அதிரடி மன்னன் ஜாக்கிசான்! – 2 (Post No.13,533)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.533

Date uploaded in London – 11 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

17-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.

அதிரடி மன்னன் ஜாக்கிசான்! – 2 

ச. நாகராஜன்

 உடம்பில் எத்தனை காயம்!

ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிப்பார். அதனால் இவர் பட்ட அடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. இதோ ஒரு சின்னப் பட்டியல்!

தலைமுடி : ‘ட்ரங்கன் மாஸ்டர் || -ல் அவர் தலைமுடி தீப்பற்றி எரிந்தது

தலை: ‘ஆர்மர் ஆஃப் காட்’ படத்தில் மண்டை ஓடு உடைபட்டது. போலீஸ் ஸ்டோரி – ||’ படத்திலும் தலையில் அடிபட்டது.

கண் புருவம் : ‘தண்டர் போல்ட்’ படத்தில் கார் வெடிக்கும் காட்சியில் இமைகள் தீப்பற்றி எரிந்தன.

வலது கண் : ‘மிராக்கிள்’ படத்தில், மூங்கில் குத்தி காயம் ஏற்பட்டது.

இடது கண்: ‘ட்ரங்கன் மாஸ்டரில்’ வெட்டுக் காயம் பட்டது.

வலது காது: ‘ஆர்மர் ஆஃப் காட்’ படத்தில் வலது காது கேட்கும் சக்தியில் பாதியை இழந்து விட்டது.

மூக்கு: ‘ட்ராகன் ஃபிஸ்டில்’ மூன்று முறை உடைந்தது

கன்னம்: ‘ரம்பிள் இன் தி ப்ராங்க்ஸ்’ படத்தில் உடைந்த கண்ணாடி பாட்டில்களால் தழும்புகள், வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன.

தாடை: பிசகி இருக்கிறது.

மேல் உதடு: ‘பர்ஸ்ட் ஸ்ட்ரைக்கில்’ வெட்டுக் காயம்.

பற்கள்: ‘ஸ்னேக் இன் தி ஈகிள்ஸ் ஷேடோ’வில் உடைந்தன.

கழுத்து: ‘ரம்பிள் இன் தி ப்ராங்க்ஸ்’  படத்தில் சுளுக்கு.

கழுத்துப்பட்டை எலும்பு: ‘சூப்பர் காப்’ படத்தில் முறிந்தது.

வலது தோள்: ‘தண்டர்போல்ட்டில்” அடி

கை எலும்பு: இரண்டும் முறிந்துள்ளன.

வலது கை: ‘பர்ஸ்ட் ஸ்ட்ரைக்கில்’ முறிவு

வலது, இடது கை: ‘போலீஸ் ஸ்டோரியில்’  தீக்காயம்

விரல்கள்: ‘ப்ராஜெக்ட் ஏ’யில் ஐந்து விரல்களும் முறிந்தன.

மார்பு: ‘ஆபரேஷன் காண்டர்’ படத்தில் எலும்புகள் முறிந்து ரத்தம் கொட்டியது.

இடுப்பு: ‘மாக்னிபிஷண்ட் பாடி கார்டில்’ பிசகியது.

இடது பாதம்: ‘சிடி ஹண்டர்’ படத்தில் முறிந்தது.

முன் பாதம்: பலமுறை முறிந்துள்ளது.

தினமும் ஜாக்கி கடும் உடல் பயிற்சிகளைச் செய்கிறார். பாத்ரூமில் கூட சில விசேஷ பயிற்சிகளைச் செய்வது வழக்கம்.

குடும்பம்

ஜாக்கிசானின் குடும்பம் பற்றி அவரே ஒரு முறை சொன்னார் இப்படி:

எனக்கு திருமணம் ஆகி விட்டதா என்று நிருபர்கள் கேட்கும் போது இல்லை என்று சொல்லி விடுவேன். ஏனெனில் இந்தக் கேள்வி முதல் தடவையாக என்னிடம் கேட்கப்பட்ட போது, எனக்கு ஒரு கேர்ள் பிரண்ட் இருப்பதாகச் சொன்னேன். அதைக் கேட்டு என் விசிறிகளில் ஒரு பெண் பாலத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டாள். இன்னொருத்தி என் அலுவலகம் முன்னே விஷத்தைக் குடித்து விட்டாள். ஆகையால் ஜாக்கிரதையாக பதில் சொல்வது என்று முடிவெடுத்து விட்டேன்.”

உண்மையைச் சொல்லுமாறு வேண்டியபோது, “எனக்கு அருமையான ஒரு மனைவி உண்டு. ஒரு மகனும் இருக்கிறான்” என்றார் அவர் ஜாக்கி சான் 1982-ல் ஜோன் லின் என்பவரை லாஸ் ஏஞ்சல்ஸில் மணந்தார்.

அதே ஆண்டில் பிறந்த அவரது மகனான ஜேஸீ சானும் ஒரு நடிகர். ஒரு இசைக் கலைஞர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் போதைமருந்து வைத்திருந்தது சம்பந்தமாக கைது செய்யப்பட்டார். 2015 பிப்ரவரியில் அவர் விடுவிக்கப்பட்டார்.

ஜாக்கிசான் சீனாவில் 2009-லிருந்து போதை மருந்தைத் தடுக்கும் தூதுவராக இயங்கி வருவது குறிப்பிடத் தகுந்தது.

அவருக்கு ஒரு மகள். பெயர் எட்டா.

ஹாங்காங் நடிகையான எலெய்ன் யீலீ அவருடன் இணைக்கப்பட்டு கிசுகிசுக்கப்பட்டார். ஜனவரி 1999-ல் மகள் எட்டா பிறந்தாள். ஆனால் ஜாக்கியை விட்டுப் பிரிந்து தன் தாயாருடனேயே வாழ ஆரம்பித்தாள் எட்டா.

அறக்கட்டளை

ஜாக்கிசான் யூனிசெஃப்-ஆல்  நல்லெண்ண தூதுவராக நியமிக்கப்பட்டார்.

1988-ல் தனது அறக்கட்டளையைத் தொடங்கிய அவர் ஏராளமான நன்கொடைகளை அளித்துக் கொண்டே வருகிறார். விலங்குகள் பாதுகாப்பிலும் அவருக்கு அக்கறை உண்டு. சீனாவில் வெள்ளம் ஏற்பட்டபோதும் 2004-ல் ஏற்பட்ட சுனாமியின் போதும் உடனடியாக அவர் நிவாரண நிதியை அளித்தார், தனது இறப்பிற்குப் பின்னர் தனது சொத்தில் பாதி நன்கொடையாக தேவைப்பட்டோருக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

படங்கள்

ஜாக்கிசான் சுமார் 200 திரைப்படங்களில் பங்கு பெற்றுள்ளார். நடிகராக, ஸ்டண்ட் மாஸ்டராக, இயக்குநராக இவர் பங்கு பெற்றுள்ள படங்கள் உலகெங்கும் வரவேற்பைப் பெற்றுள்ளன; பெற்று வருகின்றன. ஜாக்கியின் சுமார் 48 படங்கள் 500 கோடி யு.எஸ். டாலரை வசூல் செய்து தந்திருக்கிறது என்பதே மிகப் பெரிய சாதனையாகும்.

ட்ரங்கன் மாஸ்டர்  (1978) ஹாங்காங்கில் படம் வெளியானதும் வசூலான மொத்த தொகை 80 லட்சம் ஹாங்காங் டாலர்கள். இதில் சிறப்பு அம்சம் குங்பூ காமடி.

ப்ராஜக்ட் ஏ (1984) : ஜாக்கிசான் இயக்கி நடித்த படம். சாமோஹங், யூயென் பியாவ், மார்ஸ், டிக்வாய் ஆகியோரும் நடித்துள்ள இந்தப் படம் முதல் வாரத்திலேயே 140 லட்சம் ஹாங்காங் டாலர்களை சம்பாதித்துத் தந்தது.

போலீஸ் ஸ்டோரி (1985) ஜாக்கிசான் இயக்கி நடித்த படம். இதில் இவர் ஒரு டிடெக்டிவ். முப்பது அடி கம்பத்திலிருந்து இறங்கும் காட்சியில் மயிரிழையில் தப்பினார் இவர். நவீன யுகத்தின் பிரமாதமான சண்டைப்படம் என்று உலகமே பாராட்டியது இந்தப் படத்தைப் பார்த்து!

ஆர்மர் ஆஃப் காட் (1986) : ஜாக்கிசான் இயக்கி நடித்த படம். இதில் நடந்த விபத்தில் பாறை ஒன்றில் அடிபட்டு மண்டையில் பலமான அடி பட்டது; ஒரு காது கேட்கும் சக்தியில் பாதியை நிரந்தரமாக இழந்து விட்டது.

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

சூப்பர் காப், கிரைம் ஸ்டோரி, தண்டர்போல்ட், நைஸ் கை, 1911, CZ12 உள்ளிட்ட படங்கள் ரசிகர்களைக் கவர்ந்த ஏராளமான படங்களில் சில.

இவரது அரசியல் அனுபவம் தனி!

இப்போதும் சுறுசுறுப்புடனும் தன் பணிகளைக் கவனித்து வரும் ஜாக்கியை உலகமே உன்னிப்பாகக் கவனித்து வருகிறது!

அனுபவ மொழிகள்

கடும் உழைப்பு, தைரியமான ஸ்டண்ட் காட்சிகள், தனக்கென தனி ஒரு பாணி. இதுவே ஜாக்கிசான்!

ஜாக்கிசான் தன் அனுபவத்தை வைத்து அனைவருக்கும் சொல்லும் பொன்மொழி இது தான்:

ஜாக்கிசானைப் போல ஆக வேண்டும் என்று முயற்சி செய்யாதீர்கள். ஒரே ஒரு ஜாக்கிசான் தான் இருக்க முடியும். அதற்கு பதிலாக கம்ப்யூட்டரைப் படியுங்கள்.

சூழ்நிலைகளை உங்களைக் கட்டுப்படுத்த விடாதீர்கள். உங்கள் சூழ்நிலைகளை நீங்கள் மாற்றுங்கள்

***

Leave a comment

Leave a comment