Post No. 13.363
Date uploaded in London – —21 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (31, 32)
ராமாயணத்தில் சாபங்கள் (31) மதங்க முனிவர் வாலியை சபித்தது! (தொடர்ச்சி)
ச.நாகராஜன்
மதங்க முனிவரின் சாபம் பற்றி கிஷ்கிந்தா காண்டத்தில் நாற்பத்தி ஆறாவது ஸர்க்கத்திலும் காண்கிறோம்.
சுக்ரீவன் வாலி பெற்ற சாபத்தைப் பற்றி தனக்கு ஹனுமார் நினைவூட்டுவதை இங்கு குறிப்பிடுகிறார்.
அனைத்து வானரர்களையும் ஒவ்வொரு திக்கிலும் சீதா தேவியைத் தேடும்படி பணித்தான் சுக்ரீவன். அவர்களும் செல்கின்றனர்.
அப்போது ராமர் சுக்ரீவனிடம், ‘எப்படி நீ இப்படி ஒரு பரந்த பூகோள அறிவைக் கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்கிறார்.
சுக்ரீவன் உடனே பதில் கூறுகிறான் இப்படி:
“துந்துபி என்ற அரக்கன் எருமை உருவை எடுத்து மலயபர்வத குகைக்குள் நுழைய, அவனைத் துரத்தி வாலியும் குகையின் உள்ளே சென்றான். அப்போது கடுமையான யுத்தம் நடந்தது. ஒரு வருடம் ஆகியும் வாலி வராததைக் கண்ட நான் அவன் கொல்லப்பட்டான் என்று நிச்சயம் செய்தேன். துந்துபி திரும்பி வரக்கூடாதென்று குகையின் வாயிலையும் அடைத்தேன். கிஷ்கிந்தா வந்து ராஜ்யத்தை அரசாள ஆரம்பித்தேன். ஆனால் குகையிலிருந்து வெளியே வந்த வாலி என் மேல் கோபம் கொண்டு என்னைக் கொல்வதற்காகத் துரத்த ஆரம்பிக்க, நான் பூமியின் ஒவ்வொரு பக்கமும் சென்றேன். இறுதியில் ஹனுமார் எனக்கு மதங்கரின் சாபத்தைப் பற்றி நினைவூட்டி அங்கு சென்றால் வாலி வர முடியாது என்பதைத் தெரிவிக்கவே அங்கே சென்று வசிக்கலானேன்”
ஹனுமார் சுக்ரீவனுக்குக் கூறும் ஸ்லோகங்கள் 46-ம் ஸர்க்கத்தில் 21,22, ஸ்லோகங்களாக அமைகின்றன.
இதானீம் மே ஸ்ம்ருதம் ராஜன்யதா வாலீ ஹரீஷ்வர: |
மதங்கேன ததா சபதோ அஸ்மின்னாஸ்ரம மண்டலே |\
ராஜன் – அரசே
ஹரீஷ்வர: – வானரமன்னனான
வாலீ – வாலி
அஸ்மின் – இந்த
ஆஸ்ரம மண்டலே – ஆசிரமப் பிரதேசத்தில்
ததா – ஒரு காலத்த்ல்
மதங்கேன – மதங்க முனிவரால்
சபத: சபிக்கப்பட்டவனாயிருக்கிறான் என்பது
இதானீம் ஹி – இப்போது தான்
மே – எனக்கு
ஸ்ம்ருதம் – ஞாபகத்திற்கு வந்தது.
ப்ரவிஷேத்யதி வை வாலீ மூர்தாஸ்ய சததா பவேத் |
தத்ர வாஸ: சுகோஸ்மாகம் நிருத்விக்னோ பவிஷ்யதி ||
வாலீ – வாலி
ப்ரவிஷேத் – பிரவேசிக்கின்றான்
யதி வை – என்றால்
அஸ்ய – அவனது
மூர்தாம் -தலை
ஷததா – நூறு துண்டுகளாக
பவேத் – பிளந்து போகும்
அஸ்மாகம் – நமக்கு
தத்ர – அந்த இடத்தில்
வாஸ: – வாசம் செய்வது
நிருத்விக்னோ – அச்சமற்றதாகவும்
சுக: – சுகமானதாகவும்
பவிஷ்யதி – இருக்கும்
ஆக இப்படி ஹனுமாரால் மதங்க முனிவரின் சாபம் மறுபடியும் கிஷ்கிந்தா காண்டத்தில் நினைவூட்டப்படுகிறது.
ராமாயணத்தில் சாபங்கள் (32) கண்டு முனிவர் வனத்தை சபித்தது
தாரன் அங்கதனோடு ஹனுமார் தெற்கு திசை நோக்கிச் சென்று விந்தியாசல மலையில் சீதையைத் தேடுகிறார். அங்கே இன்னொரு பிரதேசத்தை அவர்கள் அடைந்தனர். அங்கு கண்டு என்ற ஒரு முனிவர் தனது மகன் பதினாறு வயதில் இறந்ததால் மிகவும் கோபம் கொண்டு அந்த வனத்தைச் சபித்தார்.
இந்து கிஷ்கிந்தா காண்டம் 48-ம் ஸர்க்கத்தில் 14-ம் ஸ்லோகத்தில் விவரிக்கப்படுகிறது இப்படி:-
தேன தர்மாத்மனா சபதம் க்ருத்ஸ்னம் தத்ர மஹத்வனம் |
அஷரண்யம் துராகர்ஷ ம்ருகபக்ஷிவிவர்ஜிதம் ||
தத்ர – அப்போது
மஹத் – சிறந்த
வனம் – வனமானது
க்ருத்ஸ்னம் – முழுவதுமாக
அஷரண்யம் – வசிக்க அனர்ஹமாயும்
துராகர்ஷ – அணுக முடியாததாகவும்
ம்ருக பக்ஷி விவர்ஜிதம் – மிருகங்கள், பட்சிகள் இல்லாததாயும்
தர்மாத்மனா – தர்மாத்மாவாகிய அவரால்
சபதம் – சபிக்கப்பட்டது.
இந்த வனத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் சாப விவரம் மட்டும் தரப்படுகிறது.
**