
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,537
Date uploaded in London – 12 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
திருமூலர் சித்தர் இல்லை; ஆதி சங்கரரரின் சீடர்; திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 44
பலவுடன் சென்றஅப் பார்முழு தீசன்
செலவறி வாரில்லை சேயன் அணியன்
அலைவிலன் சங்கரன் ஆதிஎம் ஆதி
பலவில தாய்நிற்கும் பான்மைவல் லானே.– திருமூலர்
திருமூலர் சித்தர் இல்லை ;அதற்கும் மேல் உயர்ந்தவர் . அவர் ஆதி சங்கரரரின் சீடர் ; அதாவது அவரைப் பின்பற்றியவர்; அதாவது அத்வைதவாதி; நானே சிவன்; அஹம் பிரம்மாஸ்மி என்று பாட ல்களில் பகிரங்கமாகப் பகர்கிறார் ; நீயே கடடவுள் / தத் த்வம் அசி என்று செப்புகிறார். ஆதி சங்கரரின் வாசகங்களை அப்படியே காண முடிகிறது. திருமந்திரத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் பி. நடராஜன் , சிவாய சுப்பிரமணிய சுவாமிகள் போன்றோரும் இதை ஓரளவு ஒப்புக்கொள்கின்றனர். மேலும் மாணிக்கவாசகருக்குப் பின்னால் வந்தவர்; இதற்கான சாட்சியங்கள் அனைத்தையும் பாட்டுக்குளேயே மறைத்தும் வெளிப்படையாகவும் வைத்துள்ளார்.
திருமூலர் எல்லாவற்றையும் பொடி வைத்து– அதாவது விடுகதை வைத்து– நம்மிடம் அளிக்கிறார்; அந்தப் புதிரை நாம் விடுவிக் கவேண்டும்
தந்தைக்கு முன் மகன் பிறந்தானே
மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை.
வழுதலை வித்திட பாகல் முளைத்தது
மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்பு உண்டு– இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம் ..
ஆதிசங்கரரின் விவேக சூடாமணியில் 580 ஸ்லோகங்கள் உள்ளன. அதிலுள்ள எல்லா முக்கிய உவமைகளையும் திருமூலர் கையாளுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக 3000 பாடல்களையும் பாடி முடிக்கும் தருவாயில் அவருக்கு நன்றியும் தெரிவிக்கிறார்; அதாவது சங்கரன் ஆதிஎம் ஆதி பெயரைச் சொல்லி பிக் தேங்க் யூ Big Thank You என்கிறார்.
XXXX
சங்கரருக்கு மிகவும் பிடித்த உவமைகள்
பாம்பும் கயிறும் கயிற்றைப் பாம்பென நினைத்து பயப்படுத்தல் மாயை ILLUSION
பானையும் களி மண்ணும்
பானை உடைந்தால் அதிலுள்ள வெற்றிடம், பரந்த ஆகாசத்துடன் கலக்கிறது ;
ஒரே களி மண்ணை வைத்து வித விதமான சட்டிகள், தட்டுகள் ஜாடி களை செய்யலாம்.
ஒரே தங்கத்தை வைத்து வித விதமான நகைகளைச் செய்யலாம் .பல பானைகளிலுள்ள தண்ணீரில் பல சூரியன்கள் தெரிவது மாயை.
மற்றுமுள்ள உவமைகள்: கிரகணம் கானல் நீர் , கண்ணாடியில் உருவம், தூக்கம்- கனவு ,அறுசமயம் , சூடாக்கப்பட்ட கொல்லலன் பட்டறை இரும்பு
XXXX
மாணிக்கவாசகரின் பெயரை மாணிக்கக் கூத்தன், மாணிக்கமாலை என்றெல்லாம் பல இடங்களில் சொல்லி அவருக்கு வணக்கமும் நன்றியும் சொல்கிறார் .
ஆதி சங்கரர் யாத்த விவேக சூடாமணியின் 580 ஸ்லோகங்களையும் திருமூலரின் திருமந்திரத்திலுள்ள 3000 பாடல்களையும் படித்து 1994ம் ஆண்டில் நான் எழுதிய ஆராய்ச்சிக் குறிப்புகளை நுணுகி ஆராய்ந்தபோது இந்த உண்மை வெளிப்பட்டது .
XXX
18 சித்தர் பட்டியலில் வைக்கக்கூடாது ; ஏன்? ஏன்?
சித்தர்கள் 18 பேர் என்று சொல்லி அந்தப் பட்டியலில் திருமூலரையும் சேர்த்திருப்பது பிழையே .
ஏனைய சித்தர்கள் விக்கிரக வழிபாட்டை ஆதரிப்பதில்லை; சடங்குகளைப் போற்றுவதில்லை ‘ ஆகமங்களை ஆதரிசிப்பது இல்லை ‘ ஆனால் திருமூலர் இவை அனைத்தையும் ஆதரிக்கிறார்.
அவர்கள் மந்திர தந்திர எந்திர விஷயங்களை போற்றுவதில்லை. மூலரோ அவை பற்றி விரிவாக்கப்பாடுகிறார். இந்து மதத்தின் எல்லாக் கடவுளரையும் பாடுகிறார்.
சைவ சித்தாந்தத்தின் பசு, பதி , பாசம், மும்மலம் ஆகியன குறித்து பாடினாலும் தத் வமஸி (அது நீயேதான் ) அஹம் பிரம்மாஸ்மி (நானே கடவுள்) என்ற உபநிஷத, அத்வைத கருத்துக்களைப் போற்று கிறார் .
XXX
பிரம்மானந்தம்
ஆனந்தம் ஆனந்தம் என்பர் அறிவிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிகிலர்
ஆனந்த மாநடம் ஆரும் அறிந்தபின்
தான் அந்தம் அற்றிடம் ஆனந்த மாமே. 75
XXX
மனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி
நினைப்பின் அதனின் நிழலையுங் காணார்
வினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்
புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே.
XXXX
எண்ணா யிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனைக் கண்டறி வாரில்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கிற்
கண்ணாடி போலக் கலந்துநின் றானே.
xxxx
பூதக்கண் ணாடியில் புகுந்திலன் போதுளன்
வேதக்கண் ணாடியில் வேறே வெளிப்படு
நீதிக்கண் ணாடி நினைவார் மனத்துளன்
கீதக்கண் ணாடியில் கேட்டுநின் றேனே. 5
xxxx
உண்ணாடும் ஐவர்க்கு மண்டை யொதுங்கிய
விண்ணாட நின்ற வெளியை வினவுறில்
அண்ணாந்து பார்த்தைவர் கூடிய சந்தியிற்
கண்ணாடி காணுங் கருத்ததென் றானே.
கண்ணாடியில் அழுக்கு இருந்தால் உருவம் தெரியாது;அழுக்கு நீங்கினால் உங்களை அறியலாம்.
XXX
திரு மந்திரத்தில் ஓம் என்னும் மந்திரம் குறித்து 300 பாடல்கள் உள்ளன.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து கங்கை நதிக்கரைகளில் ஒலித்த வேதங்களின் முதல் எழுத்து ஓம்.
வேதங்களையும் ஆ கமங்களையும் புகழும் திருமூலர் பலவித மாய மந்திரத் தகடுகள் மற்றும் அவரின் அபூர்வ சக்திகள் பற்றியும், சிறு நீர் மருத்துவம் குறித்தும் பாடுகிறார் ; இவைகளை ஏனைய 17 சித்தர் பாடல்களில் காண முடியாது
XXX
ஒற்றுமை — கூடுவிட்டு கூடு பாயும் சக்தி
திருமூலரும் ஆதி சங்கரரும் வேறு உடல்களில் புகுந்து அஷ்டமா சித்திகளில் அரி ய சக்தியை உலகிற்குக் காட்டினார்கள்; இது பெரிய ஒ ற்றுமை!
திருமூலரை 17 சித்தர்களுடன் ஒப்பிட்டால் அவர்கள் கொசுக்கள்; திருமூலர் இமயமலை என்பது புரியும்.
ஆதிசங்கரர் போலவே காடு, மலை விலங்குகள் பறவைகளை ஓப்ப்பிட்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறார் .
XXX
சித்தம் போக்கு சிவம் போக்கு; ஆன்டி போக்கு அதே போக்கு !
கடவுளைக் கண்டவர்கள் உணர்ந்தவர்கள் பைத்தியம் போலும், குழந்தைகள் போலும், காற்றில் பறக்கும் எச்சில் இலை போலும் , காதல் வயப்பட்ட பெண் போலும் பித்துப் பிடித்திருப்பார்கள் என்று ஆதிசங்கரர் இறுதிப்பகுதியில் விளக்குகிறார் (ஸ்லோகங்கள் 538- 546 ) இவைகளை அப்பர் தேவாரத்திலும் , நாரத பக்தி சூத்திரத்திலும் திருமந்திரத்திலும் காண்கிறோம்
மலமில்லை மாசில்லை மானாபி மானம்
குலமில்லை கொள்ளும் குணங்களும் இல்லை
நலமில்லை நந்தியை ஞானத்தி னாலே
பலமன்னி அன்பில் பதித்துவைப் போர்க்கே.
XXXX
XXXX
அஹம் பிரம்மாஸ்மி ( அஹம் =நான் ; பிரம்ம =கடவுள்; அஸ்மி = இருக்கிறேன் /ஆனேன் )
ஒழிந்தேன் பிறவி உறவென்னும் பாசம்
கழிந்தேன் கடவுளும் நானும்ஒன்றானேன்
அழிந்தாங்கு இனிவரும் ஆக்கமும் வேண்டேன்
செழுஞ்சார் புடைய சிவனைக் கண் டேனே.
XXX
திருமந்திரத்தின் துணைத் தலைப்புகளிலேயே தத்வமஸி இருக்கிறது. எட்டாம் தந்திரம் 26-ஆவது தலைப்பு தத்வமஸி. அதன் கீழ் வரும் பாடல்களில், அப்படியே சம்ஸ்க்ருத வாக்கியத்தை – உபநிஷத்துக்கள் சொல்லும் மஹா வாக்கியத்தை — தத் த்வம் அஸி — யை பயன்படுத்துகிறார்.
சீவ துரியத்துத் தொம்பதஞ் சீவனார்
தாவு பரதுரி யத்தனில் தற்பதம்
மேவு சிவதுரி யத்தசி மெய்ப்பத
மோவி விடும் தத் துவமசி உண்மையே. 1.
xxx
ஆறா றகன்ற அணுத்தொம் பதஞ்சுத்தம்
ஈறான தற்பதம் எய்துப சாந்தத்துப்
பேறா கியசீவன் நீங்கிப்பிர சாதத்து
வீறான தொந்தத் தசிதத்வ மசியே. 2.
XXX
பானைகள் எல்லாவற்றிலும் உள்ள நீரில் சூரிய பிம்பம் தெரியலாம் ; ஆனால் அவ்வளவு கதிரவன்கள் , கடங்களில் இல்லை
கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடம் கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப் பரிசு ஆமே.
கடந்த 43 கட்டுரைகளில் நிறைய எடுத்துக் காட்டுகளைத் தந்துள்ளதால் அவைகளில் சிலவற்றைத் தொட்டுக்காட்டினேன்.
xxxx
விதிகளை வெல்லலாம், முறியடிக்கலாம் என்பதை சங்கரரும், மூலரும் ஆணித்தரமாகக் கூறுகின்றனர் .
திரு மந்திரத்தின் ஒன்பது தந்திரங்களில் உள்ள
எல்லாத் தலைப்புகளையும் ஒரே நிமிடத்தில் படித்துவிடலாம் ; அதைச் செய்தால் திருமூலர் யார் என்பது விளங்கும்; அவர் முற்றும் உணர்ந்த முனிவர். மாபெரும் ஞானி. ஏனைய 17 சித்தர்களும் போற்றுதற்குரியோர் என்றாலும் அவர்கள் திருமூலர் அடைந்த மிக உயர்ந்த நிலையை அடைந்ததற்கான சான்றுகள் சித்தர் பாடல்களில் இல்லை!
எல்லா சித்தர் பாடல்களையும் வெறுத்து ஒதுக்கிய, சைவத்திருமுறை நிபுணர்கள், திருமந்திரத்தை மட்டும் பத்தாம் திருமுறையாகச் சேர்த்தது ஏன் என்றும் சிந்திக்க !
xxxx
18 சித்தர்கள் சமாதி அடைந்த இடங்கள்
அகஸ்தியர் – திருவனந்தபுரம், கொங்கணர் – திருப்பதி, சுந்தரனார் – மதுரை, கரூவூரார் – கரூர், திருமூலர் – சிதம்பரம், தன்வந்திரி – வைதீஸ்வரன்கோவில், கோரக்கர் – பொய்யூர், குதம்பை சித்தர் – மாயவரம், இடைக்காடர் – திருவண்ணாமலை, இராமதேவர் – அழகர்மலை, கமலமுனி – திருவாரூர், சட்டமுனி – திருவரங்கம், வான்மீகர் – எட்டிக்குடி, நந்திதேவர் – காசி, பாம்பாட்டி சித்தர் – சங்கரன்கோவில், போகர் – பழனி, மச்சமுனி – திருப்பரங்குன்றம், பதஞ்சலி – இராமேஸ்வரம்.
—-SUBHAM—
திருமூலர் சித்தர் இல்லை, ஆதி சங்கரரரின் சீடர், 18 சித்தர்கள் , திருமந்திர ,ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 44