உங்கள் கூடவே நிரந்தரமாக இருக்கும் இரண்டு டாக்டர்கள்!(Post No.13,590)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 13.590

Date uploaded in London – 27 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xx 

உங்கள் கூடவே நிரந்தரமாக இருக்கும் இரண்டு டாக்டர்கள்! 

ச.நாகராஜன் 

நீங்கள் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை உங்களுக்கு உதவ இரண்டு டாக்டர்கள் நிரந்தரமாக உங்கள் கூடவே இருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இல்லை?

பிரிட்டனின் ஆன்மீகத் தாத்தா என்று புகழப்படும் ஜார்ஜ்   ட்ரெவெல்யன் 1913-ம் ஆண்டு இந்த இரண்டு டாக்டர்களைப் பற்றி இப்படி அறிமுகம் செய்து வைத்தார்:-

“என்னிடம் இரண்டு டாக்டர்கள் இருக்கின்றனர்; என் இடது கால்; என் வலது கால்!”

உடல் ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிப்பதோடு அனைத்து நோய்களையும் தீர்க்கவல்ல  நடைப்பயிற்சியை, இந்த இடது கால் மற்றும் வலது கால் டாக்டர்கள் தான் செய்ய முடியும். ஆகவே நீங்கள் உங்கள் இரு டாக்டர்களை தினமும் இயக்க வேண்டும்; மீதியை அவர்கள் கவனித்துக் கொள்வார்கள்!

தினமும் நடப்பது என்பது ஆயுளைக் கூட்டி, உடலை ஆரோக்கியத்துடன் பாதுகாக்கும் ஓர் அற்புதப் பயிற்சி!

‘ஆர்ச்சிவ்ஸ் ஆஃப் இன்டர்னல் மெடிசின்’  நடத்திய ஒரு ஆய்வில், உடற்பயிற்சியும் இதய ஆரோக்கியமும் நேரடி சம்பந்தமும் உடையவை என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

தினமும் முப்பது நிமிடங்கள் நடப்பதானது, உங்கள் ஆயுலை 1.3 வருடங்களைக் கூட்டுவதோடு, 1.1 வருடங்கள் இதயநோய் இல்லாமல் ஆக்குகிறது.

வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல அமெரிக்கப் பத்திரிகை தனது தலையங்கத்தில் நடைப்பயிற்சியைப் புகழோ புகழ் என்று புகழ்ந்து, தினமும் முப்பது நிமிடங்கள் நடந்தால் 1.3 ஆரோக்கிய வருடங்களைப் பெறலாம் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது! அதிக ஆற்றலைத் தருவதோடு, ஆழ்ந்த உறக்கத்தையும் நடைப்பயிற்சி உறுதிப்படுத்துகிறது.

தினமும் நடைப்பயிற்சி செய்யும் மாணவன் நன்கு படிப்பதோடு, படித்ததை உடனுக்குடன் நினைவுக்குக் கொண்டு வரும் ஆற்றலையும் பெறுகிறான். எங்கும் வாகனம்; எப்போதும் வாகனம் என்ற இந்த வேகயுகத்தில் கார்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும் சென்று அலுவலகம் மற்றும் இதர இடங்களில் அமர்ந்து பணி செய்வோர் தங்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் மதிய உணவு இடைவேளையில் ஒரு அரை. மணி நேரம் நிச்சயம் நடக்க வேண்டும்.

வாகனங்களைச் சற்று அதிக தூரத்தில் நிறுத்திவிட்டு, பணியிடங்களுக்கு நடக்கும் வாய்ப்பை இவர்கள் அதிகப்படுத்திக் கொள்ளலாம். லிப்டை உபயோகிக்காமல் படிகளில் ஏறவும், இறங்கவும் செய்யலாம். மாடியில் பணிபுரிவோர் அதே பகுதியில் உள்ள டாய்லெட்டை உபயோகிக்காமல், அடுத்த தளத்தில் உள்ள டாய்லெட்டை உபயோகிக்கும் விதமாகச் சற்று தூரம் நடந்து மாடிப்படிகளில் ஏறலாம், இறங்கலாம்.

இப்படி நடப்பதை சிறு சிறு வழிகள் மூலம் சிரத்தையுடன் மேற்கொண்டால், உடல் எடை அல்லது பருமன் அதிகமாவது தடுக்கப்பட்டு, சரியான எடையுடன் கூடிய அழகிய மேனியை உருவாக்கிக் கொள்ளலாம். அழகிய மேனி உடையவர்கள் அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டு என்றும் இளமையோடு இருக்கலாம். நடப்பதால் உடல் இளைக்கும்; அதிக சுறுசுறுப்படையும்.

அழகிப்போட்டியைச் சற்று நினைத்துக் கொள்ளுங்கள். அதில் வென்றவர்களைச் சற்று கவனியுங்கள். அல்லது உங்களுக்குப் பிடித்த

நடிகர் அல்லது நடிகை உங்களை ஏன் கவர்கிறார் என்பதைச் சற்று சிந்தியுங்கள். அவர்கள் முகமும் அங்க லாவண்யங்களும் ஒருபுறம் இருக்க, அவர்கள் நடக்கும் நடை அழகே, அவர்களது பொலிவை எடுப்பாக எடுத்துக் காட்டுவதை நிச்சயமாக நீங்கள் உணர முடியும்.

அவர்களிடம் உள்ள இரண்டு டாக்டர்களையும் அவர்கள் முழுமையாகப் பயன்படுத்தி, ஆடிப்பாடி இடைவிடாது நடைபயின்று உடலை ‘சிக்’கென்று பாதுகாப்பதால், அவர்கள் கவர்ச்சி உடையவர்களாக உங்கள் முன் தோன்றுகிறார்கள்!

தினமும் விடாமல் அரை மணி நேரம் நடப்பதால் கவர்ச்சி, அழகு, ஆரோக்கியம், நீடித்த ஆயுள் நிச்சயம். ஆகவே, உங்களுடன கூடவே இருக்கும் இரண்டு டாக்டர்களை சற்று போற்றி மதியுங்கள்; அதன் மூலம் வலிமை வாய்ந்த உடலுடன் சமுதாயத்தில் மதிப்புடன் வாழுங்கள்!

**

சினேகிதி மாத இதழில் 2007, ஜனவரி மாதம் வெளியான கட்டுரை.

Leave a comment

Leave a comment