
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.367
Date uploaded in London – —22 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (33)
ராமாயணத்தில் சாபங்கள் (33) புஞ்சிகஸ்தலைக்கு ஒரு முனிவர் சாபம் கொடுத்தது!
ச.நாகராஜன்
கிஷ்கிந்தா காண்டத்தில் அறுபத்தி ஆறாவது ஸர்க்கத்தில் ஹனுமானின் வரலாற்றை ஜாம்பவான் சொல்லக் கேட்கிறோம்.
தனி இடத்தில் வீற்றிருந்த ஹனுமானை நோக்கி ஜாம்பவான் அவரது வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார்:
புஞ்சிகஸ்தலை என்பவள் அப்ஸரஸ் பெண்களுள் மேன்மையான பிரசித்தமான பெண்ணாக இருந்தாள். அஞ்சனை என்று இன்னொரு பெயரும் உண்டு. கேஸரி எனற வானரருக்கு அவள் பத்தினி.
விக்யாதா த்ரிஷு லோகேஷு ரூபேணாப்ரதிமா புவி |
அபிஷாபாத்பூத்தாத் வானரீ காமரூபிணீ ||
– கிஷ்கிந்தா காண்டம், 66-ம் ஸர்க்கம், ஸ்லோக எண் 9
தாத – ஒ அப்பனே (என்று இப்படி ஹனுமானை ஜாம்பவான் விளித்துக் கூறுகிறார்)
த்ரிஷூ – மூன்று
லோகேஷு – உலகங்களிலும்
விக்யாதா – புகழ் பெற்றவளாய்
அபிஷாபாத் – ஒரு சாபத்தினால்
புவி – பூவுலகில்
ரூபேண – அழகில்
அப்ரதிமா – ஒப்புவமை இல்லாத
காமரூபிணீ – இஷ்டமான வடிவு எடுக்கவல்ல
வானரீ – வானரப் பெண்ணாய் அவள்
அபூத – பிறந்தாள்.
குஞ்சரர் என்ற வானர சிரேஷ்டருடைய பெண்ணான அவள் இஷ்டப்படி உருவம் எடூக வல்லவள். ஒரு நாள் மனித உருவத்தை எடுத்துக் கொண்டு ஒரு மலையில் உலாவிக் கொண்டிருக்கும் போது வாயு அவள் அழகில் மயங்கி அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். ‘யார் என்னைக் கெடுக்க நினைக்கிறான்’ என்று அவள் கூற, உடனே வாயு, “ உன்னை நான் கெடுக்கவில்லை. உனக்கு ஒரு தீங்கும் இல்லை. “உன்னைக் கட்டித் தழுவி தர்மாதர்ம விசாரணையுடனேயே நான் வியாபித்தேன். ஆகையால் வீர்யவானான ஒரு புத்திரன் உனக்குப் பிறப்பான். அவன் எனக்குச் சமமானவனாக் ஐருப்பான்” என்று கூறினார்.
இப்படியாக ஹனுமானின் வரலாறு அவருக்கே ஜாம்பவானால் கூறப்படுகிறது.
வானில் பறக்கும் போது இந்திரனின் வஜ்ராயுதம் அவரது இடது கன்னத்தில் காயத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து அவர் பெயர் ஹனுமான் – மேன்மையான கன்னம் உடையவர் – என்று சொல்லப்பட ஆரம்பித்தது.
இங்கு சாபத்தைப் பற்றிய முழு விவரங்கள் தரப்படவில்லை.
புஞ்சிகஸ்தலைக்கு யாரால், எதற்காக, எப்போது சாபம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் இங்கு தரப்படவில்லை.
இத்துடன் கிஷ்கிந்தா காண்டத்தில் வரும் நான்கு சாபங்களும் முடிகிறது.
அடுத்து சுந்தர காண்டத்தில் வரும் ஒரே ஒரு சாபம் பற்றிப் பார்ப்போம்
***