உலகை ஒளிமயமாக ஒளிர வைத்த நிகோலா டெஸ்லா! – 1 (Post No.13,515)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.515

Date uploaded in London – 6 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

3-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.

உலகை ஒளிமயமாக ஒளிர வைத்த நிகோலா டெஸ்லா! – 1

ச. நாகராஜன்

மனிதனுக்கு எல்லையற்ற ஆற்றல் உண்டு என்பதைக் கண்டுபிடித்ததோடு உலகையே ஒளிவெள்ளத்தால் நிரப்பிய ஒரு அதிசய மனிதர் யார் தெரியுமா? மிகப் பெரும் விஞ்ஞானியான நிகோலா டெஸ்லா தான் அவர்!

பிறப்பும் இளமையும்

க்ரோஷியா என்று இப்போது அழைக்கப்படும் நாட்டில் ஸ்மில்ஜன் என்ற ஒரு சிறு கிராமத்தில் 1856-ம் ஆண்டு ஜூலை மாதம் 10-ம் நாளன்று நிகோலா டெஸ்லா பிறந்தார். இவரது முன்னோர்கள் செர்பியாவிலிருந்து இடம் பெயர்ந்தவர்கள். இடைவிடாத போரினால் ஒரே உக்கிர பூமியாக விளங்கிய நாட்டில் போரின் சித்திரவதைகளையும் கொலைகளையும் பார்த்தவாறே அவர் வளர்ந்தார்.

டெஸ்லா பிறந்த அதே நேரத்தில் ஒரே இடியும், பளீர் பளீர் என்ற மின்னலுமாக வானம் ஒளிர்ந்தது. அவரை பிரசவம் பார்த்த நர்ஸ், இந்த வேளையில் பையன் பிறந்திருக்கிறானே, ‘இவன் இருள் குழந்தையாக இருப்பான்’ என்றார். ஆனால் உடனே இதை மறுத்த டெஸ்லாவின் தாயார், “இல்லை, இல்லை, வானம் ஒளிர்கிறதே, அதனால் இவன் ஒளி மயமாக விளங்குவான் என்றார். அவர் வாக்கு அப்படியே பலித்தது! மின்னல் ஒளி மன்னனாகவே விளங்கினார் டெஸ்லா!

டெஸ்லாவின் தந்தை மிலுடின் உள்ளூர் சர்ச்சில் பாதிரியாராக இருந்தார். பல மொழிகளைப் பேசவல்ல அவர் ஒரு கவிஞரும் கூட. அவரது தாயார் ஜோவ்கா தான், புதிது புதிதாக எதையாவது கண்டுபிடிக்கும் அவரது திறமையைக் கண்டு அதை ஊக்குவித்தார். தாயாருக்கு சமையலுக்கு உதவியான புது சாதனங்களை டெஸ்லா செய்து தந்தார்.

அவரது புத்திகூர்மையைக் கண்டு வியந்த தந்தை அவருக்கு நினைவாற்றல் உத்தி உள்ளிட்ட பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார்.  1863-ல் குதிரை ஒன்று அவரது சகோதரனைத் தாக்கவே அதில் அவன் இறந்து விட்டான். இதனால் மிகவும் வருந்திய குடும்பம் காஸ்பிக் என்ற இடத்திற்குக் குடி பெயர்ந்தது.

அங்கு டெஸ்லாவை அனைவரும் அறிவாளி என்றே அழைத்தனர். பின்னர் ஆஸ்திரியா பாலிடெக்னிக்கில் பயின்றார். அவரது தந்தை இறக்கவே அவர் ஹங்கேரிக்குச் சென்று புடாபெஸ்ட் நகரில் ஒரு டெலிபோன் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போதிலிருந்தே டைரக்ட் கரண்ட் (D.C.) என்பதை விட ஆல்டர்னேடிங் கரண்ட் (A.C) மிகுந்த சக்தி வாய்ந்தது என்பதை அவர் உணர்ந்தார். அதில் பல சோதனைகளைச் செய்து புதியனவற்றை இனம் கண்டார். அந்த டெலிபோன் கம்பெனி விற்கப்படவே அவர் பாரிஸுக்குச் சென்று அங்குள்ள எடிஸனின் நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர் அமெரிக்கா செல்ல முடிவெடுத்தார்.

அமெரிக்கா வருகை

டெஸ்லா 28-ம் வயதில் 1884, ஜூன் 6-ம் தேதி நியூயார்க்கிற்கு வந்தார். அவர் பையில் இருந்தவை நான்கு செண்ட் நாணயம், ஒரு சூட், நண்பர் ஒருவரின் முகவரி. அவர் நேராக எடிஸனைச் சென்று சந்தித்தார். எடிஸன் தன் முன்னே நின்று கொண்டிருந்த நெடிய உருவத்தைப் பார்த்தார். அவரிடம் டெஸ்லா ஒரு சிறிய குறிப்புள்ள பேப்பரைக் கொடுத்தார். அதில் புடாபெஸ்டில் அவரை வேலைக்கு அமர்த்தியிருந்த முதலாளி எடிஸனுக்கு தனது குறிப்பை எழுதி இருந்தார் இப்படி: “எனக்கு இரண்டு பெரிய மனிதர்களைத் தெரியும். ஒருவர் நீங்கள். இன்னொருவர் இந்த இளைஞர்”

உடனே எடிஸன் அவரை வேலைக்கு அமர்த்திக் கொண்டார். உழைப்பு, உழைப்பு, கடுமையான உழைப்பு. எடிஸனுக்கு டி.சி மோட்டார் மீது அடங்காத பற்று. டெஸ்லாவோ மின்சக்தியை தொலைதூரங்களுக்கு எடுத்துச் செல்ல வசதியானது ஏ.சி.யே என்றார்.

எடிஸன் அவரிடம் எலக்ட்ரிக் ஜெனரேட்டரின் வடிவமைப்பை மாற்றும் படி சிக்கலான ஒரு ப்ராஜெக்டைக் கொடுத்து இதை நீ முடித்தால் உனக்கு ஐம்பதினாயிரம் டாலர் தருகிறேன் என்றார். எவ்வளவு பெரிய தொகை அது! உடனே டெஸ்லா தனது நேரம் முழுவதையும் செலவழித்து 24 நவீன வடிவமைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்து அதை எடிஸனிடம் காட்டினார். எடிஸன் பிரமித்தார். டெஸ்லாவைப் பாராட்டினார். ஆனால் டெஸ்லா, “எனக்குத் தருகிறேன் என்றீர்களே, அந்த ஐம்பதினாயிரம் டாலரைத் தர முடியுமா?” என்று கேட்டார்.

“ஓ”வென்று சிரித்த எடிஸன், “அட, அதை உண்மை என்று நினைத்து விட்டாயா, அது ஒரு அமெரிக்க ஜோக்” என்றார்.

திகைத்துப் போன டெஸ்லா அன்றே எடிஸன் நிறுவனத்திலிருந்து விலகினார். டெஸ்ஸல் என்பவர் டெஸ்லாவிடம் அவரது கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெறுமாறு செய்ததோடு இரு தொழிலதிபர்களையும் அவருக்கு அறிமுகப்படுத்தினார்.

பல நிறுவனங்களும் அவரது நுட்பமான அறிவுத்திறனை அறிந்து பண உதவியைத் தாராளமாகச் செய்தன.

மரணக் கதிர் கண்டுபிடிப்பு

டெஸ்லா தன்னுடைய கண்டுபிடிப்புகள் போர்முறையையே மாற்றவல்லவை என்றார். 1934-இல், துகள் கற்றை என்ற அவருடைய ஆயுதம் – மரணக் கதிர்- டெத் ரே (DEATH RAY) -என அனைவராலும் அறியப்பட்டது.  பத்தாயிரம் எதிரி விமானங்களை ஆகாயத்திலேயே அது அழித்து விடும் என்றார் அவர். இந்தக் கண்டுபிடிப்பானது உலகில் போர்களுக்கு ஒரு முடிவைக் கட்டும் என்றார் அவர்.

ரஷியா அவரது கண்டுபிடிப்புகளில் மிகுந்த ஆர்வம் காட்டியது. அவரது சில திட்டங்களுக்காக இருபத்தைந்தாயிரம் டாலர் செக்கை உடனே தந்தது.

சந்திரனையே தாக்க முடியும்!

டெஸ்லா பல அபூர்வ காட்சிகளை மனக்கண்ணால் கண்டதுண்டு. அயல்கிரகவாசிகளிடமிருந்து வந்த பல சமிக்ஞைகளைத் தான் பெறுவதாக அவரே கூறியதுண்டு. ஆற்றல் மிக்க அலைக்கற்றையை வீசி சந்திரப் பரப்பை இடைஞ்சலுக்குள்ளாக்க முடியும் என்றார் அவர்.

விவேகானந்தரைச் சந்தித்த டெஸ்லா

ஸ்வாமி விவேகானந்தர் நியூயார்க்கில் தங்கி இருந்த போது ஒரு அபூர்வமான சந்திப்பு நிகழ்ந்தது.மூன்று மேதைகள் சந்தித்த நிகழ்வாக இது அமைந்தது.1896ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரபல விஞ்ஞானியான நிகோலா டெஸ்லாவும் பிரெஞ்சு நடிகையான சாரா பெர்ன்ஹர்ட்டும் ஸ்வாமிஜியும் ஒரு நாள் சந்தித்தனர்.    

சாரா பெர்ன்ஹர்ட் நியூயார்க்கில் ‘இஸீல்’ என்னும் நாடகத்தை நிகழ்த்தி வந்தார். .பிரெஞ்சு பாணியில் ஆக்கப்பட்டுள்ள புத்தரின் வாழ்க்கை வரலாறு அது  இந்த நாடகத்தைப் பார்க்க ஸ்வாமிஜி சென்றிருந்தார். அவர் வந்ததை அறிந்த சாரா அவருடன் பேச விரும்பினார். அப்போது டெஸ்லாவும் உடனிருந்தார்.

ஸ்வாமிஜி அவர்களுக்கு வேதாந்தம் கூறும் ஆகாசம், பிராணன், கல்பங்கள் போன்றவற்றை விளக்கினார். நவீன விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளக் கூடிய கொள்கைகளாக இவற்றை ஸ்வாமிஜி விளக்க ஆரம்பித்த போது எல்லையற்ற வியப்புடன் அதை அனைவரும் கேட்டு பிரமித்தனர்.

   ஆகாசம், பிராணன் ஆகிய இரண்டும் மஹத், பிரபஞ்ச மனம் பிரம்மா அல்லது ஈஸ்வரனிடமிருந்தே வெளிப்படுகின்றன என்றார் ஸ்வாமிஜி. சக்தி, ஜடம் ஆகிய இரண்டையும் இயங்கா ஆற்றலாக மாற்றி விட முடியும் என்பதைக் கணித முறையில் காட்ட இயலும் என்றார் டெஸ்லா.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேரி லூயி என்பவர் ஸ்வாமிஜியின் சிஷ்யை. அவர் இந்த மூன்று மேதைகளின் அபூர்வ சந்திப்பைப் பற்றி குறிப்பிடுகையில், ”நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு ஒரு முறை விண்வெளியில் அபூர்வமாகச் சில கிரகங்களின் சேர்க்கை நிகழும். அது போல இந்த மூன்று மேதைகளின் இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது!” என்று கூறி, “இதனால் அவர்களின் வாழ்க்கையில் என்ன தாக்கம் ஏற்பட்டது என்பதை ஊகிக்க மட்டுமே முடியும்” என்கிறார்.

 ஸ்வாமிஜியுடனான சந்திப்பும் அவரது உபதேச உரையும் டெஸ்லாவை வெகுவாகக் கவர்ந்தது. ஸ்வாமிஜியின் கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொண்ட டெஸ்லா தனது இறுதி ஆண்டுகளில் அதை அப்படியே கட்டுரைகளில் எழுதினார்.

To be continued…………………………………..

**

Leave a comment

Leave a comment