விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-15 (Post.13,412)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,412

Date uploaded in London – 5 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx 

விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள்-15  (Post.13,412)

விஞ்ஞான ரகசியங்கள்

ஹிரண்யகர்பஹ- எண் 411

பிரம்மா தோன்றிய தங்க முட்டை/ ஹிரண்யகர்ப தோன்றக் காரணமானவர்.

அக்ரஜஹ- எண் 891

எல்லாவற்றிற்கும் முன்னர் தோன்றியவர்.அதாவது ஹிரண்யகர்ப

ரிக்வேதம் 10-121- 1 சொல்வதாவது ,

ஹிரண்யகர்பஹ  சமவர்த்ததாக்ரே — ஹிரண்யகர்ப முதலில் வந்தது..

இங்கு ஒரு முக்கிய விஷயத்தை   கவனிக்க வேண்டும் ஹிரண்யகர்ப என்பது முட்டை / கோளம் வடிவானது இந்தப் பிரபஞ்சம் , பூமி, கிரகங்கள் ஆகிய எல்லாம் வட்ட வடிவானவை . ரிக் வேதத்திலேயே இந்த வடிவம் சொல்லப்பட்டுள்ளது . அப்போது .HUBBLE /ஹப்பிள் டெலெஸ்கோப்போ , GALILEO /கலீலியோ டெலெஸ்கோப்போ இல்லை.

அண்டம், கோளம், மண்டலம் என்ற சொற்கள் எல்லாம் வட்டவடிவத்தையே குறிப்பிடுகின்றன.

xxx

ஸ்வத் ருதஹ — நாம எண் 843

தம்மைத் தாமே தாங்குபவர் .

மேற்குகூறியபடி எதுவும் அவரைத் தாங்கவில்லையானால்  அவர் எப்படி நிற்கிறார் ? இதற்கு சாந்தோக்ய உபநிஷத் விடை பகர்கிறது —ஸ பகவஹ கஸ்மின் ப்ரதிஷ்டித இதி ஸ்வே மஹிம்னி — சாந்தோக்ய உபநிஷத் 7-24-1–ஓ குருவே ! இதற்கு ஆதாரம் என்ன? அவருடைய மகிமையே –இவ்வாறு சங்கரர் கூறுகிறார்.

எனது கருத்து

இதை வானில் உலவும் கிரககங்களுக்கும் ஒப்பிடலாம். கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதும் இல்லை; கீழே விழுவதும் இல்லை. அந்தரத்தில் உலா வருகிறது. எப்படி? அவனது மஹிமை என்று இறைவனையும் கை காட்டலாம். அல்லது அவற்றின் மகிமையே என்றும் சொல்லலாம். அதாவது ஒன்றுக்கு  ஒன்று சரியான ஈர்ப்பு விசையை செலுத்துவதால் அவை அப்படியே அந்தரத்தில் வலம் வருகின்றன. அவைகளை கிரஹம் என்று நாம் சொல்கிறோம்  சூரியனும் சந்திரனும் கிரகங்களே என்று நவக்கிரக ஸ்தோத்திரத்தில் காண்கிறோம் . அது சரியான விஞ்ஞான விளக்கம். ஏனெனில் கிரஹம் என்றால் கிரஹிக்கவல்லது ;அதாவது ஈர்ப்பு விசை உள்ளது. கிராவிடி/ ஈர்ப்பு விசை என்ற சொல்லே கிரஹ என்ற சமஸ்க்ருத  சொல்லிலிருந்தே  வந்தது. பிடி, பிடிமானம், ஈர் , என்ற எல்லாச் சொற்களும் ஸம்ஸ்க்ருதச் சொல்லின் சகோதரர்கள் தான்  grip, gravity, grab=From Sanskrit word ‘graha’. கல்யாணத்திற்கு பாணி கிரஹணம் என்று பெயர்; அதாவது கைப்பிடித்தல் !

XXXX

நக்ஷத்ர நேமி — நாம எண் 440

நக்ஷத்ர மண்டலமாகிய சிம்சுமார சக்கரத்தின் குடம் போன்றவர்.

இந்த பிரபஞ்சமே  வட்ட வடிவானது. ஏனெனில் அவை ஒவ்வொன்றும் தன்னைத்தானே  சுற்றிக்கொண்டு ஒரு மையப்புள்ளியை வலம் வந்து கொண்டு எங்கோ ஓடிக்கொண்டே இருக்கிறது என்று வானவியல் நிபுணர்கள் கூறுகின்றனர் அப்படி தன்னைத்தானே  சுற்றிக்கொண்டால் அது வட்டமாகத்தான் போகும். இதை அறிந்த இந்துக்கள் மண்டலம், சக்கரம் என்ற சொற்களையே பயன்படுத்துவத்தைக் காணுங்கள் .

சங்கரர் காட்டும் ஸ்லோகம் –

நக்ஷத்ர தாரகைஹி சார்தம் சந்த்ர சூர்யாதயோ க்ராஹாஹா

வாயுபாஸ மயைர்  பந்தைர் நிபத்தா  த்ருவ சம்க் நிதே

காற்று என்னும் கயிறு மூலமாக சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் முதலான எல்லாம் துருவன் என்னும் மையப்புள்ளியுடன் கட்டப்பட்டுள்ளது

எல்லாம் ஒரு மையப்புள்ளியை நோக்கிச் சுழல்கின்றன என்று இன்றைய வானவியல் அறிஞர்கள் செப்புவதை,  வேத கால இந்துக்கள்தான் முதலில் கண்டுபிடித்து அறிவித்தனர்!

என்  கருத்து

1920-ம் ஆண்டு முதல்தான் இவையெல்லாம் விஞ்ஞான  பத்திரிகைகளில் அடிபட்டது ; நாமோ பல்லாயிரம் வருஷம் முன்னரே சக்கரம், மண்டலம், துருவ என்னும் மையப்புள்ளி முதலிய சொற்களால் இதை விளக்கிவிட்டோம்! பூமி தன்னைத்தானே சுற்றுகிறது; அத்தோடு சூரியனையும் சுற்றுகிறது ; சூரிய மண்டலமோ பால்வெளி எனப்படும் மில்கி வேயுடன் MILKY WAY சுற்றிக்கொண்டிருக்கிறது. மில்கி வேயோ சுற்றிக்கொண்டு எல்லாவற்றையும் இழுத்துக்கொண்டு எதோ ஒரு மையப்புள்ளியை வலம் வருகிறது. அவை எல்லாம் பலூனில் நாம் வைத்த கரும் புள்ளிகள் ஊத ஊத விரிவடைவது போல விலகிக்கொண்டே போகிறது  என்று பிரபஞ்ச தோற்றவியல் அறிஞர்கள் சொல்லுவார்கள். அந்த பலூன் வெடித்து பிரபஞ்சம் சுருங்கி BIG CRUNCH மீண்டும் பிக் பேங் BIG BANG ஏற்படும் என்பது இந்துக்களின் கோட்பாடு.

xxx

வைகுண்டஹ– நாம எண் 405

சிருஷ்டியின் தொடக்கத்தில் பஞ்ச பூதங்களைச் சிதறிப்போகாமல் ஒன்று சேர்த்துக் கட்டுப்படுத்துபவர் ..

இன்னுமொரு அர்த்தம்- பக்தர்கள் தன்னை அடைய முடியாமல் வரக்கூடிய தடைகள் இடையூறுகள் ஆகியவற்றை விலக்கி எளிதில் தம்மிடம் சேர்த்துக் கொள்ளுபவர் .

மகாபாரத சாந்தி பர்வம் சொல்கிறது 325-15

மாயா ஸம்ஸ்லேஷிதா பூமி-ரத்பிர் -வ்யோம ச வாயுனா

வாயுஸ்ச   தேஜஸா  ஸார்த்தம் வைகுண்டத்வம் ததோ மம

நான், நிலத்தை நீருடன் சேர்த்து வைத்தேன்; வானத்தை ஆகாயத்துடன் சேர்த்து வைத்தேன்; ஆகாயத்தை தீயுடன் சேர்த்தேன்; இதனால் வைகுண்ட அந்தஸ்த்தைப் பெற்றேன்

என் கருத்து

அதிகம் அறியாத எல்லோரும் வைகுண்டம் என்பது விஷ்ணுவின் இருப்பிடம் என்று மட்டுமே அறிவோம். ஆனால் சங்கரரோ பூமியின் வளர்ச்சி  பற்றிய விஞ்ஞான விஷயங்களை விளம்புகிறார். முதலில் இருந்தது பூமி; அதில் மழை கொட்டவே  குளிர்ந்து போய் காற்றுமண் டலம் (ஆகாயம்) வந்தது .பின்னர்தான் பூமியில் அக்கினியை மனிதன் யாகத்துக்கு உணவுக்கும் பயன்படுத்தத் தொடங்கினான்  . இதுபோன்ற விஷயங்கள் பல ஸம்ஸ்க்ருதப் பாடல்களிலும் சங்க இலக்கியப்  பாடல்களிலும் உள்ளன .

புறம் – பாடல் 2

மண் திணிந்த நிலனும்,

நிலம் ஏந்திய விசும்பும்,

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்,

தீ முரணிய நீரும்என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்

…………

என்ற புறநானூற்றுப்   பாடலை முரஞ்சியூர் முடிநாகராயர்  பாடினார் இது மகாபாரத சாந்தி பர்வம் 325-15 பாடலின் மொழிபெயர்ப்பு ஆகும்

THEORY OF EVOLUTION BY CHALRLES DARWIN

தசாவதாரத்தை  எடுத்துக்கொண்டால் முதலில் நீர் வாழ் உயிரினம் (வராக அவதாரம் ) பின்னர் நீர்- நிலம் ஆகிய இரண்டிலும் வாழும் கூர்ம / ஆமை அவதாரம்  பாதி மிருகம்- பாதி மனித நரசிம்மர், வில்லை பயன்படுத்திய ராமர், நவீன ஆயுதங்களைப் பயன்படுத்திய கிருஷ்ணர் , அதி நவீன லேஸர் ஆயுதங்களை பயன்படுத்தப் போகும் கல்கி அவதாரம் என்ற பரிணாம வளர்ச்சியைக் காண்கிறோம்..

விஞ்ஞானம் வளர, வளர, நமக்கு முன்னர் புரிபடாமல் இருந்த விஷயங்கள் சார்ல்ஸ் டார்வினின் புஸ்தகத்தைப்  படித்த  பின்னர்தான் புரிகிறது.

செஞ் ஞாயிற்றுச் செலவும்,

அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,

பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,

வளி திரிதரு திசையும்,

வறிது நிலைஇய காயமும்என்று இவை

சென்று அளந்து அறிந்தோர் போல,—உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய புற நானூற்று ப் பாடல் 30

அந்தக் காலத்திலேயே சூரியமண்டல கிரக ஆராய்சசி நடந்ததை இந்தப் பாடல் காட்டுகிறது . மண்டிலம் என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லுக்கு வட வடிவமான  என்று பொருள்.இந்தப் பிபஞ்சத்திலுள்ள எல்லாப் பொருள்களும் வட வடிவ,ஆனவை என்பதால் இதை அப்படியே இந்துக்கள் பயன்படுத்தினர் .

எ..கா.– கிரக மண்டலம், நட்சத்திர மண்டலம் , சூரிய மண்டலம்

ஞாயிறு செல்லும் பாதையையும்,

அந்த ஞாயிறு தாங்கிக்கொண்டிருக்கும் சுமைகளையும்,

அந்தச் சுமைக்குள் சூழ்ந்திருக்கும் உருண்டை மண்டலங்களையும்,

காற்று திரியும் திசையையும்,

ஒன்றுமில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கும் ஆகாயத்தையும்

தாமே நேரில் சென்று அளந்து அறிந்தவர் போல

இன்னது என்று அளவு கூறுவாரும் உளர்.

XXX

ஸஹஸ்ராம்ஸுஹு – நாம எண் 483

ஆயிரக் கணக்கான கிரணங்களை உடையவர்.

தைத்ரீய பிராமண நூல் 3-12-79-7 சொல்வதாவது ,

யேன ஸூர்யஸ் தபதி தேஜஸேத் தஹ — எவர் ஒருவரின் ஒளியால் சூரியன் பிரகாசிக்கிறானோ ….

பகவத் கீதை 15-12 லும் இதைக் காணலாம்:

यदादित्यगतं तेजो जगद्भासयतेऽखिलम् ।

यच्चन्द्रमसि यच्चाग्नौ तत्तेजो विद्धि मामकम् ॥१५- १२॥

யதா³தி³த்யக³தம் தேஜோ ஜக³த்³பா⁴ஸயதேகி²லம் |

யச்சந்த்³ரமஸி யச்சாக்³நௌ தத்தேஜோ வித்³தி⁴ மாமகம் || 15- 12||

சூரியனிடமிருந்து எந்த  ஒளி அனைத்தையும்  பிரகாசிக்கச் செய்கிறதோ அந்த ஒளியும் சந்திரனிடத்துள்ளதும் தீயிலுள்ளதும்,  என்னுடையதே யென்று அறிவாயாக .– பகவத் கீதை

வான சாஸ்திர ஆய்வுப்படி, சூரியன் ஒரு நடுத்தர ஒளியுடைய நட்சத்திரம். திருவாதிரை போன்ற நட்சத்திரங்களோ அதை வீட பல ஆயிரம் மடங்கு சக்தி கொண்டவை. ஆனால் நம்முடைய பூமியைப் பொறுத்தவரை சூரியனுக்கு மிஞ்சிய சக்தி எதுவுமில்லை ஆகையால் கடவுள் என்பவரின்  சக்தியை ஒப்பிட நம் கண்ணுக்கு முன்னால் தோன்றும் சூரியனைக் காட்டி  இறைவன் அப்பேற்பட்ட சக்தி உடைய வன் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள்.

கடல் என்பதைக் காணாத ஒரு சிறுவனுக்கு அவன் தந்தை கடலை எப்படி விளக்க முடியும்?  அந்த ஊரில் உள்ள ஏரி அல்லது குளத்தைக் காட்டி இதைப்போல பல்லாயிரம் மடங்கு பெரியது; மறு கரையே தெரியாது என்றுதான் சொல்லுவார். கடற்கைரையையே காணாத அந்தச் சிறுவனுக்கு கடல் பற்றி எவ்வ்வளவு புரியுமோ அவ்வளவுதான் நமக்கும் இறைவனின் சக்தி புரியும் . கையில் உள்ள கால்குலேட்டரைப் போல பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்தது சூப்பர் கம்பியூட்டர். இறைவனோ பல்லாயிரம் சூப்பர் கம்பியூட்டர் போன்றவன் . இதை விளக்க அமெரிக்காவில் சிகாகோவில் பேசிய சுவாமி விவேகானந்தர் ஏரித் தவளை – கிணற்றுத்தவளை விவாதத்தை விளக்கிச் சொன்னார்.

பெளதீக விதிகளைக் கண்டுபிடித்துச் சொன்ன ஐஸக் நியூட்டன் கூட, தான் கண்டுபிடித்தது கடற்கரையில் உள்ள கூழாங் கற்களுக்குச் சமம் என்றும் கடல் அளவுக்கு இன்னும் கண்டுபிடிக்க உள்ளது என்றும் சொன்னார். கற்றது கை மண் அளவு கல்லாதது உலகளவு என்று சரஸ்வதியே (  (ஔவையார்).கூறினார் என்றல்லவோ நாம் படிக்கிறோம்.

கற்றதுகைம் மண்ணளவு கல்லா துலகளவென்(று)
உற்ற கலைமடந்தை ஓதுகிறாள் – மெத்த
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்

—subham—

Tags- விஷ்ணு சஹஸ்ரநாம, விஞ்ஞான ரகசியங்கள் , ரகசியங்கள், மேற்கோள்கள்-15  , கற்றதுகைம் மண்ணளவு

Leave a comment

Leave a comment