WRITTEN BY S NAGARAJAN
Post No. 13.619
Date uploaded in London – —2 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
‘குத்தல் மொழி’ எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள்?
ச. நாகராஜன்
சீரியல் பார்க்கும் நம் தமிழ் மகளிர் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான செய்தியை அமெரிக்க ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது.
கீழே உள்ள பத்து கேள்விகளுக்கு தமிழ் இல்லங்களில் உள்ள தலைவனும், தலைவியும் பதிலளித்தால் தங்கள் தலைவிதியுடன் தங்கள் குழந்தைகளின் தலைவிதியையும் சேர்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
கேள்வி 1 : – 25 வயது முதல் 34 வயது முடிய உள்ள தந்தைமார்கள் வாரத்திற்கு எத்தனை மணி நேரம் டி.வி, பார்க்கிறார்கள்?
அ) 10 மணி ஆ) 15 மணி இ) 20 மணி ஈ) 26 மணி
கேள்வி 2:- வேலைக்குப் போகாமல் இருக்கும் இல்லத்தலைவி வாரத்திற்கு எத்தனை மணி நேரம் டி.வி. பார்க்கிறார்?
அ) 20 மணி ஆ) 25 மணி இ) 30 மணி ஈ) 48 மணி
கேள்வி 3:- 18 வயது முடிந்த நிலையில் சராசரியாக நம் குழந்தைகள் எத்தனை வன்முறைக் காட்சிகளை டி.வி,யில் பார்த்திருக்கிறார்கள்?
அ) 25000 ஆ) 50000 இ) 75000 ஈ) 180000
கேள்வி 4 :- தன் குழந்தைகளுடன் அர்த்தமுள்ள விஷயங்களை ஆக்கபூர்வமாகப் பேசுவதில் ஒரு தந்தை எவ்வளவு நேரம் செலவிடுகிறார்?
அ) ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் ஆ) வாரத்திற்கு 10 நிமிடங்கள் இ) வாரத்திற்கு 20 நிமிடங்கள் ஈ) வாரத்திற்கு 30 நிமிடங்கள்
கேள்வி 5 :- மணமான தம்பதியினர் ஒவ்வொரு நாளும் தங்களுக்குள் ஆக்கபூர்வமான அர்த்தமுள்ள விஷயங்களை எவ்வளவு நேரம் பரிமாறிக் கொள்கிறார்கள்?
அ) நான்கு நிமிடங்களுக்கும் கீழாக ஆ) 15 நிமிடங்கள் இ) சுமார் 20 நிமிடங்கள் ஈ) 30 நிமிடங்கள்
கேள்வி 6 :- ஒரு மனிதனை வாழ்வில் உயர வைப்பது உளவியல் ரீதியாக அவருக்கு நாம் தரும் ஆக்கபூர்வமான ஊக்கம். இதை VALIDATION என்பர். இதற்கு எதிர்மறையாக அவனை நசுக்கும் விமரிசனங்கள், கேலி, நையாண்டி மொழிகள் அவனது ஊக்கத்தை இழக்கச் செய்து அவனைச் சீரழிக்கும். சராசரியாக ஒரு நாளைக்கு ஒரு இளம் வயது டீன் – ஏஜர் தன் பெற்றோர், ஆசிரியர் மற்றும் நண்பர்களிடமிருந்து இப்படிப்பட்ட எத்தனை “குத்தல்” மொழிகளைப் பெறுகிறான்?
அ) 11 ஆ) 21 இ) 57 ஈ) 113
கேள்வி 7 :- ஊக்கத்தை இழக்கச் செய்யும் குத்தல், கேலி மொழிகளை ஒரு டீன் – ஏஜர் தன் டீன் – ஏஜ் வயதிற்குள் (13 முதல் 19 வயது) எத்தனை பெறுகிறார்?
கேள்வி 8 :- உங்கள் கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்கள் பெறும் குத்தல் மொழிகளுக்கு ஈடு கொடுக்கும் விதமாக எத்தனை ஊக்க மொழிகளை நீங்கள் தருகிறீர்கள்?
கேள்வி 9:- சில உளவியல் நிபுணர்கள் ஒரு ஊக்க மொழி பத்து குத்தல் மொழிகளின் புண்களை ஆற்றிவிடும் என்று நம்புகின்றனர். உங்கள் குடும்ப உறுப்பினர்களிடமும், ஊழியர்களிடமும் எத்தனை குத்தல் மொழிகளை நீங்கள் தருகிறீர்கள்? அத்துடன் உங்கள் முன்பாக மற்றவர்களைத் தர அனுமதிக்கிறீர்களா?
கேள்வி 10:- உங்கள் கீழ் பணி புரியும் ஊழியர்களுக்கு ஆக்க பூர்வமாக அல்லது அவர்களைச் சரி செய்யும் விதமாக நீங்கள் அவர்களுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள்?
அ) ஒரு நாளைக்கு ஒரு நிமிடம் ஆ) வாரத்திற்கு 10 நிமிடங்கள் இ) வாரத்திற்கு 20 நிமிடங்கள் ஈ) வாரத்திற்கு 30 நிமிடங்கள்
கேள்விகளுக்கு விடைகளை எழுதியவர்கள் இங்குள்ள விடைகளைப் பார்த்து ஒப்பீடு செய்து கொள்ளலாம்
========================================================================
விடைகள்
1) ஈ) 26 மணி நேரம் (அடேயப்பா)
2) ஈ) 48 மணி நேரம் (அடேங்கப்பா)
3) ஈ) 200000 – இளம் வயதினருக்கான அமெரிக்க அகாடமி தரும் புள்ளிவிவரம் இது.
4) அ) ஒரு நாளைக்கு ஒரு நிமிடம்
5) அ) நான்கு நிமிடங்களுக்கும் கீழாக (-டைவர்ஸ் ஏன் அதிகமாகாது?)
6) ஈ) 113 (அடேயப்பா, இத்தனை முறையா குத்தல் மொழிகளைப் பெறுவது?)
7) 288715 (நம்பமுடியவில்லையா?)
8) ஒரு நல்ல மானேஜர் அல்லது குடும்பத் தலைவர் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஊக்கமொழிகளைத் தந்து கொண்டே இருப்பார். இவர் தான் காட்ஃபாதர்!
9) ஒரு நல்ல மானேஜர் அல்லது குடும்பத் தலைவர் தன் வாழ்க்கை அகராதியிலிருந்து நச்சு மொழிகளை எடுத்து எறிபவராகவே இருப்பார்.
அதுமட்டுமின்றி தான் இருக்கும் பகுதிக்குள் இப்படிப்பட்ட குத்தல் பேச்சுக்கே இடம் இல்லாமல் செய்து விடுவார்.
10) உங்கள் கீழ் பணிபுரியும் ஒவ்வொருவரும் ஒரு தனிப்பட்ட குணாதிச்யம் உடையவர். ஆகவே நிலைமைக்கும், ஆளுக்கும் ஏற்றபடி ஊக்க மொழிகளை உகந்த முறையில் தர வேண்டியிருக்கும்! இதே போலத்தான் குடும்ப உறுப்பினர்களுக்கும் அவரவர்களுக்குத் தக்கபடி ஊக்க மொழிகளைத் தர வேண்டியிருக்கும். இதில் நேரப் பிரச்சினை இல்லாது தேவையான நேரத்தை ஒதுக்க வேண்டும்.
=======================================================================
ஒரு இல்லத்தலைவி வாரத்தில் 48 மணி நேரம் டி.வி. பார்ப்பதோடு, தன் குழந்தைகளையும் அவர்கள் “ஆளாவதற்குள்” இரண்டு லட்சம் வன்முறைக் காட்சிகளைப் பார்க்க அனுமதித்து, அவர்களுடன் ஒரு நாளைக்கு ஒரு நிமிட நேரம் மட்டுமே அர்த்தமுள்ள மொழிகளைப் பேசினால் அந்தக் குடும்பம் என்ன ஆகும்?
ஸ்டூவர்ட் சேஸ் என்ற பிரபல பொருளாதார நிபுணர் தனது நாட்களை எப்படிச் செலவழிக்கிறோம் என்று பார்க்க எண்ணி ஆராய ஆரம்பித்தார். இதற்காக மனித மதிப்புகளை (அன்பு, கருணை, தர்மம், சாந்தி, அஹிம்சை போன்றவை) எழுதி வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் “வாழ்ந்த காலத்தை”க் கணக்கிட்டார்.
ஒரு வாரத்திற்கான 168 மணி நேரத்தில் “உயிருடன் இருந்து வாழ்ந்தது” எத்தனை நேரம், “இருந்தும் இறந்தது” எத்தனை நேரம் என்று அவர் கணக்கிட்டதில் அவர் கண்டுபிடித்தது என்ன தெரியுமா? சுமார் நாற்பது மணி நேரம் மட்டுமே தான் வாழ்ந்ததாக அவர் கண்டு பிடித்தார். அதாவது சுமார் 25 சதவிகிதம் மாட்டுமே தான் வாழ்ந்ததைக் கண்ட அவர் தன்னை மாற்றிக் கொண்டார்.
நாமும் கூட வாரத்தில் 168 மணி நேரத்தில் “இருந்து வாழ்ந்தது” எத்தனை மணி நேரம் என்று கணக்கிடலாம்.
வாரம் முழுவது “வாழ” முயற்சி எடுக்கும் தம்பதியினரின் குடும்பம் நாட்டுக்கே முன்னோடியாகத் திகழும் லட்சியக் குடும்பமாக ஆகிவிடும்.
இது இன்றைய அறிவியல் ஆய்வு மூலம் நாம் பெறும் அற்புத உண்மை!
**
சினேகிதி மாத இதழில் 2006, ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரை.