யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை (Post No.13,591)


WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 13,591

Date uploaded in London – 27 August 2024                 

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

xxxx  

உலகிலேயே அதிசயமான மதம் இந்துமதம்; செலவில்லாமல், எளிதில் பரமபதம்- வைகுண்டம்- கைலாசம் அடைய வழிகளை சொல்லித் தருகிறது.

அருகம் புல் , எருக்கம் பூ, வில்வ இலை , துளசி இலை அல்லது  ஏதாவது பூ அல்லது தண்ணீர் இவைகளை கடவுளுக்கு அளித்தால் போதும். பெரிய புண்ணியம் கிடைக்கும்.

பிராமணர்கள் தினமும் மூன்று வேளை  வெறும் தண்ணீரைத்தான் இறைவனுக்குக்  கொடுக்கிறார்கள். அதுவும் விலை கொடுத்து வாங்கும் பாட்டில் தண்ணீரை அல்ல; எந்த நதி  அல்லது குளம் அல்லது கிணற்றடியில் இருக்கிறார்களோ  அதையே எடுத்து அப்படியே கொடுப்பதால் செலவே இல்லை.

பகவத் கீதையில் உள்ள இந்த விஷயத்தை சங்க கால பார்ப்பனப் புலவன் கபிலன் அப்படியே புறநானூற்றில் சொன்னான்

நல்லவுந் தீயவு மல்ல குவியிணர்ப்

புல்லிலை யெருக்க மாயினு முடையவை

கடவுள் பேணே மென்னா வாங்கு

மடவர் மெல்லியர் செல்லினும்

5             கடவன் பாரி கைவண் மையே.

(பி – ம்.) 3 ‘வேண்டேமென்னா’

நல்லனவென்றும் தீயனவென்றும் சொல்லப்படுவன சூடும் பூவாதலால் அவை இரண்டினும்வைத்து எண்ணப்படாத குவிந்த பூங்கொத்தினையும் புல்லிய இலையையுமுடைய எருக்கம்பூவாயினும் ஒருவனுடையனவற்றைத் தெய்வங்கள் விரும்பேமென்னா; அதுபோல, யாதும் அறிவில்லாதாரும் புல்லிய குணங்களையுடையாரும் செல்லினும் பாரி கைவண்மை செய்தலைக் கடப்பாடாகவுடையன்-

xxxx

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவிற்கு ஒரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு ஒரு இன்னுரை தானே.-– திருமந்திரம்

இறைவனுக்கு  எளிமையாகப் பச்சிலை சூட்டி வணங்கினாலே போதும்.   பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் கொடுத்தாலும் போதும். நாம் உண்ணும்போது  உண்கிற உணவில் ஒரு கைப்பிடி எடுத்து பசித்தோருக்குக் கொடுத்தாலும் போதும். இவை அனைத்தையும் விட, யாருக்கும் இன்னுரை சொன்னாலே கூட போதும் என்கிறார் தமிழ்ச் சான்றோரான திருமூலர். எளிமையும் சிரத்தையும் தான் நமது ஹிந்து வாழ்வியல் அறத்தின் அடிப்படைகள்.

xxxx

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்

          வாடினேன்; பசியினால் இளைத்தே

     வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த

          வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்!

நீடிய பிணியால் வருந்துகின் றோர்என்

          நேர்உறக் கண்டுளந் துடித்தேன்;

     ஈடின்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்

          சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்!-திருவருட்பா

xxxx

பஞ்சமஹா யக்ஞம்

இந்துக்கள் தினமும் செய்யும் பஞ்ச மஹா யக்ஞத்தில் – ஐவேள்வியில் —

1.பிரம்ம யக்ஞம்/வேதம் ஓதுதல்,

2.தேவ யக்ஞம்/தெய்வங்களுக்குப் பூஜை செய்தல்,

3.மனுஷ யக்ஞம்/ விருந்தினருக்கு சோறிடுதல்,

4.பூத யக்ஞம்/பிராணிகளுக்கு உணவு படைத்தல்,

5.பித்ரு யக்ஞம்/நீத்தாருக்கு நீர்க்கடன் செலுத்தல் என்பன அடக்கம்.

எல்லா இந்துக்களும் பஞ்ச மஹா யக்ஞம் என்னும் ஐந்து வேள்விகளைச் செய்யவேண்டும்.பிராமணர்கள் வேதம் ஓதும் இடத்தில் மற்றவர்கள் தேவாரம், திவ்வியப் பிரபந்தம், திருவாசகம், திருக்குறளை ஓதலாம். வேள்வி என்பது யாகத்தீயில் அவிஸை (நெய்யுடன் கலந்த சோறு) போடுவது மட்டுமல்ல. மனதளவில் பல வேள்விகளைச் செய்யலாம்.

வள்ளுவரும் சொல்லி இருக்கிறார்:—

தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்று ஆங்கு

ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை (43)

பொருள்: இறந்து போய் தென் திசையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் முன்னோர்கள், கடவுள், வீட்டிற்கு வரும் விருந்தாளிகள், சுற்றத்தார் (இதில் நாம் வளர்க்கும் பசு முதலிய பிராணிகளும், வீட்டில் ஊர்ந்து செல்லும் எறும்புகளும் அடங்கும்), தனது குடும்பம் என்ற ஐந்து பேரையும் போற்றுவது இல்வாழ்வானின் தலையாய கடமை.

மனு ஸ்மிருதியில் 3-70 –ல் மனு சொன்னதை வள்ளுவரும் சொல்லி இருக்கிறார். ஆகவே இமயம் முதல் குமரி வரை ஒரே கொள்கை இருந்திருக்கிறது. விருந்தாளிகளுக்குச் சாப்பாடு போட்டவுடன் தான் வீட்டிலுள்ளோர் சாப்பிட வேண்டும்.

XXXX

மனு ஸ்ம்ருதி என்ன சொல்கிறது ?

வீட்டில் ஐந்து கொலைக்களங்கள் -மனு ஸ்ம்ருதி

पञ्च सूना गृहस्थस्य चुल्ली पेषण्युपस्करः ।

कण्डनी चौदकुम्भश्च बध्यते यास्तु वाहयन् ॥ 3-६८ ॥

பஞ்ச ஸூனா க்ருஹஸ்தஸ்ய சுல்லீ பேஷன் யுபஸ் கரஹ

கண்டனீ செளத  கும்பஸ்ச பத்யதே  யாஸ்து வாஹயன் 3-68

இல்லறத்தானுக்கு ஐந்து கொலைக்களங்கள் உள்ளன ; அவையாவன- அடுப்பு, மாவரைக்கும் அம்மி , ஆட்டுரல் உரல் /உலக்கை , அருவா மனை/கத்தி போன்றவை 3-68 மனு 

XXXX

तासां क्रमेण सर्वासां निष्कृत्यर्थं महर्षिभिः ।

पञ्च कॢप्ता महायज्ञाः प्रत्यहं गृहमेधिनाम् ॥ ६९ ॥

தாஸாம் க்ரமேண சர்வாசாம் நிஷ்க்ருத்யர்த்தம் மஹர்ஷிபிஹி

பஞ்சக்லுப்தா மஹாயக்ஞாஹா ப்ரத்யஹம் க்ருஹ மேதினாம்  3-69

இந்தப் பாவங்களைப் போக்குவதற்கு மஹரிஷிகள் ஐந்து பெரிய வேள்விகளை இயற்ற நமக்குக் கட்டளை இட்டுள்ளார்கள் ; இதை இல்லறத்தார்கள் தினமும் செய்ய வேண்டும் 3-69

XXXXX

अध्यापनं ब्रह्मयज्ञः पितृयज्ञस्तु तर्पणम् ।

होमो दैवो बलिर्भौतो नृयज्ञोऽतिथिपूजनम् ॥ ७० ॥

அத்யாபனம் ப்ரஹ்ம யக்ஞஹ பித்ருயக்ஞஸ்து தர்ப்பணம்

ஹோமோ தைவோ பலிர் பெளதோ ந்ருயக்ஞ்ஓ அதிதி பூஜனம் 3-70

(அந்தக் கொலைகளுக்கு பரிஹாரமாக ) ஐந்து யக்ஞங்களைச்  செய்ய வேண்டும் ; அவையாவன :

கல்வி கற்பித்தல் மூலம் பிரம்ம யக்ஞம் ;

தர்ப்பணம் செய்வது மூலம் பித்ரு  யக்ஞம் ;

ஹோமம் செய்து ஆகுதி அளிப்பதன் மூலம் தேவ  யக்ஞம் ;

பலி  கொடுப்பதன் மூலம் உயிரினங்களுக்கு  யக்ஞம் ;

விருந்தாளிகளுக்கு உணவு கொடுப்பதன் மூலம் மனிதயக்ஞம் — 3-70

XXXXX

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை.–குறள் 322

Let those that need partake your meal; guard every-thing that lives;

This the chief and sum of lore that hoarded wisdom gives.

–SUBHAM—

TAGS–வீட்டில் ஐந்து கொலைக்களங்கள் ,மனு ஸ்ம்ருதி, பஞ்ச மஹா யக்ஞம் ,வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், தென்புலத்தார் , தெய்வம், யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை

Leave a comment

Leave a comment