அதிரடி மன்னன் ஜாக்கிசான்! –1 (Post No.13,530)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.530

Date uploaded in London – 10 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

17-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது. 

அதிரடி மன்னன் ஜாக்கிசான்! – 1 

ச. நாகராஜன்

உலக மக்கள் அனைவரும் அறிந்து போற்றும் ‘பரந்த மனம் கொண்ட துருதுருப்பானவன்’ என்ற அர்த்தத்தைத் தரும் சான் காங் சாங்கை உங்களுக்குத் தெரியுமல்லவா?

தெரியாதா?

இப்படிச் சொன்னால் தெரியும் என்பீர்கள். உலகம் போற்றும் ஸ்டண்ட்- சூப்பர்- மெகா ஸ்டார் ஜாக்கிசானைத் தெரியுமா?

ஓ! தெரியுமே என்று சொல்லாதவர் யார்? சான் காங் சாங் என்பது அவரது இயற்பெயர்.

வறுமையில் வாடியதால், தத்துக் கொடுக்கப்பட்ட பிள்ளையான ஜாக்கிசான் உலகையே தன் திறமையால் தத்து எடுத்துக் கொண்ட வரலாறை அறிய வேண்டியது அவசியம் தானே! இதோ பார்ப்போம் ஜாக்கிசானை இங்கு!

பிறப்பும் இளமையும்

ஜாக்கிசான் 1954 ஏப்ரல் 7-ம் தேதி ஹாங்காங்கின் பழைய கிரௌன் காலனியில் உள்ள விக்டோரியா பீக்கில் பிறந்தார். வறுமையோ வறுமை! அப்படிப்பட்ட ஒரு ஏழை குடும்பம்.

சொல்லப் போனால் அவரது தாயார், பிரசவத்திற்கு உதவிய டாக்டருக்கே குழந்தை ஜாக்கியை 20 டாலருக்கு விற்க எண்ணினார்.

ஏழு வயது வரையில் பெற்றோர் அவரை வளர்த்தனர். பின்னர் அவரது சிஃபுவுக்கே (ஆசிரியர்) தத்துக் கொடுக்க முடிவு செய்தனர். ஒரு சொற்பத் தொகையைக் கொடுத்தார் சிஃபு.

ஒரு கையில் கசங்கிய ஒரு டாலர் நோட்டு. இன்னொரு கையில் பழங்கள் அடங்கிய பை.

ஆஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பெற்றோர் ஏறுவதற்குத் தயாராக இருக்க ஒரு டாலர் கொடுத்து விமான நிலையம் உள்ளே செல்ல அனுமதிச் சீட்டை வாங்கி அவர்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார் சின்னப் பையனான ஜாக்கி.

சிஃபு மிகவும் கடுமையான நடைமுறைகளைக் கொண்டவர். அவர் நடத்தி வந்த பள்ளியில் ஜாக்கிசான் பட்டபாடு பெரும் பாடு. அங்கு சிலம்பம், கராத்தே போன்ற சண்டைக் கலைகளும் குதிப்பது தாவுவது போன்ற சர்க்கஸ் வேலைகளும் தான் கற்றுத் தரப்பட்டன. காலம் மாறத் தொடங்கவே பள்ளி மாணவர்களை திரைப்படத் துறைக்கு அனுப்பினார் சிஃபு

முதல் நடிப்பு

குட்டையாகவும் குண்டாகவும் இருந்ததால் அவருக்கு நடிக்க அடித்தது ஒரு சான்ஸ்! எதாக நடிக்க வேண்டும்?’ அங்கு போய் படுத்துக் கிட, செத்த பிணமாக நடி’ என்றார் டைரக்டர். அப்படியே செய்தார் ஜாக்கி சான்.

பின்னர் ஸ்டண்ட் காட்சிகளில் அவர் ஈடுபட ஆரம்பித்தார்.

1971-ல் ‘லிட்டில் டைகர் ஃப்ரம் காண்டன்’ என்ற படத்தில் பெல் பாட்டம் ஜீன்ஸுடனும் சிறிய மீசையுடனும் முதல் முதலாக திரையில் தோன்றினார் கடுமையாக உழைத்த ஜாக்கிசானுக்கு மளமளவென்று பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.

அமெரிக்க வெற்றி

ஜாக்கி சான் ஹாலிவுட்டிற்குள் நுழைய பெரும்பாடு பட்டார். ஆனால் அவரை ஹாலிவுட் உள்ளே நுழையவே விடவில்லை. என்றாலும் கூட விடாது செய்த முயற்சியாலும் உழைப்பாலும் ‘ரஷ் ஹவர்’ படத்தின் மூலம் அமெரிக்காவை அவர் வென்றார். படம் வெளியான 17 நாட்களிலேயே 840 லட்சம் டாலர் வசூலானது. அமெரிக்கவில் முதல் வாரத்தில் மட்டும் 330 லட்சம் டாலர் வசூலானது. இந்தப் படம் வார்னர் ப்ரதர்ஸ் தயாரிப்பு. தனியான ஸ்டண்ட் பாணி, அளவான காமெடி இரண்டும் படத்திற்கு பிரம்மாண்டமான வெற்றியைத் தந்தது.

படம் வெற்றி பெற்றவுடன், “இந்த வெற்றிக்காக 15 வருட காலம் காத்திருந்தேன்” என்றார் ஜாக்கி. கடும் உழைப்பு வெற்றியைத் தந்தே தீரும் அல்லவா? அதிரடி மன்னனானார் ஜாக்கிசான்!

சில வரிகளில் ஜாக்கிசான்!

இயற்பெயர் : சான் காங் சாங் (காங் என்பது ஹாங்காங்கைக் குறிக்கிறது)

இன்னொரு பெயர் : சென்யூயென் லாங் – முதல் திரைப்படத்தில் இந்தப் பெயர். இன்னொரு படத்தில் பால் என்ற பெயருடன் நடித்தார்.

புனைப் பெயர் : ஷிங் லாங் . குழந்தையாக இருந்த போது இருந்த பெயர் ‘பௌ பௌ’

பிறக்கும் போது எடை : 12 பௌண்டுகள்

உயரம்: 5 அடி 9 அங்குலம்

ரத்த குரூப் : ஏபி

ராசி : மேஷம்

சீன முறைப்படி, ராசி : குதிரை.

சீன முறைப்படி இதற்கான பலன்கள்: பிரபலமானவர்; வேடிக்கையானவர்; வாயாடி; சுயமாக முடிவெடுப்பவர்; சாகஸம் புரிபவர்; சக்தி மிக்கவர்; நேர்மையானவர்; முன்கோபம் கொள்பவர்: உறுதியானவர்

கண்பார்வை : தெளிவானது. ஒரு கண்ணை மூடிப் பார்க்கும் பழக்கமும் உண்டு

பிறந்த இடம் : ஹாங்காங். சீனர்.

பிடிக்காத சப்ஜெக்ட் : கணக்கு

தொழிலில் அணுகுமுறை : நடிப்பதை உயிருக்கும் மேலாக நேசிப்பது.

நிறுத்தியது : புகைப்பழக்கம் (1990-ல் நிறுத்தி விட்டார்)

பொழுது போக்கு : மனதிற்குப் பிடித்ததை வாங்குவது

முதல் வெற்றி : ஸ்நேக் இன் தி ஈகிள்ஸ் ஷேடோ (1977)

முதல் டைரக்‌ஷன் : ட்ராகன் லேண்ட் (1978)

பிடித்த படம் : டைரக்‌ஷனுக்காக: மிராக்கிள் (1989)

நடிப்பிற்காக போலீஸ் ஸ்டோரி

தெரிந்த மொழிகள் : கண்டோனீஸ், ஆங்கிலம், மாண்டரின், ஜப்பானிய மொழி, கொரிய மொழி

அதிகம் பார்த்த படம் : ‘தி சவுண்ட் ஆஃப் மியூசிக்”

to be continued…………………………

**

Leave a comment

Leave a comment