சர்ச்சைக்குரிய திருக்குறள் 503- வள்ளுவன் சொல்வது என்ன ? இதோ 4 கதைகள் (Post No.13,582)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,582

Date uploaded in London – 25 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

குறள் 503-க்கு உரை எழுதியவர்கள் வழ  வழா  கொழ கொழா என்று உரை எழுதி இருக்கிறார்கள்.. முதலில் குறளைப்  படியுங்கள். பின்னர் உரையைப் படியுங்கள். உங்கள் மனதில் தோன்றுவதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள் பின்னர் நான் தரும் விளக்கத்தைப் படியுங்கள்.

 வெண்டைக்காயை விளக்கெண்ணெயில் வதக்கி, போதாக்குறைக்கு கற்றாழையையும் சேர்த்து இலையில் பரிமாறியது போலத் தோன்றுகிறது !

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு.–குறள் 503:

மு.வரதராசன் விளக்கம்:

அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

அருமை என்ற சொல் தமிழில் இரு பொருள்களில் பயன்படுவதால் நாம் திணறுவோம்.

அருமை= அபூர்வமானது RARE ; அருமை= மிகச் சிறந்தது EXCELLENT.

xxxxx

பரிமேலழகர்

அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும் – கற்றற்கு அரிய நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார் மாட்டும், தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது – நுண்ணியதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை அரிது. (வெண்மை: அறியாமை, அஃது அவர்மாட்டு உளதாவது, மனத்தது நிலையாமையான் ஒரோவழியாகலின், ‘தெரியுங்கால்’ என்றார். காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம். இவ்வளவைகளான் இக்குணமும் குற்றம் தெரிந்து குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)

மணக்குடவர்

கற்றற்கரிய நூல்களைக் கற்றுக் குற்றமற்றார்மாட்டும் ஆராயுங்கால் குற்றமின்மை இல்லை (DOUBLE NEGATIVE WORDS ALWAYS CONFUSE PEOPLE).

பரிப்பெருமாள்

கல்வியுடையார் உள்ளும் புறம்பும் தூயாரைத் தேறலாம் என்பது துரோணாச்சாரியார் மதம் ; அவ்வளவில் தேறலாகாது என்று இது கூறப்பட்டது.

பரிதியார்

நல்ல கல்வி கற்றார் குற்றமற்றோர் . விசாரித்தால் குற்றப்படுமாகையால் , அவர்களைக் குற்றமுடையாரென்று கைவிடுவான் அல்லன்

(ரிஷி மூலம், நதி மூலம் பார்க்காதே என்பது தமிழ்ப் பழமொழி)

கவிராஜ பண்டிதர்

அறிவு உள்ளவர்களையே தெளிக

xxxxx

1.பெரியோர்களும் தவறு செய்வார்கள்; ஆனைக்கும் கூட அடி சறுக்கும்.

அல்லது

2.இல்லை; பெரியோர்கள் தவறு செய்ய மாட்டார்கள்.

எது சரி?. உரையையும் குறளையும் வைத்துப் பேசுங்கள்

xxxxx

ஏன் இந்த ஆராய்ச்சி ?

என் இனிய நண்பர் ஹெல்த்கேர் பத்திரிகை ஆசிரியர் எனக்கு ஈ மெயில் அனுப்பினார்

ஹெல்த்கேர் ராஜா

Thu, 18 Jul, 03:47

to santhanam, me

அன்புடையீர் நமஸ்காரம்,

குறள் 503 :

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்

இன்மை அரிதே வெளிறு.

இக்குறள் பற்றி தாங்கள் கட்டுரை ஏதும் எழுதி இருந்தால் அடியேனுக்கு அந்தப் பதிவை அறியத்தாருங்கள்.

நன்றி.

xxx

Santanam Swaminathan <swaminathan.santanam@gmail.com>

Fri, 19 Jul, 05:20

to ஹெல்த்கேர்

DEAR RAJA,

இதுவரை எழுதவில்லை. நீங்கள் சுட்டிக்காட்டிய பின்னர் படித்துப் பார்த்தேன்.

சுவையான, குழப்பமான பொருள் தரும் குறள்.

இரு விதமான உரைகள் உள .

1.யானைக்கும் கூட அடி சறுக்கும்; பெரியோர்களும் கூட பிழை செய்வர்; மிக அரிதாக.

2.பெரியோர்கள் பிழையே செய்யமாட்டார்கள் .;நீங்கள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு

தேடிப்பார்த்தாலும் தவறுகளைக் காண்பது அரிது.

xxxx

இது பற்றிய ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பார்த்துவிட்டு கட்டுரை எழுதுகிறேன்.

இது பற்றி யாராவது ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியிருந்தால் எனக்குத் தெரிவிக்க வேண்டுகிறேன்.

நன்றி.

xxxxxx

ஹெல்த்கேர் ராஜா

19 Jul 2024, 07:51

to me

பெரியோர்கள் பிழையே செய்யமாட்டார்கள் .

நீங்கள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு தேடிப்பார்த்தாலும் தவறுகளைக் காண்பது அரிது.

இது தான் சரியான உரை என்று நம்புகிறேன் அய்யா.மிக்க நன்றி

xxxxx

ஆதி சங்கரர் எழுதிய விவேக சூடாமணியையும்ராம கிருஷ்ண பரமஹம்சரின் உபதேச மஞ்சரியையும் படித்த பின்னர் பெரியோர்களிடமும் குறை உண்டு என்ற கருத்துக்கு நான் வந்துவிட்டேன். ஆனால் அதை என்னைப்  போன்ற சிறியவர்கள் சுட்டிக்காட்டக் கூடாது. அறிவிலும் ஒழுக்கத்திலும் உச்சாணிக் கொம்பிலுள்ள சந்யாசிகள் சாணக்கியன் போன்ற அறிவாளிகள் சொல்லலாம்

இதோ பெரியோர் வாக்குஇதோ 4 சம்பவங்கள்

ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேச மொழிகள் பக்கம் 59:-

1.காலஞ் சென்ற கேசவ சந்திர சேனர் ஒரு நாள் தட்சிணேஸ்வரத்திலுள்ள ஆலயத்துக்கு வந்து ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம்  சொன்னார், ” சுவாமி! பண்டிதர்கள் சாஸ்திரங்கள் பலவற்றைப் படித்தபோதும் உண்மையான ஆத்ம தத்துவத்தைப் பற்றி ஏன் ஒன்றுமே தெரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் ? என்று கேட்டார். 

அதற்கு பரமஹம்சர் “பருந்தும் கழுகும் ஆகாயத்தில் வெகு உயரத்தில் பறக்கிறதே நீர் பார்க்கிறீர் .ஆயினும் அ வைகள் எந்தக் குழியில் அழுகிய பிணங்கள் கிடக்கின்றன என்று கண்களை கீழ்நோக்கிய வண்ணமே வைத்திருக்கின்றன.அது போல பண்டிதர்கள் என்பவர்கள் சாஸ்திரங்களைக் கற்ரகற்றவர்களாக இருப்பினும் காமினி -காஞ்சனம் (பெண் -பொன் ) போன்ற உலகப் பற்றுகளால் பந்தப்பட்ட மனம் உடையவர்களாக ஆகிறார்கள். ஆகையால் அவர்கள் மெய்ஞானத்தைப் பெறுவதில்லை.” என்று பதில் சொன்னார்.

xxxx

அனுமனுக்கும் அஹம்காரம் இருந்தது !

2.உருவமுள்ளவாயினும் உருவம் இல்லாதவனாயும் ஈசுவரன் ஹநுமானுக்குத் தரிசனம் தந்தருளினான் .என்றாலும் ஹனுமான் தான்   ஈசுவரதாசன்  என்ற அஹங்காரத்தைக் கொண்டவனாகவே இருந்தான் .நாரதர், ஜனகர், ஸநந்தனர் , ஸனத்குமாரர் ஆகியவர்களுடைய விஷயமும் இப்படித்தான். அவர்கள் பிரம்ம ஞானத்தை அடைந்தவர்கள் என்றாலும் , அவர்கள் ஆற்றோட்டத்தின் சப்தத்தைப்போல் ஈசுவரனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு சென்றனர். இதனால் அவர்களிடத்தும் சிறிது  அஹங்காரம் இருந்தது !

XXXX

சங்கரரும் சண்டாளனும் , பக்கம் 440

3.  ஒரு பறையன், மாடு அடிக்கும் இடத்திலிருந்து வருகையில் , தன கழுத்தில் வைத்திருந்த காவடியின்  இரு பக்கத்திலும் கூடைகளைத் தொங்கவிட்டு அதில் மாமிசத்தை வைத்திருந்தான்.அப்போது சங்கரர், ஆற்றில் ஸ்னானம் செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். தற்செயலாய், அவன் தவறி, மஹான் மீது பட்டுவிட்டான் .

அடே , சண்டாளா ! நீ என் மீது பட்டுவிட்டாயே ! என்றார் . அதற்கு அவன் சொன்னான்,

சுவாமி! நீங்கள் என் மீது படவுமில்லை. நானும் உங்கள் மீது படவுமில்லை.தங்களுடைய ஆத்மாவானது சரீரமா? புத்தியா? மனமா?  இவைகளில் எது? தாங்கள் யார் ? எனக்குச் சொல்லுங்கள் . இந்த உலகமானது ஸத்வ , ரஜஸ், தமோ முக் குணங்களால் ஆக்கப்பட்டிருக்கிறது. அவை ஒன்றோடும் ஆத்மா சம்பந்தப்பட்டிருப்பதில்லை என்று தங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்றான். சங்கரர் வாய் பேசாது நின்று விழிக்கலானார்.

XXXX

4.ஜனகரும் சந்யாசினியும் , பக்கம் 338

ஒரு சமயம்,   சந்யாசினி ஒருத்தி மாமன்னன் ஜனகருடைய அரசவைக்கு வந்தாள் ; அவளுடைய முகத்தைக் கண்ணெடுத்துப் பார்க்காமலேயே , ஜனகர் அவளை வணங்கினார். இதைக் கண்டு  சந்யாசினி,

ஓய், ஜனகரே ! என்ன ஆச்சர்யம் ! இன்னுமா நீர் பெண்களைக் கண்டு அஞ்சுகிறீர் ? என்றாள் .

பூரண ஞானம் அடைந்தவன் குழந்தையின் சுபாவத்தைப் பெறுகிறான். அவனுக்கு ஆண் , பெண்  என்ற வித்தியாசம் தோன்றுவதில்லை ஆயினும் உலக நடைக்காக ஜனகர் அவ்வாறு செய்தார் .

இவை ஆன்மீக உதாரணங்கள்; ஆனால் தமிழ் வேதம் தந்த வள்ளுவனோ  அரசியல் பகுதியில் 503 ஆவது குறளை வைத்தான் ; இருந்தபோதிலும் பெரியோர் எல்லாம் பெரியாரும் அல்லர்; சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்  என்ற தமிழ் முதுமொழியையும் நினைவு கூறுவோம்.

xxx

Shuddhananda Bharati

Though deep scholars of stainless sense
Rare is freedom from ignorance.

Or

G U Pope

Though deeply learned, unflecked by fault, ’tis rare to see,

When closely scanned, a man from all unwisdom free.—503

Or

Even among deep scholars of spotless hearts, it is difficult to find one perfectly free from ignorance.

Or

Even among men of rare learning and virtue, on close  scrutiny,

Some patches of ignorance could be spotted.

Great statesman says,

Even those who have successfully acquired rare learning  and are known to be free from defects , may betray some incompetence under close examination.

Rajaji

Dr S M Diaz, I G of Police, says

Even Homer nods sometimes is a well known statement. Another statement attributed to Aristotle is There is a foolish corner in the brain of a sage.

ஆக ஆங்கிலத்தில் கருத்து சொன்ன அத்தனை பேரும் , பெரியோர்களிடத்தும் குறைகள் உண்டு என்று சொல்கிறார்கள். நமது நாட்டில் புத்தர், ஆதிசங்கரர் மீது கூட சுவாமி விவேகானந்தர் குறை சொன்னார். (Please read Swami Vivekananda’s Talks); புத்தருடைய விசால மனது ஆதி சங்கரருக்கு இல்லை என்றார் ; புத்தர் ஸம்ஸ்க்ருதத்தைப் புறக்கணித்ததால் அந்த மதம் நலிவடைந்தது என்றார் சுவாமி விவேகானந்தர்.

பெண்களை கன்னிமார்களாகச் சேர்க்கவே மாட்டேன் என்று அடம்பிடித்த புத்தரை, பிரதம சீடன் ஆனந்தன் கெஞ்சிக் கதறி பெண்களையும் புத்த மதத்தில் சேர்க்க வைத்தான். புத்தரே வருத்தப்பட்டு என் மதம் 500 ஆண்டுகளுக்கு மேல் இராது என்றார் ; அதுவும் உண்மையானது; தோன்றிய நாட்டில் புத்த மதம் அழிந்துவிட்டது (Please read Dr Radhakrishnan’s beautiful Introduction to Dhammapada) ; காந்திஜி படம் எல்லா ஆபீஸ்களிலும் அலங்ககரிப்பது போல எல்லா இடங்களிலும் புத்தர் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்.; ஒவ்வொரு நிமிடத்திலும் கோடிக்கணக்கான  விலங்குகளைக் கொன்று மக்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள் . அவை எல்லாம் புத்தரைப் பார்த்து சிரி, சிரி — என்று சிரித்துக்கொண்டு இருக்கின்றன (வள்ளுவனுக்கும் இதே கதிதான்)

xxxxx

आरूढशक्तेरहमो विनाशः
कर्तुन्न शक्य सहसापि पण्डितैः ।
ये निर्विकल्पाख्यसमाधिनिश्चलाः
तानन्तरानन्तभवा हि वासनाः ॥ ३४२ ॥

ārūḍhaśakterahamo vināśaḥ
kartunna śakya sahasāpi paṇḍitaiḥ |
ye nirvikalpākhyasamādhiniścalāḥ
tānantarānantabhavā hi vāsanāḥ || 342 ||

342. Even wise men cannot suddenly destroy egoism after it has once become strong, barring those who are perfectly calm through the Nirvikalpa Samadhi. Desires are verily the effect of innumerable births.

https://www.wisdomlib.org/hinduism/book/vivekachudamani/d/doc144778.html

விவேக சூடாமணி 342 ஆவது ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் சொல்கிறார்:

அறிவாளிகளும் கூட திடீரென்று  அஹம்காரத்தை எளிதில் அகற்ற முடியாது. பல பிறப்புகளில் வந்தது ஆசை; நிர்விகல்ப சமாதி எய்தியவர்கள் மட்டுமே இதற்கு விதி விலக்கு  (நிர்விகல்ப சமாதி என்பது, உயர்ந்த வகை சமாதி; இது வேறுபாடுகள் அனைத்தையும் கடந்த நிலை)

யான் எனது என்னும்செருக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்- குறள் 346

English Couplet 346:

Who kills conceit that utters ‘I’ and ‘mine’,
Shall enter realms above the powers divine.

XXXX

கி.வா. ஜ . திருக்குறள் பதிப்பு காட்டும் ஒப்புமை

கம்ப ராமாயணம்  வாலி வதைப் படலம்

3978.  ‘வில் தாங்கு வெற்பு அன்ன

      விலங்கு எழில் தோள! மெய்யம்மை

உற்றார் சிலர்; அல்லவரே

      பலர்” என்பது உண்மை.

பெற்றாருழைப் பெற்ற பயன்

      பெறும் பெற்றி அல்லால்,

அற்றார் நவை என்றலுக்கு

      ஆகுநர், ஆர்கொல்?’ என்றான்.

     வில் தாங்கு வெற்பு அன்ன- வில்லை ஏந்திய மலையை ஒத்து;

விலங்கு எழில்தோள -விளங்குகின்ற ஆழகமைந்த தோள்களை

உடைய இலக்குவனே! மெய்ம்மை உற்றார் சிலர் -(இவ்வுலகில்) தவறாத

நல்லொழுப்பம் பொருந்தியவர் ஒரு சிலரே ஆவர்;அல்லவரே பலர் -அந்

நல்லொழுக்கம் கடைப் பிடிக்காதவரே பலர்;என்பது உண்மை –

என்பதுதான் உண்மையாகும்.  பெற்றார் உழை -நம்மை நண்பராகப்

பெற்றவரிடத்தில்;பெற்ற பயன் -பெறுதற்கேற்ற அளவில் காணப்படும் நல்ல

பலனை;பெறும் பெற்றி அல்லால் -பெற்றுக் கொள்ளும் தன்மையல்லாமல்;

நவை அற்றார் என்றலுக்கு -குற்றமற்றவர் என்று சொல்வதற்கு;ஆகுநர்

ஆர்கொல் -உரியவர் யாருளர்?’ என்றான் -என்று (இராமன்) கூறினான்.

     உலகில் நல்லொழுக்கம் உடையார் சிலராகவும்அவ்வொழுக்கம்

இல்லாதார் பலராகவும் இருப்பதால் நாம் நண்பர்களிடத்து உள்ள குறைகளை

நோக்காது குணங்களை ஏற்றுக்கொண்டு பயன் அடைய வேண்டும் என்பது

இராமனின் அறிவுரையாகும்.  குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்ற

பழமொழியினையும் ‘நல்லார் எனத்தான் நனிவிரும்பிக் கொண்டாரை, அல்லால்

எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்,நெல்லுக்கு உமி உண்டு, நீர்க்கு

நுரையுண்டு, புல்லிதழ் பூவிற்கு முண்டு‘ (நாலடி – 221) குணம் நாடிக் குற்றமும்

நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ (குறள் – 504); என்பனவற்றையும்

காண்க.

— subham—

Tags –   ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ , குறள் 503, சர்ச்சை, புத்தர், சங்கரர், விவேகானந்தர், ஜனகர், சன்யாசினி, சண்டாளன் கேசவ சந்திரர், 4 கதைகள் , வள்ளுவர், கொல்லாமை       

Leave a comment

Leave a comment