
WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.536
Date uploaded in London – —12 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
24-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது
இசை அரசி பாரத ரத்னா எம்.எஸ். – 1
ச. நாகராஜன்
ராக தேவதைகள் அனைத்தும் ஒன்று கூடி இணைந்து உலக மக்களை தங்கள் பால் ஈர்த்து அருளாசி நல்க அங்கயற்கண்ணி ஆலவாய் மதுரையில் ஒரு உடலில் புகுந்து விட்டது தெரியுமா என்று சொன்னால் உடனே,’ ஓ, எம்.எஸ்.-ஐ சொல்கிறீர்களா’ என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் சொல்வதில் வியப்பில்லை.
பிறப்பும் இளமையும்
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி மதுரையில் பிறந்தார். (குஞ்சம்மா என்பது செல்லப் பெயர்) தந்தை சுப்ரமண்ய ஐயர் ஒரு வழக்கறிஞர். தாயின் மூலம் சங்கீதத்தில் ஈர்ப்பு கொண்ட எம்.எஸ். சுயம்புவாக இளமையிலிருந்தே சங்கீதத்தில் உயரப் பறக்கலானார்.
முதல் கச்சேரி
11 வயதாகும் போதே திருச்சி மலைக்கோட்டையில் எம்.எஸ்.ஸின் முதல் கச்சேரி நிகழ்ந்தது. பிரபல வித்வான்களான சௌடையா வயலின் வாசிக்க தக்ஷிணாமூர்த்தி பிள்ளை மிருதங்கம் வாசிக்க இசை அரசியின் இசை பிரவேசம் நடைபெற்றது. அடுத்து 1929-ல் சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்ற கச்சேரி அவரை ஒரு அபூர்வமான இசை மேதை என்பதை அடையாளப்படுத்தி விட்டது.19 வயதாகும் போது அவர் இசையில் உயர்நிலையில் காலடி எடுத்து வைத்து விட்டார்.
தாயார் தன் விருப்பப்படி எம்.எஸ்;ஐ மணமுடிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவரோ தேர்வு தனதாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். 1936-ல் அவர் சென்னைக்கு வந்து தி(யாகராஜன்). சதாசிவத்தை சந்திக்கவே அவர் எம்.எஸ்.ஸுக்கு உதவி செய்ததோடு அவருக்கு திரைப்பட வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தார்.
குருவின் ஆச்சரியம்
செம்மங்குடி சீனிவாசையரை குருவாகக் கொண்டு இசையைக் கற்றார் எம்.எஸ். அவரது அற்புதமான குரல் வளத்தையும் அபூர்வமான இசை ஞானத்தையும் கண்டு வியந்த செம்மங்குடி அவருக்கு நல்லாசி கூறினார். கடினமான கர்நாடக இசை ராகங்களை நுட்பமாக அவர் ரசிகர்கள் முன் படைத்தது இசை ரசிகர்களுக்கு புதிய பரிமாணங்களைக் காண்பித்தது.
ஆன்மீகத்திற்கு குருவாக காஞ்சி பரமாசார்யாரை அவர் வரித்தார். சத்யசாயிபாபாவின் அருளாசியையும் பெற்றார் அவர். ராஜாஜியின் சொல்லைப் பெரிதும் போற்றினார் அவர்.
நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவர், குறை ஒன்றுமில்லை என்ற ராஜாஜி அவர்கள் இயற்றிய கீதத்தைப் பாடியுள்ளது குறிப்பிடத் தகுந்தது.
திருமணம்
அடுத்து 1940-ல் தி. சதாசிவத்துடன் அவரது திருமணம் திருநீர்மலையில் நடைபெற்றது. வாழ்நாள் முழுவதும் கணவருடன் மனமொப்பிய மனைவியாக இருந்து உயரிய எடுத்துக்காட்டாக அவர் வாழ்ந்தது குறிப்பிடத்தகுந்தது.
சதாசிவம் விதிகளைக் கடைப்பிடிப்பதில் கண்டிப்பானவர். சங்கீத கச்சேரிகளுக்கு குறித்த நேரத்திற்கு முன்பாகவே செல்ல வேண்டும் என்ற அவரது கொள்கையால் விசிறிகள் முன்னதாகவே வந்து இடம் பிடித்துக் கொள்வார்கள். அதே போல வெளியூர் கச்சேரிகளுக்கும் குறித்த நாளுக்கு முன்பாகவே அவர் சென்று சேர்ந்து விடுவது பொதுவான வழக்கமானது. எம்.எஸ்.ஸின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து அவரை எவரெஸ்ட் சிகர உயரத்திற்கு ஏற்றினார் அவர்.
திரைப்படத்தில் இசை நட்சத்திரம்!
1938ல் இயக்குநர் கே. சுப்ரமண்யம் இயக்கி, வெளியான சேவாசதனம் படத்தில் முதன்முதலாக எம்.எஸ். நடித்தார். புகழ் பெற்றார்.
அடுத்து சகுந்தலை (1940), சாவித்திரி (1941) எல்லிஸ் ஆர். டங்கனின் இயக்கத்தில் வெளி வந்த மீரா (1945), மீராபாய் (1947) ஆகிய படங்கள் வெளியாகி அவரைப் புகழேணியில் உச்சத்திற்குக் கொண்டு சென்றன.
மீரா படத்தில் அவர் பாடிய ‘பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த’ பாடல் கல்கி (தோற்றம் 9-11-1899 மறைவு 5-12-1954) அவர்களால் எழுதப்பட்ட பாடல். கல்கி தன் வாழ்நாள் முழுவதும் எம்.எஸ்.ஸின் இசையைப் போற்றி வந்தார்.
காற்றினிலே வரும் கீதம், கிரிதர கோபாலா உள்ளிட்ட எம்.எஸ்.-இன் திரைப்படப் பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றன.
ஹிந்தியில் வெளிவந்த பக்த மீரா வட இந்தியாவையே முற்றிலுமாக எம்.எஸ். பால் ஈர்த்து விட்டது. பண்டிட் ஜவஹர்லால் நேரு தானே முன்னிருந்து அதனுடைய பிரத்யேக காட்சியை சிறப்பாக நடத்தி வைத்தார். வாயிலில் நின்று நிகழ்ச்சிக்கு வந்த மவுண்ட்பேட்டன் பிரபு, லேடி மவுண்ட்பேட்டன் உள்ளிட்டோரை தானே வரவேற்றார் அவர்.
எம்.எஸ். ஐ குறித்து அவரிடம் சொல்கையில், “நீங்கள் இசைக்கு ராணி. நானோ ஒரு சாதாரண பிரதம மந்திரி தானே” என்றார் அவர்.
சரோஜினி தேவியார் மேடையில் ஏறி உள்ளம் நெகிழ்ந்து அவரைப் புகழ்ந்து பாராட்டிப் பேசினார்.
பக்த மீரா படத்தை ஆரம்பமாகக் கொண்டு எம்.எஸ்.ஸின் தெய்வீகப் பஜனைப் பாடல்கள் நாடெங்கும் பரவி குமரி முதல் இமயம் வரை ஒலித்தது.
காந்திஜியின் பிரமிப்பு
எம்.எஸ்.ஸின் இசையை வார்தாவில் பிரார்த்தனைக் கூட்டத்தில் பாடக் கேட்ட மஹாத்மா காந்திஜி பெரிதும் பிரமித்தார். அவரது இசைமீது அபார பற்று கொண்டார். வைஷ்ணவ ஜனதோ என்ற பாடல் அவருக்கு மிகவும் பிடித்தமானது.
அவர் எம்.எஸ்..ஸிடம் “நீங்கள் பாடக் கூட வேண்டாம் பாடல் வரிகளைச் சொன்னாலே போதும்” என்று அவர் குரல் இனிமையைப் பற்றி வியந்து கூறினார். கஸ்தூரிபா நிதிக்காக இசை நிகழ்ச்சிகள் எம்.எஸ். பாட ஏற்பாடான போது ‘டியர் சுப்புலட்சுமி’ என்று தன் கடிதத்தை ஆரம்பித்த மஹாத்மா கடைசியில் மோ. க, காந்தி என்று தமிழில் கையெழுத்திட்டு அதை அனுப்பினார்.
1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி காந்திஜி பிறந்த தினத்தில் இசைப்பதற்காக எம்.எஸ்,மீராவின் பஜனைப் பாடல்களின் ஒன்றான ’ ‘ஹரி தும ஹரோ’’ என்ற பாடலை டெல்லிக்கு வந்து இசைக்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பாடலைப் பாடி பிரத்யேகமாக அதை அவர் டெல்லிக்கு அனுப்பினார். அடுத்து வந்த 1948-ல் ஜனவரி 30-ம் தேதி மகாத்மா உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அகில இந்திய வானொலி நிலையம் எம்.எஸ்.ஸின் இந்தப் பாடலை ஒலிபரப்பியது. தொடர்ந்து வந்த நாட்களில் துக்கம் மேலிட்ட அவரால் இந்தப் பாடலைப் பாட முடியவே இல்லை;
நன்கொடைகள்
200 கச்சேரிகளுக்கும் மேலாக நிகழ்த்தி பல்வேறு நல்ல காரியங்களுக்கும் பல கோடி ரூபாய்களை நிதியாகத் திரட்டி அவர் அளித்தார். 1963-ல் எடின்பரோ உற்சவத்திற்காக முதல் தடவையாக ஐரோப்பாவிற்குச் சென்ற எம்.எஸ். அதன் பின்னர் போகாத நாடே இல்லை எனலாம். உலகெங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு தான்!
வீட்டில் உள்ள பெண்மணிகளுக்கு அவரை எவ்வளவு பிடிக்கும் என்றால், அவர் அணிந்த புடவை வடிவமைப்புக்கு எம்.எஸ். ப்ளூ என்று பெயர் சூட்டி அதையே அணிய ஆரம்பித்தனர்.
24-7-24 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை.இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது
to be continued………………………..
**