
Post No. 13.542
Date uploaded in London – —14 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
31-7-2024 மாலைமலர் இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.
பலகோடி பேரின் பசியைப் போக்கிய விஞ்ஞானி நார்மன் போர்லாக்! – 1
ச. நாகராஜன்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!
பழந்தமிழ் சங்க இலக்கியத்தில் குடபுலவியனார் என்ற புலவர் அருமையான ஒரு கருத்தை நம் முன் வைக்கிறார்.
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்பது அவரது வாக்கு (புறநானூறு 18)
உணவை அளித்தவர் உயிரை அளித்தவரே என்று அவர் போற்றுவதை கருத்தில் கொள்ளும் போது 24.5 கோடி பேர்களுக்கு உணவை அளித்த ஒரு மாமனிதரை என்னவென்று சொல்லிப் போற்றுவது? தன் வாழ்வு முழுவதையும் மக்களின் பசிப்பிணி தீர்க்கும் நல்ல பணிக்கென்று தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவர் விஞ்ஞானி நார்மன் போர்லாக் ஆவார்.
மணிமேகலை கூறும் ஆருயிர் மருந்து!
பழம் பெரும் தமிழ்க் காப்பியமான மணிமேகலையில் தீவதிலகை என்னும் தெய்வம் மணிமேகலையிடம் அள்ள அள்ள அன்னம் வரும் அமுதசுரபியைக் கொடுப்பதையும் அதை வைத்து புகாரிலும் கச்சி மாநகரிலும் மணிமேகலை அனைவரின் பசிப்பிணியைப் போக்குவதையும் பார்க்கிறோம்.
“ஆங்கு அதின்பெய்த ஆருயிர் மருந்து
வாங்குநர் கையகம் வருத்துதல் அல்லது
தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்”
என்ற காப்பிய வரிகளில் உணவே உயிர் காக்கும் மருந்து என்ற பொருளில் ஆருயிர் மருந்து என்று எடுத்துரைக்கப்படுகிறது. தொலைவு இல்லாமல்’ அதாவது குறையாமல் வழங்கும் அமுதசுரபியின் மகிமையையும் அதனால் தான் அறிகிறோம்.
பழைய காலக் கதை என்று விட்டு விடாமல் இதில் இருக்கும் அறநெறி தமிழர் தம் நெறி என்பதை நினைத்து உள்ளம் பூரிக்கும் வேளையில் இப்படி வாழ்வு முழுவதையும் பசிப்பிணி தீர்க்கும் நலப்பணிக்கென்று தன்னை அர்ப்பணித்துக் கொண்ட விஞ்ஞானியாகத் திகழ்ந்தார் நார்மன் போர்லாக்
பிறப்பும் இளமையும்
நார்மன் எர்னஸ்ட் போர்லாக் 1914-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி அமெரிக்காவில் ஐயோவாவில் சௌடே என்ற இடத்தில் ஹென்றி ஆலிவர் என்பவருக்கும் க்ளாரா போர்லாக்கிற்கும் மகனாகப் பிறந்தார். நான்கு குழந்தைகளில் இவரே முத்தவர். மற்ற மூவரும் பெண்கள்.
இவரது முன்னோர்கள் நார்வே நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்தவர்கள்.
இவர் தனது பாட்டனாரின் 106 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய பண்ணையில் வளர்ந்தார். ‘ஒற்றை ஆசிரியர் ஒரே ஒரு அறை’ என்ற ரீதியில் இருந்த பள்ளியில் அவர் படிப்பு ஆரம்பித்தது.
அவரது தாத்தா, “இப்போது நீ படிக்கப் போ. உன் மூளையை இந்த வயதில் நன்கு நீ நிரப்பி விட்டால் உன் வயிறைப் பின்னால் நன்கு நிரப்ப முடியும்” என்றார்.
தாத்தா சொல்லைத் தட்டாத பேரன் தன் மூளையை நன்கு நிரப்பி விவசாயத்தில் விஞ்ஞானி ஆனார். பல கோடி பேர்களின் பசியைப் போக்கி அவர்களின் வயிறை நிரப்ப வழியையும் கூறினார்.
மல்யுத்த வீரர்
போர்லாக் பள்ளியில் மல்யுத்தத்தை ஆர்வத்துடன் கற்றார். “அது என்னை வலுவுள்ளவனாக ஆக்கியது” என்று அவர் கூறினார்.
வனவளத்தில் 1937-ல் ஒரு பட்டத்தைப் பெற்ற போர்லாக், , மின்னஸோட்டா பல்கலைக் கழகத்தில் மரபணுவியலிலும் தாவர இயலிலும் பிஹெச்.டி பட்டத்தைப் பெற்றார். விவசாயத்தில் விளைச்சலை மேம்படுத்துவதில் அவர் மனம் ஈடுபட்டது.
மெக்ஸிகோ அழைப்பு
ஆயிரத்தி தொள்ளாயிரத்து நாற்பதுகளில் மெக்ஸிகோ நாட்டிலிருந்து இவருக்கு அவசர அழைப்பு ஒன்று வந்தது. தங்கள் நாட்டில் கோதுமை விளைச்சல் குறைவாக இருப்பதோடு விளையும் கோதுமையும் தரமானதாக இல்லை என்று மெக்ஸிகோ தெரிவித்தது. உடனே தன் கர்ப்பிணியான மனைவியையும் 14 மாத பெண் குழந்தையையும் விட்டு விட்டு மெக்ஸிகோ சென்று இவர் அதை ஆராய ஆரம்பித்தார்.
அங்குள்ள கோதுமை, நோய்களை எதிர்க்கும் தடுப்பு சக்தி உள்ள ஊட்ட சத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை அறிந்தார்.
பத்து ஆண்டுகள் கடினமாக உழைத்து விளைச்சல் நிலம் தோறும் சோதனைகளை மேற்கொண்டார். அதன் பலனாக மிக அதிக விளைச்சலைத் தரும் நோய் பீடிக்காத கோதுமைப் பயிரை உற்பத்தி செய்து விளைச்சலை அமோகமாக ஆக்கினார். தனது மெக்ஸிகோ வாழ்க்கை ஆரம்பத்தில் மிகவும் கடினமான வாழ்க்கையாக இருந்தது என்பதைப் பின்னால் குறிப்பிட்ட அவர், “அங்கு பயிற்சி பெற்ற விஞ்ஞானிகளோ சாதனங்களோ ஒன்றும் இல்லை. உள்ளூர் விவசாயிகளோ தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்” என்றார். கடுமையான எதிர்ப்புகளைச் சமாளித்து ஆயிரக்கணக்கான சோதனைகளைச் செய்து இறுதியில் வெற்றியைக் கண்டார் அவர்.
நிபுணர்களின் அபாய அறிவிப்பு பொய்யானது
ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் ஆசியாவில் ஜனத்தொகைப் பெருக்கம் மிகப் பெரிய அளவிலிருந்தது. ஜனத்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப விவசாயிகளால் உற்பத்தியைப் பெருக்க முடியவில்லை. அதனால் லட்சக்கணக்கானோர் பட்டினி கிடக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர். உடனே போர்லாக் அழைக்கப்பட்டார்.
பஞ்சம் வந்து பசி பட்டினியால் நிச்சயம் ஆயிரக்கணக்கானோர் அவதியுற நேரிடும் என்ற நிபுணர்களின் வாக்கை தனது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் அவர் பொய்யாக்கினார். 1968ஆம் ஆண்டு அமெரிக்க முகமையான இண்டர்நேஷனல் டெவலப்மெண்ட் டைரக்டர் வில்லியம் காட் என்பவர் போர்லாக்கின் பணியை “பசுமைப் புரட்சி” என்ற வார்த்தைகளால் புகழ்ந்தார்.
ஊட்டச்சத்து சாப்பிட்டு வளரும் குழந்தைகளை ஒப்பிடும் போது ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகள் கடும் நோய்களால் பீடிக்கப்பட்டு எட்டு மடங்கு அதிகமாக இறக்கும் அபாயம் உள்ளவையாக ஆகின்றன. குழந்தைகளின் மென்மையான உடல் கடும் நோய்களை எதிர்க்கும் ஆற்றலைக் கொண்டிருக்காது.
போர்லாக் புது ரக கோதுமையை அறிமுகப்படுத்தினார். போர்லாக் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கோதுமை உலகின் மொத்த ஊட்டச்சத்து கலோரிகளில் 23 சதவிகிதம் என்ற அளவு இருந்தது.
1980இல் ஆரம்பித்த பெரும் பசுமைப் புரட்சி உலகில் எல்லா நாடுகளுக்கும் பரவி லட்சக்கணக்கான குழந்தைகளை நோய் அபாயத்திலிருந்து தடுத்தது. 2000ஆம் ஆண்டில் இதன் பலன் வெளிப்படையாக அனைத்து நாடுகளிலும் தெரிய வந்தது. அமி பியர்ஸ் என்ற புள்ளியியல் நிபுணர் சுமார் இருபத்திநாலரை கோடிப் பேர் இதனால் வளம் பெற்ற ஊட்டச் சத்தைப் பெற்றதாகக் கூறுகிறார்.
ஏராளமான தனியார் நடத்திய ஆய்வுகள் போர்லாக்கினால் உயிர் காப்பாற்றப்பட்டோர் நூறு கோடிக்கும் அதிகமாகவே இருப்பர் என்று தெரிவிக்கின்றன!
எதிர்ப்புகள்
இவர் உரங்களை உபயோகிப்பது பற்றி சில விஞ்ஞானிகள் கடுமையாக விமரிசித்தபோது அவர்களை நோக்கி, “அறுபது ஆண்டுகளாக மண்ணில் காலை ஊன்றி பணி செய்து வருகிறேன். வீட்டில் அமர்ந்து இதை விமரிசிக்கிறீர்களே” என்று பதிலடி கொடுத்தார்.
கடுமையாக வாழ்நாள் முழுவதும் உழைத்தவர், “நான் பூட்ஸ் காலுடனேயே (அதாவது வயல்வெளியில் வேலை செய்தவாறே_ இறக்க விரும்புகிறேன் என்று தனது 90வது வயதிலும் கூறிக் கொண்டிருந்தார்.
***
kalidoss doss
/ August 14, 2024என்ன வகை கோதுமை ? இந்தியாவில் விளைகிறதா ? சாதாரண மக்களுக்கு கிடைக்கிறதா?
கிடைக்குமா? அயல் நாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டுமா ?
விபரம் தெரிவிக்கவும்.💐