ராமாயணத்தில் சாபங்கள் (55) ஒரு நாய் பிராமணருக்குக் கொடுத்த தண்டனை! (Post.13,485)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.485

Date uploaded in London – 28 July 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

ராமாயணத்தில் சாபங்கள் (55) 

ராமாயணத்தில் சாபங்கள் (55) ஒரு நாய் பிராமணருக்குக் கொடுத்த தண்டனை! 

ச. நாகராஜன் 

உத்தர காண்டத்தில்  அறுபதாவது ஸர்க்கத்தில் வரும் கதை இது. ஒரு நாய் நீதி கேட்டு ராமரிடம் வரும் இந்தச் சம்பவத்தை சில ராமாயண பிரதிகளில் காண முடிவதில்லை. சில பிரதிகளில் இது தரப்பட்டுள்ளது.

 ஶ்ரீ ராமர் ராஜ்ய பரிபாலனம் செய்து வருகையில் ஒரு நாள் லக்ஷ்மணரை நோக்கி, “வாயிலில் என்னப் பார்ப்பதற்காக யாரேனும் வந்து காத்திருக்கிறார்களா என்று பார்” என்று கூறினார்.

 வாயிலுக்குச் சென்று பார்த்த லக்ஷ்மணர் யாரையும் காணாமல் திரும்பி வந்து, “யாருமில்லை” என்று ராமரிடம் பதிலுரைத்தார்.

 ஆனால் ராமரோ, “இல்லை இல்லை, சரியாகப் பார்த்து விட்டு வா” என்று லக்ஷ்மணரைத் திருப்பி அனுப்பினார்.

 வாயிலில் வந்த லக்ஷ்மணர் அங்கு ஒரு நாய் இருப்பதைப் பார்த்தார்.

 நாய், “நான் மன்னரைப் பார்க்க வேண்டும். எனக்கு நீதி வேண்டும் என்றது.”

உடனே லக்ஷ்மணர் நாயை ராமரிடம் அழைத்துச் சென்றார்.

 ராமரிடம் நாய், இப்படி முறையிட்டது: “ஓ! அரசே, பிக்ஷுகன் என்ற ஒரு பிராமணன் என்னை அடித்து விட்டான். இதற்கு ஒரு நியாயம் வழங்க வேண்டும்”

 உடனே ராமர் பிக்ஷுகனை அழைத்து வரக் கட்டளையிட்டார்.

 பிக்ஷுகன் அங்கு வந்தவுடன், நாயை அடித்ததற்கான காரணத்தை ராமர் கேட்டார்.

 பிக்ஷுகன் நாயைத் தான் அடித்தது உண்மை தான் என்று ஒப்புக் கொண்டார். “நான் களைப்புடன் வீதியில் பிக்ஷைக்காக அலைந்து கொண்டிருந்தேன். அபோது எனக்குக் குறுக்கே வந்து இது தடுத்தது. ‘விலகு’ என்று சொல்லியும் போகவில்லை. ஆகவே தான் அடித்தேன். தக்க தண்டனையைத் தாருங்கள். ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.

 உடனே ராமர் கற்றறிந்த மந்திரிகளையும் அறவோரையும் பார்த்து இதற்கு என்ன தண்டனை தருவது என்று கேட்டார்.

 இந்தக் குற்றத்திற்காக ஒரு அந்தணருக்கு என்ன தண்டனை தருவது என்று அனைவரும் குழம்பி இருந்த சமயத்தில் நாய் தானே முன் வந்து தர வேண்டிய தண்டனையைக் கூறியது.

 “அரசே! இந்த பிராம்மணரை ஒரு கோவிலின் தேவஸ்தானத்திற்கு குலபதியாக நியமியுங்கள். அது போதும்,” என்றது.

 ராமர் அப்படியே ஆணையிட்டார். யானை மீது அவரை மரியாதையுடன் அழைத்து வந்து குலபதி பதவி தரப்பட வேண்டும் என்ற உத்தரவைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

 நாயிடமே, “இது வெகுமதி அன்றோ! எப்படி தண்டனை ஆகும்?” என்று அனைவரும் வினவினர்.

 உடனே நாய், “சென்ற ஜன்மத்தில் நான் ஒரு தேவஸ்தான அதிகாரியாக இருந்தேன். கோவில் செல்வங்களை நன்கு அனுபவித்தேன். கோவிலில் எல்லாவற்றையும் உண்டேன். ஆகவே தான் இப்படிப்பட்ட நாய் ஜென்மத்தைக் கொண்டிருக்கிறேன். எவன் ஒருவன் தெய்வத்தின் திரவியங்களை அனாவசியமாக அனுபவிக்கிறானோ அவனுக்குக் கடும் தண்டனை தானே வரும்” என்றது.

 அனைவரும் இது கேட்டு பிரமித்தனர்.

 யதி துஷ்டோஸி மே ராம யதி தேயோ வர மம |

ப்ரதிஞாதம் த்வயா வீர் கிம் கரோமிதி விஸ்ருதம் ||

 ப்ரயச்ச ப்ராஹ்மணஸ்யாஸ்ய கௌலபத்யம் நராதிபம் |

காலஞஜரே மஹாராஜ கௌலபத்யம் ப்ரதீயதாம் |\

–    உத்தரகாண்டம் 60-ம் ஸர்க்கம் ஸ்லோகம் 38 & 39

 திரண்ட பொருள் :

நாய் கூறியது:

“ஹே ராமா! என் மேல் மகிழ்ச்சி கொண்டீர் என்றால், எனது ஆசையைப் பூர்த்தி செய்ய விருப்பம் என்றால் எனது வார்த்தையைக் கேளுங்கள்.

இவரை ஒரு குலபதியாக (மஹந்த்-ஆக ) ஆக்கி விடுங்கள். இவரை ஒரு மடாதிபதியாக ஆக்கி விடுங்கள்”.

உத்தரகாண்டத்தில் இந்தச் சம்பவம் சில பிரதிகளில் உள்ளது. சில பிரதிகளில் இல்லை. நாயின் சாபம் தண்டனை வடிவில் உள்ளது.

***

Leave a comment

Leave a comment