடன் கூடிய புதல்வனான என்னை இந்த ரூபத்தை அடையுமாறு இந்திரன் சாபம் கொடுத்தான்.”
இந்திரன் சாபம் கொடுத்த வரலாறை அடுத்துப் பார்ப்போம்.
**