WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,565
Date uploaded in London – 21 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
விஷ்ணு சஹஸ்ரநாம அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் –32
நீர் நிலைகளும் கடலும் தெய்வம்
மரங்களுக்கும் , விலங்குகள் பறவைகளுக்கும் விஷ்ணுவின் பெயர் சூட்டிய இந்துக்கள், கடல் முதல் குளம் வரையுள்ள நீர் நிலைகளையும் விஷ்ணுவின்– இறைவனின்– அம்சமாகவே கருதினர் . உண்மையில் நீர் இல்லாமல் இந்துக்கள், எந்தச் சடங்கினையும் செய்ய முடியாது ; இறப்பு முதல் பிறப்பு வரை நீர் தேவை. மொஹஞ்சசதாரோவிலேயே பெரிய குளத்தை வெட்டியவர்கள் வேத கால இந்துக்கள். உலகில் வேதத்தில் உள்ளது போல தண்ணீரைப் போற்றும் மந்திரங்கள் வேறு எந்தப் பண்பாட்டிலும் இல்லை; சொல்லப்போனால் அவர்கள் எல்லாம் பஞ்சத்தில் அடி பட்ட பரதேசிகள்! நாமோ தண்ணீர் தேசத்தில் பிறந்து வளர்ந்தவர்கள். உலகின் மிகப்பழைய நூலான ரிக்வேதத்திலேயே கங்கை துவங்கி சிந்துவரை முப்பதுக்கும் மேலான நதிகளின் பெயர்கள் வரிசைக்கிரமத்தில் உள்ளன.
xxxx
ஜகத ஸேதுஹு — நாம எண் 288–
உலகைக் கரையேற்றுபவர் அல்லது கரை போலக் காப்பவர்.
சங்கரர் சொல்கிறார் – ஸமுத்தாரண — ஹேதுத்வா தசம் பெத்த- காரணாத் வா
உலகத்தில் நல்லவை- கெட்டவைகளைப் பிரிக்கும் அணையாக இருப்பவர்; புண்ணிய பாவ பலன்களை துல்லியமாக வழங்குபவர்
பிருஹத் ஆரண்யக உபநிஷத் சொல்கிறது
ஏஷ ஸேதுர் விதரண ஏஷாம் லோகானாமஸம் பேதாயா — இவ்வுலகங்க்கள் பிரிந்துபோகாமல் சேர்த்துப் பிடிக்கும் கரையாக இருப்பவர். ஸம்ஸாரம் என்னும் கடலைக் கடக்க உதவுபவர் .
திருக்குறளிலும் இது உளது :
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.-10
இறைவனுடைய திருவடிகளை நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.
என் கருத்து
சேது என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளதை மேலே கண்டோம்: கரை, அணை , பாலம்
ராம சேது என்பது இலங்கைக்கும் இந்தியா வுக்கும் இடையே அனுமன் கட்டிய பாலம். அணை என்ற பொருளுக்கு ஆதாரமாக தமிழ் நாட்டிலுள்ள 2000 ஆண்டுப் பழமையான கல்லணை திகழ்கிறது. 400 ஆண்டு ஏரியின் வரலாற்றைக் கூறும் அற்புதமான ஒரு கல்வெட்டு குஜராத்தில் கிர்நாரில் இருக்கிறது. 400 ஆண்டுகளுக்கு முன்னர் , மெளரிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட சுதர்சன ஏரி பெருமழை வெள்ளத்தில் உடைந்ததை எப்படி எஞ்சினீயர்கள் செப்பனிட்டனர் என்று கல்வெட்டு செப்புகிறது .
பிறப்பு- இறப்பையும் கடலுக்கு ஒப்பிடுவதிலிருந்து அவர்கள் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியதும் தெரிகிறது ; இதற்கு ரிக் வேதத்தில் உள்ள பூஜ்யூ – அஸ்வினி குமாரர்கள் கதை சான்றாக இருக்கிறது.
XXXX
அபாம்நிதிஹி –நாம எண் 323–
கடலாக இருப்பவர்
கீதையில் கடல் வருணனை
நீர்நிலைகளுள் நான் கடல் என்று பகவத் கீதை 10-24 யில் கிருஷ்ணர் சொல்கிறார்
ஸரசானாம் அஸ்மி ஸாகரஹ — 10-24
இன்னுமொரு கடல் வருணனையும் கீதையில் உள்ளது :
आपूर्यमाणमचलप्रतिष्ठं
समुद्रमाप: प्रविशन्ति यद्वत् |
तद्वत्कामा यं प्रविशन्ति सर्वे
स शान्तिमाप्नोति न कामकामी ||2- 70||
ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம் ஸமுத்ரமாப ப்ரவிஶந்தி யத்வத் |
தத்வத்காமாயம் ப்ரவிஶந்த ஸர்வே ஸ ஶாந்திமாப்னோதி ந காமகாமீ ||2-70||
எனது கருத்துக்கள்
ஆரியர்கள் பனிப்பிரதேசத்திலிருந்து வந்தார்கள் என்று மாக்ஸ்முல்லர் கும்பல் கூறுவதை நீர் பற்றிய ரிக் வேத விஷயங்கள் தவிடு பொடியாக்கிவிட்டது. இன்று வரை பிராமணர்கள் ஒவ்வொரு நாளும் மூன்று முறை தண்ணீரைப் பயன்படுத்தி சந்தியாவந்தனம் செய்கின்றனர் (நானும் லண்டனில் செய்கிறேன்); வேதங்களைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிய வெளிநாட்டினர் இந்து மத சடங்குகளை நம்பியதும் இல்லை; செய்ததும் இல்லை ; கொட்டா ம்பட்டி கொத்தனார், நியூயார்க்கிலுள்ள எம்பையர் ஸ்டேட் பில்டிங் அல்லது பாரிஸிலுள்ள ஐபல் டவர் பற்றி விமர்சனம் செய்தது போலச் செய்தனர் .
வடதுருவத்தில் வசிக்கும் எஸ்கிமோக்கள் பனிக்கட்டி பற்றி 100க்கும் மேலான சொற்களைப் பயன்படுத்தயது போல வேத கால இந்துக்கள் தண்ணீர் பற்றி 120– சொற்களை பயன்படுத்தினர். ஏனெனில் அவர்கள் நீரோடும் கங்கை- சிந்து நதி தீரத்தில் பிறந்தவர்கள்.
xxxx
ரத்ன கர்பஹ – நாம எண் 473–
ரத்தினங்களை உள்ளே வைத்திருக்கும் கடலாய் இருப்பவர்.
அல்லது அடியார்களை தன் வயிற்றில் வைத்துக் காப்பவர்.
பட்ட பாஸ்கரர் உரையில் சொல்கிறார் :
அர்த்தம், காமம் என்னும் இரண்டு பண்புகளை — சங்கு சக்கரங்களாகத் தம்மிடம் எப்போதும் இருக்கப் பெற்றவர்.
முத்துக்களும் பவளங்களும் கடலில் இருப்பதை ஸம்ஸ்க்ருத , தமிழ் இலக்கியங்கள் எப்போதும் குறிப்பிடும்; இதை இதிகாசங்களிலும் காணலாம் .
அது மட்டுமல்ல ; ப்ரவாள – பவள – பரல – பேர்ல் PEARL — என்பன எல்லாம் ஒரே மூலத்திலிருந்து உதித்த சொற்கள் என்ற மொழியியல் அதிசயத்தையும் காணலாம் .
xxxx
அம்போநிதி — நாமஎண் 517–
நான்கு அம்பஸுகள் என்று வேதங்களில் சொல்லப்படும் தேவர், மனிதர், பிதிரர் , அசுரர் ஆகியவர்களுக்குப் புகலிடமாக இருப்பவர்
அல்லது கடலாய் இருப்பவர்.
இதிலும் மாக்ஸ்முல்லர், கால்டு வெல் கும்பலுக்கு செமை அடி விழுகிறது. ஆட்சியைப் பிடித்து மதத்ததை பரப்ப வந்த கும்பல்கள் ‘அசுரர்கள்’ என்போர் ஒரிஜினல் குடிகள் என்றும் தேவர்கள் என்போர் வந்தேறு குடிகள் என்றும் கதை கட்டிவிட்டன ; ஆனால் மிகப்பழைய உபநிஷத்துக்களும் அசுரர்கள், இந்துக் கடவுளரை வணங்கி வரம் பெற்றதையும் மனிதர்- தேவர்- அசுரர்- என்ற 3 குழுக்களும் இறைவனிடம் உபதேசம் கேட்டபோது மூன்று முறை த, த, த ஒலி கேட்டதையும் அவர்கள் அதை ஆளுக்கு ஒருவிதமாக — தாம்யத- தத்த – தயா –என்று பொருள் கொண்டதாகவும் கதை போகிறது.
இதை ஐ. நா. சபையில் எம் எஸ் சுப்புலட்சுமி பாடிய மைத்ரீம் புஜத என்ற காஞ்சி சுவாமிகள் பாடலிலும் காணலாம். வெள்ளைக்காரன் சொன்னது பொய் என்பதை நிரூபிக்கும் நிறைய பாடல்களை தமிழ் அடியார்கள் பாடிச் சென்றுள்ளனர் .
xxxx
நாராயணஹ — நாம எண் 245–
இந்து மதத்தில் இரண்டு முக்கிய மந்திரங்களில் ஒன்று நாராயண ;காஞ்சி சங்கராசார்யார் போன்றோர் நாராயண என்றுதான் கையெழுத்து இடுவார்கள் ;நாராயண என்ற சப்த த்தினால் துக்கங்கள் அனைத்தும் அழியும் என்று சொல்லி விஷ்ணு சகஸ்ரநாமம் முடிகிறது. பாவமே உருவான அஜாமிளன் , சாகும்போது நாராயணன் என்ற மகன் பெயரை அழைத்ததால் சுவர்க்கம் சென்றான் .
இரண்டாவது முக்கிய மந்திரம் ஐந்தெழுத்து – நமசிவாய
இதன் பொருள் — நாரா= நீரை, அயன= வசிப்பிடமாகக் கொண்டவர்

இது மொழியியல் ரீதியில் மாக்ஸ்முல்லர் கும்பலுக்கும் போலி திராவிட மொழியியல் கும்பலுக்கும் செமை அடி கொடுக்கும் சொல். நீர் என்பது ரிக் வேதத்திலேயே இருக்கிறது; “பாருங்கள் இதுவும் மயிலும் தமிழ் சொற்கள் ; ஆகவே ரிக் வேதம் மலர்ந்த சிந்து நதி தீரத்தில் தமிழே வழங்கியது” என்று முழங்கியது கால்டுவெல் கும்பல். ஆனால் நீர்த் தேவதைகளைக் குறிக்கும் நீரெய்ட்ஸ் NEREIDS முதலியன, தமிழுக்கும் முந்திய, ஸம்ஸ்க்ருதத்திலிருந்து தோன்றிய கிரேக்க மொழியில் இருப்பது இந்தக் கும்பல்களுக்குத் தெரியாது; அது மட்டுமல்ல ஆயிரக் கணக்கான தமிழ்ச் சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பதும் அந்தக் கும்பல்களுக்கு அப்போது தெரியாது ; உண்மை என்னவென்றால் ஒரே மூல மொழியிலிருந்து தமிழும் ஸம்ஸ்க்ருதமும் தோன்றின. அவை உலகம் முழுதும் பரவின.
நாராயணன் பாற்கடலில் உதித்தவர்; விஷ்ணுவின் முதல் அவதாரம் நீரில் உதித்த மீன்- மச்ச — அவதாரம்; நீரில்தான் உலகமே தோன்றியது – உயிரினங்களே தோன்றின என்பதை இந்துமதமும் விஞ்ஞானமமும் மட்டுமே கூறின. நாராயணன் பள்ளி கொண்ட இடம் பாற்கடல் அதாவது தூய நீர் கொண்ட கடல்.
மநு ஸ்ம்ருதியும் (1-10) இதை சொல்கிறது:
ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நர சூனஹ
தா யதஸ்யாயனம் பூர்வம் தேன நாராயணஹ ஸ்ம்ருதஹ 1-10
தண்ணீரை நாரா என்று அழைப்பர் அது நரனிடமிருந்து வந்தது அந்த இறைவன் முதலில் உண்டாக்கியது நீர்; அதையே தனது வசிப்படமாகக் கொண்டதால் நாராயண என்று அவனை அழைக்கிறோம்.
முதலில் உண்டானது தண்ணீர் என்ற விஞ்ஞானக் கொள்கையை முதலில் சொன்னவர்கள் இந்துக்கள்
Says Manu 1-10
आपो नारा इति प्रोक्ता आपो वै नरसूनवः ।
ता यदस्यायनं पूर्वं तेन नारायणः स्मृतः ॥ १० ॥
āpo nārā iti proktā āpo vai narasūnavaḥ |
tā yadasyāyanaṃ pūrvaṃ tena nārāyaṇaḥ smṛtaḥ || 1-10 ||
நாராயணின் புகழ் பாடும் நாராயண ஸூக்தம் என்ற மந்திரம், நாராயணின் முழுப் புகழையும் நமக்குச் சொல்கிறது.
இந்துக்கள் இந்த நாட்டின் பூர்வ குடிகள் என்பதை
விஷ்ணு ஸஹஸ்ரநாம நாமங்கள், பசுமரத்து ஆணி போல, மனதில் பதிக்கின்றன.
ஆண்டாள் திருப்பாவை முதல் பாட்டு
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே, நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
–subham—
விஷ்ணு சஹஸ்ரநாம, அதிசயங்கள், ரகசியங்கள், மேற்கோள்கள் Part–32 , நீர், கடல், நாராயண