அஹோபிலம் நரசிம்மர் கோவில்- ஆந்திர மாநில கோவில்கள் -PART 14 (Post No.13,486)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,486

Date uploaded in London – 28 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx

அஹோபிலம் நரசிம்மர் கோவில் ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற 108 கோவில்கள் -PART 14

அஹோபிலம் நரசிம்மர் கோவில்  எங்கே உள்ளது?

ஆந்திர பிரதேசத்தில் கர்நூல்  மாவட்ட த்தில் அஹோபிலம் இருக்கிறது .

சென்னையிலிருந்து 365 கி.மீ. தொலைவு.- சுமார் எட்டு மணி நேரத்தில் அடையலாம்..

ஹைதராபாத்திலிருந்தும் ஏறத்தாழ அதே தூரம்தான்.

நந்தியால் என்னும் ஊர்தான் அருகிலுள்ள பெரிய நகரம்; அங்கிருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் அஹோபிலம் இருக்கிறது.

இதன் சிறப்பு என்ன ?

இந்தப் புனிதத்தலம் 108  திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

அஹோபில மர்மம் !

அஹோபிலத்தில் இப்போதுள்ள கோவில்கள் வைஷ்ணவ கோவில்கள் என்பதை ஐயமில்லை. ஆனால் திருப்பதி பாலாஜி பெருமாளை அருணகிரி நாதர் முருகப்பெருமானே என்று பாடியது போல ஆதி சங்கரர் 18 தேவி பீடங்களை பாடிய துதியில் அஹோபில கிரிஜா தேவி என்றும் ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார். ஒரு காலத்தில் இங்கு சிவன் கோவிலும் இருந்தது தெரிகிறது. இதை நிரூபிக்கும் வகையில் இன்றும் பிரதானசந்நிதியில் நரசிம்மருக்கு முன்னால் சிவலிங்கம் இருக்கிறது. நுழை வாயிலில் பைரவர் கோவிலும் உளது.

ஆதி சங்கரர் தொடர்பு

ஆதி சங்கரரை  ஒரு காபாலிகன்  பலி கொடுக்க அழைத்துச் சென்றபோது நரசிம்மர் தோன்றி அந்தக் காபாலிகனை கிழித்தெறிந்த வரலாறு சங்கர விஜயத்தில் உள்ளது. அது நடந்த இடம் அஹோபிலம் என்ற ஐதீகமும் இருக்கிறது .

xxxxx

அஹோபிலம் இருக்கும் இடம் ‘நல்லமலை’  என்று அழைக்கப்படுகிறது. இது திருப்பதியில் துவங்கி சிருங்கேரி வரை செல்கிறது . இந்த மலையை சேஷ பர்வதம் என்றும் அழைக்கிறார்கள் .

அஹோபில நரசிம்மர் பற்றிய இன்னுமொரு சுவையான விஷயம் அவர் அமர்ந்த நிலையில் இருப்பதாகும். யோக நரசிம்மர் உட்கார்ந்த நிலையில் பல இடங்களில் இருந்தாலும் இங்குள்ளது யோக நரசிம்மர் இல்லை.

தங்க நரசிம்மர்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்யாணி சாளுக்கிய வம்ச அரசன் ஆறாவது விக்கிரமாதித்யன் அஹோபிலத்தில் வணங்கியதாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. . காகதீய அரசன் பிரதாப ருத்ரன் கொடுத்த தங்கத்தினாலான உற்சவ மூர்த்தி இன்றும் வழிப்பாட்டில் இருக்கிறது .

40 நாள் பருவேட்ட உற்சவம்

வள்ளியை முருகன் மணந்ததால் மலைஜாதி மக்கள் அனைவரும் முருக பக்தர்கள் ஆனார்கள். இலங்கையிலுள்ள கதிர்காமம் முதலிய இடங்களில் இன்றும் இதைக் காண்கிறோம்.

மதுரை அருகிலுள்ள அழகர் கோவிலில் உள்ள பெருமாள் மதுரைக்கு வரும் 13 மைல் நெடுகிலும் பல்லாயிரக் கணக்கான கிராம மக்கள் கள்ளழகரை  வணங்குவதற்காக  கள்ளர் வேடத்தில் வருவதைக் காணலாம் .

இதே போல செஞ்சு பழங்குடி மக்களை இணைக்கும் 40 நாள் உற்சவம் — பருவேட்ட உற்சவம் — அஹோபிலத்தில் நடக்கிறது வள்ளி எனும் வேடர் குலப் பெண்ணை முருகன் மணந்தது போல செஞ்சு என்ற மலைஜாதி வேடர் குலப் பெண்ணை பெருமாள் கல்யாணம் கட்டினார் . இதைக்கொண்டாட  40 நாள் உற்சவம் நடக்கிறது; அப்போது பெருமாள் நரசிம்மர்,  35 கிராமங்களுக்குச் செல்கிறார் . அவர் பவனி வரும் வழியில் உள்ள கிராம மக்கள் அவரை வரவேற்று வணங்குவார்கள் அப்போது ஒவ்வொரு ஜாதி மக்களும் ஒவ்வொரு பணியைச்  செய்கின்றனர். இது மகத்தான ஒற்றுமை உற்சவம்; இதே போல பூரி ஜெகந்நாத ரத யாத்திரைக்கு பழங்குடி மக்கள் உதவுவதையும் ஒப்பிடலாம் . இந்த நாற்பது நாள் உற்சவம் உலகில் ஒப்பற்றது .

மலைப்பாங்கான இடத்தில் இயற்கைச்  சூழ்நிலையில்  கோவில் அமைந்துள்ளது .சீதையைத் தேடி வந்த ராம, லட்சுமணர்கள் அஹோபில நரசிம்மனைத் தரிசித்தவுடன் சீதாதேவி கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதாக ஐதீகம் .

நவ நரசிம்ம க்ஷேத்ரம் /தலம் என்று அழைப்பது ஏன் ?

அஹோபிலத்தில் ஒன்பது நரசிம்மர்கள் கோவில் கொண்டிருப்பதால் நவ நரசிம்ம க்ஷேத்ரம் என்று அழைப்பார்கள்.

ஒன்பது நரசிம்மர்கள் :

அஹோபில, வராஹ, மாலோல, யோகானந்த, பாவந, காரஞ்ச, சக்ரவட , பார்கவ, ஜ்வாலா நரசிம்ஹர் கோவில் கொண்டுள்ளனர்.

அஹோபிலத்தினை தமிழில் சிங்கவேள் குன்றம் என்பார்கள். எல்லா கோவில்களையும் தரிசிக்க இரண்டு நாட்களாவது ஆகும்

மலை மீதும், கீழும் சந்நிதிகள் உள்ளன. புகழ்பெற்ற அஹோபில மடம் , மலை அடிவாரத்தில் உள்ளது

மூலவர்- பிரஹ்லாதவரதன் லெட்சுமி  நரசிம்மன்

உற்சவர்- மாலோல நரசிம்மர் . அவரைத் தவிர எட்டு நரசிம்ம மூர்த்திகளின் விக்கிரகங்களும் உள .

தாயார் – அம்ருதவல்லி, செஞ்சு லெட்சுமி

தீர்த்தம் – இந்திர, நரசிம்ம  (ந்ருசிம்ஹ ), பாபநாச, கஜ, பார்கவ தீர்த்தங்கள்

விமானம்- குகை விமானம்

அஹோபில  நரசிம்மர் கோவில்  மலை மேல் இருக்கிறது . இது ஒரு குடைவரைக்  கோவில்.. கீழ் அஹோபிலத்திலிரிருந்து 14 கி.மீ சாலை வழியாக மேல் அஹோபிலத்தை அடையலாம்.

கோவில் வரலாறு

சீதையைத் தேடிவந்த இராமபிரான் ஐந்து ஸ்லோகங்களால் நரசிம்மனைத் துதித்ததால்தான் சீதை கிடைத்தாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அஹோபில மடத்தில் மூலவர் லக்ஷ்மீ நரசிம்ஹராகவும் உத்சவர் சக்ரவர்த்தித் திருமகனாகவும் தரிசனம் அளிக்கின்றனர்

நரசிம்மர் வேடனாக வந்து செஞ்சு லட்சுமித் தாயாரை மணந்ததாக ஒரு கதையும் உண்டு.இப்போதும் மாசி மாத பிரம்மோற்சவத்தின்போது , மறவர் கூத்தும், ஆட்ட பாட்டங்களும் , சீர்வரிசையும் நடக்கிறது

மலையின் பெயர் – கருடாத்ரி அல்லது கருடாசலம்

((பிலம் என்றால் குகை; அத்ரி, அசலம் என்றால் மலை ))

மலையிலுள்ள நீர்வீழ்ச்சியின் பெயர் பாவ நாசினி. அதைக் கடந்து மலை ஏறிச் சென்றால் வராஹ நரசிம்மனைச் சேவிக்கலாம்.மேலும் ஏறிச் சென்றோமானால் செங்குத்தான பாறையில் வீற்றிருக்கும் மாலோல நரசிம்மனைத் தரிசிக்கலாம்.

இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் ந்ருஸிம்ஹன் காட்சி தந்த தூண் உள்ளது. நரசிம்மாவதாரத்தில் நாஸ்தீகர்களை அழித்து பிரஹ்லாதன் என்ற சிறிய பையனைக் காப்பாற்ற விஷ்ணு அவதரித்தார். அப்போது ஒரு தூணிலிருந்து சிங்க முகத்துடன் தோன்றி ஹிரண்யகசிபுவை வதம் செய்தார். தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற மரபுச் சொற்றொடர் இதனால் தோன்றியது. .

பெயர்க் காரணம்

நரசிம்மர், எதிரியின் உடலைக் கிழித்தெறிந்ததைக்  கண்டவர்கள் என்ன பலம்!, என்ன பலம்!! என்று வியந்ததால் அஹோ பலம்! அஹோ பலம்!!  என்பது அஹோபிலம் என்பதாயிற்று ..

இன்னும் ஒரு பொருள் – ஆச்சர்யமான குகை = அஹோ + பிலம் .

ஜ்வாலா நரசிம்மன்

இந்தக் கோவிலுக்குச் செல்வதுதான் கடினமானது . பொதுவாக மலை மீதுள்ள கோவில்களுக்குச் செல்லுகையில் துணையுடன் சென்று மாலைக்குள் திரும்பிவர வேண்டும் .

மங்களா சாஸனம்

திருமங்கை ஆழ்வார் பாடிப் பரவிய தலம் -1008 முதல் 1017– பத்து பாசுரங்கள்

மடத்தின் வரலாறு

இந்த ஸ்தலத்தில்தான் அஹோபில மடத்தின் முதலாவது அழகிய சிங்கர் , மலையில் இருக்கும் நரசிம்மர் கோவிலுக்குச் சென்ற சமயம் பெருமாள் தோன்றி மந்திர உபதேசம் செய்தார். அங்குள்ள ராமானுஜர் சந்நிதியிலிருந்து காஷாயம் (காவி உடை), த்ரி தண்டம் (முக்கோல்) ஆகியவற்றைக் கொடுத்து துறவறத்தில் சேர்த்தார்.அவருக்கு ஜீயர் பட்டத்தை அளித்து  ஒரு மடத்தினை ஸ்தாபிக்கவும் ஆசி வழங்கினார் என்பது  வரலாறு.  அப்போது அவருக்கு வயது 17. அவருக்கு சடகோப ஜீயர் என்ற பெயர் சூட்டப்பட்டது . நரசிம்மரை எந்த உருவத்தில் ஆராதிப்பது என்று தியானம் செய்த தருணத்தில் மாலோல நரசிம்ம மூர்த்தி அவருக்கு கிடைத்தது ; அன்றுமுதல் ஜீயர் பட்டம் பெறும் எவரும் மாலோல நரசிம்ம விக்கிரகத்தை போகும் இடமெல்லாம் எடுத்துச் சென்று பூஜிப்பது வழக்கமாக இருக்கிறது.

அஹோபில மடத்தின் ஜீயர்களில் ஒருவரான ஆறாவது பட்டம் ஸ்ரீ சஷ்ட பராங்குச யதீந்த்ர மஹாதேசிகன் ஆவார் . மேல் அஹோபிலத்தில் இருக்கும் குகைக்குள் தியானத்துக்குச் சென்றவர் வெளியே வரவில்லை. அவர் சிரஞ்சீவியாக  இப்போதும் அங்கே தியானம் செய்து கொண்டிருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

அஹோபில மடம்  மிகப்பெரியது; தங்கும் வசதிகள் உண்டு

மலையைச் சுற்றி குளங்களும் மண்டபங்களும் இருக்கின்றன.

கீழ் அஹோபில கோவிலின் ராஜகோபுரத்துக்கு எதிரே ஜயஸ்தம்பம் உள்ளது.80 அடி உயர ஜயஸ்தம்பம் என்னும் வெற்றித் தூண் நிற்கிறது. பூமிக்கு அடியில் 30 அடி ஆழம் செல்கிறது இதுவும் ஒரு சிறப்பு ஆகும்

–SUBHAM–

TAGS—அஹோபிலம்,  நரசிம்மர் கோவில்,  ஆந்திர மாநில, புகழ்பெற்ற 108 கோவில்கள் , PART 14, ஆதி சங்கரர் தொடர்புஅஹோபில மடம்  , பரு வேட்ட உற்சவம், 9 நரசிம்மர், ஜீயர் பட்டம்

Leave a comment

Leave a comment