Post No. 13.392
Date uploaded in London – —30 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
மாலைமலர் 12-6-24 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாகப் பிரசுரிக்கப்படுகிறது.
அனாதையாயிருந்து முதல் ஆப்பிரிக்க அமெரிக்க கோடீஸ்வரியானவர் ! – 2
மேடம் சி ஜே வாக்கர் –
ச.நாகராஜன்
மேடம் வாக்கர் கம்பெனி
மேடம் சி.ஜே.வாக்கர் மானுபாக்ஸரிங் கம்பெனி என்ற நிறுவனத்தை 1910-ல் இண்டியானாபோலிஸில் அவர் தொடங்கி ஷாம்பூ உள்ளிட்ட பொருள்களைத் தயாரித்து விற்க ஆரம்பித்தார்.
1911 முதல் 1919 முடிய ஆயிரக் கணக்கில் அவரிடம் விற்பனைப் பிரதிநிதிகளாக ஏராளமானோர் வேலைக்குச் சேர்ந்தனர். 1917-ல் 20000 பேருக்கு நிறுவனம் பயிற்சி தந்து விட்டது. அவர்கள் அனைவரும் தமக்கென ஒரு யூனிபார்ம் உடையை அணிந்து வலம் வந்தனர். தங்களுடன் கொண்டு சென்ற அழகு சாதனைப் பொருள்களை வீடு வீடாக எடுத்துச் சென்று அங்குள்ள பெண்மணிகளுக்கு ஒப்பனை செய்து அவர்கள் அழகை “எடுத்துக் காட்டினர்”. கேட்க வேண்டுமா, ஆதரவு பெருகியது.
கரிபியன் மற்றும் மத்திய அமெரிக்கா உள்ளிட்ட இடங்களுக்கும் சென்று தனது தயாரிப்புகளை அவர் அறிமுகப்படுத்தினார்.
தொழில் வளர்ச்சியில் அவரது மகள் லைலா பெரும் பங்கு வகித்தார். கடுமையான போட்டி அழகு சாதனப் பொருள்களின் தயாரிப்பிலும் விற்பனையிலும் நிலவி வந்தது. அதற்கு ஈடு கொடுத்து தொழிலை தாயும் மகளும் வளர்த்தனர்.
ஆங்காங்கே பியூட்டி பார்லர்களையும் சலூன்களையும் நிறுவி தங்கள் தயாரிப்புகளை மக்களிடையே அவர்கள் விளம்பரப்படுத்தினர்.
சுயமுயற்சியால் பெற்ற வெற்றி
அந்தக் காலத்தில் கறுப்பினப் பெண்கள் அடிமையாக விற்கப்பட்டனர். கொடுமையாக நடத்தப்பட்டனர். ஆபிரகாம் லிங்கன் (1809-1865) இதற்கு ஒருவழியாக முடிவு கட்டினார். மறுமலர்ச்சி காலமும் வர ஆரம்பித்தது!
1912-ல் நேஷனல் நீக்ரோ பிஸினஸ் லீக் வருடாந்திர விழாவில் அவர் பேசினார்.
“நான் தெற்கில் பஞ்சு உற்பத்தியாகும் நிலப்பகுதியிலிருந்து வந்த பெண்மணி. அதிலிருந்து துணி தோய்ப்பதற்கு எனக்கு பிரமோஷன் கிடைத்தது. அதிலிருந்து பின்னர் சமையலறையில் நுழைந்து சமைப்பதற்கு எனக்கு பிரமோஷன் கிடைத்தது. அதிலிருந்து என்னை நானே தலைமுடி வளர்க்க உதவும் பொருள்களைத் தயாரிப்பதற்கு பிரமோஷன் வாங்கிக் கொண்டேன். என்னுடைய கம்பெனியை என் சொந்த முயற்சியினால் நானே உருவாக்கினேன்.”
உலகின் ஆகப் பெரும் கோடீஸ்வரியாக தனது சொந்த முயற்சியால் ஆன முதல் கறுப்பினப் பெண்மணியான இவர் நியூயார்க்கில் இர்விங்கில் ஒரு மாபெரும் மாளிகையைத் தனக்கென கட்டிக் கொண்டார். 20000 சதுர அடி பரப்பில் 2,50,000 டாலர் செலவில் நியூயார்க்கில் அவர் வீடு கட்டப்பட்டது. அவரது அடுத்த வீட்டில் மிகப் பெரும் கோடீஸ்வரரான ஜான் டி.ராக்பெல்லர் வசித்து வந்தார். அவருக்கு நிகராக தன்னை உயர்த்திக் கொண்டார் வாக்கர்.
சமுதாய சேவை
உலகின் மிகப் பெரும் கோடீஸ்வரியாகி விட்ட அவர் தன் கவனத்தை சமுதாயத்தின் மீது கவனம் செலுத்தினார். இண்டியானாபோலிஸில் ஒய்.எம்.சி.ஏ. கறுப்பினத்தவர்களுக்கான சங்கத்திற்கு ஒரு கட்டிடத்தைக் கட்டிக் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து பல்லாயிரம் டாலர்களை அவர் கல்வி மேம்பாட்டிற்காகவும் இதர மேம்பாடுகளுக்காகவும் கொடுக்க ஆரம்பித்தார்.
தாழ்த்தப்பட்டுக் கிடந்த கறுப்பினப் பெண்மணிகளுக்கு அவர் எப்படி பட்ஜெட்டை தயாரித்து தாங்களே சுயதொழிலை மேற்கொண்டு முன்னேறுவது என்பதைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்.
அரசியலில் செல்வாக்கு பெற்ற அவருக்கு புக்கர் டி வாஷிங்டன், மேரி மக்லீட் பெதூன் உள்ளிட்ட பல சமுதாயத் தலைவர்கள் சிறந்த நண்பர்களாக ஆயினர்.
முதல் உலகப்போர் முடிவில் அவர் நீக்ரோ போர் நிவாரண வட்டத்திற்கு தலைவராக இருந்து நீக்ரோக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க ஏற்பாடு செய்தார்.
மறைவு
வாக்கருக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டது. 51-ம் வயதில் ஹைபர் டென்ஷனால் பாதிக்கப்பட்டார். 1919, மே மாதம் 25-ம் நாள் தனது 51-ம் வயதில் அவர் மறைந்தார். அவர் நியூயார்க் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
டாகுமெண்டரி
ரெஜினா டெய்லர் என்பவர் வாக்கரைப் பற்றி 2006-ல் ‘தி ட்ரீம்ஸ் ஆஃப் சாரா ப்ரீட்லவ்’ என்ற ஒரு நாடகத்தை எழுதினார். அது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து இவரது வரலாற்றை பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சீரியலாகக் காட்டின. அவரை கௌரவித்து தபால் தலை வெளியிடப்பட்டது. அவர் பெயரால் பல விருதுகள் அறிவிக்கப்பட்டன.
பெண்களுக்கு அன்புரை
உலகில் வாழும் பெண்மணிகளுக்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்மணிகளுக்கு மேடம் வாக்கரின் அன்புரை இது தான்:
“எனது வாழ்க்கையையும் எனது வாய்ப்பையும் நானே உருவாக்கிக் கொள்ள வேண்டி இருந்தது. ஆனால் அதை நான் உருவாக்கிக் கொண்டேன். வெறுமனே உட்கார்ந்து கொண்டு வாய்ப்புகளை எதிர்பார்த்துக் காத்திருக்காதீர்கள். எழுந்திருங்கள். அவற்றை உருவாக்கிக் கொள்ளுங்கள்”
—- Subham—