அனுமன் சிவனின் அவதாரம்;  ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 5 (Post.13,573)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,573

Date uploaded in London – 23 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

அனுமன் சிவனின் அவதாரம்; ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 5

முதலில் சுவையான கதைகளைக் கேட்போம்

பணிவுக்கும் துணிவுக்கும் மட்டும் பெயர் எடுத்தவர் ஆஞ்சனேயர் என்று எண்ணிவிடக்கூடாது; கண்மூடித்தனமான பக்திக்கும் அவர் எடுத்துக்காட்டு இதை   தாஸ்ய பக்தி என்பர். ராமதாஸனாக  விளங்கும் அவரை கிஷ்கிந்தா காண்டத்திலும், சுந்தர காண்டத்திலும் , யுத்த காண்டத்திலும் காணலாம்

இதோ ஒரு கதை :

ஜாம்பவான் மூலம் அனுமனின் பக்தியையும் அளவுகடந்த திறமையையும் அறிகிறோம்; பிராம்மாஸ்த்திரத்தின் தாக்குதலால் , போர்க்களத்தில்  லெட்சுமணன் உளப்பட அனைவரும் மூர்ச்சசையாகி இருக்கின்றனர்; ஆனால் விபீஷணன் பாதிக்கப்படவில்லை; அவர் ஒவ்வொருவர் அருகிலும் வந்து உடல்நிலையைச் சோதிக்கிறார். ஜாம்பவான் அருகில் வந்தவுடன் அவர் கேட்ட முதல் கேள்வி :

ஆஞ்சனேயர் உயிருடன் இருக்கிறாரா ?

விபீஷணனுக்கு ஒரு அதிர்ச்சி. ராமர், லட்சுமணர், சுக்ரீவன், அங்கதன் முதலியோர் பற்றிக் கேட்காமல் ஏன் அனுமன் பற்றி மட்டும் விசாரிக்கிறீர்?

என்று வினவினார் விபீஷணன் ..

ஜாம்பவான் பதில் சொல்கிறார் :

அனுமன் ஒருவன் உயிரோடு இருந்தால் அனைவரும் பிழைத்துவிடுவார்கள் அவன் புத்திமான்; பலவான்; காற்றினும் கடுகிச் செல்பவன் அவன் எல்லோருக்கும் உயிர்ப்பிச்சை அளிக்க  முடியும் . இதை ராமாயணக் கதையிலும் காண்கிறோம்; சஞ்சீவி பர்வதத்தையே பெயர்த்து எடுத்து வந்து — ஆக்சிஜன் சிலிண்டர்  பொருத்தியது போல– அனைவருக்கும் உயிர்மூச்சினை உண்டாக்கினார்

xxxxxx

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் இயற்றிய கிருதிகளில் சுமார் 700, இப்பொழுது கிடைக்கின்றன. அவற்றில் இரண்டு இசை நாடகங்களும் உள்ளன.

அவர் ராமரைப் பற்றிப் பாடும்போது அனுமனையும் குறிப்பிடுகிறார். இது பற்றி ஒரு  கதை சொல்கிறார்கள் 

ஒரு நாள் தியாகராஜரின் பாட்டில் மயங்கிய ராமபிரான் , மாறுவேடத்தில் தியாகராஜர் வீட்டுக்கு வந்தாராம். அவருடன் ஹனுமானும்  சீதாதேவியும் மாறு  வேடத்தில் வந்தனர். அவர்களை நன்றாக அறியாதபோதிலும் விருந்து உண்டபின்னரே விடைபெற வேண்டும் என்று வேண்டினார். எல்லோரும் சாப்பிட அமர்ந்தபோது வழக்கம்போல, அனுமன் அவர்களுக்கு சுவையான உணவுகளைப் பரிமாற ஆயத்தமானார் ; தியாகராஜரோ , விருந்தாளிகளுக்குத் தானே பரிமாற வேண்டும் என்று எண்ணி அநுமானைப் புறக்கணித்தார்  உடனே ராமன் தலையிட்டு அனுமனைத் தடுத்து நிறுத்தி, தியாகராஜரே பரிமாறட்டும் என்றாராம். அப்போது தன்னிடத்தில் தியாகராஜருக்கு எவ்வ்வளவு பக்தி உண்டோ அவ்வளவு பக்தி  அனுமானிடத்திலும் உண்டு என்று இராமபிரான் சொன்னாராம் ; அது உண்மை என்பதை தியாராஜரின் கிருதிகளில் காண்கிறோம்.

xxxx

சிவ பெருமானின் அவதாரம் தான் ஹனுமான் என்பதற்கு குறைந்தது மூன்று இலக்கிய ஆதாரங்கள்  இருக்கின்றன.

அதில் ஒரு ஆதாரம் , முருகன் புகழ் பாடிய திருப்புகழில்  கிடைக்கிறது. இந்த 3 ஆதாரங்களும்   ஏறத்தாழ 500 ஆண்டுகள் பழமையானது ; வால்மீகி சம்ஸ்க்ருதத்தில் எழுதிய ராமாயணம்தான் மிகவும் பழமையானது என்றாலும்  பரந்த பாரத பூமியில் செவி வழியாக வந்த எவ்வளவோ செய்திகள் 3000 ராமாயணங்களிலும் ராமன் பற்றிய பாடல்களிலும் கிடைக்கின்றன. இவைகளை எல்லா மொழிகளிலும் இருந்தும் தொகுத்து புஸ்தகமாக வெளியிட்டால் அவை பல தொகுதிகளாக, ஒருவேளை பல நூறு தொதகுதிகளாக வர வேண்டியிருக்கும். கடல் அளவுக்குப் பெருகியது ராமாயணம்; தென்கிழக்கு ஆசியாவுக்குப் பயணம் செய்தால் அங்குள்ள அதிசய வினோத ராமாயணங்களில் நாம் அறியாத புதிய கதைகளைக் கேட்டு ரசிக்கலாம்; அதில் வியப்பில்லை. நம்முடைய சம்ஸ்க்ருத பெயர்கள்,  இந்தியாவுக்கு வெளியே எத்ததனை விதமான ஸ்பெல்லிங்க்குகளில் எழுதப்படுகிறது என்ற விநோதத்தைக் கண்டால் ,  இன்னும் வியப்பாக இருக்கும்; பல நாட்டுத் தமிழ் மாணவர்களின் பரீட்சைத் தாள்களைத் திரு த்தியபோது இந்த விநோதத்தைக் கண்டேன். மாரி முத்து என்பது மர்டர் முத்து ஆகியிருந்தது ; தேவி என்பது தீவை ஆகியிருந்தது; பாவம் அவர்களுக்கு பெயர்களின் பொருளும் தெரியாது . நிற்க

xxx

அனுமனின் தாயின் பெயர் அஞ்சனா (அஞ்சனை ); தந்தையின் பெயர் கேசரி . அஞ்சனா என்ற பெண்மணி , சிவபெருமானை வேண்டி பெற்றபிள்ளை அனுமன் என்று பாவார்த்த  ராமாயணம் கூறுகிறது. இதை எழுதியவர் மராட்டிய பூமியில் அவதரித்த மஹான் ஏக நாதர் .

தசரதன், புத்ர காமேஷ்டி யாகம் செய்த பின்னர் யாக குண்டத்திலிருந்து வந்த பாயசத்தை மூன்று மனைவியருக்கும் பிரித்துத் தந்ததை வால்மீகி நமக்குச் சொன்னார். அதில் கீழே சிந்திய ஒரு பகுதியை கருடன் எடுத்துச் செல்லவே , அது அஞ்சனை தவம் செய்த காட்டில் விழுந்தது; அதை வாயு பகவான் அஞ்சனை இடம் தந்தான். அவளும் சிவனை நினைந்து அதை அருந்தவே கர்ப்பம் அடைந்து வாயுகுமாரனைப்  பெற்றாள் . பிறந்த குழந்தை சிவனுடைய அம்சத்துடன் பிறந்தது .

இன்னுமொரு கதை :

ராமன் என்னும் அவதாரம் ராவணன் என்னும் ராட்சசனை அழிக்க வந்தது ; அப்போது வைகுண்டத்தில் அல்லது சொர்க்கத்தில்  இருந்த ஒவ்வொருவரும் பூமியில் வெவ்வேறு பெயர்களில் தோன்றினார்கள். தேவர்கள் வானரங்களாகவும், சிவ பெருமான் அனு மானாகவும் அவதரித்து ராவண ஸம்ஹரத்தில் உதவினார்.

இதை ஏகநாதர் பாடல்களும் , அருணகிரி நாதரின் திருப்புகழும் , துளசிதாஸரின் ஹனுமான் சாலீசாவும் சொல்கினறன.

xxxx

இதோ அனுமான் சாலீஸா வரிகளும் , திருப்புகழும்:

அனுமன் சிவனின் அவதாரம்

கரு அடைந்து பத்துற்ற திங்கள் வயிறு இருந்து முற்றி பயின்று

கடையில் வந்து உதித்து குழந்தை வடிவாகி

கழுவி அங்கு எடுத்து சுரந்த முலை அருந்துவிக்க கிடந்து

கதறி அங்கை கொட்டி தவழ்ந்து நடமாடி

அரை வடங்கள் கட்டி சதங்கை இடு குதம்பை பொன் சுட்டி தண்டை

அவை அணிந்து முற்றி கிளர்ந்து வயது ஏறி

அரிய பெண்கள் நட்பை புணர்ந்து பிணி உழன்று சுற்றித்திரிந்தது

அமையும் உன் க்ருபை சித்தம் என்று பெறுவேனோ

இரவி இந்தரன் வெற்றி குரங்கின் அரசர் என்றும் ஒப்பற்ற உந்தி

இறைவன் எண்கு இன கர்த்தன் என்றும் நெடு நீலன்

எரியது என்றும் ருத்ரற் சிறந்த அநுமன் என்றும் ஒப்பற்ற அண்டர்

எவரும் இந்த வர்க்கத்தில் வந்து புனம் மேவ

அரிய தன் படை கர்த்தர் என்று அசுரர் தம் கிளை கட்டை வென்ற

அரி முகுந்தன் மெச்சுற்ற பண்பின் மருகோனே

அயனையும் புடைத்து சினந்து உலகமும் படைத்து பரிந்து

அருள் பரங்கிரிக்குள் சிறந்த பெருமாளே

xxxx

கருவடைந்து … கருவிலே சேர்ந்து

பத்துற்ற திங்கள் வயிறிருந்து … பத்து மாதங்கள் தாயின் வயிற்றில்

இருந்து

முற்றிப்ப யின்று … கரு முற்றிப் பக்குவம் அடைந்து

கடையில்வந்து தித்து … கடைசியில் பூமியில் வந்து பிறந்து

குழந்தை வடிவாகி … குழந்தையின் வடிவத்தில் தோன்றி

கழுவியங்கெ டுத்து … குழந்தையை அங்கு கழுவியெடுத்து

சுரந்த முலையருந்து விக்க … சுரக்கும் முலைப்பாலை ஊட்டுவிக்க

கிடந்து கதறி … தரையிலே கிடந்தும், அழுதும்,

அங்கை கொட்டித்தவழ்ந்து … உள்ளங்கையைக் கொட்டியும்,

தவழ்ந்தும்,

நடமாடி … நடை பழகியும்,

அரைவடங்கள் கட்டி … அரைநாண் கட்டியும்,

சதங்கை இடுகுதம்பை … காலில் சதங்கையும், காதில் இட்ட அணியும்,

பொற்சுட்டி தண்டை அவையணிந்து … பொன் கொலுசு, தண்டை

அவைகளை அணிந்தும்,

முற்றிக்கி ளர்ந்து வயதேறி … முதிர்ந்து வளர்ந்து வயது ஏறி,

அரியபெண்கள் … அருமையான பெண்களின்

நட்பைப்பு ணர்ந்து … நட்பைப் பூண்டு,

பிணியுழன்று … நோய்வாய்ப்பட்டு

சுற்றித்தி ரிந்த(து) அமையும் … அலைந்து திரிந்தது போதும்.

(இனிமேல்)

உன்க்ரு பைச்சித்தம் என்று பெறுவேனோ … உனது அருள்

கடாட்சத்தை எப்போது பெறுவேனோ?

இரவிஇந்த்ரன் … சூரியன் (அவன் அம்சமாக சுக்ரிவன்)இந்திரன்

(அவன் அம்சமாக வாலி)

வெற்றிக்கு ரங்கினரசரென்றும் … வெற்றி வானர அரசர்களாகவும்,

ஒப்பற்ற உந்தியிறைவன் … ஒப்பில்லா திருமால் வயிற்றிலே பிறந்த

பிரமன்

எண்கி னக்கர்த்த னென்றும் … கர் இனத் தலைவன் (ஜாம்பவான்)

ஆகவும்,

நெடுநீலன் எரியதென்றும் … நெடிய நீலன் அக்கினியின் கூறாகவும்,

ருத்ரற்சி றந்த அநுமனென்றும் … ருத்திர அம்சம் அநுமன் என்றும்,

ஒப்பற்ற அண்டர் எவரும் … ஒப்பில்லாத தேவர்கள் யாவரும்

இந்த வர்க்கத்தில் வந்து … இன்னின்ன வகைகளிலே வந்து

புனமேவ … இப் பூமியில் சேர்ந்திட,

அரியதன்ப டைக்கர்த்த ரென்று … (இவர்களே) தன் அரிய

படைக்குத் தலைவர் எனத் தேர்ந்து,

அசுரர்தங்கி ளைக்கட்டை … அசுரர்களின் சுற்றமென்னும் கூட்டத்தை

வென்ற அரிமுகுந்தன் … வெற்றி கொண்ட ஹரிமுகுந்தனாம் ஸ்ரீராமன்

மெச்சுற்ற பண்பின் மருகோனே … புகழும் குணம் வாய்ந்த

மருமகனே,

அயனையும்பு டைத்துச்சி னந்து … பிரம்மாவையும் தண்டித்து,

கோபித்து,

உலகமும்ப டைத்து … (பிரம்மனைச் சிறையிட்ட பின்) உலகத்தையும்

படைத்து,

பரிந்து … அன்புடன்

அருள்பரங்கி ரிக்குள் … அருள் பாலிக்கும் திருப்பரங்குன்றத்தில்

சிறந்த பெருமாளே. … வீற்றிருக்கும் பெருமாளே.

xxxxx

ஹனுமான்  சாலீசா

ஶங்கர ஸுவன கேஸரீ நன்த³ன ।
தேஜ ப்ரதாப மஹாஜக³ வன்த³ன ॥ 6 ॥

வித்³யாவான கு³ணீ அதி சாதுர ।
ராம காஜ கரிவே கோ ஆதுர ॥ 7 ॥

பொருள்

7. நீங்கள் சிவபெருமானின் அவதாரம் பரிசுத்தமான, ஏகாந்தமான, அழகான கைலாச பர்வதத்தில் அமர்ந்து ராம நாம ஜபம் செய்கிறீர்கள் ; உங்களுடைய இருதயம் என்னும் காட்டில் ராமன் எபோதும் உலவிக்கொண்டு இருக்கிறார். ராமாவதார நோக்கத்தை நிறைவேற்ற நீங்களே கேசரி மைந்தனாக அவதரித்தீர்கள் புகழ் ஒளியாலும் , வீரத்தாலும் உயர்ந்த உங்களை உலகமே தொழுது நிற்கிறது என்று உரைகாரர்கள்  விளக்கியுள்ளனர்.

8.ஆழம் காண முடியாத அறிவுடையவர் நீங்கள்; நற்குணங்களும் செயலாற்றுவதில் பெரும் திறமையும் வாய்க்கப் பெற்றவர் .ராமனுக்குப் பணி செய்வதையே குறிக்கோளாக உடையவர்.

xxxx

ஆக துளசிதாஸர் , ஏகநாதர் , அருணகிரி நாதர் மூவரும் அனுமனை சிவனின் அம்சமாகவே கருதுகின்றனர்.

to be continued……………………………….

—subham–

Tags- அனுமன் சிவனின் அவதாரம், ஹனுமான் சாலீஸா,  விளக்கக் கதைகள் – Part 5

Leave a comment

Leave a comment