
Date uploaded in London – 1 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx

ஸ்ரீகாகுளம் ஆந்திர விஷ்ணு செய்த அற்புதம்; ஆந்திர மாநில கோவில்கள் -PART 16
ஆந்திரப்பிரதேசத்தில் ஸ்ரீகாகுளம் நகரில் உள்ள பெருமாள் கோவில் ஆந்திர மஹாவிஷ்ணு கோவில் என்று அழைக்கப்படுகிறது. இது 2000 ஆண்டு வரலாறு உடைய கோவில். விஜய நகர சாம்ராஜ்யத்தில் கொடிகட்டிப் பறந்தவர் கிருஷ்ணதேவ ராயர் (1509-1529); இந்து மதத்திற்கு மகாராஷ்டிர வீர சிவாஜி போல புத்துயிர் ஊட்டியவர் . 500 ஆண்டுகளுக்கு முன்னர், திருப்பதி பாலாஜி கோவிலுக்கு மட்டுமே பத்து முறை விஜயம் செய்ததை கல்வெட்டுகள பறைசாற்றுகின்றன . அவரது கனவில் ஆந்திர விஷ்ணு தோன்றி, ஆண்டாளின் பெருமையை தெலுங்கு மொழியில் எழுதுமாறு பணித்தார். உடனே கிருஷ்ண தேவராராயர் தெலுங்கு மொழியில் ‘ஆமுக்த மால்யத’ என்ற பெயரில் திருப்பாவை போலவே 30 பாடல்களில் ஆண்டாளுக்கும் ஸ்ரீரெங்கநாதருக்கும் நடந்த திருமண வைபவத்தை மொழிபெயர்த்தார். இதன் பொருள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி (ஆண்டாள்). ஆண்டாளின் நாச்சியார் திருமொழி மற்றும் திருப்பாவையுடன் ஒப்பிடவல்லது.
கிருஷ்ண தேவராயர் பன்மொழி வித்தகர்; ஏன் தெலுங்கு மொழியில் எழுத வேண்டும்? என்று வினவினார் . உடனே விஷ்ணுவும் விடை பகர்ந்தார்; தெலுங்கு மொழி இனிமையனது; சிறந்த ஒரு மொழி; ஆகவே தெலுங்கினால் எம்மைப்பாடுக என்று பணித்தார். இது சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்போம் என்ற பாரதியார் வரிகளை நமக்கு நினைவூட்டும்.

ஆந்திர விஷ்ணு கோயிலின் முன் காட்சி; விக்கிபீடியா
Teluga dēla yenna dēśambu delugēnu
telugu vallabhuṇḍa telugokaṇḍa
yella nr̥pulu goluva nerugavē bāsāḍi
dēśabhāṣalandu telugu les’sa
If you ask, ‘Why Telugu?’ It is because this is Telugu country and I am a Telugu king. Telugu is sweet. After speaking with all the kings that serve you, didn’t you realize – amongst all the languages in the country, Telugu is the best!
இந்தக் கோவிலின் பெருமாளுக்குப் பல பெயர்களை கல்வெட்டுகள் செப்புகின்றன. அவை – ஆந்திர அல்லது தெலுகு வல்லப ராய ஸ்ரீகாகுளேஸ்வர , மது சூதன . இதை தமிழ் நாட்டின் ஒரு பகுதியையும் ஆண்ட சம்புவ வராய மன்னர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் பெயராகப் பயன்படுத்தினர் . மன்னர் சுசீந்திரனுக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த ஆந்திர வல்லப ராஜா மஹாவிஷ்ணுவின் அவதாரம் என்றும் அவர் ஸ்ரீகாகுள வட்டாரத்தை ஆண்டார் என்றும் 17ஆம் நூற்றாண்டுக் கவிஞர் கோதண்டராம கவி பாடியிருப்பதால் ,இதன் வரலாறு சாத வாஹனர் /சதகர்ணி காலத்துக்குச் செல்கிறது.
xxxx
இனி கோவிலை தரிசிப்போம்

ஸ்ரீகாகுளம் விஷ்ணு கோவில்
இப்போது கர்ப்பக் கிரகத்தில் விஷ்ணுவை தரிசிக்கலாம் அர்த்த மண்டபம், மஹா மண்டபங்களில் இரு புறங்களில் ராஜ்ய லெட்சுமி, சென்ன கேசவப்பெருமாளை சேவை சாதிக்கலாம். கோவில் வளாகத்தில் கணபதி, மகிஷாசுர மர்த்தனி , ஜனார்த்தனர் , வேணு கோபால சுவாமி, வராஹ அவதார உருவங்கள் சிலை வடிவில் உள்ளன .ராஜ கோபுரத்திலும் கொஞ்சம் சிற்பங்களைக் காணலாம். தாமரையில் உள்ள இளம் வயது விஷ்ணு/அல்லது கிருஷ்ணர் சிற்பம் குறிப்பிடத்தக்கது.
கோவிலின் தெய்வம் ஆந்திர மகா விஷ்ணு அல்லது ஸ்ரீகாகுளந்திர மகா விஷ்ணு என்று அழைக்கப்படுகிறார் . பிரதான கருவறை சாதவாகனப் பேரரசர்களின் காலத்தில் கட்டப்பட்டது. சாதவாகனர்கள் எந்த தெய்வத்துக்காக இக்கோவிலைக் கட்டினார்கள் என்பது தெரியவில்லை. முஸ்லிம் தாக்குதல்களால் சேதமைடைந்த பிறகு சல்லப்பள்ளியைச் சேர்ந்த எர்லகட மன்னர்கள் இதைச் செப்பனிட்டனர்
விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயன் தனது கலிங்கப் பயணத்தின்போது விஜயவாடா வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் இக்கோவிலைப் பற்றி அறிந்து ஸ்ரீகாகுளம் கிராமத்திற்கு வருகை புரிந்தார். அந்த நேரத்தில் அவர் ஏகாதசி விரதத்தை மேற்கொண்டார். ஆந்திர விஷ்ணு கிருஷ்ண தேவராயனுக்கு , அதிகாலை நேரத்தில் தனது கனவில் தோன்றியதாக குறிப்பிட்டுள்ளான்.
இவை அனைத்தும் கல்வெட்டுகள் தரும் தகவல்கள்
முஸ்லீம் படையெடுப்புகளால் கோவில் அழிந்துவிட்டதால் பழைய கோவில் பற்றிய தகவல்களை கல்வெட்டுகளிலிருந்து மட்டுமே அறிய முடிகிறது. 1132-ஆம் ஆண்டு முதல் சுமார் 32 க ல்வெட்டுக்கள் உள்ளன. ஏராளமான தெலுங்கு நூல்கள் இந்தக் கோவிலைக் குறிப்பிடுகின்றன .கிருஷ்ண தேவராயர் 500 ஆண்டுகளுக்கு முன்னர் கோவிலில் தங்கியபோது இருந்த மரத்தினாலான மண்டபத்தைத் தகர்த்து கான்க்ரீட் கட்டிடத்தை எழுப்பிவிட்டனர் வரலாறு தெரியாத அறிவிலிகள். பின்னர் முஸ்லீம் ஆட்சிக்காலத்தில் கோவில் கவனிப்பாரற்றுக் கிடந்தது . ஒரு தெலுங்குக் கவிஞர் கோவிலின் பரிதாப நிலை பற்றிக் கவி பாடியவுடன் வட்டார மன்னன் கோவிலைப் புதுப்பித்தான். இன்று நாம் காண்பதெல்லாம் பழைய வழித்தடத்தில் எழும்பின புதிய கட்டிடங்கள் தான்.
தமிழ் சம்ஸ்க்ருத நூல்கள் மன்னரைக் கடவுள் என்றே போற்றுகின்றன. அதே போல கல்வெட்டுகளும் தெலுங்கு கவிதைகளும் ஹரியின் புதல்வனாக அறிவித்த மன்னர்கள் இந்தக் கோவிலை எழுப்பியதைக் கூறுகின்றன. கோவிலுக்கு வெளியே, இந்த வட்டாரத்திலுள்ள கல்வெட்டுகள் இதை சாதவாகன மன்னன் கட்டியதாகச் சொல்லுவதால் 2000 ஆண்டுப பழமையை அறிய முடிகிறது. புகழ்பெற்ற வைணவ ஆசார்யர் காஞ்சீபுர வேதாந்த தேசிகனின் மகன் வரத தேசிகனும் ஆந்திர விஷ்ணு மீது துதி பாடியதால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் தலம் சீரும் சிறப்புடனும் விளங்கியதை அறிய முடிகிறது. இங்குள்ள 32 கல்வெட்டுகளும் வரலாற்றை அறிய பெரும் துணை புரிகிறது .
ஆங்கிலத்தில் Srinivas Sistla, Associate Professor, Department of Fine Arts, Andhra University, Visakhapatnam;(sistlasrini@gmail.com) எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் (May, 2022) மேலும் பல விவரங்கள் இருக்கின்றன.

விசாகப்பட்டிணம் விமான நிலையத்திலிருந்து 116 கி.மீ. தொலைவில் ஸ்ரீகாகுளம் உள்ளது. இப்பொழுது இது தனி மாவட்ட்டமாக ஆக்கப்பட்டுவிட்டது

—subham—
Tags-ஸ்ரீகாகுளம், ஆந்திர விஷ்ணு, அற்புதம்; ஆந்திர மாநில கோவில்கள் -PART 16, ஆமுக்த மால்யத, கிருஷ்ணதேவ ராயர், திருப்பாவை