கனக துர்க்கை அம்மன் கோவில், விஜயவாடா (Post No.13,401)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,401

Date uploaded in London – 2 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

ஆந்திர மாநிலத்தில் உள்ள 108 புகழ்பெற்ற கோவில்கள் – 2

ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா  நகரத்தின் காவல் தெய்வம் கனக துர்க்கை ஆவார். ஆண்டு தோறும் ஏராளமான பக்தர்களை கவர்ந்திழுக்கும் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். சபரிமலை ஐயப்பன் கோவில் போலவே இங்கும் பக்கதர்கள் தீட்சை மாலை  பெற்று மீண்டும் கோவிலுக்கு வந்து தீட்சை விரதத்தை முடித்துக் கொள்கிறார்கள் .

இந்தக் கோவில் கிருஷ்ணா நதியின் கரையில், இந்திர நீலாத்ரி/  கீலாத்ரி குன்றின் மீது அமைந்துள்ளது. கோவிலை அடைய 260 படிகள் ஏறவேண்டும். மூலஸ்தானத்தின் மேல் தங்கக் கூரை போடப்பட்டுள்ளது. 

எல்லா இந்துப் பண்டிகை நாளும் கொண்டாடப்பட்டாலும் நவராத்ரியும், முடிவு தினமான தசராவும் வெகு விமரிசையாக நடைபெறும். தசராவின் போது  துர்கையம்மன் தங்கக் கவச அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சிதருவார்.. கூட்டம் அதிகம் வருவதால் தொலைவிலிருந்து பார்க்க வசதியும் செய்து வருகிறார்கள்.

இங்குள்ள சிவலிங்கத்தை அகஸ்திய முனிவர் ஸ்தாபித்ததாக ஐதீகம் இதனால் இந்த இடம் மல்லேஸ்வரம் என்ற  பெயர்பெற்றது.        இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது; ஸ்ரீ சக்ரம் பிரதிஷ்டையான இடம்

கீலா என்ற அசுரன், அம்மனை வேண்டி தவம் செய்து வரம்பெற்றதால் கீலாத்ரி என்று இந்தக் குன்று பெயர்பெற்றது.

மகிஷன் என்ற அசுரனை வதம் செய்ததால் மகிஷாசுர மர்த்தினி  என்று அழைக்கப்படுகிறாள் அந்தக் கோலத்தில் இங்கு வாசம் செய்கிறாள் கனக துர்கா  தேவியின் எட்டு கைகளில் எட்டு ஆயதங்கள் உள்ளன 4 அடி உயர அம்மன்.

ஒரு காலத்தில் கனக (தங்கம்) மழை பெய்ய வைத்ததால் கனக துர்க்கை என்று பெயர் ஏற்பட்டது.

நவராத்ரி காலத்தில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு  மகாலெட்சுமி, சரஸ்வதி, லலிதா திரிபுர சுந்தரி, மகிஷாசுர மர்த்தனி, துர்கா தேவி, ராஜா ராஜேஸ்வரி அலங்காரங்கள் செய்யப்படும் விஜயதசமி/ தசரா நாளன்று அம்மனை அன்னப்  பறவை  வடிவிலான படகில் வைத்து கிருஷ்ணா நதியில் தெப்போத்சவம் நடத்துகிறார்கள்.

பவானி தீட்சை

சபரிமலை ஐயப்பனுக்கு இருமுடி கட்டிக்கொண்டு , விரதம் இருந்து , யாத்திரை செய்து, தரிசனம் செய்வது போல ஆந்திர மக்கள் பவானி தீட்ச்சை பெற்று கனக துர்க்கையை தரிசிக்கின்றனர் 21 அல்லது 41 நாட்கள் விரதம் இருந்து சிவப்பு ஆடை அணிந்து யாத்திரை வருகின்றனர்.. கிருஷ்ணா நதியில் குளித்து விட்டு சிவப்பு ஆடை அணிந்து கோவிலுக்குச் சென்று  தீட்சை மாலை  பெறுவார்கள்; விரதம் முடிந்த பின்னர் மீண்டும் கோவிலுக்கு வந்து தீட்சையை முடிக்கிறார்கள். ஐயப்ப பக்தர்கள் போலவே தினமும் குளித்து விரத உணவை மட்டும் உண்டு, பெண்களைத் தொடாமல்  புலனடக்கத்துடன் விரதம் இருப்பது மரபு. பெண்களும் விரதம் இருந்து வருகிறார்கள். பெண்களாக இருந்தால் மாதத் தீட்டு ஏற்படாத 21 நாட்களில் விரதம் இருப்பார்கள். நவம்பர்- டிசம்பர் மாதங்களில் விரதம் எடுக்கிறார்கள்.

கனக துர்க்கை அம்மன் கோவில் விஜயவாடா நகரின் மையத்தில் உள்ளது. பஸ்  நிலையம் அல்லது  ரயில் நிலையத்திலிருந்து நடந்தே செல்லலாம் .இதனருகில் அக்கன்னா மாடன்னா குடைவரைக் கோயில் உள்ளது.

சாகம்பரி உற்சவம்

ஆண்டுதோறும் ஆஷாட மாதத்தில் மூன்று நாள் சாகம்பரி  உற்சவம் நடக்கும் சுக்ல பட்ச திரயோதசி முதல் பெளர்ணமி வரை நடக்கும் அந்த நாட்களில் அம்மன், சாகம்பரி அல்லது வன சங்கரி ரூபத்தை எடுப்பதாக ஐதீகம்; அப்போது நடக்கும் பூஜையால் காய்கறிகள், பயிர்கள் செழித்து வளரும் என்பது நம்பிக்கை; மூன்று நாட்களும் கோவிலை காய்கறிகள் பழங்களால் அலங்கரிப்பர்; தேவியும் பழம், காய்களால் அலங்கரிக்கப்படுவாள் ; இரண்டு லட்சம்பேர் வரை தரிசனத்துக்கு வருகிறார்கள் வறட்சி நீங்கி மழை  பெய்து வளம் பெறுக, மக்கள் சாகம்பரி தேவியை வணங்குகின்றனர்.

சாகம்பரியின் கோவில் ஒன்று உத்தர பிரதேச ஸஹ்ரான்பூரில் இருக்கிறது .

கோவிலில் உள்ள சிவனை பிரம்மா, மல்லிகை மலரால் அர்ச்சனை செய்ததால் அவரை மல்லிகேசா என்று அழைக்கின்றனர். அர்ஜுனனும் இங்கு தவம் செய்ததாக தல புராணம் சொல்லும்.  கோவிலின் நீண்ட வரலாறு மற்றும் பூஜை/ சேவை வசதிகள் எல்லாம் கோவிலின் வெப்சைட்டில் விவரமாகக் கொடுக்கப்பட்டுள்ளது Sri Durga Malleswara Swamy Varla Devasthanam, https://kanakadurgamma.org/en-in/about/the-temple-history/the-history

சீனப் பயணி யுவான் சுவாங்கின் பயணக் குறிப்பு

1500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த சீனப்பயணி யுவான் சுவாங், தனது பயணக் குறிப்புகளில் கனக துர்க்கையம்மன் கோவில் குறித்து எழுதி வைத்துள்ளார். கோவில் அருகே கல்வெட்டுகள் இருந்ததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

–subham–

Tags- ஆந்திர மாநில, புகழ்பெற்ற கோவில்கள்-2, கனக துர்க்கை, அம்மன் கோவில், விஜயவாடா

Leave a comment

Leave a comment