ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 1 (Post No.13,558)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,558

Date uploaded in London – 18 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx   

ஹனுமான் சாலீஸா யார் எழுதியது?

துளசிதாஸ் கோஸ்வாமி என்ற மஹான் எழுதியது .

எந்த மொழியில் எழுதினார்?

ஹிந்தி மொழியின் கிளை மொழியான அவதி மொழியில் எழுதினார்

துளசிதாஸ் யார் ?

காசி நகரில் வாழ்ந்து உலகப்புகழ்பெற்ற ராம சரித மானச என்ற ஹிந்தி ராமாயண நூலை இயற்றிய பிராமணர் .

அவர் எப்போது எழுதினார் ?

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதினார்.

ஹனுமான் சாலீஸா என்றால் என்ன?

ஹனுமான் என்றால் அனுமன், ஆஞ்சனேயன் , மாருதி, வாயு குமாரன், அஞ்சனை மைந்தன் என்பது எல்லோருக்கும் தெரியும்

சாலீஸா என்றால் தமிழிழ்  நாற்பது; தமிழிலும் நாம் கார் நாற்பது, களவழி நாற்பது என்று நூல்களுக்குப் பெயரிட்டது போல அவர்களும் இப்படிப் பெயர் சூட்டினார்கள். இது துளசி ராமாயணத்தில் இல்லை; தனியான துதி  வழக்கம்போல பல ஸ்ருதி முதலியவை சேர்ந்து நாற்பதுக்கும் மேலாக ஸ்லோகங்கள் இருக்கின்றன.

xxxx

எனக்குத் தெரிந்த ஹனுமான் சாலீஸா

எனக்கு 65 வயது ஆன வரை ஹனுமான் சாலீஸா பற்றி எதுவுமே தெரியாது.. லண்டனிலுள்ள சிந்தி மந்திரில் நான் அடிக்கடி கூட்டங்களை ஏற்பாடு செய்வேன்; பெரிய ஹால்; பெரிய கிச்சன்/சமையலறை ; அவர்கள்  நடத்தும் கூட்டத்துக்கும் அழைப்பிதழ் வரும்; ஒரு முறை ராம் பாபாவின் 108 முறை ஹனுமான் சாலீஸா சொல்லும் நிகழ்சசியை ஏற்பாடு செய்திருந்தார்கள் . நானும் சென்றிருந்தேன்; ராம் பாபா செல்லுமிடமெல்லாம் இது நடக்கும். பின்னர் என் வீட்டிற்கு அருகிலுள்ள  NORTHWICK PARK HOSPITAL நார்த்விக் பார்க் ஹாஸ்ப்பிட்டலில் புதன் கிழமை தோறும் ஹிந்து பிரார்த்தனை நடத்த அனுமதி கிடைத்தது. கடந்த சுமார் 7 ஆண்டுகளாக கிறிஸ்தவ சாப்பலில் CHAPEL  பிரம்மாண்ட  சிலுவைச் சினத்தின் கீழ் இந்துக் கடவுளர் படங்களை வைத்து பிரார்த்தனை செய்வோம். 11 முறை காயத்ரீ, 11 முறை திரயம்பக மந்திரம் (ம்ருத்யுஞ் ஜய மந்திரம்) ஹனுமான் சாலீஸா , ஒன்றிரண்டு நாமாவளிகள், பகவத் கீதை சொல்லி முடிப்போம். விழா நாட்களில் பிராத்தனையை 2 மணி நேரம் நீடிப்போம்.

அப்போது வாரம்தோறும் ஹனுமான் சாலீஸாவை புஸ்தகம் வைத்துக்கொண்டு  படித்த ஒரே ஆள் நான்தான். ஏனைய வடக்கத்தி ஆட்களுக்கு அது அத்துபடி . பின்னர் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை எல்லாம் கண்டேன். சின்மயா  மிஷனின் தலைவர் சுவாமி தேஜோ மயானந்தாலண்ட னுக்கு வந்தபொழுது ஹனுமான் சாலீஸா பற்றி பல நாட்களுக்குச் சொற்பொழிவு ஆற்றினார்; அது புஸ்தகமாகவும் வந்துவிட்டது. ஆனால் தமிழில் மொழிபெயர்பைத் தவிர விளக்கவுரை, வியாக்கியானம் எதுவும் என் கண்ணில் தென்படவில்லை. ஆகையால் நான் அனுபவித்த ஹனுமான் சாலீஸா வை மற்றவர்களும் அனுபவிக்கட்டுமே என்ற முயற்சியில் இறங்குகிறேன் . சொல்லின் செல்வன் அனுமன் துணை புரிவானாகுக.

சிறு வயதில் கற்ற சில துதிகள்

லண்டனுக்கு 1987ஆம் ஆண்டு குடியேறியதற்கு முன்னால் மதுரையில் சுமார் 35 ஆண்டுகள் வசித்தேன் ; அங்கு இரண்டு குடும்பங்கள் மார்கழி மதம் தோறும் எல்லோருக்கும் திருப்பாவை , திருவெம்பாவைப் பாடல்களை மாணவிகளுக்குக் கற்பித்து வந்தன ; அவர்களில் திருமதி ராஜம்மாள் சுந்தர்ராஜன் என்பவர் சுமார் 1000 பள்ளி, கல்லூரி மாணவிகளை திருப்பாவையில் ஈடுபடுத்தினார். நல்ல நடிப்புத் திறனும் குரல் வளமும் கண்ட மாணவிகளை வைத்து ஆழ்வார், கிருஷ்ணன் நாடகங்களை ஊர் தோறும் சென்று நடத்தினார் . தற்காலத்தில் நடக்கும் தமிழ்ப் பத்திரிகைகளில் தெய் வீகச் செய்திகளை  வெளியிடும் வழக்கத்தை என் தந்தையான மதுரை தினமணி பொறுப்பாசிரியர் வெ . சந்தானம்தான் துவக்கிவைத்தார் . அந்த வகையில் எந்த கடவுள் நடவடிக்கை நடந்தாலும் அது மதுரை தினமணியில் மட்டுமே வெளிவரும்.

இதனால் அவர் செல்லும் விசேஷ பஸ்களில் ஈங்கள் குடும்பத்திற்கு சிறப்பிடம் உண்டு. அந்த பஸ்களில் நானும் பழனி, தாராபுரம், உடுமலைப்பேட்டை வரை சென்றது இன்றும் நினைவில் நிற்கிறது ; இவ்வளவு கதை எதற்கு என்று கேட்கிறீர்களா ? பஸ் புறப்படும்போது எல்லோரும் கோஷ்டியாகப் பாடுவது ஆஞ்சாசனேயர் துதிதான் . அதுவும் சிறு வயதிலேயே மனப்பாடம் ஆகிவிட்டது

இதோ எல்லோரும் அறிந்த அந்த துதி

ஆஞ்சநேயமதி பாடலானனம் காஞ்சநாத்ரி கமனீய விக்ரஹம்|

பாரிஜாத தருமூலவாசினம் பாவயாமி பவமான நந்தனம்||

யத்ரயத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்சலிம்|

பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்,மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்||

இதற்குப்பின்னர், ஆயக்குடி சுவாமிஜி கிருஷ்ணா சொல்லிக்கொடுத்த ஸ்லோகம் :

மனோஜவம் மாருத துல்ய வேகம்

ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்|

வாதாத் மஜம் வானரயூதோ  முக்யம்

ஶ்ரீராமதூதம் சிரஸா நமாமி||

(பாடல்களின் பொருளை பின்னால் தருகிறேன்)

xxxx

அதே போல ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் பட்டி மன்றங்களை நட்த்தி பட்டி தொட்டி தோறும் பட்டை மன்றங்களையும் பரப்பினார். என் தந்தையான மதுரை தினமணி பொறுப்பாசிரியர் வெ . சந்தானம். எல்லாம் பாரதி அல்லது கம்பனை ஒட்டிய தெய்வீக தலைப்புகளே . மதுரை தினமணி,  கொள்ளிடம் கரை வரையும், கோவை நீலகிரி வரையும், தெற்கே குமரி வரையிலும் சென்றதால் தினமணி ‘வேன்’ VANகளில் ஒட்டப்பட்ட பிரம்மாண்டமான போஸ்டர்கள் அனைவர் கவனத்தையும் ஈர்த்தன. மேலும் பட்டி மன்ற செய்திகளும் முழு அளவில் வெளியாகின; இதன் மூலம் கம்பன் பெருமையும் பாரதி பெருமையும் தமிழ் நாடெங்கிலும் பரவின

xxxx

கம்பராமாயணத்தில் அனுமன்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

இப்பாடலில் கம்பர் அனுமனையும் பஞ்சபூதங்களையும் சம்பந்தப்படுத்தி பாடுகிறார்.

கம்பர் படவில்லை என்ற ஒரு கருத்தும் உண்டு. அதனால் பாடலின் மகிமை ஒரு சிறிதும் குறையாது! இது  அற்புதமான பாடல்.

அஞ்சிலே  ஒன்று  –  காற்று;  அஞ்சிலே  ஒன்றை  –  கடலை;

அஞ்சிலே  ஒன்று   ஆறு  ஆக  –  வான்  வழியாக; ஆருயிர்  –

சீதாபிராட்டியின்  உயிர்;  அஞ்சிலே ஒன்று பெற்ற – நிலமகள் பெற்ற;

அணங்கு – சீதை; அயலார் – பகைவர்; அஞ்சிலே ஒன்று – நெருப்பு.

அனுமனைப் பற்றிய நல்ல சித்திரம் இது.

To be continued……………..

–subam—

Tags- ஹனுமான் சாலீஸா, துளசிதாஸ், விளக்கக் கதைகள் , பகுதி 1 அஞ்சிலே ஒன்று பெற்றான்.

Leave a comment

Leave a comment