உடல் குறைகளைக் கடந்து வெற்றி பெற்ற ஹெலன் கெல்லர்! – 2 (Post No.13,526)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.526

Date uploaded in London – 9 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

ஜூலை 10, 2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

உடல் குறைகளைக் கடந்து வெற்றி பெற்ற

ஹெலன் கெல்லர்! – 2

ச. நாகராஜன்

உயரிய விருதும் மறைவும்

அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் பி. ஜான்ஸன் 1964, செப்டம்பர் 14ஆம் தேதியன்று அவருக்கு ‘ப்ரெஸிடென்ஷியல் மெடல் ஆஃப் ஃப்ரீடம்; (Presidential Medal of Freedom)  என்ற அமெரிக்காவின் உயரிய சிவிலியன் ஹானர் விருதை அளித்தார்.

ஹெலனின் குடும்பம்

ஹார்வர்ட் பயிற்றுவிப்பாளரான ஜான் மேஸி என்பவரை 1905-ம் ஆண்டு ஹெலன் மணந்தார்.

1936-ல் வருந்தத்தக்க ஒரு சம்பவமாக அவருக்கு கல்வி கற்பித்த ஆசிரியையான அன்னி சல்லிவன்  மறைந்தார்.

ஹெலன் தனது ஆசிரியையான ஆன்னி சல்லிவனைச் சந்தித்ததைப் பற்றி உளமார தனது சரிதையில் குறிப்பிடுகிறார் இப்படி: “எனது வாழ்க்கையில் மிகக் குறிப்பிடத்தகுந்த ஒரு நாள் நான் எனது ஆசிரியையான ஆன்னி மேன்ஸ்ஃபீல்ட் சல்லிவன் என்னிடம் வந்த நாள் தான். “ 

ஆன்னி சல்லிவனின் பரிவும் ஹெலனின் விடாமுயற்சியுமே அவரது வெற்றிக்குக் காரணம்.

ஹெலன் கெல்லரைப் பற்றிய படங்கள்

ஹெலனைப் பற்றி ‘டெலிவரன்ஸ்’ என்ற ஒரு படம் அவரது வாழ்கை வரலாற்றைச் சித்தரித்து 1919-ல் எடுக்கப்பட்டது.1959-ல் அவரைப் பற்றி ‘தி மிராகிள் வொர்கர்’ என்ற நாடகம் அரங்கேறியது. 1960-ல் இது புலிட்ஸர் விருதைப் பெற்றது. இதுவே அன்னி சல்லிவனை மையமாகக் கொண்ட திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

மறைவு

1968-ம் ஆண்டு ஜூன் முதல் தேதி தனது 87-ம் வயதில் கனெக்டிகட்டில் ஈஸ்டனில் அவர் மறைந்தார். வாஷிங்டனில் உள்ள செயின்ட் ஜோஸப் சப்பலில் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

“உலகில் சில மனிதர்களே இறக்காமல் இருக்கப் பிறக்கிறார்கள். அவர்களுள் ஹெலன்கெல்லரும் ஒருவர்” என்று அமெரிக்க செனேடர் லிஸ்டர் ஹில் அவரைப் போற்றிப் புகழாரம் சூட்டினார்.

கண்பார்வையற்றோரின் சாதனைகள்

ஹிந்து மகான்களில் சூர்தாஸ் கண்பார்வை இல்லாமலிருந்தும் கிருஷ்ண தரிசனத்தைப் பெற்ற வரலாற்றை நமது அறநூல்கள் எடுத்துக் கூறுகின்றன.

செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள பூதூரில் பிறந்த அந்தகக்கவி வீரராகவ முதலியார் பிறவியிலேயே கண்ணொளியை இழந்தவர். அற்புதமான தமிழ்ப் பாடல்களை இயற்றிய இவர் இலங்கை சென்று பரராஜசேகர மன்னனைப் பாடி ஒரு யானை, பொற்பந்தம், ஒரு ஊர் ஆகியவற்றைப் பரிசிலாகப் பெற்று வந்தார். பிறர் மனதில் இருப்பதை அறிந்து அதற்குத் தக பாடல் பாடும் திறமையான கண்ட சுத்தியில் இவர் வல்லவர். இலங்கை மன்னன் நினைத்த சந்தேகத்திற்கு இவர் தக்க விடையைப் பாடலில் அளித்து அவரை பிரமிக்க வைத்தார்.

கண் பார்வையற்றோருக்காக ப்ரெய்லி எழுத்து முறையை அறிமுகப்படுத்தியவர் கண்பார்வையற்ற லூயிஸ் ப்ரெய்லி (பிறப்பு 4-1-1809 மறைவு 6-1-1852)

பிரபல ஆங்கில கவிஞரான ‘பாரடைஸ் லாஸ்டைப்’ படைத்த ஜான் மில்டன் கண் பார்வையற்றவரே. 1667-ல் இவர் படைத்த இந்த நூல் உலகப் புகழைப் பெற்றது.

1907-ம் ஆண்டு அமெரிக்காவில் ஓக்லஹாமாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு செனேட்டரான தாமஸ் கோர் கண் பார்வையை இழந்தவர் தான்.

ஆண்ட்ரியா பொசெல்லி, நார்மன் ஜெஃப்ரி, கேஸி ஹாரிஸ், ரே சார்லஸ் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட உலகப் புகழ் பெற்ற பாடகர்கள் கண்பார்வையற்றவர்களே.

மவுண்ட் எவரெஸ்டின் மீது 25-5-2001இல் ஏறிய முதல் கண்பார்வையற்ற வீரர் என்ற புகழைப் பெற்றவர் எரிக் வெய்ஹென்மேயர்

உலகப் புகழ் பெற்ற இசைக் கலைஞரான பீத்தோவனுக்கும், விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிஸனுக்கும் காது  கேட்காது.

உலகெங்கும் இது போன்ற உதாரணங்களைப் பரக்கக் காணலாம்.

கண்பார்வையற்றிருந்தாலும், காது கேட்காமலிருந்தாலும் சாதனைகள் புரிந்த பலரால் ஹெலன் உத்வேகம் ஊட்டப்பட்டார்.

அதே போல அவராலும் ஏராளமானோர் உத்வேகமூட்டப்பட்டனர்.

பொன்மொழிகள்

ஹெலன் கெல்லரது பொன்மொழிகளில் சில:

எனது வாழ்க்கை மிக சந்தோஷகரமான ஒரு வாழ்க்கை. ஏனெனில் எனக்கு அற்புதமான நண்பர்கள் இருந்தனர். செய்யவேண்டிய நல்ல விஷயங்கள் ஏராளம் இருந்தன. எனது குறைகளைப் பற்றி நான் நினைப்பதே இல்லை. அந்தக் குறைகள் என்னை ஒரு போதும் வருத்தமுறச் செய்ததும் இல்லை. ஒருவேளை ஒரு ஏக்கம் சில சமயம் இருந்திருக்கலாம், ஆனால் அது கூட மலர்க்கூட்டத்தின் இடையே புகுந்து செல்லும் தென்றலைப் போலத்தான் என்று சொல்லலாம். காற்று கடந்து செல்கிறது. மலர்கள் திருப்தியுடன் இருக்கின்றன.

உலகில் மிக பிரமாதமான அழகிய விஷயங்களைப் பார்க்கவோ தொடவோ முடியாது. அவற்றை இதயத்தால் அனுபவித்து உணர மட்டுமே முடியும்.

உங்கள் முகத்தை பிரகாசத்தின் பக்கம் திருப்புங்கள், நிழலை நீங்கள் பார்க்க முடியாது.  

சாதனைக்கு வழி தைரியம் என்ற தன்னம்பிக்கை தான்.

தன்னம்பிக்கையும் மன உறுதியும் இன்றி எந்த ஒன்றையும் செய்ய முடியாது.

ஜூன் 27 : ஹெலன் கெல்லர் தினம்

எவ்வளவு மோசமான சூழ்நிலையில் ஒருவர் இருந்தாலும் அவற்றையெல்லாம் மீறி வெற்றி காண முடியும் என்பதை மனித சரித்திரத்திற்கு உணர்த்தியவருள் முக்கியமான இடத்தைப் பெறுபவர் ஹெலன் கெல்லர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 27 ஹெலன் கெல்லர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அபாரமான சாதனை புரிந்த ஹெலன் கெல்லரை நினைவு கூரும் நாள் மட்டுமல்ல இது; துரதிர்ஷ்டவசமாக உடல் ஊனம் கொண்டோரை அவமதிக்காமல், ஒதுக்காமல் அவர்களை சமுதாயத்துடன் இணைக்க நம்மால் ஆன உதவியைச் செய்ய உறுதி பூண வேண்டிய நாளும் கூட இது தான்!

**

Leave a comment

Leave a comment