

WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,578
Date uploaded in London – 24 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 6
முதலில் கம்பன் சொல்லும் சுவையான விஷயத்தைக் காண்போம்
அனுமாருக்கு இரண்டு இறக்கை! கம்பன் புதுத் தகவல்!
குட்டி யானைக்குக் கொம்பு முளைச்சதாம் பட்டணம் எல்லாம் பறந்தோடிப் போச்சாமென்று சிறு வயதில் பாடக் கேட்டிருப்போம்.
கம்பன் சொல்கிறான் அனுமனுக்கு இரண்டு இறக்கைகள் என்று; அதை வைத்துதான் அவன் பறந்தானாம்.
அதுவும் அனுமன் வாயிலாகவே அதைச் சொல்லுகிறான். படிக்கச் சுவையாக இருக்கிறது.
இதோ அந்தப் பாடல்
முற்றும் நீர் உலகம் முற்றும் விழுங்குவான் முழங்கி முந்நீர்
உற்றதே எனினும் அண்டம் உடைந்துபோய் உயர்ந்த தேனும்
இற்றை நும் அருளும் எம் கோன் ஏவலும் இரண்டு பாலும்
கற்றை வார் சிறைகள் ஆகக் கலுழனின் கடப்பல் காண்டீர்
பொருள்:-
கடலால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் முழுகச் செய்து அழிக்கும் பொருட்டு கடல் பொங்கி வந்தாலும் (சுனாமி ஏற்பட்டாலும்), இந்த உலக உருண்டையே உடைந்து போய் உயர்ந்து வானத்தில் சென்றாலும், சற்றும் கலங்காமல் கருடன் (கலுழன்) போல இக்கடலைக் கடந்து செல்வேன். எப்படியெனில் எனக்கு இரண்டு இறக்கைகள் முளைத்துள்ளன. ஒரு இறக்கை நீங்கள் எல்லோரும் என் மீது வைத்துள்ள கருணை; மற்றொரு இறக்கை இராமபிரான் போட்ட கட்டளை! நான் கடலைக் கடப்பதைக் காணத்தான் போகிறீர்கள்!
என்ன அருமையான கற்பனை. கருணை/அன்பு என்ற ஒன்றும் தலைவனின் கட்டளை என்ற ஒன்றும் அனுமனை கடலையே கடக்க வைத்துவிட்டது. இவைதான் இரண்டு இறக்கைகள் (சிறைகள்)..
இந்தப் பாடலில் உள்ள சில விஞ்ஞானச் செய்திகளையும் அலசி ஆராய்வோம். வெள்ளைக்காரன் எழுதிய புத்தகங்களில் எல்லாம் ஏதோ பூமி உருண்டை என்பதை அவந்தான் கண்டு பிடித்தான் என்று எழுதியிருப்பார்கள். ஆனால் நாமோ பூமியைக் குறிப்பிடத் தொடங்கிய நாளிலிருந்தே அண்டம் (முட்டை) என்ற சம்ஸ்கிருதச் சொல்லையே பயன்படுத்துவோம். பூமி முட்டை வடிவமானது என்பதோடு கடலால் சூழப்பட்டது என்பதையும் ஒவ்வொரு பாடலிலும் சொல்லுவோம்.
அது மட்டுமல்ல; சுனாமி போன்ற பெரிய தாக்குதலில்– இயற்கைச் சீற்றத்தில் உலகமே முழுகி பெரும் பிரளயம் வரும் என்பதும் நமக்குத் தெரியும்.. அண்ட சராசரங்கள் என்ற சம்ஸ்கிருதச் சொற்றொடர் மூலம், இந்தப் பிரபஞ்சமே வட்டவடிவமனது என்பதையும் நாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லிவிட்டோம்.
xxxx

ஹனுமான் சாலீஸாவின் மேலும் நான்கு பாடல்களை எடுத்துக்கொள்வோம்-
8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா
ராம லக்ஷமண ஸுதா மன பஸியா
9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா
விகட ரூப தரி லங்க ஜராவா
10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே
ராமசந்த்ர கே காஜ் ஸவாரே
11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ
ரகுவீர ஹரஷி உர லாயே
இந்த நான்கு ஸ்லோகங்களின் பொருள்
8.ராம பிரானுடைய கல்யாண குணங்களைக் கேட்டு மகிழ்கின்றீர்கள் ராமர், சீதை, லெட்சுமணன் ஆகியோர் இருதயத்தில்/ உள்ளத்தில் குடிகொண்டுள்ளீர்கள். தாங்களும் அவர்களை உங்கள் உள்ளத்தில் வைத்திருக்கிறீர்கள் .
9.சீதையின் முன்னர் தோன்றியபோது சின்ன வடிவத்துடனும் இலங்கையத் தீக்கிரையாக்கியபோது பெரிய வடிவத்துடனும் தோன்றினீர்கள்.
10.அரக்கர்களை அழித்தபோது கோர உருவம் எடுத்து அவர்களின் கதையை முடித்தீர்கள் இவ்வாறு செய்து ராமனின் அவதார பனி நிறைவேற உதவினீர்கள்.
11.சஞ்சீவி பர்வதத்தைக் கொணர்ந்து, லட்சுமணனை உயிர்ப்பித்தவுடனே ராமர் மகிழ்ந்து போய் , உங்களைக் கட்டிக்கொண்டார் .
இவை நான்கும் ஹனுமானின் வீரப்பிரதாபங்களை நினிய்வு கூறுகின்றன. இவை எல்லாம் அவர் செய்த சூப்பர்மேன் டார்ஜான் வேலைகள் !
xxxxx

ஹனுமான் பற்றி புரந்தரதாசர், தியாகராஜர் , முத்துசாமி தீட்சிதர் போன்றோரும் அருணகிரிநாதரும் கிருதிகளில் குறிப்பிடுகிறார்கள் சில கிருதிகளை மேற்கோள்களாக எடுத்துக் கொள்வோம்.
திருப்புகழில் ராமாயண சுந்தர காண்டம்
உடுக்கத் துகில்வேணு நீள்பசி
யவிக்கக் கனபானம் வேணுநல்
ஒளிக்குப் புனலாடை வேணுமெய் யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள்
இருக்கச் சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணுமிவ் வகையாவுங்
கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
யக்கக் கடலாடி நீடிய
கிளைக்குப் பரிபால னாயுயி ரவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமு
மழைத்துத் தரவேணு மூழ்பவ
கிரிக்குட் சுழல்வேனை யாளுவ தொருநாளே
குடக்குச் சிலதூதர் தேடுக
வடக்குச் சில தூதர் நாடுக
குணக்குச் சில தூதர் தேடுக வெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி
யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ
அடிக்குத் திரகார ராகிய
அரக்கர்க் கிளையாத தீரனு
மலைக்கப் புறமேவி மாதுறு வனமேசென்
றருட்பொற் றிருவாழி மோதிர
மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவிய பெருமாளே — கதிர்காமம் திருப்புகழ்
xxxxx
பொருள்
குடக்கு சில தூதர் தேடுக
வடக்கு சில தூதர் நாடுக
குணுக்கு சில தூதர் தேடுக என மேவி
குடக்கு = மேற்கே சில தூதர்கள் = சில தூதுவர்கள்
தேடுக = (சென்று) தேடுங்கள் வடக்குச் சில தூதர்கள் = வட திசைப் புறம் சென்று சில தூதர்கள் நாடுக =தேடுங்கள்
குணக்கு = கிழக்கே சில தூதர்கள் தேடுக = தேடுங்கள் என மேவி = என்று கூறி அனுப்பி வைத்து.
குறிப்பில் குறி காணும் மாருதி
இனி தெற்கு ஒரு தூது போவது
குறிப்பில் குறி போன போதிலும் வரலாமோ
குறிப்பில் குறி காணும் = குறிப்பினாலேயே குறித்த பொருளைக். காணவல்ல மாருதி = அனுமன்.
இனி தெற்கு ஒரு தூது போவது = இனி தெற்கே ஒப்பற்ற தூதுவனாகப் போக வேண்டியது குறிப்பில் =
சொல்லியனுப்பிய குறிப்பு விவரத்தின்படி குறி போன
போதிலும்= குறித்த பொருள் கிட்டுதல் தவறிப் போன போதிலும் வரலாமோ = திரும்பி வீணே வருதல் நல்லதோ (நல்லதல்ல என்று சுக்கிரீவன் சொல்லி அனுப்ப).
அடி குத்திரகாரர் ஆகிய
அரக்கர்க்கு இளையாத தீரனும்
மலைக்கு அப்புறம் மேவி மாது உறு வனமே சென்று
அடி = சுத்த குத்திரர்காரர் ஆகிய =வஞ்சகர்களாகிய
அரக்கர்க்கு இளையாத = அரக்கர்களிடம் தோற்று இளைக்காத தீரனும் = தீரனாய் அலைக்கு அப்புறம் மேவி = கடலைத் தாண்டி அப்புறம் (இலங்கைக்குச் சென்று) மாது உறும் வனமே சென்று = மாதாகிய சீதை இருந்த அசோக வனத்தை அடைந்து.
அருள் பொன் திரு ஆழி மோதிரம்
அளித்து உற்றவர் மேல் மனோகரம்
அளித்து கதிர் காமம் மேவிய பெருமாளே.
அருள் = இராமர் தந்தருளிய பொன் = அழகிய
ஆழி மோதிரம் அளித்து = ஆழி மோதிரத்தைக் கொடுத்தவராகிய உற்றவர் மேல் = அனுமனுக்கு
மனோகரம் அளித்து = அன்புடன் அனுக்கிரகம் செய்து கதிர் காமத்தில் மேவிய = கதிர்காமத்தில் வீற்றிருக்கும் பெருமாளே= பெருமாளே.
xxxxx
இலங்கையில் ‘அஞ்சிலே ஒன்றான’ அக்னியைப் பரவச் செய்த அஞ்சனை மைந்தன் ஆற்றலை சந்தம் கொஞ்சச் சாற்றுகிறார் அருணகிரியார்.
இலங்கையில் இலங்கிய இலங்களுள்
இலங்கு அருள் இல் எங்கணும்
இலங்கு என முறை ஓதி இடும் கனல் குரங்கு
xxxx
தியாகராஜர் கிருதி
ப. பாஹி ராம தூ3த ஜக3த்-ப்ராண குமார மாம்
அ. வாஹி(னீ)ஸ1 தரண த3ஸ1 வத3ன ஸூனு தனு ஹரண (பா)
ச1. கோ4(ரா)ஸுர வாரான்(னி)தி4 கும்ப4 தனய க்ரு2த கார்ய
பாரிஜாத தரு நிவாஸ பவன துல்ய வேக3 (பா)
ச2. பாத3 விஜித து3ஷ்ட க்3ரஹ பதித லோக பாவன
வேத3 ஸா1ஸ்த்ர நிபுண வர்ய விமல சித்த ஸததம் மாம் (பா)
ச3. தரு(ணா)ருண வத3(னா)ப்3ஜ தபன கோடி ஸங்காஸ1
கர த்4ரு2த ரகு4வர ஸு-சரண கலி ம(லா)ப்4ர க3ந்த4 வாஹ (பா)
ச4. கருணா ரஸ பரிபூர்ண காஞ்ச(னா)த்3ரி ஸம தே3ஹ
பரம பா4க3வத வரேண்ய வரத3 த்யாக3ராஜ வினுத (பா)
Meaning
என்னைக் காப்பாய், இராம தூதனே! உலக மூச்சுக்காற்றின் மைந்தா!
கடலைத் தாண்டியவனே! பத்துத் தலையன் மைந்தனை வதைத்தவனே!
என்னைக் காப்பாய், இராம தூதனே! உலக மூச்சுக்காற்றின் மைந்தா!
1. கொடிய அரக்கரெனும் கடலினை, கும்ப முனி போன்று, வற்றடித்தவனே!
பாரிசாத மரத்தினடியில் உறைபவனே! வாயு நிகர் வேகத்தோனே!
என்னைக் காப்பாய், இராம தூதனே! உலக மூச்சுக்காற்றின் மைந்தா!
2. கால்களால் தீய கோள்களை வென்றவனே! வீழ்ந்தோரைப் புனிதப்படுத்துவோனே!
மறைகள் மற்றும் சாத்திரங்களில் வல்லோனே! தூய உள்ளத்தோனே! எவ்வமயமும்
என்னைக் காப்பாய், இராம தூதனே! உலக மூச்சுக்காற்றின் மைந்தா!
3. இளஞ்சூரியன் நிகர் கமல வதனத்தோனே! பரிதி கோடி ஒருங்கிணைந்த ஒளியுடையோனே!
இரகுவரனின் புனிதத் திருவடிகளைக் கையிலேந்துவோனே! கலி மலமெனும் கார்முகிலினை விரட்டும் புயலே!
என்னைக் காப்பாய், இராம தூதனே! உலக மூச்சுக்காற்றின் மைந்தா!
4. கருணை உணர்வு நிறைந்தோனே! பொன்மலை நிகருடலோனே!
தலைசிறந்த பாகவதர்களால் வேண்டப்படுவோனே! வரமருள்வோனே! தியாகராசனால் போற்றப் பெற்றோனே!
என்னைக் காப்பாய், இராம தூதனே! உலக மூச்சுக்காற்றின் மைந்தா!
Word Meaning
உலக மூச்சுக்காற்று – வாயு
பத்துத் தலையன் மைந்தன் – இராவணின் மைந்தன் – அட்ச குமாரன்
கும்ப முனி – அகத்தியர்
தீய கோள்கள் – செவ்வாய் மற்றும் சனி
கலி மலம் – கலி யுகத்தின் தீயவைகள்
பொன்மலை – மேரு மலை
xxxxx

ராமனின் நாமம் ஒலிக்கும் இடம் எல்லாம் அனுமன் வந்து மறைவாக நின்று கொண்டு ஆனந்தக் கண்ணீர் விடுகிறார் என்று , எல்லோரும் சொல்லும் பிரபல ஸ்லோகமும் சொல்லும்:–
ஆஞ்சநேயமதி பாடலானனம் காஞ்சநாத்ரி கமனீய விக்ரஹம்|
பாரிஜாத தருமூலவாசினம் பாவயாமி பவமான நந்தனம்||
யத்ரயத்ர ரகுநாத கீர்த்தனம் தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்சலிம்|
பாஷ்பவாரி பரிபூர்ண லோசனம்,மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்||
இதன் பொருள்
பவன குமாரனுக்கு/ காற்றின் மைந்தனுக்கு நமஸ்காரம்
அஞ்சனையின் மைந்தனே அரக்கர்களை அழி ப்பவனே
பொன் மலை போல் உருவினன் , அழகிய வடிவுடையான்
பாரிஜாத மரத்துக்கு அடியில் வசிப்பவன்,
எங்கெங்கெல்லாம் ராம பிரானின் நாமம் கேட்கிறதோ
அங்கெங்கெல்லாம் இரு கரம் கூப்பி நின்று
ஆனந்தக் கண்ணீர் விடுகிறாய்
அப்பேற்பட்ட மாரு தியே , அரக்கர்களை அழித்தவனே
உன்னை வணங்குகிறோம்
To be continued……………………………………..
–subham—
Tags- ஹனுமான் சாலீஸா விளக்கக் கதைகள் – Part 6, பாரிஜாத, ஆஞ்சநேயமதி பாடலானனம், காஞ்சநாத்ரி கமனீய விக்ரஹம்,