WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,624
Date uploaded in London – 3 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
வைகறைத் துயில் எழு.
107.RISE FROM SLLEP AT DAY BREAK
சூரிய உதயத்திற்கு முன்னருள்ள சுமார் இரண்டு மணி நேரம் பிரம்ம முஹூர்த்தம் என்னும் காலமாகும். ஆன்றோர்களும், சான்றோர்களும், சாதுக்களும், மஹான்களும், சந்யாசிகளும் சங்கராச்சார்யார்களும் எழுந்து இறைவனை வழிபடும் புனித நேரம் இது. விஞ்ஞானத்தாலும் போற்றப்படும் காலம் இது. தமிழ், ஸம்ஸ்க்ருத இலக்கியங்களில் இது வெகுவாகப் போற்றப்படுகிறது.
மஹா ப்ரெடெரிக் மன்னர், அக்பர் போன்றோர் பின்பற்றிய நெறிமுறை இது. “வைகறைத் துயில் எழு”– அவ்வையார் நமக்கு ஆத்திச்சூடி மூலம் கொடுத்த கட்டளை இது.
புத்தியதற்குப் பொருந்து தெளிவாக்கும்;
சுத்தநரம்பினாற் தூய்மையுறும்- பித்தொழியும்
தாலவழி வாத பித்தம் தத்தநிலை மன்னும்; அதி
காலைவிழிப்பின் குணத்தைக் காண்–
என்று ஒரு புலவர் பாடிச் சிறப்பித்த காலம் இது.
ஆசாரக் கோவை என்னும் நூலும் இதைப் போற்றும்:-
வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்
நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே
முந்தையார் கண்ட முறை– (ஆசாரக்கோவை– 41)
புலவர்கள் கூறும் கருத்து யாது?
புத்தி, சிந்தனை தெளிவாக இருக்கும்
நமது உடல் தூய்மையாக இருக்கும்
வாத பித்த, கபம் ஆகிய மூன்றும் சம நிலையில் இருக்கும்
இவை அதிகாலையில் விழித்தெழுவதன் பயன்களாம்.
ஆசாரக் கோவை சொல்கிறது:
அதிகாலைப் பொழுதில் எழுந்து பெற்றோர்களை வணங்கி அன்றைய தினம் செய்யவேண்டிய செயல்களைப் பட்டியலிட்டு, அதற்கான வழிமுறைகளை தயாரிப்பது முன்னோர்கள் பினபற்றிய முறை.
ஒருவன் உறங்கி எழுந்தவுடன் இருக்கும் புத்துணர்ச்சி இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் இராது; கொட்டாவிகளும், நாள் முழுதும் நடந்த கெட்ட விஷயங்களின் சிந்தனையுமே அதிகரிக்கும்.
பறவைகளின் இனிய சங்கீதமும் குளிர்ந்த காற்றும் நம்மை நற் சிந்தனையில் ஆழ்த்தும் நேரம் பிரம்ம முகூர்த்தம் ஆகும்.
‘ஐயினி அக்பரி’ எழுதிய அபுல் பாசல், மாமன்னர் அக்பர் அதிகாலையில் துயில் எழுவதைக் குறிப்பிட்டுள்ளார். பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலை நாலு மணிக்கு எழுந்து சிரசாஸனம் செய்து வந்ததால் இறுதிவரை இளமைப் பொழிவுடன் வாழ்ந்தார். தற்போதைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் அதிகாலை எழுந்து பணிகளைக் கவனிப்பதை அனைவரும் அறிவர்.
விஞ்ஞான விளக்கம்- பிரம்ம முகூர்த்தம்-
பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்
புன்மை இருட்கணம் போயின யாவும்
எழுபசும் பொற்சுடர் எங்கனும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி
—பாரதியாரின் திருப்பள்ளி எழுச்சி
அமிர்த வேளை எனப்படும் நேரத்தில் மனதும் தூய்மையாக இருக்கிறது. வெளியிலுள்ள புறச்சூழலும் தூய்மையாக இருக்கிறது; இதனால் புத்துணர்வு பிறக்கிறது. எதையும் எளிதாகச் செய்ய முடிகிறது என்கிறார்.
இதை அறிவியலும் ஒப்புக்கொள்கிறது..
மனிதர்கள் நல்ல ஆரோக்கியமாக வாழ உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகள் சில வகை ஹார்மோன்களைச் சுரக்கின்றன. இதில் ஒன்று பிளாஸ்மா கார்டிசால் (PLASMA CORTISOL). இது மன உளைச்சல், மன வடு ஆகியவற்றிலிருந்து விடுபட உதவி செய்கிறது ஏ.ஸி.டி.எச். (ACTH) என்பதன் செல்வாக்கில் ADRENAL அட்ரினல் கார்டெக்ஸிலிருந்து இது சுரக்கும். இந்த ஏ.ஸி.டி.எச். காலையில் அதிகமும் மாலையில் குறைவாகவும் சுரப்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகையால் காலையில் படிக்கக்கூடிய விஷயங்களை அதிகம் நினைவு வைத்துக் கொள்ள முடியும்.
ஆயுர்வேத கணக்குப்படி காலை நேரம் வாத கட்டுப்பாட்டிலுள்ள நேரம் (வாதம், பித்தம், கபம் என்பன மூன்று வகை தோஷங்கள் அல்லது குணங்கள்)
பிரஹ்ம முஹுர்த்தே உத்திஷ்டதேத் ஸ்வஸ்தே ரக்ஷார்த்தம் ஆயுஷே
தத்ர ஸர்வதா சாந்த்யர்த்தம் ஸ்மரேச்ச மதுசூதனம்
–அஷ்டாங்க ஹ்ருதயம்
பொருள்; ஒவ்வொருவரும் பிரஹ்ம முஹூர்த்தத்தில் எழுந்திருப்பதானால் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமான வாழ்வையும் அமைதியையும் பெறலாம். மது சூதனனையும் சிந்திப்பாயாக
சீக்கியர்கள் ஒரு நாளை எட்டு, ‘மூன்று மணிக்கூறு’களாக (8×3 = 24) பிரித்து அதி காலை மூன்று மணி நேரமே சிறந்தது என்பர்.
பௌத்தர்கள், இந்து தர்மம் சொன்ன யோகத்தையே பின்பற்றுவதால் அதிகாலையில் எழுந்தே பயிற்சி செய்வர்.
இஸ்லாமும் முதல் பிரார்த்தனை அறைகூவலை சூர்யோதயத்துக்கு முன்பாகவே செய்கிறது.
இவ்வாறு பல பலன்களைத் தரும் பிரஹ்ம முஹூர்த்ததில் படிப்பது மாணவர்களுக்கு நன்மை பயக்கும். இதற்கு முதல் படியாக இரவு ஒன்பது மணிக்குத் தூங்கச் செல்ல வேண்டும். அதற்கு முதல் படியாக டெலிவிஷன், மொபைல் போனை அணைத்துவிட்டு புஸ்தகம் வாசிக்கத் துவங்க வேண்டும். நித்திரை தேவி நம்மை ஆட்கொள்வது நிச்சயம். காலை 4 மணிக்கு படுக்கையிலிருந்து துள்ளி எழலாம்!
ब्राह्मे मुहूर्ते बुध्येत धर्मार्थौ चानुचिन्तयेत् ।
कायक्लेशांश्च तन्मूलान् वेदतत्त्वार्थमेव च ॥ 4-९२ ॥
பிரஹ்மே முஹுர்த்தே புத்யேத தர்மார்த்தெள ச அனுசிந்தயேத்
காயக் லேஸாம்ஸ்சதன் மூலான் வேத தத்துவார்த்தமேவ ச — மனு 4-92
மனு ஸ்ம்ருதியும் மாணவர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து செய்த, செய்ய வேண்டிய கடமைகளை சிந்திக்க வேண்டும் என்று அறிவுரை பகர்கிறது . பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, தர்மத்தையும் உடலுக்கு ஏற்படும் கஷ்டங்களையும் எண்ணிவிட்டு, வேதத்தின் உண்மைப் பொருளை அறிய அதிகாலை நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதே அறிவுரை.
அடுத்ததாக பாரதியாரின் புதிய ஆத்திச் சூடியில் உள்ள மருத்துவச் செய்திகளைக் காண்போம்.
—subham—-
Tags- வைகறையில் துயில் எழு, பிரம்ம முகூர்த்தம், மனு ஸ்ம்ருதி,