இதயக் கோளாறுகளையும் கான்ஸர் அபாயத்தையும் தடுப்பது சைவ உணவே! (Post No.13,508)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.508

Date uploaded in London – 4 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஹெல்த்கேர் ஜூலை 2024 இதழில் வெளியாகியுள்ள கட்டுரை

இதயக் கோளாறுகளையும் கான்ஸர் அபாயத்தையும் தடுப்பது சைவ உணவே!

ச. நாகராஜன் 

சைவ உணவு – 20 வருட ஆய்வுகள்

தாவர வகை உணவு என்னும் கறிகாய் வகை உணவான சைவ உணவு வகைகளைச் சாப்பிடுவோருக்கு இதயக் கோளாறுகள் ஏற்படுவது மிகவும் குறைவு என்பதோடு அவர்களுக்கு கான்ஸர் அபாயமும் குறைவாகவே ஏற்படுகிறது என்பதை 20 வருட ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

உடல் பருமன் ஆகாமல் இருக்க வேண்டுமா, அதற்கும்,

இரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கும் கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருப்பதற்கும் சைவ உணவே ஏற்புடையது.

சமீபத்தில் அறிவியல் அறிஞர்கள் கடந்த 20 ஆண்டுகளில் சைவ உணவு சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட முக்கியமான 48 மருத்துவ ஆய்வுகளை எடுத்துக் கொண்டு அவற்றின் முடிவுகளை ஆராய்ந்தனர்.

எல்லாவித மாமிச உணவு வகைகள், முட்டை ஆகியவற்றோடு பால் வகைகள், தேன் உள்ளிட்ட விலங்குகளினால் உருவாக்கப்படும் அனைத்து உணவு வகைகளையும் தவிர்ப்போர் உண்மையான சைவ உணவு சாப்பிடுவோர் என்று வகைப்படுத்தப்படுகின்றனர்.

இது மட்டுமல்ல புரொஸ்டேட் கான்ஸர் என்ற அபாயகரமான நோயும், கோலன் கான்ஸர் என்ற நோயும் கூட சைவ உணவு சாப்பிடுவோருக்கு வருவது குறைவாகவே இருக்கிறது என்கின்றன ஆய்வின் முடிவுகள்.

இத்தாலியில் நடந்த ஆய்வுகள்

இத்தாலியில் உள்ள போலோகொனா நகரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் நியூராலஜிகல் ஸயின்ஸஸ்-ல் ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளரான ஃப்டெரிகா குரால்டி (Federica Guaraldi MD, PhD, Institure of Neuralogical Sciences in Bologna, Italy) இவ்வாறு தெரிவிக்கிறார்.

எப்படி சைவ உணவுகள் இப்படி கொடும் நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன என்பதை ஆய்வு ஆராயவில்லை.  எவ்வளவு உண்டால் இந்த அபாயக் குறைவு வரும் என்பதையும் அவர்கள் ஆராயவில்லை. ஆனால் சைவ உணவு மட்டுமே உண்பவர்களை அவர்கள் ஆய்வுக்குட்படுத்தினர்.

அத்தோடு ஆரோக்கியமற்ற கறிகாய் வகைகள், பழச்சாறுகள்,, உருளைக்கிழங்கு சிப்ஸ் (வறுவல்) சோடா ஆகியவை உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் மறந்து விடக்கூடாது என்று இந்த ஆய்வை மேற்கொண்ட இணை ஆய்வாளர் டேவிட் கோரி  (David Gori Md, PhD) வலியுறுத்துகிறார்.

சைவ உணவுகள் நல்லவை என்பதற்கான ஒரு முக்கிய காரணம் அவற்றில் பைபர் எனப்படும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை எளிதில் ஜீரணம் ஆகும். இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இந்த பைபர் வகை உணவுகளே கான்ஸர் அபாயத்தைக் குறைக்கின்றன, இதயக் கோளாறுகள் வராமல் காக்கின்றன என்கிறார் மூத்த இயக்குநரான மிகாலா கரிஸன் (Micaela Karisen Phd, MSPH, Senior Director) என்னும் ஆய்வாளர். 

 நார்ச்சத்து (பைபர்) அதிகம் உள்ளவை 

பைபர் அதிகம் உள்ள உணவுப்பொருள்கள் யாவை? 

பீன்ஸ், உலர்ந்த அத்திப்பழம், பாதாம் பருப்பு, பச்சை பட்டாணி, ப்ராக்கோலி, சியா விதைகள், பெர்ரி, பேரிக்காய், வாழைப்பழம், பார்லி, ஓட்ஸ், பாஸ்தா, கேரட், பீட் ரூட், முட்டைகோஸ், கீரை, தக்காளி உள்ளிட்டவற்றில் பைபர் அதிகம் உள்ளது.

 இவற்றை அன்றாடம் உரிய வகையில் உணவாக எடுத்துக் கொள்வது நீடித்த நன்மையை நல்கும்.

வள்ளுவரின் கொள்கையும் அறிவுரையும் 

இது ஒரு புறமிருக்க சைவ உணவை மேற்கொள்ள வேண்டும் என்பது ஆன்மீக ரீதியாகவும் அறநூல்களின் அறிவுரையாகும்.

திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தையே (26-ம் அதிகாரம் – புலால் மறுத்தல்) இதற்கென ஒதுக்கியிருக்கிறார்.

தன் உடம்பை பெருக்கச் செய்ய இன்னொரு உடம்பைத் தின்கின்றவனுக்கு அருள் எப்படி இருக்க முடியும் என்பது அவரது கேள்வி.

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள் (குறள் 251)

பொருளை வைத்துக் காப்பாற்றாதவருக்கு பொருள் உடையவர் என்ற சிறப்பு இருக்காது. (அசைவ உணவு மேற்கொள்ளும்) புலால் தின்பவர்க்கு அருள் உடையவராக இருக்கும் சிறப்பு இல்லை.

பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி

ஆங்கில்லை ஊன்றின் பவர்க்கு  (குறள் 252)

ஊன் உண்ணாதிருத்தலே உயிர்கள் உடல் பெற்று வாழும் நிலைமை. ஊன் தின்பவரை நரகம் தன்னுள் அடக்கிக் கொண்டு ஒரு போதும் அவனை வெளியே விடாது.

உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யா தளறு  (குறள் 255)

அது மட்டுமல்ல, முத்தாய்ப்பாக இந்த அதிகாரத்தின் இறுதிக் குறளாக ஒரு அதிசய உண்மையை அவர் எடுத்துரைக்கிறார்.

ஒரு உயிரையும் கொல்லாமல் புலால் உணவை மேற்கொள்ளாதவனை அனைத்து உயிர்களும் கை கூப்பி தொழும் என்கிறார் திருவள்ளுவர்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும் (குறள் 260)

ஆகவே அறநெறிகளின் வழிமுறைப்படியாகவும், அறிவியல் ஆய்வுகளின் தேர்ந்த முடிவுகளின் படியும் சைவ உணவே ஏற்புடைய உணவு என்பது தேர்ந்து தெளிந்த உண்மை.

அசைவ உணவை மேற்கொள்பவர்களுக்கு நரகத்திலிருந்து வெளி வர கதவு திறக்கவே திறக்காதாம்; வள்ளுவரின் கொள்கை இது!

சைவ உணவை மேற்கொள்வோரை எல்லா உயிரும் கை கூப்பித் தொழுமாம். வள்ளுவரின் அறிவுரை இது.

சைவ உணவை மேற்கொள்வோமா?

***

Leave a comment

Leave a comment