Post No. 13.576
Date uploaded in London – —24 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxx
ஆறு நூறு கோடியில் ஒருத்தியம்மா நீ!
ச. நாகராஜன்
பிரச்சினைகளே இல்லாதவர்கள் உலகில் உண்டா? சிக்கலான இந்தக் கேள்விக்கு நார்மன் வின்செண்ட் பீல் ஒரு முறை பதில் அளித்தார். “அப்படி பிரச்சினையே இல்லாதவர்கள் ஏராளமானோரை எனக்குத் தெரியும். அவர்கள் இருக்கும் இடம் கல்லறை!” என்றார் அவர்.
உன்னால் சாதிக்க முடியும் என்று நீ நினைத்தாலோ அல்லது சாதிக்க முடியாது என்று நீ நினைத்தாலோ, நீ நினைத்தது தான் சரி” என்றார் மோட்டார் மன்னர் ஹென்றி போர்டு.
“மலைச் சிகரத்தைக் குனியச் சொல்ல முடியாதல்லவா, அதனால் அதன் மீது ஏறித்தான் அதை வெல்ல முடியும்” என்றார் டாட் ஸ்கின்னர்!
கற்பனைக்கும் அப்பாற்பட்ட தடைகளை உடைத்துச் சாதனை படைத்த பெண்மணிகள் ஏராளமானோர் உண்டு. அவர்களைப் பற்றி முழுவதுமாக அறிய முனையும் போது மலைத்துத் திகைத்துப் போவோம்.
உலகின் ஒப்பற்ற ஒரு சிறுமியான பனிரெண்டே வயதான அயி, இந்த 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் முன்றாம் தேதி பூஜ்யர் தலாய்லாமா முன்னர் ஒரு இசையை இசைத்தாள். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்கிறீர்களா?
அயிக்குப் பார்வை இல்லை. அவள் வளர்ச்சி குன்றிய சிறுமி. நான்கு வயது குழந்தைக்கு இருக்கும் பிஞ்சு விரல்களால் அவளால் பியானோவையே அளக்க முடியாத போது கரை காணாத கடலான இசையையே அளந்து விட்டாள்!
தலாய்லாமா புன்சிரிப்புடன் அவளை ஆசீர்வதித்தார்.
ஜேனட் ஆண்டர்ஸன் தான் அயிக்கு சங்கீத குரு. ஜேனட் அமைத்த பாடலை அயி இசைக்க தலாய்லாமா ஆசீர்வதிக்க கூட்டமே உருகிப் போனது! உலகிலேயே ஒரே ஒருவருக்கு இருக்கும் வியாதி அயிக்கு உள்ளது. உலகின் ஆறு நூறு கோடிப் பேரில் அயிக்கு மட்டுமே இந்த “ஒப்பற்ற” வியாதி உள்ளது. இந்த வியாதி என்ன என்று இனம் கண்ட இரண்டே இரண்டு பேர் இதற்கு ‘சால்டினோமைன்ஜர் சிண்ட்ரோம்” என்று நாமகரணம் சூட்டியுள்ளனர். இது ஒரு மூன்றடுக்கு வியாதி.
அயிக்குக் கண் பார்வை தெரியாததோடு முதுகெலும்பு கோணலானது. மூன்று கோணலுடன் முதுகெலும்பு இருப்பதால் அயியின் இயக்கம் பாதிக்கப்பட்டு உள்ளது. அவள் வீல் சேரில் அடக்கம். அடுத்து அவளுக்கு சிறுநீரகமும் பழுதடைந்து உள்ளது.
எடின்பரோவில் உள்ள ராயல் ப்ளைண்ட் ஸ்கூலில் விசேஷமான கம்ப்யூட்டரில் அயி பயின்று ஆச்சரியங்களைச் செச்ய்கிறாள் என்றால் அவளது மன உரம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?!
உலகின் பிரபல இசை அமைப்பாளரான பாயிகோ, தானே நேரில் வந்து அயியின் சி.டி. ரிகார்டிங்கை முன்னின்று நடத்தி வைத்தார். இதனால் வரும் நிதி இந்தியக் குழந்தைகளின் நலத்திற்கு வந்து சேரும்!
பெரிய பியானோவில் அயி பீத்தோவனின் இசையை இசைக்க அனைவரும் ஆச்சரியப்பட்டனர். ஏனெனில் பீத்தோவனின் அந்த மாஸ்டர் இசையை அயி கேட்பது அன்று தான் முதல் முறை. கேட்டவுடன் அவள் அதை இசைத்து விட்டாள்! காது கேளாத
இசைமேதை பீத்தோவனுக்குத் தான் கண் தெரியாத அயியின் மேதைத் தன்மை தெரியுமோ என்னவோ!
வீல் சேரில் உலகம் நடத்தும் அயியிடம் எதிர்காலம் பற்றிக் கேட்டால், “இந்தக் கணத்தில் நான் வாழ்கிறேன்” என்கிறாள்.
இந்தக் கணம் …. எவ்வளவு பொருள் பொதிந்த வார்த்தை!
“தி பவர் ஆஃப் நௌ” என்ற புத்தகத்தை எழுதிய பிரபல நூலாசிரியர் எக்கார்ட் டாலி தனது நூலை இப்படி ஆரம்பிக்கிறார்:
“முப்பது வருடங்களாக தெருவோரத்தில் அமர்ந்து அந்த பிச்சைக்காரன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்.
வழிப்போக்கன் ஒருவன் அவனது அருகில் செல்லவே, “ஏதேனும் சில்லறை இருக்கிறதா?” என்று பிச்சைக்காரன் கேட்டான்.
“ஒன்றும் இல்லையே” என்று பதிலிறுத்த அந்த அந்நியன், “நீ எதன் மீது உட்கார்ந்திருக்கிறாய்” என்று கேட்டான்.
“பெட்டி. பழைய பெட்டி!. முப்பது வருடமாக இதன் மீது தான் அமர்ந்திருக்கிறேன்” என்றான் பிச்சைக்காரன்.
“உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்தாயா?” என்று கேட்டான் அந்நியன்.
“இல்லை, அதில் பார்க்க ஒன்றும் இருக்காது.”
“திறந்து தான் பாரேன்”
பிச்சைக்காரன் பெட்டியைத் திறந்து பார்த்தான். பெட்டி முழுவதும் தங்கம்!
இந்தக் கணத்தில் இருக்கும் தங்கத்தை விட்டுவிடாமல், எந்தவித குறையும் இல்லாமல் உடுக்க உடை, உண்ண உணவு, இருக்க இடம் என்று எல்லாமும் கொண்டுள்ள சினேகிதிகளாலும், சினேகிதர்களாலும், அயியைப் போல சாதனை படைக்க முடியாதா, என்ன?
மலைச் சிகரத்தைக் குனியச் சொல்லாமல் அதன் மீது ஏறி வெல்லத் தயராகலாமல்லவா?
இந்தக் கணம்…. இந்தக் கணமே சத்தியம். அந்த முயற்சியை ஆரம்பிக்க!
**
சினேகிதி மாத இதழில் 2006, டிசம்பர் மாதம் வெளியான கட்டுரை.