
WRITTEN BY LONDON SWAMINATHAN
Post No. 13,628
Date uploaded in London – 4 September 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
https://www.pustaka.co.in/home/author/london-swaminathan
xxxx
பாரதியார் எழுதிய புதிய ஆத்திச் சூடியில் மருத்துவச் செய்திகள்
ஔவையார் எழுதிய ஆத்திச் சூடியில் உள்ள மருத்துவச் செய்திகளைக் கண்டோம். அவருக்குப் பல நூற்றாடுகளுக்குப் பின்னர் வந்த பாரதி என்ன சொல்கிறார் என்றும் காண்போம். ஆனால் பாரதியார் இறந்தே நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அவ்வை சொன்ன சனி நீராடு என்பதெல்லாம் இப்போது பின்பற்றப் படுவதில்லை. பாரதியாரை எவ்வளவு தூரம் பின்பற்ற முடியும் என்பதை அலசி ஆராய்வோம்
உணவு உண்ணும் விஷயத்தில் பாரதியும் அவ்வையும் எதிரும் புதிருமாக நிற்கிறார்கள்; இதை பட்டிமன்றத்தில் விவாதிக்கலாம்!
91.மீதூண் விரும்பேல் என்று அவ்வாயார் நமக்கு அறிவுரை மொழிந்தார். அதாவது சாப்பாட்டு ராமனாக இராதே என்பது அறிவுரை.
பாரதியார் சொல்கிறார் :
ஊண்மிக விரும்பு.-
Relish food
or
Love your Food
இதை இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம்
1.சாப்பாட்டை வெறுக்காதே; தவிர்க்காதே
அல்லது
2.சாப்பாட்டை ரசித்து, ருசித்து சாப்பிடுக
இரண்டாவது பொருளே சரி என்று சொல்லலாம். ஏனெனில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் மந்திரம் சொல்லி, கடவுளை போற்றி விட்டு சாப்பிடுவார்கள். அவர்களுக்கு முன்னதாகவே இந்துக்களும் இலையைச் சுற்றி மந்திரம் சொல்லி தண்ணீர் விட்டுவிட்டு சாப்பிடுவார்கள். அந்த அன்னத்தை அமிர்தம் என்று அந்த மந்திரம் சொல்கிறது ; நாக்கில் மட்டும் ருசி இல்லை; மனதிலும் ருசி இருக்கிறது என்பதை காம வயப்பட்டவர்களும் , பக்தி வயப்பட்டவர்களும் அறிவர்; கள்ளக்காதலி போட்ட எதுவும் தேனாக இனிக்கும்; அந்த ஆளுக்கே சொந்த மனைவி போட்ட நல்ல உணவும் கசக்கும். இதே போலத்தான் கடவுள் பிரசாதம் என்றவுடன் அதற்கு தனி மதிப்பு . சர்க்கரை வியாதி உள்ளவர்களும் திருப்பதி லட்டுப் பிரசாதத்தை வேண்டாம் என்று இயம்பார். அதை அமிர்தம் என்று புகழ்வர் ஆக, கிடைக்கும் உணவை வணங்கி, ருசித்து போற்றி உண்க என்கிறார் பாரதி .
பால் மக்கென்னா Paul McKenna டெலிவிஷன் காட்சிகளைப் பார்க்காத பிரிட்டிஷ் குடி மகன் இல்லை ; புகழ் பெற்ற மனோவசிய ஹிப்னாடிஸ அறிஞர்; மேடைக்கு வந்த அனைவரையும் ஒரு சொடுக்கு மந்திரம் போட்டு மைக்கேல் ஜாக்சன், மடோன்னா போல பாட வைப்பார் ; அவர் சொல்கிறார் :
உங்களுக்கு எடை குறைய வேண்டுமா?
டெலிவிஷனை பார்த்துக்கொண்டு கண்டபடி, அளவில்லாமல் தின்னாதீர்கள். ஒரு உருளைக் கிழங்கு வறுவல் பாக்கெட்டைப் பிரியுங்கள் ; அதில் ஒவ்வொன்றாக எடுத்து கால் பகுதியைக் கடித்து அதன் ருசியை மனதார வாழ்த்துங்கள் ; மீண்டும் கால் பகுதி வறுவலைக் கடித்து அதை ரசியுங்கள். இவ்வாறு ஒரு சின்ன வறுவல் பொட்டலத்தை அரை அல்லது ஒரு மணி சாப்பிடுங்கள் .
சுருங்கச் சொன்னால் , கிடைப்பதை இறைவன் கொடுத்த அமிர்தமாகக் கருதி உண்ணுங்க்கள்.
ஆனால் இதைச் சொன்ன பாரதியார் புதிய ஆத்திச் சூடியில் மூன்றாவது அறிவுரையை புகல்வது என்ன தெரியுமா?
*****

3.இளைத்தல் இகழ்ச்சி.
–Frailty is unworthy
Or
Weakness is Despicable
இதன் பொருள் என்ன ?
ருசித்து, ரசித்து அளவோடு உண்ணுவதெல்லாம் சரிதான் அதற்காக எலும்பும் தோலுமாக , கொத்தவரங்காய் போல உடம்பை ஆக்கிக்கொள்ளாதே .
பாரதியார் சுதந்திரப் போராட்ட வீரர்; அதில் மிதவாதக் கட்சிக்காரர் அல்ல; புரட்சிக்கனலை மூட்டி எழுப்பிய வீரர் ; குரு கோவிந்தர், வீர சிவாஜி பாடல்களில் எல்லாம் வீர கர்ஜனை செய்கிறார் . வில்லினை எடு வீரா என்று எழுதுகிறார் .
பலவீனனால் ஆத்மாவை அடைய முடியாது – என்ற சுவாமி விவேகாநந்தரின் உபநிஷத் வாக்கியத்தை நினைவிற்கொண்டுதான் இப்படி எழுதி இருப்பார் நாயமாத்மா பலஹீனேன லப்யோ – முண்டகோபநிஷத் (3-2-4) नायमात्मा बलहीनेन लभ्यः
“Naayam atmaa balahinena labhyo” – Mundaka Upanishad (3.2.4) என்பதை சுவாமி விவேகானந்தர் அடிக்கடி சொல்லுவார்.இரும்பு போன்ற சதையும் எலும்பும் உடைய இளைஞர்கள் எனக்குத் தேவை என்பார்..
******
12.ஔடதங் குறை.-
Cut down medicine
Or
Use Medicines Sparingly
மருந்துகளைக் குறையுங்கள் என்பது நல்ல அறிவுரை; வலுவான கட்டிடத்தில் அதிகம் பழுதுகள் ஏற்படாது ; ஆகையால் செப்பனிடும் வேலைகள் இராது; அது போல ஆரோக்கியமான உடலுக்கு மருந்து சாப்பிடும் வாய்ப்பே கிட்டாது; அப்படியே சாப்பிட வேண்டுமானாலும் அதிகம் சாப்பிடாதே;
பாரதியாரே நோய்வாய்ப்பட்ட காலத்தில், இறப்பதற்கு முன்னர் ஒரு மாதத்துக்கு, மருந்து சாப்பிட மறுத்துவிட்டார். இதை அவரது கடைசி காலத்தில் உடனிருந்த குடும்பத்தினர் எழுதிய கட்டுரைகளில் காணலாம். அவர் ஏன் அப்படிச் செய்தார் ?
என் கருத்து
ஆதி சங்கரர், சம்பந்தர், சுவாமி விவேகானந்தர் , பாரதி போன்றோர் எல்லாம் மிக சின்ன அல்லது மத்திய வயது காலத்தில் இறப்பதைக் காண்கிறோம்; அவர்கள் வந்த பணி முடிந்துவிட்டது என்று மனதில் தோன்றினால் அழுக்குச் சட்டையை (உடலை) அவிழ்த்துப் போட்டு விட்டு மேலுலகம் சென்று விடுவார்கள் . பாரதி 1921-ல் இறந்தாலும் ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே என்று தீர்க்கதரிசனம் மூலம் சுதந்திரத்தை கண்டுவிட்டே இறந்தார் ;இன்று ஒரு கவிஞர் 100 ஆண்டுகள் வாழ்ந்தாலும் பாரதி அளவுக்கு எழுத முடியாது .
மேலை நாட்டினர் இந்தியர்களைவிட அதிக ஆயுட்காலம் வாழ்வது உண்மைதான்; ஆனால் அவர்கள் சாப்பிடும் மருந்தின் அளவைக் கண்டால் ஆச்சர்யப்படுவீர்கள் ; தூங்குவதற்கு மருந்து; மன நோய்க்கு மருந்து ; மலஜலம் கழிக்க மருந்து; இப்படிப் பலவகை!. நாம் தலைவலிக்கு மட்டும் சாப்பிடுகிறோம்; வயதானால் சக்கரை வியாதிக்கு மருந்து. இதையெல்லாம் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்கவே பாரதி இப்படிப் பகர்ந்தார்.
ஏனெனில் ஐந்தாவது அறிவுரையில்
உடலினை உறுதிசெய்.-
Fortify physique or
Strengthen the Body
என்று சொல்கிறார்; இன்று ஜிம் போன்றவற்றுக்குப் போவது மேலை நாடுகளில் ஒரு பித்து அல்லது பேஷன் ஆகிவிட்டது; பெண்களோ பாதி உடையுடன் காலையிலும் மாலையிலும் ஜாக்கிங் போவதும் அன்றாடக் காட்சிகள் ஆகிவிட்டன.
திருமூலர் சொன்ன விஷயங்களையும் மனதிற்கொள்ள வேண்டும்
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.
*****
“உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே”
******
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே’
–திருமூலர்-
–subham–
பாரதியார் , புதிய ஆத்திச் சூடி, மருத்துவச் செய்திகள்-1, திருமூலர், விவேகானந்தர், ஆத்மா, பலவீனன், உள்ளம் பெருங்கோயில், உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.