
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.389
Date uploaded in London – —29 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 12-6-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
மேடம் சி ஜே வாக்கர் – அனாதையாயிருந்து முதல் ஆப்பிரிக்க அமெரிக்க கோடீஸ்வரியானவர் ! – 1
ச.நாகராஜன்
ஏழு வயதிலேயே அனாதையாக ஆகி, வீடுகளில் வேலை பார்த்து, ஒவ்வொரு தொழிலாக மாறி ஆப்பிரிக்க-அமெரிக்க பெண்மணிகளில் முதல் கோடீஸ்வரியாக ஆன ஒருவர் யார் தெரியுமா?
உலகம் வியக்கும் மேடம் சி.ஜே.வாக்கர் என்பவரே அந்தப் பெண்மணி! அது மட்டுமல்ல கின்னஸ் ரிகார்டில் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க கோடீஸ்வரி என்று அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவரும் இவர் தான்?
பிறப்பும் இளமையும்
மேடம் சி.ஜே. வாக்கர் என்று பின்னால் பிரபலமாக அறியப்பட்ட சாரா ப்ரீட்லவ், ஓவன் மற்றும் மினர்வா ப்ரீட்லவ் ஆகியோருக்கு 1867-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் நாளன்று லூஸியானாவில் உள்ள டெல்டா என்ற இடத்தில் பிறந்தார். கூடப் பிறந்தவர் ஐவர். மூத்தவர் இவரே. ஐந்து வயதில் தாய் இறந்தார். தந்தையும் அவரது ஏழாம் வயதில் இறந்தார். மிஸ்ஸிஸிபியில் இருந்த தனது மாமா வீட்டிற்கு அவர் சென்றார். அங்கு வீடுகளில் எடுபிடி வேலை செய்யும் வேலைக்காரியாக ஆனார். படிப்பு என்பது மூன்றே மாதங்களில் அவருக்கு முடிந்து விட்டது.
குடும்பம்
1882-ம் ஆண்டு அவரது 15-ம் வயதில் அவருக்கும் மோஸஸ் மக்வில்லியம்ஸ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. லைலா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. மோஸஸ் 1887-ல் இறக்கவே சாரா ஜான் டேவிட் என்பவரை 1894-ல் மணந்தார். ஆனால் ஒன்பது வருடங்களில் அவரை விட்டுப் பிரிந்தார். பின்னர் 1906-ல் அவரது 39-ம் வயதில் செய்தித்தாள் விளம்பர விற்பனையாளராக இருந்த சார்லஸ் ஜோஸப் வாக்கர் என்பவரை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு அவர் மேடம் சி.ஜே. வாக்கர் என்ற பெயரால் அறியப்பட்டார்; பிரபலமும் ஆனார். மேடம் என்ற அடைமொழி பிரான்ஸில் ஒப்பனைப் பொருள்கள் தயாரிப்பில் ஈடுபடுவோருக்குக் கொடுக்கப்படுவது வழக்கம்.
சுய தொழில் ஆரம்பம்
வாக்கருக்கு திடீரென்று தலை வழுக்கை ஆகும் அளவு கேசம் உதிரவே அதைச் சமாளிக்க கேசம் பற்றி தன் கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தார்.
கேசப் பராமரிப்பிற்கான பொருள்களைத் தயாரிக்கவும் ஆரம்பித்தார். கறுப்பினப் பெண்மணிகளுக்கு சிகை அலங்காரம் பற்றிச் சொல்லிக் கொடுத்தார். வீடு வீடாகச் சென்று தான் தயாரித்த பொருள்களை விற்க ஆரம்பித்தார்.
அவருக்கு எப்படி தலைமுடிக்கான சிறப்பான கலவை ஒன்றை உருவாக்க முடிந்தது?
அவர் கண்ட கனவு ஒன்றினால் தான்! தனது தலை வழுக்கை பற்றி அவர் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவர் கண்ட கனவைப் பற்றி அவரே கூறுகிறார் இப்படி:
“இறைவன் எனது பிரார்த்தனைக்குச் செவி மடுத்தான். ஏனெனில் ஒரு நாள் கனவு ஒன்றைக் கண்டேன். அதில் ஒரு பெரிய கறுப்பான மனிதன் தோன்றி என் தலைமுடியில் என்னென்ன கலந்து பூச வேண்டும் என்று சொன்னான். அதில் சில ஆப்பிரிக்காவில் வளர்பவை. உடனே ஆப்பிரிக்காவைத் தொடர்பு கொண்டு அவற்றைத் தருவித்துக் கலவையை உருவாக்கினேன். என் தலையில் அதைப் பூசினேன். சில வாரங்களிலேயே என் தலைமுடி நன்கு வளர்ந்தது. அதே கலவையை சிலருக்குக் கொடுத்துப் பரீட்சித்துப் பார்த்தேன். அவர்களுக்கும் தலைமுடி வளர்ந்தது. பின்னர் தான் அதை விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.”
கனவில் கண்ட கலவை அமோக விற்பனையைத் தந்தது.
இதே போல கனவினால் உந்தப்பட்டு பயன் பெற்றோர் வரலாற்றில் ஏராளம் பேர் உண்டு. உதாரணத்திற்குச் சிலரைச் சொல்லலாம்.
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த சிறந்த விஞ்ஞானியான லூயி அகாஸிஸ் (1807-1853) மீன்களின் தொல்படிமங்களைப் பற்றி ஆய்வு நடத்தி வந்தார், ஒரு பாறையில் மீன் படம் ஒன்றைக் கண்டார். அது எந்த வகை மீன் என்று அவருக்குப் புரியவில்லை. அன்று இரவிலிருந்து மூன்று இரவுகள் தொடர்ந்த அந்த மீன் கனவில் தோன்றி தனது வகையை இன்னதென்று இனம் காட்டியது. அதாவது ஒரிஜினல் மீனைக் கனவில் அப்படியே அவர் கண்டார்.
கணித மேதை ராமானுஜன் கனவில் பல தீர்வுகளைக் கண்டார். அவர் கூறினார்: “தூங்கும்போது அசாதாரணமான ஒரு அனுபவத்தைப் பெற்றேன். ரத்தம் பாய்ந்து சிவப்பாக இருக்கும் ஒரு சிவப்புத்திரையைக் கண்டேன்.அது உற்றுப் பார்த்தேன். அப்போது ஒரு கை அதில் எழுத ஆரம்பித்தது. எலிப்டிக் இண்டகரலில்’ பல முடிவுகளை அது எழுதியது. விழித்து எழுந்தவுடன் அதை அப்படியே எழுதி வைத்துக் கொண்டேன்” நாமகிரி அம்மனே தன்னை வழி நடத்துவதாக அவர் பலமுறை கூறியதுண்டு.
பிரபலமான கோல்ப் விளையாட்டு வீரர் ஜாக் நிக்கலஸ் மட்டையைப் பிடித்து விளையாடுவதில் பெரிய நிபுணர். ஒரு சமயம் அவருக்குப் பெரிய தொய்வு ஒன்று ஏற்பட்டது. அப்போது ஒரு புதன்கிழமை இரவில் அவர் கனவில் அவர் மட்டை பிடித்திருந்த விதத்தில் ஒரு மாறுதலைப் பார்த்தார். மறுநாள் வியாழக்கிழமை அதே உத்தியைக் கையாண்டபோது பெரிய வெற்றி ஏற்பட்டது. அதுவே அவருக்கு நிரந்தர உத்தியானது.
இதே போல ஜெர்மானிய விஞ்ஞானி ஆட்டோ லேவி, இன்னொரு ஜெர்மானிய விஞ்ஞானியான பிரடரிக் அகஸ்ட் கெக்குலே ஆகியோர் கனவில் கண்ட வழிமுறைகளால் பெரும் வெற்றியைப் பெற்றனர்.
**