
Post No. 13.350
Date uploaded in London – —18 JUNE 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (29)
ராமாயணத்தில் சாபங்கள் (29) கபந்தன் இந்திரன் தனக்குத் தந்த சாபத்தை விளக்கியது!
ச.நாகராஜன்
கபந்தன் தன் வரலாற்றை விரிவாகக் கூறி தான் ஏன் சாபம் பெற்றேன் என்பதையும் கூறுகிறான்.
அவன் கூறுவது:
“நான் உக்கிரமான தவத்தினால் பிரம்மதேவரை மனம் குளிரச் செய்தேன். அவர் எனக்கு நீண்ட ஆயுளை அனுக்ரஹித்தார். அப்போது முதல் என மனதிற்குத் தோன்றியதைச் செய்ய ஆரம்பித்தேன். இந்திரன் என்னை என்ன செய்ய முடியும் என்ற எண்ணத்தினால் அவனைப் போரில் எதிர்த்தேன். அவனால் விடப்பட்ட வஜ்ராயுதத்தால் என் தலை உடம்பினுள் புதைக்கப்பட்டது. இரு துடைகளும் அப்படியே புதைக்கப்பட்டன. எமலோகத்திற்கு என்னை அனுப்பாமல் “பிரம்மதேவரின் ஆக்ஞை உண்மையாகவே ஆகக் கடவது” என்று என்னிடம் இந்திரன் சொல்லி விட்டார்.
“இப்படியே இருந்தால் எனக்கு நீண்ட காலம் ஜீவிக்க ஆகாரம் எப்படிக் கிடைக்கும்” என்று கேட்டேன். அவர் எனக்கு எட்டு மைல் நீளமுள்ள இரு கைகளையும் கூரிய பற்களை உடைய வாயையும் எனது வயிற்றில் அமைத்தார்.
அன்றிலிருந்து வனத்தில் வாழும் சிங்கங்கள், யானைகள், புலிகளை இரு கரங்களால் இழுத்து புசித்து வருகிறேன்.
கபந்தன் தன் சாப விமோசனம் பற்றிக் கூறியது:
அனாஹார: கதம் சக்தோ பக்னசக்திஷிரோமுக: |
வஜ்ரேனாபிஹத: காலம் சுதீர்கமபி ஜீவிதும் ||
ஏவமுக்தஸ்து மே ஷகோ பாஹு யோஜனமாயதௌ |
ப்ராதாதாஸ்யம் ச மே க்ருக்ஷௌ தீக்ஷணதம்ப்ரமகல்பயத் ||
ஏவம் – பின் கண்டவாறு
வஜ்ரேண – வஜ்ராயுதத்தினால்’
அபிஹத: – அடியுண்டு
பக்னசக்திஷிரோமுக: – நொறுங்கிப் போன துடைகளையும் தலையையும் வாயையும் உடையவனாகி
அனாஹார: – ஆகாரம் சம்பாதிக்க முடியாதவனாய் நான்
சுதீர்க்க காலம் – நீண்ட காலம்
ஜீவிதும் – ஜீவித்திருக்க
கதம் சக்த: – எப்படித்தான் முடியும்
அபி உக்த: – என்று இந்திரனிடம் வினாவப்பட,
சக்ரு: – இந்திரன்
து மே – அதன் மேல் எனக்கு
யோஜனம் ஆயதழு – எட்டுமைல் நீளமுள்ள
பாஹு – இரு கைகளை
ப்ராதாத் – அனுக்ரஹித்து அருளினார்.
தீக்ஷணதம்ப்ரஷ்டம் – கூரிய பற்களை உடைய
பாஸ்யம் ச – வாயையும்
மே குக்ஷௌ – எனது வயிற்றில்
அகல்பயத் – அமைத்தார்
சோஹம் புஜாப்யாம் தீர்காப்யாம் சங்க்ருஷ்யாஸ்மிந்வனேசரான் |
சிம்ஹத்விபம்ருகவ்யாக்ரான் பக்ஷயாமி சமன்வத: |\
ச; அஹம் – அந்த நான்
அஸ்மின் – இந்த
வனேசரான் – வனத்தில் வாழும்
சிம்ஹத்விபம்ருகவ்யாக்ரான் – சிங்கங்களையும், யானைகளையும், மான்களையும், புலிகளையும்
தீர்கப்யாம் – நீண்ட
புஜாப்யாம் – இரு கரங்களாலும்
சமன்வத: – நான்குபக்கங்களிலிருந்தும்
சங்க்ருஷ்யாமி – புசித்து வருகிறேன்
ச து மாமப்ரவீதிந்த் ரௌ யதா ராம: லக்ஷ்மண: |
சேத்ஸ்யதே சமரே பாஹு ததா ஸ்வர்க கமிஷ்யஸி ||
ச: இந்த்ர: – அந்த இந்திரன்
மாம் – என்னைப் பார்த்து
து – அப்போது இப்படியும்
அப்ரவீத் – கூறினார்
ச லக்ஷ்மண: – லக்ஷ்மணருடன் கூட
ராம: – ராமர்
சமரே பாஹு – போரில்உனது இரு கைகளை
யதா – எப்போது
சேத்ஸ்யதே – அறுத்துத் தள்ளுகிறாரோ
ததா – அப்போது
ஸ்வர்கம் – ஸ்வர்க்கத்தை
கமிஷ்யஸி – நீ அடைவாய்
-ஆரண்ய காண்டம் 71-ம் ஸர்க்கம் ஸ்லோகங்கள் 13 முதல் 16 முடிய
கபந்தன் தனது சாபத்தை இப்படியாக விரிவாகக் கூறி சாப விமோசனம் பெற்று விண்ணுலகம் ஏகுகிறான்.
இத்துடன் ஆரண்ய காண்டத்தில் உள்ள சாப விளக்கங்கள் முடிவடைகின்றன.
**
tags–ஆரண்ய காண்டம் , சாப விமோசனம்





















