
Post No. 13.410
Date uploaded in London – —5 July 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
6-6-2024 தேதியிட்ட குமுதம் பக்தி ஸ்பெஷல் Supplemnt-ஆக வெளிவந்த இணைப்புப் புத்தகத்தில் வெளியான கட்டுரை. இங்கு மூன்று பகுதிகளாகத் தரப்படுகிறது.
இமயமும் இராமாயணமும்! – 3
ச .நாகராஜன்
ரிஷிகேசம் – லக்ஷ்மண் ஜூலா
ரிஷிகேசத்திற்கு வடகிழக்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் 450 அடி அகலமுள்ள ஒரு சஸ்பென்ஷன் பாலம் கங்கைக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது இப்போது மூடப்பட்டு விட்டது.
இங்கு ஒரு கயிறைக் கட்டி கங்கையை லக்ஷ்மணன் கடந்தான் என்பது வரலாறு.
இங்கு தான் லக்ஷ்மணன் மேகநாதனை வதம் செய்த பாவத்தைப் போக்க பல வருடங்கள் தவம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இங்கு லக்ஷ்மணனுக்கு தனிக் கோவில் ஒன்று பாலத்தில் அருகேயே உள்ளது.
வசிஷ்ட குகை
இராமாயணத்தில் அனைவராலும் போற்றி வணங்கப்படும் மஹரிஷி வசிஷ்டர் ஆவார். சப்த ரிஷிகளில் இவர் ஒருவர். பிரம்மாவால் தோற்றுவிக்கப்பட்டவர். சூரிய வம்சத்தின் குல குரு இவரே.
இவர் தவம் செய்து அரிய ஆற்றல்களைப் பெற்ற இடம் வசிஷ்ட குகை என அழைக்கப்படுகிறது.
இது ரிஷிகேசத்தில் அமைந்துள்ளது. ரிஷிகேசத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடத்தை பூலோக சொர்க்கம் என்று கூறுகின்றனர்.
இந்த குகை கங்கை நதிக் கரையில் அமைந்துள்ளது; பிரதான சாலையிலிருந்து 120 அடி கீழே உள்ளது. இங்கிருந்து 5 நிமிட நடை நடந்தால் அருந்ததி குகையை அடையலாம்.
இந்த வசிஷ்ட குகையில் பல விசேஷ அம்சங்களை பக்தர்கள் காண்கின்றனர்.
ஆன்மீக அதிர்வலைகளை உணரும் பக்தர்கள் கோடியில் உள்ள சிவலிங்கத்தை தரிசிக்கலாம். அதற்குப் பின்னர் உள்ள ஒரு சிறிய துவாரத்தில் கையை விட்டால் அது மூடி இருப்பது தெரிய வருகிறது. இந்த குகை சுமார் 20 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்டதாக இருந்திருக்கிறது. ஆனால் இது சமீப காலத்தில் மூடப்பட்டு விட்டது. ஏராளமான சித்தர்களும் யோகிகளும் மகான்களும் இங்கு தவம் செய்து அரிய சித்திகளைப் பெற்றுள்ளனர்; பெற்று வருகின்றனர்.
கைலாய மலை
ராமாயணத்துடன் தொடர்பு கொண்ட ஒரு இடமான கைலாயம் அமைந்துள்ள இடமும் இமயமலையே.
21778 அடி உயரமுள்ள இந்த மலையின் மீது இதுவரை ஏறியவர் யாருமில்லை. சிந்து, சட்லெஜ், பிரம்மபுத்திரா, கர்னாலி ஆகிய நதிகள் இந்த கைலாய மலைப் பகுதியில் ஓடுகின்றன.
சிறந்த சிவ பக்தனான ராவணன் கைலை மலையை அடியோடு பிடுங்க முயற்சி செய்ய, கோபமடைந்த சிவபிரான் தனது வலது பெருவிரலை மலையின் மீது அழுத்தி ராவணனை நசுக்கவே அவன் ஓலமிட்டு ஓவென்று கதறினான் என்பது புராணச் செய்தியாகும்.
தேவாத்மா, தேவபூமி என்று ராமாயண, மஹாபாரத இதிஹாஸங்களும் கவிஞர் காளிதாசன் உட்பட்ட பெரும் கவிஞர்களாலும் போற்றப்படும் இதன் எழிலை வர்ணிக்க எந்த மொழியிலும் வார்த்தைகளே இல்லை.
கண்வ குகை, உத்தாலக குகை என்று ரிஷிகள் தவம் செய்த குகைகள் ஒரு புறம்; கங்கை உள்ளிட்ட நதிகள் பாயும் செழிப்பான பிரதேசம் ஒரு புறம;, அமர்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட புண்யத் தலங்கள் ஒரு புறம்; இயற்கை எழில் கொஞ்சும் தாவரங்கள் மற்றும் வன விலங்குகள் ஒரு புறம் என ஏராளமான அம்சங்களைக் கொண்டு விளங்கும் இமயமலை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாரதத்தின் அரணாகத் திகழ்ந்து வருகிறது.
தூய வெண்மையுடன் கூடிய இந்தப் பனிமலை உலகத்தினர் அனைவராலும் பிரமிப்புடனும் ஆச்சரியத்துடனும் பார்க்கப்படும் தெய்வீக மலையாகும்.
இந்த மலைத் தொடருடன் மஹாபாரத பாத்திரங்கள் தொடர்பு கொண்ட இடங்களைப் பார்த்தால் பிரமிப்பின் எல்லைக்கே சென்று விடுவோம்.

துரோணகிரி – சஞ்சீவனி மூலிகை உள்ள மலை
சின்னச் சின்ன வேறுபாடுகள் ஏன்?
இமயமலைத் தொடருடன் ஏராளமான சம்பவங்கள் கூறப்படும் போது ஒரு சந்தேகம் எழுவது இயல்பே.
ஒரே சம்பவம் இரு இடங்களுடன் தொடர்பு படுத்தி கூறப்படுகிறதே என்று.
ராமாயணம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த யுகம் கடந்த ஒரு உண்மை வரலாறு.
காலப் போக்கில் சில சிறிய சம்பவங்களைப் பெருமை கருதி தங்கள் இடங்களுடன் தொடர்பு படுத்தி ஆங்காங்குள்ள மக்கள் கூறிக் கொள்வது இயல்பே.
அடுத்து ஊழிச் சுழற்சி என்ற அடிப்படையில் ராமாயணம் யுகம் தோறும், ஒவ்வொரு தடவையும் நடைபெறும் போது யுகதர்மப்படி சில சிறு சிறு மாறுதல்கள் ஏற்படுவது இயல்பே.
அடுத்து சுமார் 75க்கும் மேற்பட்ட ராமாயணங்கள் பல்வேறு மொழிகளில் உண்டு. அவற்றின் கதைப் போக்கிலும் சில சிறு வேறுபாடுகளைக் காணலாம்.
ஆனந்த ராமாயணத்தில், சீதையை வனத்திற்கு வர வேண்டாம் என்று ராமர் கூறும் போது சீதை பதிலாக, “முந்தைய எந்த ராமாயணத்திலும் சீதை இல்லாமல் ராமர் வனம் சென்றதில்லையே” என்று பதில் கூறுவதை எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
அடுத்து ஆயிரக் கணக்கான தலங்கள் ராமருடன் தொடர்பு கொண்டு காஷ்மீர், உத்தர்காண்ட், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு உள்ளிட்ட இடங்களில் இருப்பதும் இயல்பே.
ராமேஸ்வரம், திருப்புல்லாணி, ராமநாதபுரம் தொடங்கி வரிசையாக தமிழ்நாட்டில் ராமர் கோவில்கள் ஏராளம் உள்ளன. திருத்தல வரலாறுகளும் உள்ளன. ஆழ்வார்கள் பாடி அருளிய திவ்ய பிரபந்தம் நான்காயிரம் உண்டு.
ராமாயணத்தில் வரும் ஜீவனுள்ள கதாபாத்திரங்களும் காலத்தை வென்ற ‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ என்ற ஆதாரமான தர்ம நெறியை உலகிற்கே போதிப்பதை உணர முடியும்.
பாரத தேசத்தை ஓரிழையில் ஒன்று படுத்தி நிறுத்தி வைத்திருக்கும் ராமாயணம் காலத்தை வென்ற காவியம் என்பது மட்டும் உண்மை.
***