ராமாயணத்தில் சாபங்கள் (34) லங்கா தேவி சாபத்தால் கேடடையும் லங்கையைப் பற்றி ஹனுமாரிடம் கூறியது! (Post.13,416)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.416

Date uploaded in London – 7 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ராமாயணத்தில் சாபங்கள் (34) 

ராமாயணத்தில் சாபங்கள் (34) லங்கா தேவி சாபத்தால் கேடடையும் லங்கையைப் பற்றி ஹனுமாரிடம் கூறியது! 

ச.நாகராஜன்

இதுவரை கிஷ்கிந்தா காண்டம் முடிய நான்கு காண்டங்களில் வருகின்ற சாபங்களைப் பார்த்தோம்.

இனி சுந்தர காண்டத்தில் வரும் ஒரே ஒரு சாபம் பற்றிப் பார்க்கலாம்.

சுந்தர காண்டத்தில் மூன்றாவது ஸர்க்கமாக அமைவது –“லங்கா தேவியை ஜெயித்தல்” என்ற ஸர்க்கம்.

சீதா தேவியைத் தேடி லங்கையை அடைந்த ஹனுமார் அதைப் பார்த்தார்.

அப்போது லங்கையைக் காக்கும் லங்கா தேவி ஹனுமார் முன் தோன்றி, “நீ யார்? என்ன காரியமாக இங்கு வந்தாய்?” என்று அரட்டிக் கேட்கவே, ஹனுமார், “நகரைப் பார்க்க வந்தேன்” என்கிறார்.

“ என்னை ஜெயிக்காமல் உன்னால் இந்தப் பட்டணத்தைக் காண முடியாது” என்று கூறிய லங்கா தேவி கோபத்துடன் ஹனுமாரைக் கையினால் அறைந்தாள்.

இதனால் கோபமுற்ற ஹனுமார் கை முஷ்டியால் அவளைக் குத்தவே அவள் அங்கங்கள் சிதறின. பூமியில் அவள் விழுந்தாள்.

உடனே அவள் ஹனுமாரை நோக்கிக் கூறலானாள் :

“வானர ச்ரேஷ்டரே! நானே லங்கா தேவதை. உம்மால் பராக்கிரமத்தால் ஜெயிக்கப்பட்டேன். ப்ரம்ம தேவர் எனக்குத் தானாகவே கொடுக்கப்பட்ட வரபிரதானம் எப்படியோ அப்படியே உண்மையான நான் சொல்லும் விஷயத்தைக் கேளும்!

‘உன்னை ஒரு வானரவீரர் பராக்கிரமத்தோடு எப்போது வசம் செய்து கொள்கிறானோ அப்போதே ராக்ஷஸர்களுக்குக் கேடு வந்தது என்று அறி’ என்றார் அவர். அந்தக் காலம் இப்போது வந்து விட்டது. நீர் இந்த நகருக்குள் புகுந்து விரும்பும் காரியத்தைச் செய்து கொள்ளும்” என்றாள்.

மூன்றாவது ஸர்க்கத்தில் 52வது ஸ்லோகமாக வருவது இந்த ஸ்லோகம்:

லங்கா தேவி ஹனுமாரிடம் கூறுவது இது:-

ப்ரவிஷ்ய சாபோபஹதாம் ஹரீஸ்சர: புரீம் சுபாம் ராக்ஷஸராஜபாலினம்!

யத்யச்சாயா த்வம் ஜனகாத்மஜாம் சரிதாம் விமார்க சர்வத்ர கதோ யதா சுகம்||

ஹரீஸ்சர த்வம் – வானர வீரரான நீர்

ராக்ஷஸராஜபாலிதாம் – ராக்ஷஸ மன்னனால் ஆளப்பட்டதும்

சாபோபஹதாம் – சாபத்தாலே கேட்டை அடைந்ததும்

சுபாம் – நலம் பயப்பதுமாகிய

புரீம் – பட்டணத்தில்

ப்ரவிஷ்ய – நன்றாகப் புகுந்து

யத்யசாயா கத: – இஷ்டப்படி சென்று

சர்வத்ர – எல்லா இடங்களிலும்

யதா சுகம் – வேண்டியமட்டில்

சரிதாம் – கற்பினில் சிறத

ஜனகாத்மஜாம் – ஜனகரின் திருமகளை

விமார்க – ஆராய்ந்து தேடும்.

இப்படியாக சாபம் பெறப்பட்டு கேடடையும் லங்கையைப் பற்றி லங்கா தேவி கூறுகிறாள்

லங்கா தகனம் என்ற 54வது ஸர்க்கத்திலும் இந்த சாபம் திரும்பக் கூறப்படுகிறது இப்படி:

 ஹுதாஷனஜ்வாலசமாவ்ருதா ஸா ஹதப்ரவீரா ப்ரிவ்ருத்தயோதா |

ஹனூமத: க்ரோதபலாபிபூதா பபூவ சாபோபஹதேவ லங்கா ||

-சுந்தர காண்டம் 54வது ஸர்க்கம்,  43வது ஸ்லோகம்

ஸா லங்கா – அந்த லங்கை

ஹனூமத: – ஹனுமாரின்

க்ரோதபலாபிபூதா – கோபத்தின் கொடுமைக்கு இலக்காகி

ஹுதாஷனஜ்வாலசமாவ்ருத – அக்னி ஜ்வாலையால் சூழப்பட்டதாய்

ஹதப்ரவீரா – மாண்டு போன வீரரகளுடையதாய்

ப்ரிவ்ருத்தயோதா – சிதறி ஓடிய வீரர்களையுடையதாய்

சாபோபஹதா இவ – சாபத்தால் அழிக்கப்பட்டது போல

பபூவ – ஆயிற்று.

இங்கு லங்கை நகருக்கு யார், எப்போது எதற்காக சாபத்தைக் கொடுத்தார் என்பது விவரிக்கப்படவில்லை.

ஆனால் சாபத்தால் லங்கை அழிகிறது என்பது மட்டும் இரு முறை சொல்லப்படுகிறது.

இத்துடன் சுந்தர காண்டத்தில் வரும் ஒரே ஒரு சாபம் முடிவடைகிறது!

****

Leave a comment

Leave a comment