Post No. 13.586
Date uploaded in London – —26 August 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
14-8-24 மாலைமலர்இதழில் வெளியாகியுள்ள கட்டுரை. இங்கு இரு பகுதிகளாக பிரசுரிக்கப்படுகிறது.
ஜோதிட மேதை டாக்டர் பி.வி.ராமன் – 2
ச. நாகராஜன்
சீன ஆக்கிரமிப்பு, இந்தியா- பாகிஸ்தான் போர்
இந்தியப் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கும்: போர் உருவாகும் என 1962-ல் அவர் முன்னதாகவே உரைத்தது அப்படியே மெய்யானது.
அதே போல இந்திய- பாகிஸ்தான் போர் பற்றி 1965-லும் 1973-லும் அவர் எழுதியது அப்படியே பலித்தது. பங்களா தேஷ் விடுதலை, அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸனின் வீழ்ச்சி, சுகர்ணோவின் வீழ்ச்சி, அயூப்கானின் ராணுவ ஆட்சி, கென்னடி சுடப்பட்டது, மார்டின் லூதர் கிங் கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட ஏராளமான விவரங்களைத் துல்லியமாகக் கணித்து அவர் முன்னதாகவே எழுதியதும் உரைத்ததும் உலக மக்களை வியக்க வைத்தது.
அரபு – இஸ்ரேல் போர்
1973 ஜனவரி மாதம் அராபிய – இஸ்ரேல் வரப்போவதை அவர் எழுதி விட்டார். அதாவது பத்து மாதங்களுக்கு முன்பே கூறி விட்டார்.
ஜோதிடருக்கான தகுதிகள்
ஒரு நல்ல ஜோதிடருக்கான தகுதிகளை நமது அறநூல்கள் விவரிக்கின்றன.
இந்தக் கலை அகன்றது; ஆழமானது; நுட்பமானது. ஆகவே இதை தகுந்த வல்லுநர் ஒருவரிடமிருந்து முறையாகக் கற்க வேண்டும்.
அத்துடன் உள்ளுணர்வு இருப்பவர்களே இதைத் திறம்பட கற்று பலன்களைச் சொல்ல முடியும்.
மனிதர்களின் பலஹீனங்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு ஆபத்து வருவதாக பயமுறுத்தி பரிகாரம் செய்கிறேன் என்று பணம் பறிப்பவர்களால் ஜோதிடம் ஒரு இழிநிலையை அடைந்தது.
இப்படி ஒரு இழிநிலை இருந்த காலத்தில் தோன்றி அதை புகழோங்கச் செய்தவர் வராஹமிஹிரர்.
அதே போலவே தாழ்ந்து கிடந்த ஜோதிடக் கலையை உயர ஏற்றியதால் பி.வி.ராமனுக்கு நவீன வராஹமிஹிரர் என்ற பொருளில் அபிநவ வராஹமிஹிரர் என்ற கௌரவப் பட்டப் பெயர் அளிக்கப்பட்டது.
இது தவிர ஏராளமான விருதுகள் அவரை வந்தடைந்தன. 1947-ல் பிதகோரியன் பல்கலைக்கழகம் அவருக்கு பிஹெச்.டி அளித்து அவருக்கு டாக்டர் பட்டம் அளித்தது. 1947-ல் ராயல் அஸ்ட்ரானமிகல் சொஸைடியில் அவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1976-ல் ஜூன் மாதம் குமாவோன் பல்கலைக் கழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது.
ஐ,நா.வில் உரை
ஜோதிட மேதையின் புகழ் பெருகப் பெருக அவருக்கு உலக நாடுகள் பலவற்றிலுமிருந்து அழைப்புகள் வர ஆரம்பித்தன. இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் ஜோதிட மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக அவர் பங்கேற்றார். நியூயார்க்கில் நடந்த பன்னாட்டு ஜோதிட மாநாட்டிலும் அவர் பங்கேற்றார். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரியா, ஹாலந்து கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு சங்கங்களும் பல்கலைக் கழகங்களும் அவரை உரையாற்ற அழைத்தன. ஜோதிஷ ரத்னா, ஜோதிஷ பானு, ஜோதிஷ விஞ்ஞான மார்த்தாண்ட போன்ற பல பட்டங்கள் அவருக்கு அளிக்கப்பட்டன.
1970-ம் ஆண்டு நியூயார்க்கில் ஐக்கியநாடுகள் சபையில் நவீன யுகத்தில் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் ஜோதிடம் பற்றி அவர் ஆற்றிய உரை பன்னாட்டுத் தலைவர்களின் பாராட்டைப் பெற்றது. ஜோதிடமும் ஒரு அறிவியல் துறையே என்ற அவரது ஆணித்தரமான சொற்கள் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமானோரை அவர் பால் ஈர்த்தது.
ஆடோ பயாகிராபி ஆஃப் எ வேதிக் அஸ்ட்ராலஜர்
ஜோதிட இலக்கியத்திற்கு ஒரு புது மெருகு ஊட்டினார் பி.வி.ராமன். ஆங்கிலத்தில் எழுதி, பேசினால் மட்டுமே உலக அரங்கில் வேத ஜோதிடத்திற்கு ஒரு தனி இடத்தைப் பெற முடியும் என்று கணித்த அவர் ஆங்கிலத்தில் சிறந்த புலமையைப் பெற்றார். அவரது ஆங்கில உரைகள் அனைவரையும் கவர்ந்தன.
ஏராளமான புத்தகங்களை அவர் ஆங்கிலத்தில் எழுதினார். அவை கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு பல்லாயிரம் பிரதிகள் விற்பனை ஆயின.
அவரது பத்தொன்பது புத்தகங்களில் அவரது சுயசரிதையான ஆடோ பயாகிராபி ஆஃப் எ வேதிக் அஸ்ட்ராலஜர் புகழ் பெற்ற ஒன்றாகும். வடமொழியில் இருந்த பல ஜோதிட நூல்களை அவர் ஆங்கிலத்தில் அழகுறத் தரவே ஜோதிட ஆர்வலர்கள் உற்சாகத்துடன் அவற்றை வரவேற்றனர்.
குடும்பம்
மிக இளம் வயதிலேயே இவருக்குத் திருமணம் நடைபெற்றது.
ஆறு மகன்களும் இரு மகள்களும் கொண்ட பெரிய குடும்பத்தைத் திறம்பட இவரது மனைவி ராஜேஸ்வரி ராமன் நிர்வகித்ததோடு தானே யோகா பள்ளி ஒன்றையும் நிறுவி யோகா பயிற்சியையும் அளித்து வந்தார்.
ராமன் கடுமையான உழைப்பாளி. காலை முதல் நள்ளிரவு வரை தினமும் சுமார் 18 மணி நேரம் அவரது பணி தொடர்ந்தது.
கர்நாடக இசை மற்றும் நடனத்தில் அவர் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தார். யோகாவும் டென்னிஸும் அவர் நல்ல ஆரோக்கியத்தைக் கொண்டிருக்க உதவின.
மறைவு
பிறருக்குப் பலன்களைத் துல்லியமாக உரைத்த ஜோதிட மேதை தன் இறுதி பற்றியும் சரியாகக் கூறி விட்டார். 1998-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆரம்பத்திலேயே தனக்கு இறுதி நெருங்கி விட்டதை அவர் அறிவித்தார். அது போலவே முதல் நாள் ஏற்பட்ட மாரடைப்பால் மறுநாள் 1998, டிசம்பர் மாதம் 20-ம் நாள் அவர் மறைந்தார்.
ஜோதிடம் உண்மையா, பொய்யா?
நவீன யுகத்தில் பெரிதும் கேட்கப்படும் ஒரு கேள்வி ஜோதிடம் உண்மையா? பொய்யா என்ற கேள்வி.
இதற்கு உலகமே போற்றும் ஜோதிட மேதையின் பதில் இது தான்:-
ஹிந்துக்களின் வானவியல் மற்றும் ஜோதிடக் கலை அற்புதமானது. உதாரணத்திற்கு கிரகணத்தைச் சொல்லலாம். எவ்வளவு துல்லியமாக அது கணிக்கப்பட்டு வந்தது!
போலி ஜோதிடர்களாலும், கத்துக்குட்டிகளாலும், பிதற்றல் பேர்வழிகளாலும் அது தன் மஹிமையை இழந்து கூலிக்கு மாரடிக்கும் இழிநிலையை அடைந்து விட்டது.
பலன்களைத் துல்லியமாகக் கூறும் ஹிந்துக்களின் ஜோதிடம் மிக பிரமாதமானது. துல்லியமான சரியான கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது அது என்பதை அதன் எதிரிகளும் கூட உணர்ந்து அது அறிவியல் பூர்வமானது என்பதை ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.
நவீன வராஹமிஹிரர்
ஜோதிடத்தை அறிவியல் ரீதியானது என்பதை சுட்டிக்காட்டி அதை அறிவியல் அங்கீகாரம் பெற வைத்த மாமேதை டாக்டர் பி.வி.ராமன் அவர்களை நவீன வராஹமிஹிரர் என்று கூறுவது பொருத்தம் தானே!
**