இமயமும் இராமாயணமும்! – 2 (Post No.13,406)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.406

Date uploaded in London – 4 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

 6-6-2024 தேதியிட்ட குமுதம் பக்தி ஸ்பெஷல் Supplemnt-ஆக வெளிவந்த இணைப்புப் புத்தகத்தில் வெளியான கட்டுரை. இங்கு மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது. 

இமயமும் இராமாயணமும்! – 2 

ச .நாகராஜன்

லக்ஷ்மணனை உயிர்ப்பித்த சஞ்சீவனி மூலிகை 

ராமாயணத்தில் வரும் ஒரு முக்கிய கட்டம் ராம-ராவண யுத்தத்தில் லக்ஷ்மணன் மூர்ச்சை அடைந்து விழுவதாகும். லக்ஷ்மணன் இந்திரஜித்தின் பாணத்தால் மயக்கமடைந்ததைக் கண்ட ராமன் வருத்தம் மேலிட்டுப் புலம்ப அந்த மயக்கத்தை நீக்க சஞ்சீவனி மூலிகையைக் கொண்டு வர அனுமான் புறப்படுகிறார்.

துரோணகிரி பர்வதத்தை நோக்கி அதி விரைவாக ஆகாயத்தில் பறந்த அனுமார் எந்த மூலிகை சஞ்சீவனி மூலிகை என்று தெரியாமல் திகைக்கிறார்.

ஆகவே அங்கிருந்த மலையை அப்படியே அடியோடு தூக்கி வருகிறார்.

சஞ்சீவனி மூலிகை மூலம் லக்ஷ்மணன் மயக்கம் நீங்க ராமர் மகிழ்கிறார் போர் தொடர்கிறது.

இந்த வரலாற்றை மையமாக வைத்து இமயமலைப் பகுதியில் ஏராளமான இடங்கள் உள்ளன.

முதலில் இங்குள்ள ஹேம்குண்ட் மிகவும் பிரபலமான ஒரு இடம். லக்ஷ்மண் குண்ட் என்றும் இது அழைக்கப்படுகிறது.

 இங்குள்ள ஏரிக்கரையில் தான் லக்ஷ்மணன் வெகு காலம் தியானம் செய்தார் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கை.

இன்னொரு வரலாறும் உண்டு. ராம- ராவண யுத்தத்தில் மூர்ச்சையாகி விழுந்த லக்ஷ்மணன் இங்கு கொண்டு வரப்பட்டார். லக்ஷ்மணனின் மனைவியான ஊர்மிளா தனது கணவன் உயிர் பிழைக்க ஒரு விரதத்தை மேற்கொண்டார். அவரது விரதத்தின் காரணமாகவே அனுமார் துரோணகிரியைக் கண்டுபிடிக்க முடிந்தது. சஞ்சீவனி மூலிகை கொண்டு வரப்படவே லக்ஷ்மணன் உயிர் பிழைக்கிறார்.

தேவர்கள் பூமாரி சொரியவே அந்த மலர்கள் இன்றும் உத்தர்காண்டில் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

 நீதி மற்றும்  போடியா பழங்குடி மக்கள் இந்த இடத்திற்கு வந்து தரிசித்தால் தங்கள் கணவன்மார் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருப்பார்கள் என்று நம்புகின்றனர். அவர்களில் ஏராளமானோர் இங்கு வருவது இன்றும் நடைபெறும் ஒன்று.

தங்கள் காலணிகளைக் கழற்றி விட்டு 8 கிலோ மீட்டர் அவர்கள் பனிப்பாறைகளின் இடையே நடந்து யாத்திரையை மேற்கொள்வது நெகிழ வைக்கும் ஒரு யாத்திரையாகும்.

லக்ஷ்மணனை அவர்கள் சிவனின் அவதாரமாகக் கருதுகின்றனர். இங்குள்ள பிரதேசம் வழியே பாயும் நதிக்கு லக்ஷ்மணன் கங்கா என்று பெயர்.

சபரியால் வந்த சஞ்சீவனி

அடுத்து இந்த சம்பவத்தை ஒட்டிய இன்னொரு சுவையான வரலாறும் இமயமலைப் பகுதியில் வழங்கப்பட்டு வருகிறது.

ராமபிரானின் அணுக்க பக்தை சபரி. வனவாசத்தின் போது ராமரைக் கண்ட மகிழ்ச்சியில் சபரி ஒவ்வொரு இலந்தைப் பழமாகக் கடித்துப் பார்த்து ராமருக்கு அர்ப்பணிக்கிறாள். ஏனெனில் அந்தப் பழம் சுவையாக இருக்க வேண்டுமே என்ற எண்ணத்தினால் அவள் அதை முதலில் கடித்துப் பார்த்து அதன் சுவையை உறுதி செய்து கொண்டு அர்ப்பணிக்கிறாள். ராமர் அதை மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார். ஆனால் இது லக்ஷ்மணனுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. இப்படியா எச்சில்படுத்திப் பழங்களைத் தருவது என்று எண்ணிய லக்ஷ்மணன் அவற்றை ஏற்க மறுத்து விடுகிறான்.

சபரியின் பக்தியின் தீவிரம் காரணமாகவே அவள் எச்சில் படுத்திப் போட்ட பழங்கள் சஞ்சீவனி மூலிகையாக வளர்கின்றன.

ராம ராவண யுத்தத்தில் லக்ஷ்மணன் அடிபட்டு மூர்ச்சையாகவே அவனை உத்தர்காண்டில் லோக்பால் ஏரி அருகே கொண்டு வருகின்றனர். ஏராளமான மூலிகைகள் தரப்பட்டும் பயனில்லை. ஊர்மிளா கணவன் உயிர் பிழைக்க விரதத்தை மேற்கொள்கிறாள். அனுமார் பல இடங்களில் சஞ்சீவனி மூலிகையைத் தேடி அலைகிறார்.

யமுனை நதிப் பள்ளத்தாக்கு மற்றும் கங்கோத்ரி அருகே உள்ள ஹனுமான் டிப்பா ஆகிய இடங்களில் ,மூலிகையைத் தேடிய அனுமார் ஹனுமான் கட்டி என்று அழைக்கப்படும் விஷ்ணு கங்கா மற்றும் காசி கங்கா இணையும் இடமான பத்ரிநாத்திற்கு அருகே வருகிறார். அங்கே தான் அவருக்கு சஞ்சீவனி மூலிகை துரோணகிரியில் இருக்கிறது என்பது தெரிய வருகிறது.

குண்ட் கால் கணவாய் என்ற கணவாய் வழியே பாய்ந்து சென்ற அனுமார் துரோணகிரியை அடைகிறார். மூலிகையை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் மலையையே தூக்கி எடுத்து வருகிறார். சஞ்சீவனி மூலிகையால் லக்ஷ்மணன் உயிர் பிழைக்கிறார்.

சபரியினால் உருவான மூலிகையே லக்ஷ்மணனின் உயிரைக் காத்தது என்பதால் அவன் கர்வம் அழிகிறது. அனுமனின் பக்தியால் மூலிகை கொண்டு வரப்பட,. சதி ஊர்மிளாவின் விரதத்தால் கணவன் காப்பாற்றப்படுகிறான். இதனால் தேவர்கள் புஷ்ப மாரி சொரிகின்றனர்.

அந்த மலர்களே இன்றும் அங்கு காணப்படும் அழகிய மலர்கள்! இந்த விசேஷமான மலர்கள் உள்ள பகுதியே இன்று அனைவராலும் அழைக்கப்படும் நந்தன் கனான் என்னும் பகுதியாகும்.

இதைப் பெருமையுடன் சொல்லும் இமயமலைப் பகுதி மக்கள் லக்ஷ்மணன் எந்த இடத்தில் கிடத்தப்பட்டு மீண்டும் மூர்ச்சை தெளிந்தானோ அந்த இடத்தில் லக்ஷ்மணன் ஆலயத்தை நிறுவியுள்ளனர். அதுவே இன்று ஹேம்குண்ட் என்று அழைக்கப்படுகிறது.

 உத்தர்காண்டில் சமோலி மாவட்டத்தில் துரோணகிரி அமைந்துள்ளது. மலை ஏறும் ட்ரெக்கிங்கை மேற்கொள்வோர் மே முதல் ஜூன் மாதம் இங்கு செல்லலாம். இதுவே உகந்த காலமாகும். ‘கார்வால் இமயப் பகுதி’ எனப்படும் இப்பகுதிக்குச் செல்வோர் இப்போது அதிகமாகி வருகிறது.

அனுமார் கொண்டு வந்த மூலிகைகள் நான்கு என்று கூறப்படுகிறது.

1.        ம்ரித சஞ்சீவனி (இறந்தவரை உயிர் பிழைக்க வைக்கும் மூலிகை)

2.        விஷல்யாகரணீ (உடலில் இருக்கும் ஆயுதங்களை எடுத்து விட்டு அங்கு ஏற்பட்டுள்ள காயங்களை ஆற வைக்கும் மூலிகை)

3.        சுவர்ணகரணீ (உடலைப் பழைய பொலிவுடன் ஆக்கும் மூலிகை)

4.        சந்தாணி (உடைந்த அங்கங்களையும் எலும்புகளையும் ஒன்றாக இணைக்கும் பெரும் மூலிகை)

அனுமன் சென்ற வேகம் மனோஜவம் என்று குறிப்பிடப்படுகிறது. மனம் ஒரு இடத்தை மனதிலே நினைக்கும் வேகத்தை விட இது அதிகமாம்.

பந்தர் பூஞ்ச்

பந்தர் என்றால் குரங்கு என்று பொருள். பூஞ்ச் என்றால் வால் என்று பொருள். பந்தர் பூஞ்ச் என்ற இமயமலைச் சாரலின் ஒரு பகுதியான அழகிய தொடர் கங்க்நானி என்ற இடத்திலிருந்து பார்க்க முடியும்.

இதற்கு பந்தர் பூஞ்ச் தொடர் என்று ஏன் பெயர் வந்தது?

ராமாயண கதாபாத்திரமான அனுமார் சஞ்சீவனி மூலிகையைத் தேடி இப்பகுதியில் அலைந்தார், அதனால் இது அந்தப் பெயரைப் பெற்றது.

இங்கு ஒரு அதிசயம் காலம் காலமாக நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒரே ஒரு குரங்கு இங்கு வருகிறது. மலையின் உச்சிக்குச் சென்று ஆண்டு முழுவதும் அங்கு வசிக்கிறது. அடுத்த குரங்கு வந்தவுடன் இது இறங்கிச் செல்கிறது. இந்த அதிசயம் வருடா வருடம் நடைபெறும் ஒன்று!

-to be continued…………………….

Leave a comment

Leave a comment