Post No. 13.560
Date uploaded in London – –20 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நீங்களும் நினைவாற்றல் ‘புலி’ ஆகலாம்!
ச. நாகராஜன்
போன் நம்பர் மறந்து போச்சே… பார்க்கிங் லாட்டில் வைத்த வண்டி நம்பர் மறந்து போச்சே… உப்பு, புளி வாங்கணும்னுதான் நினைச்சேன், மறந்து தொலைச்சேனே…. என்ற கவலை இனி இல்லை உங்களுக்கு…
இதோ இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.
மறதிக்கு ஒரு பை!
தகவல்களைப் பெற்று சேமித்து வைக்கும் திறனே நினைவாற்றல் என்று கூறப்படுகிறது. ஒரு கோப்பில் தகவல்களைச் சேமித்துத் தேவையான போது அதை எடுத்துப் பார்ப்பது போலத் தான் நினைவாற்றலும்! கணினியில் உள்ள கோப்பு அமைப்பை எடுத்துக் கொள்வோம். அதில் கோப்பு அமைப்பில் தகவல்கள் உள்ளிடப்பட வேண்டும். பிறகு தகவல் சிதையாமல் காக்கப்பட வேண்டும். தேவையானபோது அவற்றை எடுத்துப் பெற வேண்டும். இந்த மூன்றுமே R என்ற ஆங்கில எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களான
Registration, Retention, and Recall என்பனவற்றில் ஆரம்பிப்பதால் இதை மூன்று R’s என்று உளவியலாளர்கள் குறிப்பிடுவது வழக்கம்.
மனிதர்களின் நினைவாற்றல் திறன் பிரமிக்க வைக்கும் ஒன்று! வயதுக்கு வந்தோரால் 20,000 முதல் 1,00,000 சொற்கள் வரை நினைவில் வைத்திருக்க முடியும். இத்துடன் கூட ஒரு அன்னிய. மொழியைக் கற்கலாம். சிக்கலான திறமைகளைக் கைக்கொள்ளலாம். எல்லாத் தகவல்களை உள்ளடக்கியவாறே எங்கும் செல்லலாம். பாரத தேசத்தின் மிகப் புராதனமான புனிதமான வேதங்கள் நினைவாற்றல் வழியாகத்தான் பரம்பரை, பரம்பரையாக ஓதப்பட்டு தலைமுறைகளுக்கு அடுத்தடுத்து வழங்கப்பட்டு வந்தது.
நினைவாற்றலைக் கூட்ட ஏராளமான வழிகள் உள்ளன. அவற்றில் எண்களை வரிசையாக நினைவில் வைத்துக் கொள்வது ஒரு வழி. நினைவாற்றல் அமைப்பு முறைக்கு நிமோனிக் சிஸ்டம்
(Menmonic System) என்று பெயர்.
மாணவ, மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் எண்களை வரிசையாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. எடுத்துக்காட்டாக போன் நம்பர்கள், கணித சூத்திரங்கள் போன்றவற்றில் வரும் எண்கலை எப்படி நினைவில் கொள்வது? இதற்கு ஆங்கிலத்தில் ஒரு வாக்கியத்தை உதாரணமாகக் காணலாம். இதே போல தமிழிலும் நமக்கு நாமே நினைவு வாக்கியங்களை அமைத்துக் கொள்ளலாம்.
உதாரணத்தைப் பார்ப்போம்:
May I have a large container of coffee?
இதில் ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள எழுத்துக்களை எண்ணி அவற்றை வரிசையாக சொன்னால் வருவது கணிதக் குறியீடான ‘பை’க்கான மதிப்பு வரும்.
May – இதில் மூன்று எழுத்துக்கள்.
I – இதில் ஒரு எழுத்து
Have – இதில் நான்கு எழுத்துக்கள்.
இப்படியே தொடர்ந்தால் வருவது . 3.1415926
சர் ஜேம்ஸ் ஜீன்ஸ் இன்னொரு வாக்கியத்தை அமைத்துக் கொண்டு ‘பை’யின் மதிப்பை 14 இலக்கச் சுத்தமாகச் சொன்னார். அவர் அமைத்த வாக்கியம்:
How I want a drink, alcoholic of course, after the heavy chapters involving quantum mechanics. ‘பை’யின் மதிப்பு : 3.14159265358979.
இந்த நினைவாற்றல் உத்தியை நன்கு கற்று நிபுணராக ஆகிவிட்டால் எந்த இலக்கத்தையும் – போன் நம்பராக இருந்தாலும் சரி, கணித சூத்திரமாக இருந்தாலும் சரி, நினைவில் கொண்டு அனைவருக்கும் கூடக் கற்பிக்கலாம். இனி நமது கார், ஸ்கூட்டர் நம்பரை மறந்து விட்டோம் என்ற பேச்சே இருக்காது!
இது போலப் பல வழிகள் உண்டு. அவற்றை கற்கும் முன்னர் நினைவாற்றலை எப்படிப் பிரிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
பீட்டர் ரஸ்ஸல் தனது நூலான ‘தி ப்ரெய்ன் புக்;-ல் நினைவாற்றலை எட்டு விதமாகப் பிரித்து விளக்குகிறார்.’
நிகழ்வு நினைவு : ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்படும் பழைய கால நிகழ்வுகள் இந்த வகையைச் சார்ந்தவை.
உண்மை நினைவு: ஆகஸ்ட் 15-ம் தேதி. இந்தியாவின் சுதந்திர தினம். இவை போன்ற ஏராளமான உண்மைத் தகவல்கள் இந்த வகையைச் சார்ந்தவை.
பொருள் நினைவு : யானை ஒரு மிருகம். குயில் ஒரு பறவை. இது போல சாதாரண மனிதன் ஒருவன் ஆயிரக்கணக்கான வார்த்தைகளையும் அவற்றின் பொருளையும் நினைவில் சேமித்து வைத்திருக்கிறான்.
புலன் நினைவு : உங்களுக்குப் பிடித்த சினிமா காட்சி எதையேனும் ஒன்றை நினைவுக்குக்கொண்டு வாருங்கள். அதில் உள்ள காட்சிகள் உறைய வைக்கப்பட்ட நிலையில் ஒரு காட்சிக்கும் இன்னொரு காட்சிக்கும் இடையே மிகச் சிறிய இடைவெளியுடன் உங்கள் பார்வைக்குத் தரப்படுகிறது; ஆனால் நீங்கள் பார்ப்பதோ தொடர்ந்த ஒரு அசையும் சித்திரத்தைத் தான்!
இந்த பார்வை உணர்வை நீங்கள் பெறுவதற்கு உங்கள் மூளை அடுத்த சித்திரம் வரும் வரை முதல் சித்திரத்தை சேமித்து வைத்திருக்க வேண்டும். இதே முறை தான் நாம் எதையேனும் காதால் கேட்கும் போதும் பின்பற்றப்படுகிறது. ஒரு சின்ன வார்த்தையை எடுத்துக் கொண்டாலும் கூட அது பல்வேறு ஒலிகளின் கலவை தான்! அடுத்தது வரும் வரை முதல் ஒலி சேமித்து வைக்கப்படுகிறது! இந்த அனைத்துமே ஒரு வினாடியை பல சிறிய பகுதிகளாகப் பகுத்தால் அதில் சில பகுதிகளுக்குள் நடந்து விடுகிறது.
திறமை நினைவு: எல்லாத் திறமைகளும் கூட நினைவாற்றலைக் கொண்டே உள்ளன. எப்படி காரை ஓட்டுவது, எப்படி கோப்பையில் உள்ள காப்பியைக் குடிப்பது – இவை எல்லாம் நினைவாற்றலில் அடிப்படையாலேயே சாத்தியமாகிறது.
உள்ளுணர்வு நிகழ்வு : அநேக நினைவுகள் நமது மரபணுக்களில் சேமித்து வைக்கப்பட்டு நமக்கு ஜீன் மூலமாக வந்துள்ளன. பிறந்த குழந்தை தாயின் மார்பில் வாய் வைத்துப் பாலை உறிஞ்சுகிறது! இது மரபணுவால் வந்த நினைவாற்றல்!
சென்ற ஜென்ம நினைவு : சிலர் தங்கள் பூர்வ ஜென்மங்களிலிருந்து அப்படியே பல சம்பவங்களைக் கூறுகின்றனர்.
நினைவுகளை அதிகரிக்க ஏராளமான வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று உங்கள் பார்வையை உபயோகப்படுத்துவது தான்! எதையும் காட்சியாக மாற்றிக் கொண்டால் அது உங்கள் நினைவை விட்டு லேசில் நீங்காது.
ஏதேனும் முக்கியமான ஒன்றை அவசியம் நினைவில் கொள்ள வேண்டுமெனில் உங்களுக்குப் பழக்கப்பட்ட இடமான வீடு அல்லது உங்கள் தோட்டம் ஆகியவற்றோடு நினைவில் கொள்ள வேண்டியதை தொடர்புபடுத்தி காட்சியாக ஆக்குங்கள். நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை ஒவ்வொன்றாக உங்கள் வீட்டின் பல பகுதிகளிலும் வைத்து விடுங்கள். லேசில் அது மறக்காது.
காய்கறி வாங்க வேண்டும், ஃபேனை ரிப்பேர் செய்ய வேண்டும், சினேகிதி பத்திரிகை வாங்க வேண்டும் – அவ்வளவு தானே. கறிகாயை முன்னறை டி.வி. மேல் வைத்து விடுங்கள். ஃபேனை உட்காரும் நாற்காலியில் வைத்து விடுங்கள். சினேகிதியை ஃபேனோடு சுற்ற விடுங்கள். இந்த மூன்றுமே இனி மறக்காது! வீட்டின் பல பகுதிகளிலும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இவற்றை வைத்து அதை நினைவுக்கும் கொண்டு வரலாம்! மனச்சித்திர நினைவு உங்கள் நினைவாற்றலைக் கூட்ட எளிய ஆனால் சிறந்த வழி!
அப்புறம் எல்லோரும் உங்களுக்கு மட்டும் எப்படி எல்லாம் நினைவில் இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டு வியந்து கூறும் அளவு நீங்கள் நினைவாற்றல் நிபுணராக ஆகி விடுவீர்கள்.
**
மஞ்சுளா ரமேஷ் அவர்களை ஆசிரியராகக் கொண்ட சினேகிதி மாத இதழில் 2007, மே மாதம் வெளியான கட்டுரை