ராமாயணத்தில் சாபங்கள் (53)  சுக்ராச்சாரியார் யயாதிக்குக் கொடுத்த சாபம்! (Post.13,478)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.478

Date uploaded in London – 26 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (53) 

ராமாயணத்தில் சாபங்கள் (53) சுக்ராச்சாரியார் யயாதிக்குக் கொடுத்த சாபம்!

 ச. நாகராஜன்

உத்தர காண்டத்தில்  ஐம்பத்தி எட்டாவது ஸர்க்கமாக அமைவது, “யயாதி மஹாராஜனின் சரிதம்’  என்ற ஸர்க்கம்.

ஶ்ரீ ராமர் லக்ஷ்மணனுக்கு யயாதி மஹாராஜனின் சரிதத்தைக் கூறுகிறார்.’

நகுஷ மஹாராஜாவின் புத்திரராய் யயாதி என்ற ஒரு மன்னர் இருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு. விருஷபர்வன் என்ற அசுர ராஜனது பெண்ணான சர்மிஷ்டை என்ற பெயர் உடைய பெண் ஒருத்தி. இன்னொரு மனைவி சுக்கிராச்சாரியாரது பெண். தேவயானி என்ற பெயர் பூண்டவள்.

இருவருக்கும் குழந்தைகள் பிறந்தன. சர்மிஷ்டை பூரு என்பவனையும் தேவயானி யது என்பவனையும் பெற்றாள்.

பூரு மன்னரது அன்பிற்குப் பாத்திரமானான். ஆனால் யதுவோ துக்கம் மேலிட தன் தாயிடம், “சுக்கிராச்சாரியாரது குலத்தில் பிறந்த நீ அவமானமாகிற கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறாய். நாம் இருவரும் தீயில் விழுந்து இறப்போம்” என்றான்.

உடனே தேவயானி தன் தந்தையை நினைத்தாள்.  சுக்ராச்சாரியார் தேவயானியிடம் வந்து அவள் உற்சாகமின்றி இருப்பதைப் பார்த்து, “காரணம் என்ன?” என்று வினவினார்.

“என்னை அலட்சியப்படுத்தி மன்னர் யயாதி மதிக்காமல் இருக்கிறார்” என்று கூறினாள்.

இதைக் கேட்ட சுக்ராச்சாரியார் மிகுந்த கோபம் அடைந்தார்.  உடனே நகுஷனின் புதல்வனான யயாதியை இப்படி சபித்தார்:

யஸ்மான்மாமவஜானிஷே நாஹுஷ த்வம் துராத்மவான் |

ஜரயா பரயா ஜீர்ண: ஷைதில்யமுபயாஸ்யஸி ||

நாஹுஷ – அடே, நகுஷ புத்திரா!

த்வம் – நீ

துராத்மவான் – கெட்ட புத்தியை உடையவனாகி

மாம் – என்னை

அவஜானிஷே – அலட்சியம் செய்கிறாய்

யஸ்மாத் – ஆகவே

பரயா – மிக்க

ஜரயா – ஜராவஸ்தை கொண்டு

ஜீர்ண: – முதுமையை அடைந்து

ஷைதில்யம் – துர்பலத்தை

உபயாஸ்யஸி – அடையக் கடவாய்.

–    உத்தர காண்டம, 58-வது ஸர்க்கம், ஸ்லோக எண் 22

இப்படி சுக்ராச்சாரியார் யயாதியை சபித்து விட்டு தனது புதல்வியை சமாதானப்படுத்தி விட்டு தன் இருப்பிடம் மீண்டார்.

யயாதி இந்த சாபத்தினால் ஜராவஸ்தையை அடைந்து மிகுந்த வருத்தமுற்றார்.

இதன் தொடர்ச்சியை அடுத்துக் காண்போம்.

***

Leave a comment

1 Comment

  1. Athmanathan Seetharaman's avatar

    தவறாக இருந்தால் மன்னிக்கவும். தலைப்பு யயாதிக்கு கொடுத்த சாபம். நடுவில் ஒரு க் வருகிறது. அது தேவையில்லை என்று அடியேன் கருதுகிறேன். Maybe an oversight. Please forgive.

Leave a comment