கவலையூட்டும் செய்தியா? ‘ஜோக்’ படியுங்கள்! (Post No.13,554)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.554

Date uploaded in London – –18 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx 

 கவலையூட்டும் செய்தியா? ‘ஜோக் படியுங்கள்! 

ச. நாகராஜன்

 மனிதனுக்கு சிரிப்பு ரொம்ப முக்கியம். மனிதனால் மட்டுமே சிரிக்க முடியும், சிரித்து மகிழ்ந்தால் சிறப்புடன் நோயின்றி வாழ முடியும் என்பதை அறிவியலும் ஆதாரபூர்வமாகக் கூறுகிறது.

அமெரிக்காவை கடுமையான உள்நாட்டுப் போர்க்காலத்தில் வழி நடத்திச் சென்ற ஆபிரஹாம் லிங்கன் எப்போதும் ஒரு ஜோக் புத்தகத்தை வைத்திருப்பாராம்.

கடுமையான கவலையூட்டும் செய்தி வந்தாலோ, யாராவது அவரைக் கோபமுறச் செய்தாலோ உடனடியாக அந்தப் புத்தகத்தைப் புரட்டிப் படித்து மனம் விட்டுச் சிரிப்பாராம்.

“நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லையென்றால் நான் இறந்திருப்பேன்” என்றார் அவர்.

இதே வாசகத்தை மகாத்மா காந்தியும் கூறினார்: “நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்கு இல்லையென்றால் நான் தற்கொலை செய்து கொண்டிருப்பேன்” என்றார் அவர்.

செலவில்லாமல் மனிதன் மகிழ்ச்சி பெற சிறந்த எளிய, வழி சிரிப்பது தான்! உலகில் உள்ள உயிரினங்களில் மனித இனம் மட்டுமே சிரிப்பினால் அலுப்பையும், கவலையையும் போக்கிக் கொண்டு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் உடனடியாகப் பெற முடியும். நோயைப் போக்கி ஆரோக்கியத்தை அடைய முடியும். தொற்று வியாதியை விட வேகமாக, மிகச் சுலபமாக மகிழ்ச்சி என்னும் அரிய நிவாரணத்தை கவலையுற்றோருக்குப் பரப்ப முடியும்!

சிரிப்பு, வலியைக் குறைப்பதோடு டென்ஷனை நீக்கி நோயை விரட்டும் என்று மருத்துவர்கள் உறுதி கூறுகின்றனர்.

அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் தி நேஷனல் கான்ஸர் இன்ஸ்டிடியூட் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை புதிய உண்மையைத் தெரிவிக்கிறது.

பத்து ஆரோக்கியமான மனிதர்களிடம் ஒரு மணி நேரம் சிரிப்பு வீடியோ காஸட் போட்டுக் காண்பிக்கப்பட்டபோது அவர்கள் சிரித்துச் சிரித்து மகிழ்ந்தனர். அப்போது அவர்கள் உடலில் நோயைத் தீர்க்கும் ஒரு முக்கியமான இரசாயனப் பொருளான இன்டர்ஃபெரான் காமா அதிக அளவில் சுரந்ததாம். சுவாச சம்பந்தமான நோய்கள் மற்றும் இதர தொத்து நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடும் கெமிக்கல்களும் அதிகமானதாம். அவர்கள் சிரிக்கச் சிரிக்க, மூளை இயற்கையான வலிக்கொல்லிகளை வெளியிட்டதாம். டென்ஷனை உருவாக்கும் ஹார்மோன்கள் அவர்கள் உடலில் மிகவும் குறைந்து கொண்டே போனதாம்!

இதய நோய் நிபுணர்களால் பால்டிமோரில் உள்ள மேரிலாண்ட் மெடிக்கல் சென்டரில் நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வு நகைச்சுவை உணர்வுடன் சிரித்து மகிழ்வோருக்கு ஹார்ட் அட்டாக் வராமல் அந்தச் சிரிப்பே அவர்களைப் பாதுகாக்கிறது என்று தெரிவிக்கிறது.

இந்த மையத்தின் டைரக்டரான மைக்கேல் மில்லர், “உங்கள் இதயத்தைப் பாதுகாப்பதைப் பொறுத்தவரையில் பழையகாலம் தொட்டு வழங்கி வரும் பொன்மொழியான நகைச்சுவையே சிறந்த மருந்து என்பது உண்மையாகி விட்டது” என்கிறார்.

நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் மூளை மனநலம் நோய்த் தடுப்பியலில் பேராசிரியராக இருக்கும் ஆர்தர் ஸ்டோன் சிரிப்பைப் பற்றி விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டவர். நோயை உருவாக்கும் பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் எதிர்த்து நோயைத் தடுக்கும் இம்யூனோ க்ளோபுலின் ஏ என்ற ஆன்டிபாடிக்கும், சிரிப்பிற்கும் தொடர்பு இருப்பதாக அவர் கண்டுபிடித்துள்ளார். ஹாப்பி ஹார்மோன் என்று செல்லமாக வழங்கப்படும் சிடோகின்ஸ் என்ற ஹார்மோனும் சிரிப்பினால் உருவாக்கப்படுகிறது.

உடல் மீது படையெடுக்கும் நோய்களைத்  தரும் பாக்டீரியாக்களையும் ,வைரஸ்களையும் விசேஷமாக எதிர்த்துத் தடுக்கும் இரத்தத்தில் உள்ள வெள்ளை செல்களின் எண்ணிக்கை சிடோகின் அளவு உடலில் கூடும்போது கூடுவதை கலிஃபோர்னியாவில் உள்ள லோமா லிண்டா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியரான லீ பெர்க் கண்டுபிடித்து உறுதிப்படுத்துகிறார். இவை ட்யூமர் செல்களைக் கூட அழித்து விடும் ஆற்றல் உடையதாம்!

அன்னி ஜாஷ்வே என்ற பிரபல நகைச்சுவையாளர் தனது ‘டோண்ட் கெட் மேட், கெட் ஃபன்னி’ என்ற புத்தகத்தில் சிரிப்பால் உளவியல் மற்றும் உடலியலில் ஏற்படும் நற்பலன்களைப் பெரிய பட்டியலாகவே தருகிறார்.

1.   சுவாசக் கோளாறுகளை எதிர்க்கும் ஆன்டிபாடிகளை உமிழ்நீரில் அதிகப்படுத்துகிறது.

2.   கார்டிஸால் ஸீரத்தைக் குறைத்து டென்ஷனின் தீமைகளைக் குறைக்கும் ஆன்டிடோட்டாக அமைகிறது.

3.   அல்ஸர்களை வயிற்றில் உருவாக்கும் ஒரு என்ஸைமைப் பிரிக்கிறது.

4.   அடிவயிற்றுத் தசைகளை நிலைப்படுத்துகிறது.

5.   உடலில் உள்ள எல்லா தசைகளுக்கும் ஓய்வை அளிக்கிறது.

6.   பக்கவாதத்தையும், நரம்புக்கோளாறுகளையும் தடுக்கும் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

7.   நமது பார்வையை மாற்றுகிறது.

8.   மனச்செயல்பாட்டை பாசிடிவ் நன்மைகளைத் தருவதாக அமைக்கிறது.

9.   தொடர்ந்து இருக்கும் சுவாசக் கோளாறுகளைக் குறைக்கும் விதமாக சுத்தக் காற்றை சுவாசிப்பதை அதிகப்படுத்துகிறது.

10. இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு இதயத் துடிப்பையும் குறைக்கிறது.

இப்படி ஏராளமான நன்மைகளை நாளுக்கு நாள் வெளியாகும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிப்படுத்திக் கொண்டே வருகின்றன.

நாம் தினமும் சிரித்தே ஆக வேண்டும், ஞாபகம் இருக்கட்டும்!

***

மஞ்சுளா ரமேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்ட சினேகிதி மாத இதழில் 2007, ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரை

Leave a comment

Leave a comment