திருச்சானூர் கோவில்:ஆந்திரத்தின் புகழ்பெற்ற கோவில்கள் -Part 13 (Post13,479)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,479

Date uploaded in London – 26 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

திருச்சானூர் பத்மாவதி கோவில்:  ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் -PART 13

திருச்சானூர் கோவில் எங்கே உள்ளது ?

ஆந்திர பிரதேசத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் கோவில் உள்ளது.

யாருடைய கோவில்?

பத்மாவதி தாயாரின் கோவில். அதாவது விஷ்ணுவின் மனைவி . தேவியின் தமிழ்ப் பெயர் – அலர்மேல் மங்கை .

கோவிலின் வரலாற்றுச் சிறப்புகள் என்ன ?

கோவிலில் நிறைய தமிழ், தெலுங்கு ,கன்னட, ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகள் உள்ளன .

கோவிலின் அமைப்பும் வரலாறும்

திருச்சானூரின் இன்னுமொரு பெயர் அலர்மேல் மங்காபுரம். மலை  மீதுள்ள வெங்கடாசலபதியிடமிருந்து வேறுபடுத்திக்காட்ட, கீழத் திருப்பதி பெருமாள் கோவில் என்றும் சொல்லுவார்கள்.அலர்மேல் மங்கை என்றால் தாமரை மலர் மீதமர்ந்து தேவி என்று பொருள். இந்தப் பெருமாளையும் தேவியையும் தரிசித்த பின்னரே மேலே மலைக்குச் சென்று பாலாஜியை- வெங்கடாசலபதியைத் தரிசிக்கவேண்டும் என்பது சம்பிரதாயம். ஆனால் திருப்பதி மலைக்குச் செல்லும் பல்லலாயிரக் கணக்கானோர் இதைச் செய்வதில்லை. இந்தக் கோவிலும் திருப்பதி -திருமலை தேவஸ்தானத்தின் கீழ் உள்ளது .

ஆகாச ராஜா  என்ற சிற்றரசருக்குப்  பிறந்த பத்மா தேவி ஸ்ரீனிவாசப் பெருமாளை மணந்ததாக கோவில் தல வரலாறு செப்பும். இப்போதும் திருப்பதி பெருமாள் மலை மீதிருந்து இறங்கி வந்து இரவு நேரத்தில் இங்கு  தங்குவதாக ஐதீகம் (நம்பிக்கை வரலாறு)

கோவிலின் எதிரே மிகப்பெரிய அழகான குளம் இருக்கிறது. பத்ம தீர்த்தம் அல்லது பத்ம சரோவர் என்பது இதன் பெயர்.

கோவில் குளத்தில் பஞ்சமி தீர்த்தம் என்னும் விழா சிறப்பாக நட க்கும். ஆண்டுதோறும் நடக்கும் பிரம்மோற்சவமும் வரலெட்சுமி விரதமும் முக்கிய விழாக்கள் ஆகும்.

அம்மனின் உருவம்

நான்கு கைகளுடன் தோன்றும் பத்மாவதித் தாயார் இரு கரங்களில் தாமரை மலரை ஏந்தி காட்சி தருகிறாள் ; இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடன் நமக்கு ஆசி வழங்குகிறாள்.

கார்த்திகை மாத சுக்ல பக்ஷ பஞ்சமி தினத்தில் அம்மன் தாமரையின் மீது அவதரித்தாள் ; அது பஞ்சமி தீர்த்த விழாவாக நடக்கிறது.

xxxxx

பத்து ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த சிறப்புடையவள் அலர்மேல்மங்கைத் தாயார். திருமலையில் ஸ்வஸ்திவசனம் எனும் சமஸ்கிருத வரவேற்பை தினமும் வேங்கடவனுக்கு சமர்ம்பிக்கையில் இந்தக்கோவிலின் தேவியின் பெயரும் வரும்

தேவஸ்தான வெப்சைட்டில் பத்மாவதி பற்றிய வரலாறு விரிவாக உள்ளது . ஆகாசராஜா அல்லது தொண்டை மண்டல மித்ரவர்மனின் புதல்வியாக அவதரித்த பத்மாவதியை , திருப்பதி பெருமாள் கல்யாணம் செய்துகொண்டார் என்பது ஒரு கதை.. மேலும், ஆகாச ராஜா , ஆண்டுதோறும் நடக்கும் மன்னர் நிலம் உழும் விழாவில் பத்மாவதியைக் குழந்தை ரூபமாக கண்டெடுத்ததாகவும் அதில் உள்ளது.

ராமாயணத்தில் ஜனக மஹாராஜா  வருடாந்திர தங்க ஏர் கொண்டு நிலம் உழும் விழாவில் சீதா தேவியை  குழந்தையாகக் கண்டெடுத்ததுடன் இதை ஒப்பிடலாம். ஆண்டாளையும் பெரியாழ்வார் நிலத்தில் கண்டு எடுத்தார் .

இன்னும் ஒரு கதை பிருகு மஹரிஷியுடன் தொடர்புடையது. விஷ்ணுவின் நெஞ்சில் பிருகு ரிஷி உதைத்தபோது கோபத்தில் லெட்சுமி வெளியேறியதாகவும் பின்னர் வேண்டுகோளின்பேரில் புஷ்கரணியில் குளித்துவிட்டு திருச்சானூர் கோவிலில் எழுந்தருளியதாக்வும் சொல்லுவார்கள்.

திருச்சானூர் கல்வெட்டுகள்

கோவிலின் எதிர்ப்புறமுள்ள வாகன மண்டபத்தில் இரண்டு கல்வெட்டுகள் உள்ள; அவற்றில் சில சுவையான தகவல்கள் கிடைக்கின்றன .

பத்மாவதி கோவிலை டச்சுக்காரர்கள்  தாக்கி அழித்தனர் ; பின்னர் தெலுங்குச் செட்டியார்கள் அதை புனர் நிர்மாணித்தனர் இதனால் இக்கல்வெட்டுகள் வாகன மண்டபத்தில் குடியேறின. ஒரு கல்வெட்டின் துண்டில் காணப்படும் தேதி கி.பி 935. இது பராந்தக சோழனின் ஆட்சிக்கால கல்வெட்டு. மதிரை கொண்ட பரகேசரி வர்மன் என்பது அவனது பட்டப்பெயர் . கோவிலில்  நந்தா விளக்கு எப்போதும் எரிய பொற்காசு கொடுத்த செய்தியை கல்வெட்டு நமக்குத் தெரிவிக்கிறது.

இன்னுமொரு கல்வெட்டு, காடவன் பெருந்தேவி (சமவை = சாம்பவி) என்பவள் நிறைய பொற்காசுகளைக் கொடுத்து பிரம்மோற்சவம் நடத்த ஏற்பாடு செய்ததை அறிவிக்கிறது அந்தப் பல்லவ ராணி கோவில் உற்சவ விக்கிரகத்தையும் அளித்தாள் .

வருடாந்திர பிரம்மோற்சவம் ஒன்பது நாட்கள் நடைபெறுகையில் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் வருகிறார்கள்.

பத்மாவதி தேவியின் வாஹனம் யானை ஆதலால் யானை உருவம் பொறித்த கொடி ஏற்றப்படுகிறது.

இது போன்ற பல செய்திகளைக் கல்வெட்டுகள் தருகின்றன. 1200 ஆண்டுகளுக்கும்  முந் தைய கோவில் என்பதை வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறிகிறோம்

துணைக் கோவில்கள்

Suryan Temple

பத்ம தீர்த்தம் அல்லது புஷ்கரிணி எனப்படும் குளத்துக்கு அருகில் சூர்ய பகவானுக்கு கோவில் இருக்கிறது .

பத்மாவதி கோயிலுக்குள்ளேயே கிருஷ்ண சுவாமி கோவில், சுந்தர ராஜ சுவாமி கோவில்கள் இருக்கின்றன. இவை கி.பி. 1200 முதல் இருக்கின்றன.

பல்லவ சாம்ராஜ்யம் அழிந்து பிற்காலச் சோழர்கள் தலையெடுக்கும் காலத்தில் இந்தக் கோவில் உருவாவதற்கான சான்றுகள் இருப்பதால் குறைந்தது 1200 ஆண்டுகள் வரலாறு உடையது இந்தக் கோவில். பல்லவ மன்னர்களால் உருவாக்கப்பட்டு, சோழர்கள் விஜய நகர மன் னர்காளால் மேம்படுத்தப்பட்ட கோவில் ஆகும். இதனால் இந்த வம்சங்களின்  தாக்கத்தை  கட்டிடங்களிலும் சிற்பங்களிலும் காணலாம்.

கோவில் கோபுர உயரம் சுமார் 40 அடி . அதிலும் கோவிலின் சலவைக்கல் சுவர்களிலும் கடவுளரின் சிற்பங்களைக் காணலாம் . சிவ பெருமான், ஆஞ்சனேயர் , லெட்சுமி சாந்நிதிகளும் கோவிலுக்குள் இருப்பது சிறப்பாகும். ஒரு 16 கால் மண்டபம், 36 தூண்களுள்ள பங்காரு பலிபீட மண்டபம்  மற்றும் சுதர்சன சக்ரம் , விஸ்வக்சேனரின் பஞ்ச லோக விக்ரகங்கள் , ராமானுஜர், கருடன் ஆகியோரின் சிலைகள் ஆகியனவும்  வழிபாட்டில் உள்ளன

ஆழ்வார்களைத் தவிர தெலுங்குக் கவிஞர் அன்னமாச்சார்யாவும் பத்மாவதி தேவி மீது நிறைய கிருதிகளை இயற்றியுள்ளார்.

–subham—

Tags- திருச்சானூர்,கோவில், பத்மாவதி, பல்லவ, சோழ , கல்வெட்டுகள் , ஆகாச ராஜா , கோவிந்த ராஜப் பெருமாள்

Leave a comment

Leave a comment