Post No. 13.615
Date uploaded in London – —1 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வம்புச் சண்டைக்கு வருவோரை சமாளிக்க முடியுமா?
ச. நாகராஜன்
“நான் பாட்டுக்கு ‘தேமேன்னு’ (தெய்வமே என்று) இருக்கேன்: என்னை வம்புச் சண்டைக்கு இழுக்கறா! இதைப் போக்க எந்தக் கட்டுரையாளராவது வழி சொல்ல முடியுமா என்ன?” என்று அங்கலாய்க்க வேண்டாம்.
சண்டையை நாமாகத் தொடங்காமல் இருக்கலாம்; ஆனால் ‘த்வஜம் கட்டிக் கொண்டு’ தொட்டதற்கெல்லாம் சண்டைக்கு வரும் மாமியார்களையும், மருமகள்களையும், அண்டை வீட்டுக்காரர்கள் பலரையும் யாரால் சமாளிக்க முடியும் என்று கலங்கவும் வேண்டாம்.
வலிய வம்புச்சண்டைக்கு வருவோரின் எண்ணம் ‘பெருவெடிப்பு’ (BIG BANG ) ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்பது தான்!
இதை டி-ப்யூஸ் (De – Fuse) செய்ய வழிகள் உண்டு; முயன்று பாருங்கள்.
பிரபல அமெரிக்க உளவியலாளர் ராண்டால் ஹாரிசன், “35 சதவிகித தகவல் தொடர்பை மட்டுமே மனித வார்த்தைகள் மூலம் சொல்கிறோம். மீதி 65 சதவிகித தகவல் தொடர்பை வார்த்தைகள் அல்லாத உடல் பாவங்கள் மூலமும், குரல் தொனியின் மூலமும் செய்கிறோம்” என்கிறார். சூடாக இருவருக்கு இடையே நடக்கும் முக்கியமான சண்டை ஒன்றை எடுத்துக் கொள்வோம். இரண்டு பேருமே தங்களை அறியாமலேயே தற்காப்பு நிலையை மேற்கொள்வதோடு, அடுத்தவரைத் தாக்கும் நிலைக்கும் தள்ளப்படுவர். இவர்கள் வார்த்தைகள் மூலம் பேசுவதுடன் அல்லாமல் இதர வழிகளிலும் தங்கள் சண்டை நிலையைக் காண்பிப்பர்.
1. கை விரலை நீட்டிக் காட்டுதல் (நான் மிகவும் கோபமாக இருக்கிறேன்)
2. உற்றுப் பார்த்தல்
3. அந்தரங்க பிரத்யேக இடமான நான்கு அங்குலத்தையும் மீறி உடலுக்கு மிக நெருக்கமாக வந்து அச்சுறுத்தல்
4. கால்களை அகற்றி தங்கள் நிலைமையை அகலப்படுத்தல்
5. கை முஷ்டிகளை ஓங்குதல்
6. குரலை உச்ச ஸ்தாயிக்குக் கொண்டு செல்லல்
வார்த்தைகள் மூலம் இல்லாமல் தங்கள் கோபத்தை இதர வழிகளிலும் காண்பிக்கும் வலுச்சண்டைக்காரரை டி-ப்யூஸ் பண்ண முடியுமா? முடியும்! அவர்கள் வழியிலேயே சென்று வார்த்தைகள் இல்லாத நிலைகளை மேற்கொண்டு சமாதானக் கொடியை ஏற்ற முடியும்! வழிகளைப் பார்ப்போம்!
கைகளைத் திறந்து வைத்தல் : வார்த்தைகள் அல்லாத சமாதான சமிக்ஞைகளில் தலையாயதும் மிக முக்கியமானதுமாக இருக்கும் ஒன்று உண்டென்றால் அதுதான் உள்ளங்கைகளை மேல் நோக்கித் திறந்து காட்டி வைத்திருத்தல். நாய்களைப் பாருங்கள்; அது சமாதானத்திற்காக தொண்டை குரல்வளையைக் காண்பிக்கும். அதற்கு ஈடாக மனித குலத்திற்கு சமாதான சமிக்ஞை, உங்கள் உள்ளங்கைகளை மேலே நோக்கிக் காட்டுவது தான்!
இது உடனடியாக சண்டையின் போது நம்மால் செய்ய இயலாது. ஏனெனில் நினைவுக்கு வராது. ஆகவே பயிற்சி மூலம் இதைப் பழகிக் கொள்ள வேண்டும். செய்து பார்த்தால் பலன் தெரியும்! சாதாரணமாகவே இப்படி வைத்துக் கொள்வது உங்கள் நேர்மை, நாணயத்தை மற்றவர்கள் புரிந்து கொண்டு, மதித்து பாராட்ட உதவும்.
முக்கோண நிலையில் உடல் நிலை: வலியச் சண்டை போடுவோர் நேருக்கு நேர் நம் முன்னே நிற்பர். இது அவர்கள் தங்கள் ஆக்ரோஷத்தைக் காட்ட மேற்கொள்ளும் நிலை. அச்சுறுத்தும் அளவில் நம் நெஞ்சுக்கு அருகில் வந்து விடுவர். நாமும் ஆக்ரோஷமாக அவர்களை நெருங்கினால் மோதல் முற்றிவிடும். இதைப் போக்க உங்களை எதிர்ப்பவரின் உடலுக்கு 90 டிகிரி இருப்பது போல உங்கள் நிலையை மாற்றிக் கொள்ளுங்கள். அதாவது உங்கள் சண்டைக்காரரின் பார்வையையும், உங்கள் பார்வையையும் ஒரு கற்பனைப் புள்ளியுடன் இணைத்தால் ஒரு முக்க்கோணம் ஏற்படும் வகையில் நீங்கள் நிற்க வேண்டும். இது தான் முக்கோண நிலை. நண்பர்களுடனும், உறவினர்களுடனும் உல்லாசமாகப் பேசும் போது நாம் மேற்கொள்ளும் நிலை இது தான். இந்த நிலையை எடுத்து மூன்றாவதான முக்கோணப் புள்ளி வழியே சண்டை இல்லாமல் நீங்கள் தப்பி விடலாம்.
கீழே பார்த்தல்: நேருக்கு நேர் உற்றுப் பார்க்கும் போது நீங்கள் உங்கள் பார்வையைக் கீழே தாழ விடுங்கள். “உன் கூட சண்டை போட நான் தயாரில்லை” என்பதைச் சொல்லும் நிலை இது.
குரலைத் தணித்தல்: எதிரில் இருப்பவர் உரக்கப் பேசப் பேச உங்கள் குரலைத் தாழ்த்திக் கொண்டே வாருங்கள். மெதுவாக, அளவெடுத்தது போல ஆறுதல் அளிக்கும் குரலைப் பயிற்சி மூலம் பெற்றுப் பயன்படுத்துங்கள். ஒன்றுமே காதில் விழவில்லை என்ற நிலைக்குச் சற்று மேலாக, கேட்கும் அளவில் குரல் இருந்தால் போதும்.
தலையைத் திருப்புதல்: மிருகங்கள் மற்றும் மனிதர்களுக்கு கழுத்து மிக முக்கியமான அங்கமாகும். ஆண்டவன் படைப்பில் ஆபத்து நேரும் போது மிருகங்களும், மனிதர்களும் கழுத்தைத் தான் பாதுகாப்பர். நாய்கள் சண்டை போடும் போது பார்த்தால் அது ஒன்று மற்றொன்றின் குரல்வளையையே குறி பார்ப்பதைக் காணலாம். தலையைத் திருப்புவது சமாதானத்திற்கான அறிகுறி. தலையைத் திருப்புவதன் மூலம் உங்கள் கழுத்தை உங்கள் எதிரில் இருப்பவருக்குக் காண்பிக்கிறீர்கள். நீங்கள் அச்சுறுத்தி சண்டைக்கு வருபவர் இல்லை என்பதை உங்கள் கழுத்தைக் காண்பிப்பதன் மூலம் சொல்வதோடு நீங்கள் நிராயுதபாணி என்பதை நிரூபிக்கவும் இது உதவும்.
இந்த அனைத்தையும் சேர்த்துச் செய்தால் வலியச் சண்டை போடுபவர் கூட நொந்து போய் சண்டை போட முடியாமல் திரும்பிச் சென்று விடுவார்கள். இது அறிவியல் நமக்குக் கற்றுக் கொடுக்கும் லேட்டஸ்ட் டிப்ஸ்!**
சினேகிதி மாத இதழில் 2006, மே மாதம் வெளியான கட்டுரை.