
Post No. 13,562
Date uploaded in London – 20 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
2 ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 2
அனுமனுக்குக் கிடைத்த முத்து மாலை
ராமநவமி என்பது ராமனின் அவதார நாள். அது கோடை காலத்தில் வரும். அப்போதெல்லாம், பாபா கொடைக்கானலில் இருப்பது வழக்கம். ஒரு ராம நவமியின்போது ராமர் பட்டாபிஷேக தினத்தில் அனுமனுக்கு சீதை அளித்த முத்து மாலையை, பாபா, தனது அபூர்வ சக்தியால் வரவழைத்து எல்லோருக்கும் காட்டினார். அதன் விவரமாவது:
(இதை சத்திய சாய் பாபா சொன்னபடி தருகிறேன்).
ராமர் முடி சூட்டிக் கொண்ட நாளில், அவர் எல்லோருக்கும் பரிசுகளை வாரி வழங்கினார். அங்கு வந்த எல்லோரும் பரிசுகளைப் பெற்றனர். ஆனால் அனுமார் பக்கமே ராமர் திரும்பவில்லை. சீதைக்கு ஒரே கவலை. எங்கேயாவது ராமர் மறந்து விடப் போகிறாரே என்று எண்ணி அவர் காதில் கிசுகிசுத்தார், “அனுமனை மறந்து விடாதீர்கள்” என்று. உடனே ராமரும் சீதை காதில் கிசுகிசுத்தார், “எனக்குத் தெரியும்; நான் மாருதியை (அனுமன்) மறக்கவில்லை. அவன் எதைக் கொடுத்தாலும் வாங்க மாட்டான். அவன் எவ்வளவு விலை உயர்ந்த பொருளானாலும் அதைப் பொருட்படுத்தமாட்டான்” என்றார்.
சீதைக்கு அந்த பதில் திருப்தி தரவில்லை. தன் கழுத்தில் இருந்த முத்து மாலையை எடுத்து அனுமனுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அனுமன் ஒரு சந்தேகப் பார்வையுடன் அதை வாங்கிக் கொண்டார்.
எல்லோர் முன்னிலையிலும் ஒவ்வொரு முத்தாகக் காதில் வைத்துக் கேட்பது, சில முத்துக்களைக் கடித்துச் சுவைப்பது – என்று மாறி மாறி செய்தார். சீதைக்கு ஒன்றும் புரியவில்லை. சரிதான்! குரங்கு புத்தியைக் காட்டிவிட்டது என்று நினைத்து, அனுமனே அது முத்து மாலை என்றாள்.
அனுமன் மிகப் பணிவுடன் சொன்னான்: அன்னையே எனக்குத் தெரியும். எனக்கு முத்து வைரம் எல்லாவற்றையும் விட ராம நாமமே உயர்ந்தது. சில முத்துக்களில் மட்டுமே ராமனின் திரு நாமம் ஒலிக்கக் கண்டேன். அவைகளைப் பத்திரமாக வைத்துவிட்டு, ஏனையவற்றைச் சுவைத்துப் பார்த்தேன்” என்றார்.
இந்த பதிலும் சீதைக்குத் திருப்தி தரவில்லை. சீதையின் முகக் குறிப்பால் எண்ணத்தைக் கண்டு பிடித்த சொல்லின் செல்வன் ஆஞ்சநேயன், அன்னையே, உங்கள் சந்தேகத்தை நீக்குகிறேன். இதோ பாருங்கள்; எனது முடிகளில் ஒன்று (ரோமம்). இதை ராமனுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று கீழே போட்டார். சீதை அதைத் தன் காதருகே கொண்டு சென்றபோது ராம நாமம் அதிலிருந்து ஒலிக்கக் கண்டு வியந்தாள்.
இந்தக் கதையைச் சொன்ன பிறகே சத்திய சாய் பாபா அந்த முத்து மாலையை வரவழைத்தார். அங்கிருந்த மாணவர்களிடம் அதைக் கொடுத்து பரிசீலிக்கச் சொன்னார். அவர்கள் பரிசோதித்ததில் பல முத்துக்களின் மீது அனுமனின் பல்தடம் தெரிந்தது. பின்னர் மாலையை வாங்கி அது வந்த வழியிலேயே மாயமாய் மறையும்படி செய்தார்.
–ரேடியோ சாய் வழங்கிய செய்தி.

இனி ஹனுமான் சாலீஸாவைக் காண்போம்
ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்
புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்
XXXX
1.ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர
பொருள்
ஸ்ரீ குருவின் பாத கமலங்களில் உள்ள மகரந்தத் தூள் என் மன க்க கண்ணாடியிலுள்ள அழுக்கை அகற்றி தூய்மை செய்யட்டும்.அறம் , பொருள், இன்பம், வீடு என்ற வாழ்க்கையின் நான்கு குறிக்கோள்களையும் அளிக்கும் இராமபிரானின் மாசுமருவற்ற புகழை வருணிக்கிறேன்.
ஹே காற்றின் மைந்தனே! உன்னைத் தியானம் செய்கிறேன் என்னுடைய அறிவும் பலமும் குறைவு என்பதை நீ அறிவாய். ஆகவே ஆற்றலையும் அறிவையும் நல்குவாயாகுக..அஞ்ஞானத்தையும் அறியாமையையும் அகற்ற வேண்டுகிறேன்
அனுமனே உனக்கு வெற்றி உண்டாகட்டும் .உன்னுடைய ஞானமும் குணங்களும் கடல் போலப் பரந்தவை ; ஆழம் காண முடியாதவை; வானரர் தலைவனே வாழ்க;உன்னுடைய புகழ் மூவுலகங்களிலும் பட்டொளி வீசப்பரவுகிறது .
xxxx

துளசிதாசர் முதல் ஸ்லோகத்திலேயே அனுமனை ஞானம் , குணம் ஆகியவற்றின் பெருங்கடல் — அறிவுக் கடல் என்று பாராட்டுகிறார் கிஷ்கிந்தா காண்டத்தில்தான் ஹனுமனை, வால்மீகி நமக்கு அறிமுகப்படுத்துகிறார். அனுமனின் பேச்சைக் கேட்ட ராமன் அசந்தே போகிறார்.லெட்சுமணனிடம் சொல்கிறார்:
तमभ्यभाष सौमित्रे सुग्रीवसचिवं कपिम्।
वाक्यज्ञं मधुरैर्वाक्यैस्स्नेहयुक्तमरिन्दम।।4.3.27।।
நட்புறவுக்கு ஏற்ற சொற்களை மொழிந்தான்; ஆகையால் தம்பி இனிய சாந்தமான வார்த்தைகளால் அவனுக்கு மறு மொழி கொடு
xxx
नानृग्वेदविनीतस्य नायजुर्वेद्धारिणः।
नासामवेदविदुषश्शक्यमेवं विभाषितुम्4.3.28।।
ரிக், யஜுர்,சாம வேதங்களில் வல்லவராக இருந்தால்தான் இப்படி பேச முடியும் (அனுமன் பிட்சு/சாது வடிவத்தில் வந்து ராமனிடம் பேசினான்)
xxx
नूनं व्याकरणं कृत्स्नमनेन बहुधा श्रुतम्।
बहु व्याहरताऽनेन न किञ्चिदपशब्दितम्4.3.29।।
இலக்கணத்தை முழுதும் கற்றவன் என்பதும் தெளிவாகத் தெரிகிறது ; அவன் சொன்னதில் ஒரு இலக்கணப் பிழையையும் நான் காணவில்லை
xxx
न मुखे नेत्रयोर्वापि ललाटे च भ्रुवोस्तथा।
अन्येष्वपि च गात्रेषु दोषस्संविदितः क्वचित्4.3.30।।
அவன் முகத்திலோ கண்களிலோ, நெற்றியிலோ, புருவ மத்தியிலோ, உடலின் வேறு எந்த உறுப்பிலோ கோணல் ,நெ ளிவு சுழிவு விழவில்லை
xxxx
अविस्तरमसन्दिग्धमविलम्बितमद्रुतम्।
उरस्थं कण्ठगं वाक्यं वर्तते मध्यमे स्वरे4.3.31।।
அவனுடைய வாக்கியங்கள் வள வள என்றுமில்லை; இழுத்து இழுத்துப் பேசவுமில்லை ; வேகமாகப் பேசவில்லை; சொற்கள் மார்பு அல்லது தொண்டையிலிருந்து நடுத்தர ஒலி யில் வந்தன
xxx
संस्कारक्रमसम्पन्नामद्रुतामविलम्बिताम्।
उच्चारयति कल्याणीं वाचं हृदयहारिणीम्4.3.32।।
அவன் சொற்கள் மங்களம் தருவனவாக இருந்தன தூய சொற்கள் வேகமாகவோ மெதுவாகவோ இல்லை உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் பேச்சு அது.
xxxx
अनया चित्रया वाचा त्रिस्थानव्यञ्जनस्थया।
कस्य नाराध्यते चित्तमुद्यतासेररेरपि4.3.33।।
அவனது வண்ண மிகு சொற்கள் மனோ வாக் காயத்திலிருந்து (நெஞ்சு,குரல்வளை , மூளை ) வந்தன. அவன் கத்தியை கையில் ஏந்தி வந்து இப்படிப்பேசினாலும் எதிரி அவனைப் புகழாமல் இரான்.
xxx
एवं विधो यस्य दूतो न भवेत्पार्थिवस्य तु।
सिद्ध्यन्ति हि कथं तस्य कार्याणां गतियोऽनघ4.3.34।।
இப்படிப்பட்ட தூதன் ஒருவன் அரசனுக்கு இருந்தால் அவன் லட்சியத்தை அடையாமல் இருப்பானா ? (நினைத்ததை முடித்துவிடுவான் )
xxxx
एवं गुणगणैर्युक्ता यस्य स्युः कार्यसाधकाः।
तस्य सिध्यन्ति सर्वाऽर्था दूतवाक्यप्रचोदिताः4.3.35।।
நல்ல குணங்களை உடைய , கருமமே கண்ணாயிரமான தூதர்களை உடையோர் தூதரின் திறமை மூலமாகவே நினைத்ததை முடித்துவிடுவார்கள்.
xxx
இவ்வாறு எடுத்த எடுப்பிலேயே அனு மனை ராமன் வானாளாவ புகழ்கிறான்.
கம்பனும் அனுமனை நவ வியாகாரணம் கற்றவன் , தொல்காப்பிய பாயிரம் சொல்லும் ஐந்திர வியாகரணம் கற்றவன் என்றெல்லாம் புகழ்கிறான்.
xxxx

Hanuman seen in Yaga Fire
கம்ப ராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் அனுமன் என்னும் கதாபாத்திரம் அறிமுகமாகிறான். அதைத்தொடர்ந்து அனுமன்– ராமன் சந்திப்பும், சுக்ரீவன் — ராமன் சந்திப்பும் நடைபெறுகிறது.
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே யார்கொல் இச் சொல்லின் செல்வன்
வில்லாஆர் தோள் இளைய வீர விரிஞ்சனோ விடைவலானோ
இந்த உலகத்தில் எங்கும் புகழ் பரவும்படி (இசை=புகழ்),
இந்த அனுமன் கற்காத கலைகளும் கடல் போலப் பரந்த வேதங்களும், உலகில் எங்கும் இல்லை என்று கூறும் அளவுக்கு இவனுக்கு அறிவு இருக்கிறது. இது அவன் பேசிய சொற்களால் தெரிந்துவிட்டது அல்லவா?
வில்லையுடைய தோளுடைய வீரனே! இனிய சொற்களைச் செல்வமாக உடைய இவன் யாரோ? நான்முகனோ (விரிஞ்சன்)? அல்லது காளையை வாஹனமாக உடைய சிவனோ (விடைவலான்)?
இதன் காரணமாக அனுமனுக்குச் சொல்லின் செல்வன் என்ற பட்டம் கிடைத்தது. அதுவும் ராமன் வாயினால் கிடைத்த பட்டம்!
To be continued……………………………
—subham—
Tags- ஹனுமான் சாலீஸா ,விளக்கக் கதைகள் – Part 2, பாபா, முத்துமாலை, சொல்லின் செல்வன், இலக்கணம், வேதம், கற்றவன்