உலகை ஒளிமயமாக ஒளிர வைத்த நிகோலா டெஸ்லா! – 2 (Post No.13,518)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.518

Date uploaded in London – 7 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

3-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக தரப்படுகிறது.

உலகை ஒளிமயமாக ஒளிர வைத்த நிகோலா டெஸ்லா! – 2

ச. நாகராஜன்

வெஸ்டிங்ஹவுஸ் ஆதரவு

டெஸ்லாவிற்கு தனது கனவுத் திட்டங்களை நிறைவேற்ற நிறைய பணம் தேவைப்பட்டது. அவரது இந்தத் தேவையையும் அவரது மேதாவிலாசத்தையும் நன்கு புரிந்து கொண்ட தொழிலதிபரான வெஸ்டிங்ஹவுஸ் என்பவர் அவருக்குத் தேவையான பணத்தைத் தந்தார்.

1893-ல் டெஸ்லாவும் வெஸ்டிங்ஹவுஸும் சிகாகோ உலகக் கண்காட்சியை விளக்குகளால் அலங்கரிக்கும் வாய்ப்பை கடும் போட்டிக்கு இடையே ஏலம் எடுத்துப் பெற்றனர். இதுவே உலகின் முதலாவது மின்சாதன கண்காட்சி ஆகும். இந்த ஏலத்தில் தோற்ற எடிஸன் தனது பல்புகளை இந்தக் கண்காட்சியில் பயன்படுத்தக் கூடாது என்று கூறிவிட்டார். 2,50000 பல்புகளை ஆறே மாதத்தில் டெஸ்லா தயாரித்தார். மே மாதம் முதல் தேதியன்று அமெரிக்க ஜனாதிபதி க்ரோவர் க்ளீவ்லெண்ட் ஒரு பட்டனை அமுத்த இரண்டு லட்சம் டெஸ்லா பல்புகள் ஒளியை அள்ளி வீசின. உலகமே பிரமித்தது. இதுவே ஒளிவெள்ளப் பாதையில் உலகம் புகும் முதல் விழாவாகத் திகழ்ந்தது,

நியூயார்க் அருகே லாங் ஐலேண்டில் முதல் வயர்லெஸ் ஸ்டேஷனை நிறுவ எண்ணிய டெஸ்லா ஜே.பி.மார்கன் என்ற பிரபல தொழிலதிபருடன் சேர்ந்து 200 ஏக்கர் நிலப்பரப்பில் வார்டன்கிளிப் டவர் என்ற நிலையத்தை அமைக்க ஆரம்பித்தார். அட்லாண்டிக் மகா சமுத்திரம் வழியே இங்கிலாந்திற்கு தகவல்களை அனுப்புவது அவர் திட்டம். ஆனால் ஏராளமான நிதி தேவையாக இருந்தது. மார்கன் அதை தர மறுக்க 1917-ல் திட்டம் நிறுத்தப்பட்டது. டவரை அழித்து டெஸ்லா தனது கடனை அடைத்தார். இன்றும் டெஸ்லா டவர் என்றால் அமெரிக்காவில் அனைவரும் அறியும் அளவு அது புகழ் பெற்ற ஒரு டவர்!

சுமார் 42 கண்டுபிடிப்புகளில் அவருக்கு வர வேண்டிய ராயல்டி மட்டும் பல லட்சம் டாலர்களாக இருந்தது. என்றாலும் ஒரு சொற்பத் தொகையையே அவர் பெற்று வந்தார்.

புறாக்களுடன் தோழமை

புறாக்களின் மீது அபாரமான அன்பு கொண்டவர் டெஸ்லா! 

அவர் தனது லாபரட்டரிக்கு அருகில் இருந்த ஒரு பூங்காவில் ஏராளமான புறாக்களுக்கு தினம்தோறும் தீனியைப் போட்டு வந்தார். ஒரு நாள் அவற்றுள் ஒன்றிற்கு ஒரு காலும் ஒரு இறக்கையும் உடைந்திருந்ததைக் கண்டார். இரண்டாயிரம் டாலர் செலவழித்து புது சாதனம் ஒன்றைச் செய்தார். அதன் மூலம் புறாவின் உடலைத் தாங்குவதற்கான ஒரு ஏற்பாட்டைச் செய்து அது முழு குணம் அடையும் வரை அதைத் தீவிர கவனத்துடன் பாதுகாத்து வந்தார். இன்னொரு சமயம் ஒரு புறாவை அவர் வளர்க்க ஆரம்பித்தார். அதைப் பற்றிக் கூறுகையில், “ஒரு ஆண் ஒரு பெண்ணை நேசிப்பது போல் அதை நான் நேசித்தேன். அதுவும் என்னை நேசித்தது. வாழ்க்கையின் அர்த்தத்தை அப்போது தான் நான் புரிந்து கொண்டேன்” என்றார் அவர்! 

குடும்பம்

டெஸ்லா வாழ்நாள் முழுவதும் பிரம்மசாரியாகவே திகழ்ந்தார். பெரும் கண்டுபிடிப்புகள் திருமணமானவர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை என்று ஒரு முறை அவர் கூறினார்.

ஒரு நாளைக்கு 19 மணி நேரம் அவர் உழைத்தார். தனது வசிப்பிடமாக பெரிய ஹோட்டல்களை அவர் தேர்ந்தெடுத்தார். உரிய பணத்தைக் கொடுக்க வசதி இல்லாத போது சிறிய ஹோட்டலுக்கு மாறுவார். இறுதியாக 33 அடுக்குமாடி ஹோட்டலான ஹோட்டல் நியூயார்க்கரில் அவர் வசிக்க ஆரம்பித்தார்.

மிக மிக சுத்தமாக இருக்க வேண்டும் என்பது அவரது கொள்கை. சாப்பிடும் டேபிளில் 18 நாப்கின்களை அவர் உபயோகிப்பது வழக்கம், 3, 6, 9 என்ற எண்களே அவருக்குப் பிடித்தமான எண்கள். எதைச் செய்தாலும் இந்த எண்கள் வரும்படி பார்த்துக் கொள்வார்.

எதிர்கால உலகத்தில் ஆண்களை விட பெண்களே அதிகம் திறமையுடன் எதையும் நிர்வகிப்பார்கள் என்பது அவரது கணிப்பு.

மனதில் வைத்திருந்த மர்மங்கள்!

அனைத்துக் கண்டுபிடிப்புகளையும் மனதிலேயே மர்மமாக அவர் வைத்திருந்ததற்கான ஒரு காரணம் உண்டு. ஒரு சமயம் சோதனை ஒன்றைச் செய்யும் போது உருவான அதீத சக்தி அவரது சோதனைச் சாலைக் கட்டிடத்தையே பிரம்மாண்ட சப்தத்துடன் தூள் தூளாக்கி அழித்தது. இப்படிப்பட்ட சக்தி வெளிஉலகில் அனைவருக்கும் தெரிந்தால், இதை துர்நோக்கத்துடன் பயன்படுத்துவோரால் உலகம் அழியும் என்ற முடிவுக்கு வந்த அவர் அந்தக் கண்டுபிடிப்புகளை இறுதி வரை சொல்லாமலேயே மறைந்தார். உலகின் நலன் மீது அவ்வளவு அன்பு கொண்ட அபார மேதையாக அவர் திகழ்ந்தார்.

மறைவு

1943-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி மன்ஹாட்டனில் தனது ஹோட்டல் அறையிலேயே, இதயத்தில் ரத்த உறைவின் காரணாமாக (coronary thrombosis) 86-ம் வயதில் டெஸ்லா மரணமடைந்தார்.

அறிவுரை

ஏராளமான அறிவுரைகளை அவர் தனது சொந்த அனுபவத்தின் மூலமாக மனித குலத்திற்கு அளித்துள்ளார். அவற்றில் இரண்டு இதோ:

“எனது  வாழ்க்கை சம்பவங்களைத் திருப்பி மதிப்பீடு செய்து பார்க்கும் போது, நமது விதியை உருவாக்கும் செல்வாக்குகள் எவ்வளவு நுட்பமாக இருக்கின்றன என்பதை நான் உணர்கிறேன்.”

“ஒருவருடைய தீர்வானது (எந்த விஷயத்திற்கும்) அவரது சொந்த முயற்சியினாலேயே கொண்டு வரப்பட முடியும்!”

ஒளிவெள்ளம் தந்தவர்

ஒவ்வொரு நாளும் இருள் கவியும் நேரத்தில் மின்விளக்கைப் போட்டு ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சி உலகத்தினர் அனைவரும் பணிகளைச் செய்ய காரணமாக அமைந்தவர் டெஸ்லா. அவரை நினைத்து நன்றி சொல்லலாம், இல்லையா!

**

Leave a comment

Leave a comment