திருமூலர் காட்டும் அதிசய ஐயனார் கோவில்! ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 46 (Post No.13,555)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,555

Date uploaded in London – 18 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

திருமூலர் காட்டும் அதிசய ஐயனார் கோவில்! திருமந்திர ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 46

முதலில் சுவையான அதிசய விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன் :

இந்துக்கள், 5000 ஆண்டுகளாக வணங்கும் சாஸ்தா , ஹரிஹர புத்ரன், ஆரியன், ஐயப்பன் , தர்ம சாஸ்தா எல்லாம் ஒரே கடவுளைக் குறிக்கும்.

முதல் முதல் குறிப்பு மஹாபாரதத்தில் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் 206-ஆவது நாமமாக வருகிறது.

சிஸ்டம் SYSTEM என்ற ஆங்கிலச் சொல் ‘சாஸ்தா’-விலிருந்து வந்தது.

ஆரிய என்பது பிராக்ருதத்தில் (சம்ஸ்க்ருதத்தின் பேச்சு வடிவம் ) அஜ்ஜ ஆகி, தமிழில் ஐயர் என்று மாறியது; இது மொழி இயலாளர் (LINGUISTS) கண்ட உண்மை. ஜ என்ற எழுத்து உலகில் சம்ஸ்க்ருத மொழியைத் தவிர வேறு எந்த ஆதிகால மொழியிலும் கிடையாது. அதை பிற மொழியாளர்கள்  என்றே உச்சரித்தனர். இதனால் ஜ -வும்  ய- வும்  இடம் மாறின  அதனால்தான் யாழ்ப்பாணம், ஜாப்னா ஆகும் . ஜாவா, யவத் வீபம் ஆகிறது. யஹோவா , ஜெஹோவா ஆகிறது.

கேரளத்தில் 4 புகழ்பெற்ற அய்யப்பன் கோவில்கள் உண்டு – குளத்துப்புழை , ஆரியங்காவு , அச்சன்கோவில், சபரிமலை. இதில் ‘ஆரியன்’ காவு என்பது ‘ஐய’ப்பன் கோவில் உள்ள இடம் ; ஆரியன்= அய்யப்பன்

சிலர்  இதை  திராவிட தெய்வம் என்று உளறிக்கொட்டி இருக்கின்றனர்; வேலிக்கு ஓணான் சாட்சி என்ற பழமொழிக்கிணங்க வெளிநாட்டிலிருந்து மதத்ததை பரப்ப வந்தவர்கள் பெயர்களை வேறு ஆதாரமாகக் காட்டுகின்றனர் . அவர்களுக்கு விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் ஆதி சங்கரர் கொடுத்த வியாக்கியானமும் தெரியாது, இந்தப் பெயர் முதல் முதலில் மிகப்பழைய சஹஸ்ரநாமத்தில் வருவதும் தெரியாது .

சாஸ்தா, சங்க இலக்கியச் சாத்தன் எல்லாம் பிராமண குடும்பங்களின் குல தெய்வம் என்பதும் பலருக்கும் தெரியாது.

சிலப்பதிகாரத்தில் கனாத் திறம் உரைத்த காதையில் அற்புதங்கள் செய்த சாத்தன், சாதவாகனன் கோவில் பற்றி வருகிறது .

பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில் ‘’திரு நகரம் கண்ட படலத்தில்’ மதுரை நகரை நிர்மாணித்த பாண்டிய மன்னன் கீழ்த் திசையில் ஐயனாரையும் தென் திசையில் சப்த மாதரையும் மேற்றிசையில் விஷ்ணுவையும் வடதிசையில் துர்க்கையையும் காவலாக நிறுத்தி நடுவில் சிவன் கோவிலை எழுப்பி, காசியிலிருந்து ஆதி சைவர்களை பூஜைக்கு அழைத்துவந்தான் என்று எழுதி இருக்கிறார். இதை இன்றும் மதுரையில் காணலாம்.

xxxx

திடீரென்று ஐயனார் கோவிலை மட்டும் திருமூலர் குறிப்பிட்டது நம்மைத் திகைக்க வைக்கிறது . ஆனால் அப்படிக்  கோவில் இருந்ததற்கான சான்று சிலப்பதிகாரம் முதலே நமக்குத் தமிழில் கிடைக்கிறது.

xxxx

இதோ திருமூலர் கூற்று!

975. ஆங்கு வடமேற்கில் ஐயனார் கோட்டத்திற்

பாங்கு படவே பலாசப் பலகையிற்

காங்கரு மேட்டிற் கடுப்பூசி விந்துவிட்டு

ஓங்காரம் வைத்திடும் உச்சா டனத்துக்கே.

(ப. இ.) வடமேற்குப் புலமாகிய வாயு மூலையில் அரி அரர் மகனாகிய ஐயனார் கோவிலில் அழகுறப் புரசுப் பலகையில் வெப்பமுள்ள கரிய தகட்டில் நஞ்சு பூசி விந்துவாகிய வட்டம் அமைத்து அதன்மேல் ஓங்காரம் அமைத்துப் பூசித்தலை உச்சாடனம் ஆகிய ஏவுதல் என்ப.

(அ. சி.) கோட்டம் – கோவில். காங்கு அருமேட்டில் – வெப்பமுள்ள கரிய தகட்டில். கங்கு – கந்துள்; நெருப்போடு கூடிய கரிக்கட்டி. கடு – கடுகு – கடு + கு – சிறுத்தவிடம்.

xxxx

ஆதி சங்கரர் என்ன சொல்கிறார் ?

பெரிய புராணம், தேவாரம் முதலியவற்றில் கிபி.-600 முதல் அய்யனார் பற்றிய குறிப்புகள் கிடைத்தாலும் காலத்தினால் முந்திய சங்கரர்  என்ன சொல்கிறார் என்பது முக்கியமாகிறது. அபி நவ சங்கரர் என்பவர் கி.பி 732-ல் வாழ்ந்ததாகவும் ஆதிசங்கரர் 2000  ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகவும் ஒரு கருத்து உண்டு. ஆதி சங்கரரின் காலம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் (1894-1994) நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.

விஷ்ணு சஹஸ்ர நாமத்தில் எல்லா இந்துக்கடவுளரின் பெயர்களும் வருகின்றன. அவற்றை விஷ்ணுவின் பெயர்களாக மஹாபாரத பீஷ்மர் நமக்கு அளிக்கிறார்.

அதில், ஆதி சங்கரர் சாஸ்தா என்ற சொல்லுக்கு தரும் விளக்கம்:

கட்டளையிட்டு நடத்துகிறவர் SYSTEMATIC ;

ஸ்ருதி ஸ்ம்ருத்யாதிபிஹி சர்வேஷா மனுஷிஷ்டிம் கரோதீதி சாஸ்தா– என்கிறார்.

xxxx

சிலப்பதிகாரத்தை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதரும் கிராமங்களுக்கு வெளியே அமைக்கப்பட்ட சாஸ்தா, சாத்தன் எல்லாம் ஓன்றே என்று குறிப்பிடுகிறார். 1930-ம் ஆண்டில் வெளியிட்ட அசோகனின் மதங்கள் என்ற கட்டுரையையும் குறிப்பிடுகிறார். அதில் என்ன உள்ளது என்பதையும் காண வேண்டும் .

xxxx

ஐயனார் யார் ?

அரிகர புத்திரன் ,சாத்தன், ஆரியன், அறத்தைக் காப்போன், கருங்கடல் வண்ணன், கோழிக் கொடியோன் , சாத வாகனன், செண்டாயுதன், புட்கலை மணாளன் பூரணை கேள்வன், யோகி, வெள்ளையானை ஊர்தி , வாகனம் – காரிக் குதிரை என்று 1935ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதி கூறுகிறது

ஐயன் பாழி – சாஸ்தா கோவில்

xxxx

சாத்தன் யார் ?

அருகன், ஐயன் , தண்டிப்பான், புத்தன், வயிரவன், சாஸ்தா, சீத்தலைச் சாத்தன், வணிகக் கூட்டத் தலைவன், ஐயனார், அரிகர புத்திரன் என்று 1935ஆம் ஆண்டு ஆனந்த விகடன் அகராதி கூறுகிறது

xxxx

பழைய தமிழ்க் கலைக் களஞ்சியமான ஆ.சிங்காரவேலு முதலியாரின்  அபிதான சிந்தாமணியிலும் ஏறத்தாழ தமிழ் அகராதியில் காணும் விஷயங்களே உள.

xxx

ஐயப்பன் மனைவிமார் பெயர்கள் சம்ஸ்க்ருதத்தில் இருப்பதையும் கவனிக்கவும். மேலும் குதிரை என்பது சங்க இலக்கியத்தில் இருந்தாலும் அவை வடக்கிலிருந்தும் கப்பல் மூலம் வெளிநாட்டிலிருந்தும் வந்ததையும்  கருத்திற் கொள்ள வேண்டும் ; ஐயனார் சிலை இருக்கும் இடமெல்லாம் பெரிய குதிரைகள் நிற்கும்.

இலங்கையிலும் அவரைக் காவல் தெய்வமாக வயற்புறத்தில் வைத்திருக்கிறார்கள் .

இந்து மதத்தைப் பின்பற்றாத வெளிநாட்டினர், இந்து மதத்தைக் குறைகூறியும் , கிறிஸ்தவ மதத்தை உயர்த்தியும் எழுதிய எல்லா புஸ்தகங்களிலும் இரண்டு முருகன்கள் இரண்டு சிவன்கள் , இரண்டு சாஸ்தாக்களை உண்டாக்கி இந்து மதத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். வட நாட்டு கந்தன், கார்த்திகேயன் தமிழ் முருகன் அல்ல; சிவபெருமானும் ரிக்வேத  ருத்ரனும் வேறு வேறு ; சாஸ் தாவும் ஐயனாரும் வேறு வேறு என்று கதை கட்டினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் அந்த வாதங்களைத் தவிடு பொடியாக்கினார்கள் .

ஐயனார் வேறு–சாஸ்தா வேறு  என்ற பொய்மை வாதத்தையும் நான் மேற்கூறிய காரணங்கள் தவிடு பொடியாக்கும் . பெரும்பாலான எழுத்தர்களுக்கு சம்ஸ்க்ருத அறிவும், மொழியியல் அறிவும் இல்லாததை நாம் எல்லோரும் அறிவோம்.

ஐயனார் பற்றி சங்க இலாக்கியத்திலோ திருக்குறளிலோ தொல்காப்பியத்திலோ குறிப்புகள் இல்லை என்பதால் இவர் தமிழ்த் தெய்வம் இல்லை என்பது தெளிவாகிறது ; அதே பழைய நூல்களில் வேத கால தெய்வங்களைப்  பற்றிய குறிப்புகளையும் இதிஹாச புராண புருஷர்களின் குறிப்புகளையும் மட்டுமே காண  முடிகிறது.

சிவபெருமானுக்கும் மோகினி (பெண்) வடிவில் இருந்த மகாவிஷ்ணுக்கும் பிறந்தவர் ஐயப்பன் என்று பிற்காலக்கதைகள் சொல்கின்றன ; ஆகையால் இதை வடட்டாரக் கதை என்றே சொல்ல முடியும் ; இது போல மஹாராஷ்ட்ராவிலும் கண்டோபா முதலிய வட்டார தெய்வங்கள் உண்டு. சொல்லப்போனால் ஒவ்வொரு மாநிலத்திலும் உண்டு .

ஆகையால் இவரை திராவிட தெய்வம் என்று அக்மார்க் முத்திரை குத்தியவர்களுக்கு இலக்கியச் சான்றுகளே இல்லை. சங்க இலக்கிய புலவர்களில், சாத்தன்  பெயர்கொண்ட புலவர்கள் மட்டுமே உண்டு ; அந்தச் சொல்லை தெய்வங்களுடன் தொடர்பு படுத்தும் எந்தக் கதையும் இல்லை; அப்படிச் சம்பந்தப்படுத்த விரும்பினால் மஹாபாரத/ விஷ்ணு ஸஹஸ்ரநாம சாஸ்தாவுடன்தான் தொடர்பு ப டுத்தலாம் . அதில் எல்லா இந்துக்கடவுளரின் பெயர்களும்  விஷ்ணு ரூபமாகக் காட்டப்படுகிறது .

திராவிட தெய்வம் என்று வாதிப்போர் ஆயிரக்கணக்கான கிராமங்களில் உள்ள கதைகளை– வாய்மொழிக் கதைகளை — ஓட்டுப்போட்டு புஸ்தககங்கள் எழுதியுள்ளனர்; அதில் ஒரு ஊர்க்கத்தை இன்னொரு கதையுடன் பொருந்தா . அதாவது அவியல்.

அப்படியானால் உண்மை என்ன?

இந்துக்கள் நான்கு திசைகளில்  நான்கு காவல் தெய்வங்களை நிறுவினார்கள்; அவர்களில் ஒன்று அய்யனார் என்று திருவிளையாடல் புராணம் கூறும்;  2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்த்திரப் பொருளாதார புஸ்தகத்திலும் இப்படி தெய்வங்களை நிறுவும் வழக்கத்தைக் காணலாம். அதில் சாஸ்தா /அய்யனார் பெயர் இல்லை ; ஆனால் அவர் எழுதியது பொருளாதார புஸ்தகம் ; புராணம் அல்ல. 

மிகப்பெரிய மொழியியல் வல்லுனரும் , சமயப் பெரியாருமான  காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு  முற்றுப்புள்ளி வைக்கிறார் . கிராமங்களில் வணங்கப்படும் எல்லா பெண்தெய்வங்களும் ஸம்ஸ்க்ருத்ப் பெயர்களில் உள்ள வேத கால தெய்வங்கள் என்பதையும் அவர் காட்டியுள்ளார்.

xxx

காஞ்சி சங்கராசார்யார் (1894-1994) சொற்பொழிவு

“ஈசுவரனின் அழகு மனத்தை அடங்கச் செய்கிற சாந்த ஸ்வபாவம் வாய்ந்தது. ஸ்ரீ மந் நாராயணனின் சௌந்தரியமோ மனத்தை மோகிக்கச் செய்து ஆனந்தக் கூத்தாடச் செய்வது. விஷ்ணுவின் திவ்விய ரூபத்திலிருந்து வைத்த கண்ணை வாங்க முடியாமல் எவரும் சொக்கிக் கிடக்க வேண்டியதாகிறது. ஸ்ரீ ராமனாகவும், கிருஷ்ண பரமாத்மாவாகவும் அவதரித்த போதும், இந்த ஜகன்மோகன சௌந்தரியம் அவரைவிட்டு நீங்காமலே இருந்திருக்கிறது. இப்படிப்பட்டவர் மோஹினி என்றே ஓர் உருவம் கொள்ளும்போது எத்தனை அழகாக இருந்து, எல்லோர் உள்ளங்களையும் மோஹிக்க வைத்துக் கொள்ளை கொண்டிருப்பார்? பரம ஞானியாக, தபோமயமாக ஜ்வலித்துக் கொண்டிருந்த பரமேசுவரனின் மனத்தைக்கூட மகாவிஷ்ணுவின் மோகினி ரூபம் மயக்கிவிட்டது என்று புராணங்கள் சொல்கின்றன. மோகினியாக வந்த நாராயணனின் காருண்ய லாவண்யமும் பரமேசுவரனின் சாந்த ஞானமும் ஒன்று சேர்ந்தவுடன் ஒரு மகா தேஜஸ் – ஒரு பெரும் ஜோதி – பிறந்தது. இந்தத் தேஜஸே ஐயப்பனாக உருக் கொண்டது.

ஹரிஹர புத்திரன் என்றும், சாஸ்தா என்றும், ஐயனார் என்றும் சொல்வது இந்த ஐயப்பனைத்தான்.

ஐயன் என்பது ‘ஆர்ய’ என்பதின் திரிபு. ‘ஆர்ய’ என்றால் ‘மதிப்புக்குரிய’ என்று பொருள். சாக்ஷாத் பரமேசுவரனுக்கும் நாராயணமூர்த்திக்கும் ஜனித்த குழந்தையைவிட மதிப்புக்குகந்தவர் எவருண்டு? ஞானமும் தபசும் கலந்த சிவனின் பிரம்ம அம்சம், கிருபையும் சௌந்தர்யமும் சக்தியும் கலந்த விஷ்ணுவின் க்ஷத்ர அம்சம் இரண்டுமே நாம் உய்வு பெற அத்தியாவசியமாகும். ஹரிஹர புத்ரனாகிய ஐயப்பனிடம் இவையெல்லாமே ஒன்று சேர்ந்திருப்பதாகக் கொள்ளலாம். இதனால்தான் போலிக்கிறது, சிவபெருமானின் மற்ற இருபாலர்களைப் பிள்ளையார் என்றும் குமரன் என்றும் குழந்தைகளைக் குறிக்கிற சொல்லால் குறிப்பிட்டாலும், அவரது மூன்றாவது புத்திரான சாஸ்தாவை மட்டும் மதிப்புக்குரியவராக – ஆர்யராக – ஐயனாராகக் குறிப்பிடுகிறோம். ‘ஆர்ய’ என்பதுதான் ‘அய்யர்’ என்றாயிற்று. முதலி – முதலியார், செட்டி – செட்டியார் மாதிரி அய்யனுக்கு மரியாதைப் பதம் அய்யனார். இதிலே ஒரு வேடிக்கை. பொதுவாகத் தமிழ் நாட்டில் அய்யர் (குருக்கள்) பூஜிக்காத கிராமக் கோயில்களில் உள்ள ஸ்வாமிதான் அய்யராக – அய்யனாராக இருக்கிறார்! கொஞ்சம்கூட இப்போது பேசப்படுகிற இன வித்யாசங்கள் முன்னே இல்லை என்பதற்கு இதுவே ஓர் அடையாளம்.

சபரிமலையில் ஓரிடத்தை ‘ஆரியங்காவு’ என்று ஆரியனுடைய காடாகவே சொல்கிறார்கள். தேசத்தில் எத்தனையோ ஸ்வாமிகளுக்குக் கோயில் இருந்தாலும் சாஸ்தாவைத் தவிர எவருக்குமே அய்யர், ஆரியன் என்ற பெயர்கள் இல்லை.

சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன். தமிழ் நாட்டில் இருக்கப்பட்ட அநேக சாத்தனூர்களில் முக்கியமான தெய்வம் ஐயப்பன்தான்.

தமிழ் நாட்டில் கிராமத்துக்குக் கிராமம் ஐயனார் கோயில் உண்டு. கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்பன் வழிபாடு வெகுவாகப் பரவி வளர்ந்திருக்கிறது.

அவர் நம்மைக் காவல் புரிகிற தெய்வம். காற்று கருப்பு முதலான பலவித தீயசக்திகளிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறவர். இதெல்லாவற்றுக்கும் மேலாக நாராயணனிடமிருந்து நம் வாழ்க்கையையே பரிபாலிக்கும் சக்தியைப் பெற்றிருக்கிறார். ஈசுவரனிடமிருந்து நமக்கு விமோசனம் தருகிற ஞானத்தை அளிக்கும் சக்தியும் பெற்றிருக்கிறார்.

சுதந்திர இந்தியாவில் ஐயப்பன் ரொம்ப ரொம்பக் கியாதி பெற்று வருகிறார். சுதந்திர சாஸனம் (Constitution) அளித்திருக்கிற பேச்சுத் சுதந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு பக்கத்தில் நாஸ்திகப் பிரசாரம் தடபுடலாக நடக்கிறபோதே, மறுபக்கத்தில் அது எடுபடாத அளவுக்கு ஐயப்ப பக்தி நாளுக்கு நாள் அமோகமாக விருத்தியாக்கிக் கொண்டிருக்கிறது.

கேரளத்தில் எட்டாக் கையில் சபரிமலையில் இருக்கிற ஐயப்பன் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் நாடு, மற்ற ராஜ்யங்கள் மீதெல்லாம் கூடத் தம் ராஜதானியை விஸ்தரித்துக்கொண்டே வருகிறார்!

இது மிகவும் உற்சாகமளிக்கிற விஷயம். நாஸ்திகப் பிரச்சார விஷயத்தைத் தடுக்கிற அருமருந்தாக வந்திருக்கிறது ஐயப்ப பக்தி.

அவரது கிருபையை நாடி, அதற்குப் பாத்திரர்களாக வாழ்ந்தோமானால் நாமும், நாடும், உலகமும் சிறப்புற்று விளங்குவது நிச்சயம்.”

xxxx

என்னுடைய  பழைய கட்டுரைகள்

ஐயனார் பற்றிய 5 பழமொழிகளைக் கண்டு பிடியுங்கள் (Post No. 8373)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 8373

Date uploaded in London – 20 July 2020  

xxxx

ஐயனார் கோவில்கள் -இலங்கைத் தீவின் 108 புகழ் பெற்ற இந்து ஆலயங்கள்- Part 45

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,662

Date uploaded in London – –  –  1 November , 2023                 

xxxx

–subham—

திருமூலர், அதிசய ,ஐயனார் கோவில், திருமந்திர, ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 46, சாஸ்தா, ஆரியன், அஜ்ஜ, ஐயர் , ஆரியங்காவு ,சாத்தன், திருவிளையாடல் புராணம், காஞ்சி சுவாமிகள்

Leave a comment

Leave a comment