
Post No. 13,570
Date uploaded in London – 22 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 4

முதலில் ஒரு சுவையான விஷயத்தை காண்போம் ; 732 அனுமார் கோவில் கட்டியவர்
கர்நாடகத்தில் மைசூர் அருகில் அவதரித்தவர் வியாஸராஜ தீர்த்தர் Sri Vyasaraja (1460-1539) என்னும் மஹான்; அவர் மாத்வ சம்பிரதாயமான த்வைதத்தைப் பரப்பினார். வாழ்க்கையில் பல அற்புதங்களை செய்தவர்; கிருஷ்ண தேவராயரின் உயிரைக் காப்பாற்றியவர் ; திருவானைக்காவல்– திருவரங்ககம் எல்லையை நிர்ணயித்தவர். அவர் 732 அனுமார் கோவில்களைக் கட்டினார் அதில் முதல் அனுமார் கோவில் கர்நாடகத்தில் ஹம்பியில் உள்ளது. 732 அநுமார் கோவில்களையும் இன்று பட்டியலிட முடியாவிட்டாலும் அவர் உண்டாக்கிய அனுமார் கோவில்கள் குறிப்பிட்ட முத்திரையுடன் இருக்கும்; இவைகளில் பெரும்பாலானவை ஆந்திரத்தல் பெணு கொண்டா வட்டாரத்தில் இருக்கின்றன.
.ஸ்ரீ வியாச தீர்த்தர் தினமும் ஹம்பியில் உள்ள கோயிலுக்கு எதிரே உள்ள சக்ர தீர்த்தம் என்று அழைக்கப்படும் துங்கபத்திரை ஆற்றின் பகுதியில் ஸ்நானம் செய்து,அங்குள்ள சிறிய குன்றில் உட்கார்ந்து ஜபம் செய்வது வழக்கம். தியானம் செய்ய கண் மூடியதும் அவருக்கு அனுமானின் தரிசனம் கிட்டும். ஆனால் ஒர் நாள் தியானம் செய்யும்போது அவ்வாறு ஆகவில்லை; .மறுநாள் வியாசதீர்த்தர் அவ்விடத்தில் உட்கார்ந்து கொண்டு ஜபம் செய்யும் போது மனதில் அனுமாரின் ஒரு உருவத்தை நினைத்துக் கொண்டு அவருடைய சித்திரத்தை வரைந்து அதற்கு நாமங்களை இட்டார். நெற்றியில் பொட்டிட்ட உடன் அந்த உருவம் மறைந்தது. மீண்டும் எழுத எழுத அவ்வாறே ஆயிற்று. இவ்வாறு பலமுறை ஏற்பட்டது. பிறகு வியாஸதீர்த்தர் அந்த அனுமாரின் உருவத்தை வரைந்து மந்திரத்தினால் திக்பந்தனம் செய்து, நாமமும் திலகமும் இட உருவம் அப்படியே நின்றது. அன்றே அதை பிரதிஷ்டை செய்து பூஜை முதலியவைகளைச் செய்தார். அது தானாகவே தெளிவாக உருவம் பெற்றது. இதுவே அவர் முதலில் பிரதிஷ்டை செய்த ஹனுமார் ஆகும். பின்னர் அங்கு கோயில் கட்டப்பட்டது. யந்த்ரோத்தாரக ஹனுமார் என்று புகழ் பெற்றது. இந்த ஹனுமார் மீது, வியாசராஜர் மிகவும் புகழ்பெற்ற ஸ்லோகத்தை இயற்றியுள்ளார். இவர் நாடெங்கும் 732 வீர ஹனுமார் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளார். இவையனைத்தும் ஹனுமாரின் தலைக்கு மேலே,வாலில் மணியுடன் ஒரே மாதிரியில் அமைந்தவை.. வியாச ராஜர் ஏன் 732 ஹனுமான் வடிவங்களை ஏற்படுத்தினார் என்பது ஆராய்ச்சியாளருக்குப் புரியாத புதிராகவே உள்ளது அவர் 732 வேற்று மத அறிஞர்களை , குறிப்பாக , கர்நாடகத்தில் பரவி இருந்த சமண மத அறிஞர்களை வாதங்களில் தோற்கடித்ததால் இவ்வாறு 732 அனுமார் கோவில்களை ஏற்படுத்தியதாக சிலர் சொல்கிறார்கள்.
வியாச ராஜர் அனுமார் கோவில்களைக் கண்டுபிடிக்க ஒரு வழிகாட்டிக் குறிப்புப் பட்டியலும் இருக்கிறது ; அவர் அமைத்த ஆஞ்சனேயர் கோவில்களில் மாருதிராயனுக்கு — அனுமாருக்கு —

வாலில் மணி தொங்கும் ;
கையில் மலர் இருக்கும்;
குடுமியில் முடிச்சு இருக்கும்;
வலது கை தலைக்கு மேலே அபய ஹஸ்தமாக இருக்கும்;
ராவணனின் மகன் அட்சயகுமாரனை துவம்சம் செய்வதாக அமைந்து இருக்கும்;
இரண்டு புறங்களில் சங்கு சக்கரம் பொறிக்கப்பட்டிருக்கும் ;
வால் , தலைக்கு மேலே சென்று அரை வட்ட வடிவில் நிற்கும் ;
மேலே சூரிய -சந்திரன் சின்னங்கள் காணப்படும் ;
ஒரு பல் கோரமாக இருக்கும்
கண்களை வைத்தும் கண்டுபிடிக்கலாம்
XXXX

Sri Vyasa Raja Tirthar
இப்போது ஹனுமான் சாலீஸாவின் 4, 5 ஸ்லோகங்களைக் காண்போம்
கீழ்கண்ட ஸ்லோகங்களில் அனுமனின் வருணனையைப் பார்க்கையில் அவன் நம்மைப்போல ஒரு உருவம் கொண்டவனே என்பது விளங்கும்.
4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா
கானன குண்டல குஞ்சித கேசா
5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை
காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை
பொருள்
4.தங்க வர்ண உடல்; காதில் குண்டலம் ; சுருண்ட சிவப்பு நிற முடி/கேசம் உடையவன்.அழகாகக் காட்சி தருபவன் .
5.கையில் வஜ்ராயுதம், கொடி ; தோளில் தர்ப்பைப் புல்லால் ஆன பூணூல் அணிந்தவன்
XXX

அனுமனை வருணிக்கும் கம்பனும் பொன் குண்டலங்களைக் குறிப்பிடுகிறான்
கம்பன் சொல்கிறான்- சொல்வன்மைக்குக் காரணம் அவன் சூரியனிடம் இலக்கணம் படித்ததே என்று.
வால்மீகி ராமாயணமும், அனுமன் அஷ்டோத்தரமும் அவனை “நவ வியாகரண பண்டிதன்” என்று போற்றுகிறது. கம்பன் அவனைப் போற்றும் பாடல் கிஷ்கிந்தா காண்டத்தில் வருகிறது:–
கண்டிலன் உலகம் மூன்றும் காலினால் கடந்து கொண்ட
புண்டரீகக் கண் ஆழிப் புரவலன் பொலன் கொள் சோதிக்
குண்டல வதனம் என்றால் கூறலாம் தகைமைத்து ஒன்றோ
பண்டை நூல் கதிரோன் சொல்ல படித்தவன் படிவம் அம்மா
—அனுமப் படலம், கிஷ்கிந்தா காண்டம், கம்ப ராமாயணம்
பொருள்:
ஓங்கி உலகளந்த உத்தமன் சுவர்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்று உலகங்களைக் கடந்தான். செந்தாமரைக் கண்களையும், சக்கரப் படையையும் உடைய அவன் இதோ இராமனாக இருக்கிறான். அப்பேற்பட்டவன் பொன்னால் ஆன குண்டலங்களை அணிந்த அனுமனைக் காணமுடியவில்லை. பழமையான இலக்கணம் முதலிய சாத்திரங்களைச் சூரியனிடம் கற்றுத் தேர்ந்த அனுமான் இப்படிப்பட்டவன் என்று எடுத்துக் கூறவும் முடியுமோ?
(அனுமன் தனது சுய ரூபத்தை காட்ட பேருருவம் எடுத்ததைக் கூறும் பாடலுக்கு அடுத்து வரும் பாடல் இது).
நவ வியாகரணம்
நவ வியாகரணம் என்பது ஒன்பது வகையான வடமொழி இலக்கணங்களே. அவையாவன: இந்த்ரம், ஸாந்த்ரம், காசகிருத்ஸ்னம், கெளமாரகம், சகதயனம், ஸாரஸ்வதம், ஆபிசலம், ஸாகலம், பாணிணீயம்.
அனுமன் கற்ற நவ (9) வியாகரணம் என்ன என்பதை காஞ்சி பரமாச்சார்ய சுவாமிகள் சந்திர சேகர இந்திர சரஸ்வதி அவர்களின் சொற்களில் காண்போம்:-
தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)
வியாகரணம் :– வேதத்தின் வாய்
இலக்கண நூல்கள்
இங்கே பரமேச்வரனைக் கவி “சந்த்ராவதம்ஸன்” என்கிறார். அப்படியென்றால் சந்திரனைத் தலையணியாக, சிரோபூஷனமாகக் கொண்டவன் என்று அர்த்தம். “சந்திரசேகரன்”, “இந்துசேகரன்” என்றாலும் இதே பொருள்தான். வியாகரண சாஸ்திரங்களில் இரண்டுக்கு ஆச்சரியமாக இந்த ‘இந்துசேகர’ப் பெயர் இருக்கிறது. ஒன்று, ‘சப்தேந்து சேகரம்’ வியாகரணத்தில் இந்த நூல் வரைக்கும் ஒருத்தன் படித்து விட்டால், “சேகராந்தம் படித்தவன்”என்று பாராட்டிச் சொல்வார்கள்.
‘இன்னொரு புஸ்தகம், “பரிபாஷேந்து சேகரம்” என்பது.
சிக்ஷா சாஸ்திர நூல்கள் சுமார் முப்பது இருப்பது போல், வியாகரணத்திலும் ஏராளமான கிரந்தங்கள் இருக்கின்றன. அவற்றில் பாணினி ஸூத்ரம், அதற்குப் பதஞ்ஜலி பாஷ்யம், வரருசி வார்த்திகம் ஆகிய மூன்றும் தலைமை ஸ்தானத்தில் இருக்கின்றன.
வரருசியும் காத்யாயனரும் ஒருத்தரே என்ற அபிப்ராயத்தில் இங்கே நான் சொல்லியிருக்கிறேன். அவர்கள் வெவ்வேறு பேர் என்றும் சிலர் சொல்கிறார்கள்.
விக்ரமாதித்தன் ஸபையிலிருந்த ‘நவரத்ன’ங்களில் ஒருத்தர் வரருசி. இலக்கண புஸ்தகங்கள் எழுதினவர். வார்த்திகம் பண்ணின காத்யாயனர் இவரா இல்லையா என்பதில் அபிப்ராய பேதம் இருக்கிறது.
பர்த்ருஹரியின் “வாக்யபாதயம்” என்ற நூலும் முக்யமான வியாகரண புஸ்தகங்களில் ஒன்றாகும்.
‘நவ வ்யாகரணம்’ என்பதாக ஸம்ஸ்கிருதத்தில் ஒன்பது இலக்கண நூல்கள் குறிப்பிடப் படுகின்றன. ஆஞ்ஜநேய ஸ்வாமி ஸூரிய பகவானிடமிருந்து இவற்றைக் கற்றுக் கொண்டார். பிற்பாடு ஸ்ரீராமரே ஆஞ்சநேயரை “நவவ்யாகரண வேத்தா” என்று புகழ்கிறார்.
நவ வியாகரணங்களில் ஒன்று “ஐந்திரம்” – இந்திரனால் செய்யப்பட்டதால் இப்படிப் பெயர். தமிழ் இலக்கணத்துக்கு மூலமான “தொல்காப்பியம்” இந்த ஐந்திரத்தை மூலமாகக் கொண்டு அந்த வழியிலேயே செய்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அனுமன் என்பவன் குரங்கு அல்ல; குரங்கு இனத்தைச் சேர்ந்தவன்; ஆதிகாலத்தில் ஒவ்வொரு இனமும் உடலில் அல்லது முகத்தில் ஒரு அடையாளத்தை அணிந்துகொண்டு அதை வைத்து தங்களை அழைத்துக்கொண்டனர். அவர்கள் பின்பற்றிய சட்ட விதி முறைகளும் நாகரீக மனிதர்களிடமிருந்து வேறுபட்டவை; ராமாயணம் நடந்து சில ஆயிரம் ஆண்டுகள் கடந்தமையால் குரங்கு இனம் என்பதை குரங்கு போலவே சித்தரிக்கத் துவங்கினர் நம் உபன்யாசகர்கள். மேலும் சில பழங்குடி மக்கள், உடலின் சில உறுப்புகளை சிதைத்துக்கொண்டனர். நான் சொல்லுவதை எல்லாம் உலகின் பழங்குடி மக்கள் இடையே இன்றும் காணலாம். முஸ்லிம்கள் கூட ஜனன உறுப்புகளை சிதைத்துக் கொள்வதை நாம் இன்றும் காண்கிறோம். மேலை நாடுகளில் சோமாலிய பெண்கள் இப்படிச் செய்வதைத்த தடுக்க பெரிய இயக்கமே நடைபெறுகிறது. தமிழ் நாட்டில் காது கிழியும் அளவுக்கு குண்டலங்கள் அணியும் கிழவிகளைப் பார்க்கலாம். அமேசான் காடுகளில் வாயைச் சிதைத்து தொங்கும்படி செய்கின்றனர். பூடான் / பூத ஸ்தானம் , இலங்கை முதலிய நாடுகளில் ராட்சத முகமூடிகள் அணிந்து நடனம் ஆடுவதை இன்றும் காணலாம்..

—-SUBHAM—
TAGS- ஹனுமான் சாலீஸா, விளக்கக் கதைகள்,, 732 அனுமார் கோவில்கள், Part 4, நவ வியாகரணம், யந்த்ரோத்தாரக ஹனுமார்