முஸ்லீகள் அழித்த, அதிசய ஆலம்பூர் நவபிரம்மா (9) கோவில்கள்– Part 23 (Post.13,540)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,540

Date uploaded in London – 13 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

முஸ்லீகள் அழித்த ஆலம்பூர் நவ (9)பிரம்மா கோவில்கள்; ஆந்திர மாநிலத்தின் 108 புகழ்பெற்ற கோவில்கள் – Part 23

ஆலம்பூர் எங்கே  இருக்கிறது ?

தெலுங்கானா மாநிலத்தில் கிருஷ்ணா நதியும், துங்க பத்திரை ஆறும் கூடும் இடத்தில் அமைந்துள்ளது; மாவட்டத்தின் பெயர் ஜோகுலாம்பா. ஹாலம்புரம், ஹேம லாம்புரம் என்பது ஊரின் பழைய பெயர். கர்நூல் நகரிலிருந்து சுமார் 25 கி.மீ. அங்கிருந்து பஸ்  அல்லது ஆட்டோ மூலம் செல்ல வசதிகள் உண்டு.

மேலைச் சாளுக்கிய மன்னனான விஜயாதித்யன் , கோவிலுக்குள் நதி நுழையாமல் தடுக்க  1300 ஆண்டுகளுக்கு முன்னரே பெரிய மதில் சுவர்களை எழுப்பினான்; இந்தக் கோவில்கள், சாளுக்கிய, ஹொய்சாள , கங்க வம்ச சிற்பிகளின் கைவண்ணத்தில் மிளிர்ந்தன

கிராம தேவதையின்  பெயர்  எல்லம்மா. அதுவே மருவி ஆலம்பூர் ஆனதாகவும் ஒரு கருத்து உண்டு. ஆயினும் குண்டுர் மாவட்ட குருஸாலா  கல்வெட்டு  ஹாலம்புர சுவாமி கோவில் என்றே குறிப்பிடுகிறது. 

சிறப்புகள் என்ன ?

கோவில்கள்  சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டவை; வட இந்திய பாணி கோபுரங்கள் ; சாதவாஹனர் காலம் முதல் கோல்குண்டா சுல்தான்கள் காலம் வரை   வரலாறு உடையவை. முஸ்லீம் படையெடுப்பினால் அழிந்த கோவில்களை 1980-களில் தொல்பொருட் துறையினர் சீரமைத்துள்ளனர்.

சாளுக்கிய மன்னர்கள் கட்டிய கோவில்களை ராஷ்டிரகூட மன்னர்கள் விரிவாக்கினர். இங்கு முக்கியமான தெலுங்கு, கன்னட கல்வெட்டுகள் இருப்பதால் நமக்குத் தொடர்ச்சியான வரலாற்றுச் செய்திகள் கிடைக்கின்றன.

அதிசயங்கள் என்ன ?

நவ பிரம்மா என்று பெயர் இருந்தாலும் இவை சிவன் கோவில்கள். இங்குள்ள ஜோகுலாம்பா தேவியின்  நீண்ட கூந்தலில் பல்லி , தேள்  உருவங்கள் இருக்கின்றன.

இது ஒரு சக்தித் தலமும் ஆகும்.

இரண்டாம் புலிகேசி மன்னனுடன் தொடர்புடைய கோவில்.

யோகாம்பா என்பதே ஜோகாம்பா  என்று திரிந்தது ; யோகினி என்பதும் யோக என்ற சொல்லில் பிறந்ததே ; அது ஜோகுலா ஆனது

ஒரு சடலத்தின் மீது நாக்கு வெளியே தெரிய அன்னை அமர்ந்து இருக்கிறாள். இது அன்னையின் உக்கிர ரூபம்.அவள், கிராம மக்களின் வீடுகளைக் காப்பதால் கிருஹ சண்டி என்றும் பெயர். அன்னையின் முடியில் பலல்லி , தேள் மனித மண்டை ஓடு, வெளவால் ஆகியன சித்தரிக்கப்பட்டுள்ளன. இவை வீடுகளில்  தீமையைக் கொண்டுவருவதால் தேவி அவைகளைக் கட்டுக்குள் வைக்கிறாள் .

ஆந்திர பூமியில் உள்ள 18 சக்தி தலங்களில் ஆலம்பூர் ஜோகுலாம்பா தேவியும் ஒன்று

தக்ஷ யக்ஞம்  கதை எல்லா இந்துக்களுக்கும் தெரியும். கணவனை அவமானப் படுத்தியதால் தந்தை தட்சனின் யாகத் தீயில் விழுந்து உயிர் நீத்தாள் பத்தினி பார்வதி; கோபம் கொண்ட சிவபெருமான், மனைவியின் உடலைத் தூக்கிக்கொண்டு ருத்ர தாண்டவம் ஆடி தட்சனுக்கு முடிவு கட்டினார். அப்போது தேவியின் உடற்பகுதிகள் விழுந்த இ டம் எல்லாம் இமயம் முதல் குமரி வரை சக்தி வழிபபாட்டுத் தலங்கள் ஆயின.. தேவியின் மேல் பல் விழுந்த இடம் ஜோகுலாம்பா தேவி கோவில் ஆயிற்று .

1390 ஆம் ஆண்டில் முஸ்லீம் படைகள் தேவியின் கோவிலை உடைத்து சின்னாபின்னமாக செய்தன; அதற்கு 600 ஆண்டுகளுக்குப் பின்னர் கட்டிய கோவில்தான் இப்போதுள்ளது

சிவராத்ரியியும் நவராத்திரியும் (தசரா) பெரிதாககக் கொண்டாடபப்டுகிறது .

ஸ்ரீ சைலம் சிவன் கோவிலுக்குச் செல்லுவோர் அன்னையையும் தரிசித்து அருள் பெறுகின்றனர்

12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கிருஷ்ணா நதி புஷ்கரம் லட்சக்கணக்கான பக்தர்களைக் கொண்டுவருகிறது. அருகிலேயே துங்கபத்திரையும் பவானியும் இருப்பது இதன் சிறப்பு 

14ஆம் நூற்றாண்டில் நாடு முழுதுமுள்ள கோவில்களை டில்லி சுல்தானகளின் படைகள் சிதைத்து கோவில்களிலுள்ள தங்க வைர இரத்தின நகைகளை எடுத்துக்கொண்டு, சிலைகளை உடைத்து அழி த்துவிட்டுச் சென்றதை மாநிலம் தோறும் உள்ள எல்லாக் கோவில்களின் தல வரலாற்றிலும் படிக்கலாம். முஸ்லீம்கள் கைவைக்காத கோவில்களை விரல் விட்டு எண்ணி விடலாம்..

நவ பிரம்மா கோவில்கள் பட்டியல் :

அர்க்க பிரம்மா , சுவர்க்க பிரம்மா , பால பிரம்மா ,கருட பிரம்மா,, குமார பிரம்மா , விஷ்வ பிரம்மா ,பத்ம பிரம்மா,  தாரக பிரம்மா, வீர பிரம்மா கோவில்கள்.

சுவாமியின் பெயர் – பிரம்மேஸ்வர தேவர்

பிரதான நுழை வாயிலின் இரு புறமும் காமாட்சி, ஏகாம்பரேஸ்வரி சந்நிதிகள் உள்ளன. இவை நமக்கு தமிழ் நாட்டின் காஞ்சீபுரத்தை நினைவுபடுத்தும்.

சூரிய நாராயணர் , நரசிம்மர்  ஆகிய இருவருக்கும் துணைக்கோவில்கள் உள்ளன.

பால பிரம்மா கோவிலில் தான் தினசரி பூஜைகள் நடக்கின்றன.

ஸ்வர்க்கப் பிரம்மா கோவில், கலை சிறப்புகள் மிக்கது; சாளுக்கிய வம்ச அரசர் கால சிற்பிகளின் கைவண்ணத்தைக் காணலாம்

பத்ம பிரம்மா கோவிலின் கர்ப்பக்  கிரகம்தான் அளவில் பெரியது.. அங்குள்ள லிங்கம் பளபளக்கும். பக்தர்களின் முகத்தையே அதில் காணலாம்

தாரக பிரம்மா கோவிலில் லிங்கம் இல்லை.

அர்க, வீர பிரம்மா கோவில்கள் சிதிலம் அடைந்துள்ளன.

குமார பிரம்மா கோவில்தான் மிகவும் பழைய கட்டிடம்.

கோவில்களைச் சுற்றியுள்ள கோட்டையும் மதகும் பாழடைந்ததுவிட்டன.

முக்கிய சந்நிதியான பால பிரம்மா கோவிலில்  தூண்கள் நிறைந்த மண்டபம் இருக்கிறது; கூரையில் சிவ லீலைகளும்  சுற்றியும் சப்த மாத்ரிகா சிலைகளும் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.

கோவிலில் உள்ள அழகான சிலைகள்  பின்வருமாறு –

மகிஷாசுர மார்த்தனி, சப்த மாத்ரிகா, ஹரிஹர, உக்ர நரசிம்மா,  நந்தி மீது சிவன், பார்வதி, கங்காவதாரண, நான்முகன்/ பிரம்மா, கணபதி, தட்சிணாமூர்த்தி, நடராஜர்

பிரகாரங்கள் மிகவும் பெரியவை .நட்சத்திர வடிவில் சாளரங்கள் இருப்பது ஒரு புதுமை. நல்ல வெளிச்சமும் காற்றும் வருவதற்கு இவை உதவுகின்றன. மஹாபாரத ராமாயணக் காட்சிகள் சுவர்களை அலங்கரிக்கின்றன. கார்த்திகேயனின் – முருகனின் — உருவம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது.

நவ பிரம்மா என்ற பெயர் ஏன்?

கந்த புராணத்தில்  கோவில் பற்றிய குறிப்பு உனது. பிரம்மா இங்கு தவம் செய்ததாகவும் அவருக்கு முன்னர் சிவபெருமான்  தோன்றியதால் ஒன்பது (நவ) கோவில்களை அமைத்ததாகவும்  கூறுகிறது.

நாம் செய்த அட்டூழியம்

ஸ்ரீ சைலம் நீர்மின்சார அணை கட்டியபோது கோவிலின் பகுதிகள் தண்ணீரில் மூழ்கிவிடும் அபாயம் இருந்ததால் கோவில்களை வேறு இடங்களுக்கு அகற்றி மீண்டும் கட்டினார்கள் . இப்படிச் செய்கையில் நிறைய வரலாற்றுச் சிதைவுகள் ஏற்படும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை.

மேலும் 23 கோவில்கள் !

இரண்டே மைல் தொலைவிலுள்ள பாபநாசி கிராமத்தில் மேலும் 23 கோவில்கள் இருக்கின்றன.

அருகிலுள்ள பாபநாசியின் 23 கோவில்களையும் கிருஷ்ணா- பவானி  சங்கமிக்கும்- கூடும் – இடத்திலிருக்கும்  சங்கமேஸ்வரர் கோவில்களையும் தொடர்ந்து காண்போம்

–தொடரும்

—SUBHAM—

TAGS- முஸ்லீகள் அழித்த ,ஆலம்பூர், 9 நவபிரம்மா கோவில்கள் , ஆந்திர மாநில,  108 புகழ்பெற்ற கோவில்கள் , Part 23

Leave a comment

Leave a comment