இசை அரசி பாரத ரத்னா எம்.எஸ். – 2 (Post No.13,539)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.539

Date uploaded in London – 13 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxx

 இசை அரசி பாரத ரத்னா எம்.எஸ். – 2 

ச. நாகராஜன் 

ஐ.நா. இசை நிகழ்ச்சி

1966-; அக்டோபர் மாதம் 23-ம் நாளன்று எம்.எஸ்.ஸின் இசை நிகழ்ச்சி அமெரிக்காவில் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் நிகழ்ந்தது. உற்சாக பரவசத்துடன் அதைக் கேட்ட அனைவரும் இந்தியாவின் புகழை உயர ஏற்றி விட்டார் அவர் என்றனர். பிரபல நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை “என்றும் நினவில் இருக்கும் நிகழ்ச்சி” என்று வானளாவப் புகழ்ந்து எழுதியது.  காஞ்சிப் பெரியவர் இயற்றி அருளிய ‘மைத்ரீம் பஜத’ என்ற கீதம் உலகமெங்கும் அன்பையும் சமாதானத்தையும் நிலை நிறுத்துவோம் என்ற செய்தியை உலகிற்கு நல்கியது. அதை எம்.எஸ். பொருத்தமான இந்த இடத்தில் தன் அற்புத இசை மூலம் நல்கியது அனைவரையும் நெகிழ வைத்தது.

திருப்பதி ஏழுமலையானின் அருள் விளையாடல்

காலத்தின் கோலமாக விதி வசத்தில் எம்.எஸ்.ஸுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டில் குடியேறி எப்போதும் வாழும் எளிமை வாழ்க்கையை மேற்கொண்டார். அவருக்கு நிதி உதவி அளிக்க ரசிகர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் பயமாக இருந்தது. கோடிக்கணக்கான ரூபாய்களை நன்கொடையாக கச்சேரி மூலம் திரட்டி அளித்த அவர் ஒரு போதும் உதவிகளை ஏற்றுக் கொள்ளமாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. என்ன செய்வது என்று யாருக்கும் புரியவில்லை.

திருப்பதி பாலாஜியின் அருள் விளையாடல் ஆரம்பித்தது. காஞ்சி மஹாபெரியவரும் சத்யசாயிபாபாவும் திருமலா திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரியான பி.வி.ஆர்.கே.பிரசாத் அவர்களை தக்க காரியத்தை உடனே மேற்கொள்ள வேண்டுமாறும் இதை மிகுந்த நளினமாகக் கையாள வேண்டும் என்றும் அறிவுறுத்தினர். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. நேரடியாக திருப்பதி ஏழுமலையானின் முன்னால் நின்று அருள் புரியுமாறு வேண்டினார். பின்னர் கோவிலிலிருந்து வெளியே வந்த அவருக்கு ஆச்சரியமான ஒரு அனுபவம் ஏற்பட்டது. கோவிலுக்கு வெளியே பல பக்தர்கள் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பாடல்களைக் கேட்ட அவருக்கு உடனே ஒரு யோசனை தோன்றியது. திருப்பிப் பார்த்தால் அந்த பக்த குழாத்தைக் காணவே காணோம். இது என்ன அதிசயம் என்று நினைத்த அவர் நேரடியாக சென்னை வந்து எம்.எஸ்,ஸை சந்தித்து திருப்பதி எழுமலையானின் படத்தைக் கொடுத்தார். என்ன விஷயம் என்று கேட்டார் எம்.எஸ். ஏராளாமான கீதங்களை அவர் இசைத்து விட்டாலும் அன்னமாசார்யா பாடல்கள் இதுவரை இசைத்தட்டு வடிவில் அவர் மூலம் வராதது ஒரு பெரும் குறையே என்று பிரசாத் மெதுவாகத் தெரிவித்தார். ஆனால் அதில் எனக்கு பயிற்சி இல்லையே என்றார் எம்.எஸ். “எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் பிரசாத். எம்.எஸ். சம்மதித்த மறுகணமே எல்லையிலா மகிழ்ச்சி பொங்க வெளியிலே கிளம்பிய பிரசாத், ஒரு கணம் நின்று எம்.எஸ்.ஸைப் பார்த்தார். “ஒன்றுமில்லை, இந்த இசைத்தட்டுகளை குறிப்பிட்ட விலை வைத்துத் தான் தேவஸ்தானம் பக்தர்களுக்கு விநியோகிக்கப் போகிறது. அதில் வரும் தொகையில் ராயல்டி தொகை உங்களுக்கு வரும்” என்று சொல்லியவாறே விடைபெற்று விட்டார்.

அன்னமாசார்யார் கீர்த்தனை அமோகமாக வெளிவந்தது. குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டி அதை வெளியீட்டார். ஆயிரக் கணக்கில் விற்ற இசைத்தட்டுகள் நல்ல வருமானத்தை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஈட்டிக் கொடுத்தது. எம்.எஸ். மூலமாக இன்னொரு அரிய படைப்பு என்று அனைவரும் மகிழ்ச்சியுற்றனர்.

திருப்பதி பாலாஜியுடன் அருளாசியுடன் ராயல்டி தொகை அவரை அடைந்தது என்று சொல்லவும் வேண்டுமா?

உலகின் ஆகப் பெரும் அறிஞர்களும், நிபுணர்களும், அரசின் மிக மிக உயரிய பதவியில் இருப்பவர்களும் அவரைச் சந்திப்பது வழக்கமானது.

உஸ்தாத் படே குலாம் அலிகான் அவரது இசையைக்கேட்டு மெய்மறந்தார். அவர் கூறினார் “நீங்கள் சுப்புலட்சுமி மட்டுமல்ல; சுஸ்வர லட்சுமியும் கூட!”

லதா மங்கேஷ்கர் அவரை தபஸ்வினி என்று அழைத்தார்.

விருதுகள்

வாழ்நாளில் ஏராளமான விருதுகளை அவர் பெற்றுக் கொண்டே இருந்தார். 1954-ல் பத்ம பூஷண் விருதையும், 1975-ல் பத்ம விபூஷண் விருதையும் பெற்ற அவர் இந்திய அரசின் மிக உயரிய விருதான பாரத் ரத்னாவை 1998-ல் பெற்றார். நாடே மகிழ்ந்தது.

குறிப்பிடத்தகுந்த ஒரு விருதான மக்சேசே விருதை அவர் 1974-ல் பெற்றார்.

 மறைவு

விடுதலைப் போராட்ட வீரரும், பாடகரும், சிறந்த பத்திரிகையாளருமான எம்.எஸ்ஸின் கணவர் திரு தி. சதாசிவம் 1997-ல் மறைந்தார். (தோற்றம் 4-9-1902 மறைவு 22-11-1997) அதன் பிறகு எம்.எஸ். பாடுவதையே நிறுத்தி விட்டார்.

எம்.எஸ். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி மறைந்தார். அவருக்கு  அஞ்சலி செலுத்த ஏராளமானோர் குழுமினர். குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாமிலிருந்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தனர். அரசு மரியாதையுடன் அவர் உடல் தகனம் நடைபெற்றது.

 எம்.எஸ். வாழ்கிறார்

அன்றாடம் கோவில்களிலும் ஆயிரக்கணக்கான இல்லங்களிலும் அவர் குரல் சுப்ரபாதமாகவும், ஆதி சங்கரரின் பஜகோவிந்தமாகவும், அனுமன் துதியாகவும் இன்னும் ஏராளமான பக்தி கீர்த்தனைகளாகவும் ஒலித்துக் கொண்டே இருப்பதால் அவர் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பதில் ஐயமில்லை.

 எம்.எஸ். அர்ப்பணிப்பு மொழிகள்

தன் வாழ்நாள் முழுவதும் இசையையே சுவாசித்து வந்த அவர் கூறினார் இப்படி:

“எனக்குள்ள பெரும் பயம் கச்சேரிகளை நிகழ்த்துவது தான். எனது ரசிகர்கள் அனைவருக்கும் நானே பொறுப்பு. அவர்களைப் பார்த்து நான் பயப்படவும் செய்கிறேன்.(இப்படி ஒரு அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் தன் ரசிகர்களை மதித்து வந்தார் அவர்)

“இந்திய இசை என்பது தெய்வீகத்துடன் தொடர்பைக் கொள்வதையே முடிவாகக் கொண்டது. இதில் நான் ஏதேனும் சிறிதளவு செய்திருக்கிறேன் என்றால் அது இறைவன் இந்த சிறியவளை தனது  கருவியாகக் கொள்ளத் தேர்ந்தெடுத்த கருணை தான் காரணம்.”

******

Leave a comment

Leave a comment