Post No. 13.581
Date uploaded in London – —25 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
14-8-24 மாலைமலர்இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
ஜோதிட மேதை டாக்டர் பி.வி.ராமன் – 1
ச. நாகராஜன்
இன்று உதிக்கின்ற நாள் நல்ல நாளாக நமக்கு அமைய வேண்டும் என்று விரும்பாதோர் இல்லை. அது நல்ல நாள் தானா என்று அறிய விரும்புவோர் பலரும் ஜோதிடத்தை அணுகுவதில் வியப்பே இல்லை.
ஆனால் அதே சமயம் ஜோதிடத்தை நம்பாதே என்று சொல்வோரும் உண்டு.
ஜோதிடத்தை உலக அரங்கில் புகழோங்க வைத்து அதை அறிவியல் ரீதியாக உயரத்தில் ஏற்றி பிரமிக்க வைத்தவர் பங்களூர் வெங்கட ராமன் ஆவார். பி.வி.ராமன் என்ற பெயரை ஜோதிட ஆர்வம் கொண்டோரில் அறியாதார் யாரும் இல்லை.
பிறப்பும் இளமையும்
பி.வி.ராமன் பங்களூருக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 1912-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ம் நாளன்று பிறந்தார். கிராமத்தில் ஆரம்பக் கல்வியை முடித்தவர் பங்களூரில் பட்டப்படிப்பை முடித்தார். ஆனால் இயல்பான ஆர்வம் இவருக்கு ஜோதிடத்தின் மேலேயே இருந்தது.
இதற்குப் பெரிதும் காரணமாக அமைந்தவர் இவரது பாட்டனாரான திரு சூர்யநாராயண ராவ் என்னும் பிரபல ஜோதிடரே.
சூர்யநாராயண ராவ்
1885-ம் ஆண்டு ஒரு நாள் தன் சக குடும்ப உறுப்பினர்களுடன் கர்நாடகத்தில் ஷிமோகாவுக்கு ஒரு கல்யாணத்திற்காகச் சென்று கொண்டிருந்த ஒரு இளைஞர் குப்பி ரயில் நிலையத்தில் இறங்கினார்.
அப்போது தான் ஷிமோகாவுக்கு எஸ்.எம். ரயில்வே, ரயில் பாதையை அமைத்துக் கொண்டிருந்தது. ஆகவே அவர் மாட்டு வண்டியில் தான் ஷிமோகாவுக்குச் செல்ல வேண்டும். 150 மைல் தூரத்தில் உள்ள ஷிமோகாவை அடைய நாள் ஒன்றுக்கு 20 அல்லது 25 மைல் வீதம் சென்றால் ஏழு அல்லது எட்டு நாட்கள் ஆகும்.
மாட்டு வண்டியில் ஏறிய இளைஞருக்கு நடந்து வந்து கொண்டிருந்த ஒரு ஏழை வைதிகர் தென்பட்டார். அவரிடம் “நீங்கள் எங்கே போக வேண்டும்” என்று கேட்ட இளைஞருக்கு, “ ஷிமோகாவுக்கு ரெவரண்ட் மிஸ்டர் ராபர்ட்ஸைப் பார்க்கப் போகிறேன். அவரிடம் நான் முன்ஷியாகப் பணி புரிகிறேன். என் பெயர் சுப்பராய சாஸ்திரி” என்ற பதில் வந்தது.
அவரை, ”என்னுடன் வண்டியில் வாருங்கள்” என்று அழைத்தார் அந்த இளைஞர். அடுத்த எட்டு நாட்களில் அவருடனான உரையாடல் அந்த இளைஞரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றியது.
சகல வித கலைகளையும் நுட்பங்களையும் கூறும் இந்து மத நூல்களை அவர் அப்படியே ஒப்புவித்து அர்த்தமும் சொன்னார். ஹிந்து மத நூல்கள் அனைத்தும் தற்காலத்திய அறிவியலுக்கு ஒத்து வராதவை என்ற எண்ணம் திடமாக இருந்த அந்த இளைஞரின் மனம் மாறியது.
அந்த இளைஞர் தான் பி.வி.ராமனின் பாட்டனாரான சூர்ய நாராயண ராவ். (தோற்றம் 12-2-1856 மறைவு 13-3-1937). வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கிய அவர் ஜோதிடக் கலையை நன்கு கற்று பிரபலமான ஜோதிடராக ஆனார். முதல் உலகப் போர் வருவதை முன் கூட்டியே சொன்னவர் அவர். எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.
தன் பேரனான பிவி.ராமனுக்கு ஜோதிடத்தின் நுட்பத்தை விவரித்து அவரைப் பெரும் ஜோதிடராக ஆக்கியவர் இவரே.
அஸ்ட்ராலஜிகல் மாகஸைன்
1895-ல் அஸ்ட்ராலஜிகல் மாகஸைன் என்ற பத்திரிகையை ஆரம்பித்து ஜோதிட சம்பந்தமான கட்டுரைகளை வெளியிட்டு உலகின் பார்வையை ஜோதிடத்தின் பக்கம் திருப்பினார் சூர்யநாராயணராவ். பல்வேறு ராஜாக்களும் மந்திரிகளும் வைசிராய்களும், பிரமுகர்களும் அவரிடம் ஜோதிடம் கேட்டு பிரமித்தனர். இருபது வருடங்களுக்கும் மேலாக நடந்த பத்திரிகை அவரது உடல்நிலை காரணமாக நிறுத்தப்பட்டது.
மிகுந்த கஷ்டப்பட்டு தன் பாட்டனார் ஆரம்பித்த பத்திரிகையை மீண்டும் 1936-ம் வருடம் ஆரம்பித்த பி.வி.ராமன் 1998 முடிய அதன் ஆசிரியராக தான் மறையும் வரை 62 ஆண்டுகள் இருந்தார். அதில் தான் அவரது கணிப்புகள் இடம் பெற்று வந்தன.
அதில் அவர் குறிப்பிட்ட ஏராளமான கணிப்புகளில் சிலவற்றை மட்டும் இங்கு கீழே பார்க்கலாம்.
பாகிஸ்தான் பிரிவினை
1947-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரிவினை ஏற்படும் என்பதை அவர் முன்னதாகவே உரைத்தார். ஆந்திரபிரதேசம், தெலங்கானா பிரிவினை பற்றியும் அவர் முன்னதாகவே எடுத்துரைத்தார்.
காந்திஜி மறைவு
மகாத்மா காந்திஜியின் மறைவு குறித்து 1947-ம் ஆண்டு ஏப்ரல் மாதமே அவர் சூசகமாகக் குறிப்பிட்டு விட்டார். “மாபெரும் இந்தியத் தலைவர் சனி கிரகம் கடகத்தில் நுழையும் போது கொல்லப்படுவார்” என்ற அவரது வரிகள் 1948, ஜனவரி 30-ம் நாள் காந்தியடிகள் சுடப்பட்ட போது மெய்யானது.
ஹிட்லரின் முடிவு
இரண்டாம் உலகப் போரால் நாளுக்கு நாள் உலகை ஹிட்லர் பயமுறுத்தி வந்த நேரம். உலக மக்கள் ஹிட்லருக்கு ஒரு முடிவு வராதா என்று ஏங்கி இருந்த நேரத்தில் 1943-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் எழுதினார் இப்படி: 11-10-1944 முதல் ஒன்பது மாதங்கள் சந்திரனின் தசாபுக்தி காலத்தில் ஹிட்லரின் முடிவு ஏற்படும். ஹிட்லரின் முடிவு கொடூரமாக அமையும்”.
அவர் கூறியபடியே ஹிட்லர் 30-4-1945 அன்று தற்கொலை செய்து கொண்டார்.
ஹிட்லரைப் பற்றி அவர் எழுதிய கணிப்பைக் கூறும் புத்தகங்கள், கட்டுரைகள் ஜெர்மனியில் நாஜிக்களால் எரிக்கப்பட்டன. அவை அங்கு ஹிட்லரால் தடை செய்யப்பட்டன.
**