
Post No. 13.403
Date uploaded in London – —3 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
6-6-2024 தேதியிட்ட குமுதம் பக்தி ஸ்பெஷல் Supplemnt-ஆக வெளிவந்த இணைப்புப் புத்தகத்தில் வெளியான கட்டுரை. இங்கு மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.
இமயமும் இராமாயணமும்! – 1
ச .நாகராஜன்
“மன்னும் இமயமலை எங்கள் மலையே
மாநில மீதிது போல் பிறிதிலையே”
என்று மகாகவி பாரதியார் பெருமிதத்துடன் பாடிப் புகழும் இமயமலை உலகின் ஆகப் பெரும் பெரிய மலைத் தொடர். குமார சம்பவத்தில் மகாகவி காளிதாஸன் ‘மானதண்டம்’ என்று பூமியை அளக்கும் அளவு கோல் என்ற பொருளில் கூறிப் புகழ்கிறான்.
2500 கிலோமீட்டர் நீளமும் 350 கிலோமீட்டர் அகலமும் கொண்டது இமயமலைத் தொடர். உலகின் உயரமான சிகரத்தைக் கொண்டது இமயம். 17 பெரிய கணவாய்களைக் கொண்டது இமயத் தொடர். 16500 அடி முதல் 18800 அடி உயரம் வரை இவை அமைந்துள்ளன!
பாரத தேசத்தின், அறநூல்கள் புகழும் இந்த மலை ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டது.
ராமாயணத்தின் முக்கிய பாத்திரங்களான ராமர், சீதை, ஜனகர், லஷ்மணன், வசிஷ்டர், ராவணன், அனுமார், ஊர்மிளை என ஏராளமான பாத்திரங்களுடன் தொடர்பு கொண்டது இமயம்.
அனைத்தையும் பார்க்க முடியாவிட்டாலும் சில சம்பவங்களையும் இடங்களையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
சீதா தேவி அவதரித்த மிதிலை
மிதிலா நகரம் வேத காலத்தைத் தொடக்கமாகக் கொண்ட பழம் பெரும் நகரம். நேபாளத்தின் தெற்கே கமலா நதிக்கரையில் எழில் கொஞ்சும் இமயமலை சுற்றி வடக்கில் இருக்க தெற்கே கங்கா நதி ஓட அமைந்துள்ள நகரம் இது. இப்போது பீஹார் மற்றும் நேபாளப் பகுதிகளைக் கொண்ட இடம் மிதிலா நகரம். பிரிட்டிஷார் அரசாண்ட காலத்தில் இது இந்தியா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்ததாகப் பிரிக்கப்பட்டது.
மைதிலி மக்கள் வாழும் இடம் இது என்றும் இவர்கள் மொழி மைதிலி என்றும் அறியப்படும்.
இப்போதைய இந்தியப் பகுதியில் மதுபானி, கிழக்கு மற்றும் மேற்கு சம்பாரன் சீதாமதி உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன.
72 கோடி ரூபாய் மதிப்பில் சீதை அவதரித்த இடமான சீதாமர்ஹியில் ஒரு பெரும் ஆலயம் அமைப்பதற்கான திட்டத்தை பீஹார் அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.
மிதி என்ற அரசன் மிதிலாபுரியைத் தோற்றுவித்தான் என்றும் அவன் தனது தந்தையின் உடலிலிருந்து தோன்றியதால் ஜனகன் என்றும் அழைக்கப்பட்டான் என்றும் புராதன நூல்கள் தெரிவிக்கின்றன. இதை விதேகம் என்று யஜூர்வேத சம்ஹிதை குறிப்பிடுகிறது. மிதிலை என்று ராமாயணமும் மஹாபாரதமும் குறிப்பிடுகிறது.
ராமாயண இதிஹாஸம் கூறும் சீதையின் அவதார தோற்றம் அனைவரும் அறிந்ததே.
மிதிலையை ஆண்ட ஜனக மன்னன் ஒரு நாள் பூமியில் புதைந்திருந்த பெட்டியைக் கண்டெடுக்க அதில் இருந்த சீதையைக் கண்டு சீதையை வளர்க்க ஆரம்பித்தார். உரிய பருவத்தில் சிவ தனுசை விஸ்வாமித்திர மஹரிஷியுடன் வந்த ராமர் முறிக்கவே சீதையை மணம் புரிந்தார்.
சீதைக்கு ஜனகரின் மகள் என்பதால் ஜானகி என்ற பெயரும் மிதிலையில் பிறந்ததால் மைதிலி என்ற பெயரும் விதேக தேசத்து ராஜகுமாரி என்பதால் வைதேகி என்றும் பூமியில் அவதரித்ததால் பூமிஜா என்ற பெயரும் இப்படிப் பல பெயர்கள் உண்டு.
சீதையின் சரித்திரம் சொல்லும் மகத்தான இதிஹாஸம் ‘சீதாயா சரிதம்’ என்று கூறப்படும். அனைவரும் அறிந்த பெயர் ராமாயணம்.
சீதா தேவி பிறந்த இடமாக பக்தர்கள் இரு இடங்களைக் குறிப்பிட்டு வழிபட்டு வருகின்றனர்.
ஒன்று நேபாளத்தில் உள்ள ஜனக்பூர். இங்குள்ள ஜானகி மந்திர் மிகவும் பிரசித்தமானது. சீதை தோன்றிய இடமாக கருதப்படும் இந்த இடத்தில் மிகப் பெரும் ஆலயமாக ஜானகி மந்திர் திகழ்கிறது. ராம நவமி உள்ளிட்ட விழா நாட்களில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இங்கு கூடி வழிபடுகின்றனர்.
அடுத்து ராமருக்கும் சீதைக்கும் விவாகம் நடந்த இடமாக உள்ள ராம-ஜானகி விவாஹ் மண்டபத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். விவாஹ பஞ்சமி அன்று (நவம்பர் – டிசம்பரில் வருகின்ற சுக்ல பக்ஷ ஐந்தாம் நாள்) ஏராளமானோர் இங்கு வந்து வழிபடுகின்றனர். அற்புதமான வேலைப்பாடு கொண்ட மண்டபம் இது.
பீஹாரில் உள்ள சீதாமர்ஹியும் சீதையின் பிறந்த இடமாக கருதப்படுவதால் இங்கும் பக்தர்கள் ஏராளமாகத் திரள்கின்றனர்.
ஶ்ரீ நகரில் உள்ள கமலேஷ்வர் ஆலயம்
ஶ்ரீ நகரில் உள்ள கமலேஷ்வர் மஹாதேவர் ஆலயம் மிகவும் புகழ் பெற்ற ஆலயம். இதைப் பற்றிய தல வரலாறு ஒன்று உண்டு. ராம-ராவண யுத்தம் முடிந்த பின்னர் அயோத்தி திரும்பிய ராமர் போரில் இறந்தவர்களுக்காக பிராத்தனை புரிய இங்கு வந்தார். ஆயிரம் தாமரை மலர்களால் இங்குள்ள சிவனை அவர் தினமும் அர்ச்சிக்க ஆரம்பித்தார். ராமரை சோதிக்க எண்ணிய சிவபிரான் ஒரு நாள் ஒரு தாமரை மலரை மறைந்து போகச் செய்தார். ராமர் மனம் தளரவில்லை. தனது ஒரு கண்ணை மலருக்குப் பதிலாக அர்ச்சிக்க எண்ணினார். கண்களை எடுக்க இருந்த தருணத்தில் தோன்றிய சிவபிரான் அவரைத் தடுத்து ஆட்கொண்டார். இந்தக் கணம் முதல் ராமரை கமலநயனன் – தாமரைக் கண்ணன் என்று உலகம் போற்றி அழைக்க ஆரம்பித்தது. இந்தக் கோவிலில் இன்றும் அனைத்து பக்தர்களும் ஒன்று கூடி வழிபடுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
குமாவோன்
இமயமலைப் பகுதியில் உள்ள வியக்க வைக்கும் பிரதேசம் குமாவோன்.
குமோவான் காடுகளைப் பற்றிய அனைத்து விவரங்களையும் ஜிம் கார்பெட் (பிறப்பு 25-7-1875 மறைவு 19-4-19550 என்ற பிரபல எழுத்தாளர் அருமையாக நூல்களில் எழுதியுள்ளார்.
குமாவோன் என்ற பெயரே ஆமை என்ற பொருள் கொண்ட கூர்ம என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். விஷ்ணு பகவான் கூர்ம அவதாரம் எடுத்ததை நினவு படுத்தும் இடம் இது.
ராவணனின் சகோதரனான கும்பகர்ணனின் தலையை அறுத்த ராமர் அந்தத் தலையை குமாவோனுக்கு அனுமன் மூலமாக அனுப்பி விட்டார். அதை அனுமன் சம்பாவத் என்ற இடத்தின் அருகே விட்டு விட்டார்.
அந்தத் தலை நீரால் நிரம்ப அது ஒரு ஏரியாகப் பரிணமித்தது. எட்டு கிலோமீட்டர் அகலம் கொண்ட ஏரி இது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நடந்த யுத்தத்தில் அர்க்கர்களை விஷ்ணு கூர்ம வடிவம் எடுத்து கொன்று இந்த ஏரியில் தள்ளினார். இந்த யுத்தம் நடந்த இடம் கூர்மாஞ்சல் என்று அழைக்கப்படுகிறது. மறத்தின் மீது அறம் கொண்ட வெற்றியைக் குறிக்கும் இடம் இது என்று இன்றும் போற்றப்படுகிறது.
இந்த கூர்மாஞ்சலே காலப் போக்கில் குமாவோன் என்று பெயர் மாறியதாக இங்குள்ள மக்களும் அறிஞர்களும் கூறுகின்றனர். மூன்று யுகங்கள் கடந்தும் இருந்த இந்த ஏரி மஹாபாரத காலத்தில் விசேஷ வரலாற்றை கடோத்கஜன் மூலமாகப் பெற்றது.
இமயமலைப் பகுதியில் உள்ள தாரஸ் பழங்குடி மக்கள் தங்களை ராமரின் பக்கம் போர் புரிந்தவர்கள் என்று கூறி இன்றும் பெருமைப்படுகின்றனர். ராம- ராவண யுத்தம் மிக கோரமாக நடந்ததால் அதில் பங்கேற்ற இவர்கள் நடுநடுங்கிப் போனார்களாம். இதற்கான வார்த்தை தார்த்தராயா என்பதாகும். அதிலிருந்து இந்த தாரஸ் என்ற குடிப் பெயர் வந்ததாம். இங்குள்ள பெண்கள் ஆண்களை விட மிக அதிகமாக மதிக்கப்பட்டு அதிகாரத்துடன் திகழ்கிறார்கள்.
திரிவேணி சங்கமம்
கங்கை, குப்த சரஸ்வதி, யமுனா ஆகிய மூன்று நதிகளும் சங்கமம் ஆகும் திரிவேணி சங்கமம் மிகவும் புண்யமயமானது. இங்கு ஸ்நானம் செய்வது அனைத்து பாவங்களையும் போக்கி விடும் என்பது ஐதீகம். வனவாசம் செல்வதற்கு முன்னர் இங்கு தான் ரிஷி குண்டத்தில் ராமர் ஸ்நானம் செய்து தன் வனவாசத்தை ஆரம்பித்தார்.
இங்கு அருகில் உள்ள ஸ்வர்க்க ஆஸ்ரமத்தில் உள்ள சத்ருக்கன் ஆலயம் சத்ருக்கனனுக்காக அமைக்கப்பட்டுள்ள ஒரு புகழ் பெற்ற ஆலயம் ஆகும்.
தேவ ப்ரயாகத்தில் உள்ள ரகுநாதர் ஆலயம் ராமருக்கென உரித்தான ஆலயமாகத் திகழ்கிறது. ரிஷிகேச யாத்திரையை மேற்கொள்வோர் அனைவரும் இந்த ஆலயங்களைத் தரிசிப்பது மரபாகும்.
To be continued…………………….