Post No. 13.504
Date uploaded in London – —3 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் (61)
ராமாயணத்தில் சாபங்கள் (61) துர்வாஸ முனிவர் சாபம் கொடுப்பதாக லக்ஷ்மணரிடம் கூறுவது!
ச. நாகராஜன்
உத்தர காண்டத்தில் நூற்றைந்தாவது ஸர்க்கம் ‘துர்வாஸ முனிவர் வருவது’ என்ற ஸர்க்கம்.
ஶ்ரீ ராமரின் அவதார காரியம் பூர்த்தியானதையொட்டி காலருத்திரமூர்த்தி ஒரு தபஸி வேஷத்தைத் தரித்துக் கொண்டு அவரது அரண்மனைக்கு வந்தார்.
லக்ஷ்மணரைப் பார்த்து தான் வந்திருப்பதை ராமரிடம் அறிவிக்குமாறு அவர் கூற, லக்ஷ்மணரும் அப்படியே ராமரிடம் சென்று சொல்கிறார்.
வந்த முனிவரிடம் விஷயத்தை ராமர் கேட்க அவர், “இது நாம் இருவரும் தனியே பேச வேண்டிய விஷயம். மற்ற யார் கேட்டாலும் அவர் மரண தண்டனைக்குப் பாத்திரனாய் ஆக வேண்டும்” என்கிறார்.
உடனே ராமர் லக்ஷ்மணரிடம், “வாயில்காப்போனை விடை கொடுத்தனுப்பி விட்டு நீ வாயிலில் இரு. யாரையும் அனுமதிக்காதே” என்று உத்தரவிடுகிறார்.
பின்னர் முனிவர் ராமரிடம் தங்களின் அவதார காலம் முடிந்து விட்டது என்பதை பிரம்மதேவர் தங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்.” என்று கூற ராமர் தான் எந்த இடத்திலிருந்து வந்தாரோ அந்த இடத்திற்குத் திரும்புவதாகக் கூறுகிறார்.
இந்தச் சமயத்தில் லக்ஷ்மணர் வாயிலைக் காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது துர்வாஸ மஹரிஷி அங்கு வந்து ராமரை உடனே பார்க்க வேண்டும் என்று கூறுகிறார்.
லக்ஷ்மணர், “ராமர் வேறு காரியமாக இருக்கிறார். ஒரு முகூர்த்தம் காத்திருங்கள்” என்று துர்வாஸ முனிவரிடம் கூறுகிறார்.
உடனே துர்வாஸ முனிவருக்கு பெரும் கோபம் ஏற்பட அவர் கீழ்க்கண்டவாறு லக்ஷ்மணரிடம் கூறுகிறார்:
அஸ்மின் க்ஷணே மாம் சௌமித்ரே ந நிவேதயஸே யதி |
விஷயம் த்வாம் புரம் சைவ சபிஷ்யே ராகவம் ததா ||
பரதம் சைவ சௌமித்ரே யுஷ்மாகம் யா ச சந்ததி: ||
சௌமித்ரே – ஹே லக்ஷ்மணா
அஸ்மின் – இந்த
க்ஷணே – நிமிஷமே
மாம் – என்னை
நிவேதயஸே ந யதி – நீ கொண்டுபோய் விடவில்லை என்றால்
சௌமித்ரே – ஹே சௌமித்ரே!
த்வாம் ச – உன்னையும்
பரதம் ஏஅ – பரதனையும்
ராகவம் ததா – ராகவனையும்
யுஷ்மாகம் – உங்களது
சந்ததி: – சந்ததி
யா ச – எதுவோ அதையும்
புரம் ச – நகரையும்
விஷயம் ஏவ – நாட்டையும்
சபிஷ்யே – சபித்து விடுவேன்
ந ஹி ஷக்ஷ்யாம்யஹம் பூயோ மன்யும் தாரயிதும் ஹ்ருதி |
தச்சூத்வா கோரஸங்காஷம் வாக்யம் தஸ்ய மஹாத்மன: ||
சிந்தயாமாஸ மனஸா தஸ்ய வாக்யஸ்ய நிச்சயம் ||
ஹி – ஏனெனில்
அஹம் – நான்
ஹ்ருதி – எதிலும் முக்கியமாயுள்ளதில்
பூய: – அதிகமாயுள்ள
மன்யும் – சங்கடத்தை
தாரயிதும் – பொறுத்துக்கொள்ள
ஷக்ஷ்யாமி ந – முடியாமலிருக்கிறேன்”
தஸ்ய – அந்த
மஹாத்மன: – மஹானுபாவரது
கோரசங்காஷம் – கோபமான
வாக்யம் – மொழிக்கு (லக்ஷ்மணர்)
ச்ருத்வா – செவி சாய்த்து
தத் – அப்படி இருப்பதால்
தஸ்ய வாக்யஸ்வ – அந்தச் சொல்லின்
நிச்சயம் – கருத்தை
மனஸா – மனத்தில்
சிந்தயாமாஸ – ஆலோசனை செய்தார்
– உத்தரகாண்டம், 105வது ஸர்க்கம்,, ஸ்லோகங்கள் 8 & 9
ப்ரத்யக்ஷ ரூபத்தில் இந்த சாபம் வழங்கப்படாத ஒன்று!
“நகரம், ராமர், பரதர் ஆகிய அனைவரையும் பாதிக்கும்படியான சாபம் வேண்டாம்; நான் ஒருவன் இறந்தால் பரவாயில்லை” என்று லக்ஷ்மணர் முடிவு செய்து ராமரிடம் சென்று துர்வாஸ முனிவரின் வருகையைச் சொல்கிறார்.
இத்துடன் வால்மீகி ராமாயணத்தில் வரும் 61 சாபங்களைப் பற்றிய விளக்கம் முடிவடைகிறது.
xxxx
ராமாயணத்தில் சாபங்கள் இப்போது இரு பாகங்களாக புத்தக வடிவில் வெளியிடப்படுகிறது.
வாங்க விரும்புவோர் www.pustaka.co.in இணையதளத்தை அணுகலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய போன் நம்பர் 99803 87852